இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழகத்தில் ஒவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் எதிர்க்கட்சியினர்மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்படுவது வழக்கம்தான். அதனால் அதற்கு முன் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள்கூட கைது செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஆனால் இந்த முறை திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து முந்தைய ஆட்சியில் தொடுக்கப்பட்ட வழக்குகள் கிளறப்பட்டு ஒவ்வொரு அமைச்சர்களின் பதவிகளும் பறிபோய் வருகின்றன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பதட்டத்தையே ஏற்படுத்தி இருக்கிறது. இது ஆளும் கட்சி, எதிர்கட்சியினருக்கு இடையேயான மோதல்களா அல்லது மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான பனிப்போரின் தாக்கமா? என்று அரசியல் வல்லுநர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் பொன்முடிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்குகள் பற்றியும், அதன் தண்டனை விவரங்கள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

சொத்துக்குவிப்பு வழக்கு

வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் ஒருவரிடம் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்படும். இந்த வழக்கு குறைந்த வருமானம் கொண்டவரோ அல்லது அதிக வருமானம் கொண்டவரோ, யார்மீது வேண்டுமானாலும் தொடுக்கப்படலாம். பெரும்பாலும் இந்த வழக்கில் அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்படும். சொத்துக்குவிப்பு வழக்கு தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டது என்னவோ ஜெயலலிதா மீதான வழக்கின்போதுதான். 1991-96 ஆண்டுகாலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். அந்த வழக்கில்தான் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பெயர்களும் பிரபலமாகின. அந்த வழக்கைத் தொடுத்தவர் சுப்பிரமணியன் சுவாமி.

ஒருவழியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு தமிழக முதலமைச்சர் மற்றும் திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவி இரண்டையும் இழந்த ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கினார். இதனையடுத்து ஆட்சியமைத்த மு. கருணாநிதியின் குடும்பத்தினர்பேரில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. “சொத்து குவிப்பு வழக்கு போடப்படாதவர்கள் எல்லோரும் சொத்து குவிக்கவே இல்லையா? ஆசியாவிலேயே பணக்கார குடும்பங்களில் ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் சுதந்திரமாக உலா வருகிறது என்றும் விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து பதில் அளித்த மு.கருணாநிதி, சட்டம் பொதுவானது என்பதால், சொத்து குவிப்பு குற்றச்சாட்டு இருந்தால் அனைவர் மீதும் வழக்கு போடப்படும் என்று பேசினார்.


முன்னாள் முதலமைச்சர்களான மறைந்த ஜெ. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி

அதன்பிறகும் முன்னாள் அமைச்சர்களான எம். ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி. விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி அன்பழகன் மற்றும் காமராஜ் போன்றோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை நடத்தி, நகைகள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.

குறிவைக்கப்படுகிறார்களா திமுக அமைச்சர்கள்?

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் ஒருபுறம் நடந்தாலும் கடந்த ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த தற்போதைய திமுக அமைச்சர்கள்மீது அப்போது தொடுக்கப்பட்ட வழக்குகள் தோண்டப்பட்டு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதுவும் திமுக அமைச்சராக குற்றம் புரிந்ததற்கல்ல; இவர் 2011 - 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகாரளித்திருந்த நிலையில், வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு செல்ல, அங்கிருந்து அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுத்தது. செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்றனர் அரசியல் நிபுணர்கள். மேலும் இது திமுகவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு என்றும் கூறினர். தவிர, சட்ட பூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும் திமுக அரசு இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை என்றனர். இந்த பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சில மாதங்களுக்குள் அடுத்ததாக, அமைச்சர் பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கின் பின்னணி என்ன?

2006-2011ஆம் ஆண்டு காலகட்ட திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர்மீதும், அவர் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது இவ்வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்றம். ஆனால் அதிமுக ஆட்சியில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர். இந்த வழக்கின் விசாரணையில்தான் கடந்த 19ஆம் தேதி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரின் விடுதலையையும் ரத்துசெய்து, அவர்களை குற்றவாளிகள் எனக்கூறி தீர்ப்பளித்திருக்கிறது உயர் நீதிமன்றம். பொதுவாக வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துவிட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்.எல்.ஏ ஆவதற்கான தகுதி இழக்கப்படும். அதன்படி பார்க்கும்போது அமைச்சர் பதவியை இழந்துவிட்டார் பொன்முடி.


சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய பொன்முடி - ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககம்

இதுகுறித்து நிபுணர்கள் கருத்து கூறுகையில், ஒரு மக்கள் பிரதிநிதி ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே அவர் எம்.எல்.ஏ தகுதியை இழந்துவிடுவார். ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமானாலும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு தடையாணை வாங்கினால் மட்டுமே மேற்கொண்டு செல்லமுடியும். மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை என்பது அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை இருக்கும். ஆனால் குற்றத்தின் அளவை பொறுத்து அது குறையவும் வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

அமைச்சர் பொன்முடி - தீர்ப்பும் தண்டனையும்

கடந்த திமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுதவிர மேல் முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தண்டனை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இப்போதைக்கு சிறை செல்லவேண்டிய அவசியமில்லை. இருப்பினும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்துவிட்டார் பொன்முடி. இந்நிலையில் பொன்முடி கட்டுப்பாட்டில் இருந்த உயர் கல்வித்துறையின் பொறுப்பானது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் பொன்முடி - சென்னை உயர் நீதிமன்றம்

இதனையடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பப்பட்டு, அமைச்சர் பதவி இழப்பு மற்றும் எம்.எல்.ஏ தகுதி இழப்பு குறித்து சட்டப்பேரவை செயலகம் அரசு இதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். அதன்பிறகு, பொன்முடி போட்டியிட்டு ஜெயித்த திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகமே தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க மறு தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும். ஒருவேளை தண்டனையானது இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக அறிவிக்கப்பட்டிருந்தால் பொன்முடி தகுதி இழக்காமல், குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு மட்டுமே தடையாணை பெற்றிருப்பார் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

அடுத்தடுத்து சிக்கல்களுக்கு உள்ளாகும் திமுக அமைச்சர்கள்?

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதமே தாமாக முன்வந்து 3 அமைச்சர்களின் வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை போன்றே அடுத்த வரிசையில் இருக்கின்றனர் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். விழுப்புரம் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, கடந்த ஜூன் 28ஆம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அந்த வழக்கு மறு விசாரணை செய்யப்பட்டு தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது.


அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் - அமைச்சர் தங்கம் தென்னரசு

இதேபோலத்தான் 2006 - 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக 74.58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரையும், அவரது மனைவியையும் விடுவித்து தீர்ப்பளித்தது கீழமை நீதிமன்றம். அதேபோல், அதே ஆட்சிக்காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருமானத்திற்கு அதிகமாக ரூ. 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்த மூன்று வழக்குகளையும் உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் தற்போதைய ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் தங்கம் தென்னரசுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கும் அடுத்தடுத்து சிக்கல்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது.

Updated On 8 Jan 2024 6:42 PM GMT
ராணி

ராணி

Next Story