இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘அதிக படிப்பு, பதவி மற்றும் கை நிறைய பணம் இருந்தும் என்ன பயன்? பெற்ற பிள்ளையையே கொல்லும் அளவிற்கு ஒரு தாய் கொடூரமானவளாக இருப்பாளா?’ என்ற டாப்பிக்தான் தற்போது நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தனது சொந்த மகனையே கொன்று கோவாவில் இருந்து பெங்களூருவுக்கு சூட்கேஸில் அடைத்து கொண்டுவந்ததுடன், போலீசாரால் பிடிக்கப்பட்டும் இன்றுவரை அதனை ஒப்புக்கொள்ளாமல் அடம்பிடித்து வருகிறார். ஆதாரங்கள் அனைத்தும் அவருக்கு எதிராக இருக்கிறது. இருப்பினும் ஒப்புக்கொள்ள மறுப்பது ஏன்? இதற்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். யார் இந்த பெண்? எதற்காக தனது சொந்த மகனையே கொலை செய்திருக்கக்கூடும்? இந்த பிரச்சினையின் விவரங்கள் என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

சுச்சனா சேத் - யார் இவர்?

மேற்கு வங்கத்தை பூர்விகமாகக்கொண்ட சுச்சனா சேத் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவிற்கு வந்துள்ளார். இவருக்கு வயது 39. ஹார்வேர்டு பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயற்பியல் மற்றும் தரவுகள் தொடர்பான பல்வேறு பட்டப்படிப்புகளை படித்து முடித்த சுச்சனா, 2020ஆம் ஆண்டு பெங்களூருவில் மைண்ட்ஃபுல் AI லேப்ஸ் என்ற பெயரில் ஒரு AI நிறுவனத்தையும் தொடங்கினார். அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுச்சனா, 2021ஆம் ஆண்டில் AI நெறிமுறைகளில் புத்திசாலித்தனமான பெண்கள் லிஸ்ட்டில் 100 பேரில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சொந்த நிறுவனம் தொடங்குவதற்கு முன்பே மஸாசூசெட்ஸிலுள்ள பெர்க்மன் க்ளீன் நிறுவனத்தின் துணை நிறுவனராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அங்குதான் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்து கற்று தேர்ந்திருக்கிறார். பின்னர் பெங்களூருவுக்கு வந்த அவர், பூமராங்க் காமெர்ஸ் நிறுவனத்தில் சீனியர் டேட்டா ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தொழில்ரீதியாக மட்டுமில்லாமல் போட்டோகிராபி, பெயிண்ட்டிங் மற்றும் பயணக்காதலராகவும் சுச்சனா இருந்திருக்கிறார் என்பதை அவருடைய சமூக ஊடக பக்கங்களின்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. தொழில்ரீதியாக இவ்வளவு வெற்றியடைந்த சுச்சனாவுக்கு திருமண வாழ்க்கை தோல்வி பாதையில் சென்றிருக்கிறது.


மைண்ட்ஃபுல் AI லேப் நிறுவனத்தின் சி.இ.ஓ சுச்சனா சேத்

கசப்பில் முடிந்த திருமண வாழ்க்கை

2010ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சுச்சனா. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதிக்கு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையின்மீது கணவன் மனைவி இருவருமே அதீத பாசம் வைத்திருந்தாலும் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கணவன் வெங்கட் தன்னை அடித்து துன்புறுத்துவதாகக்கூறி அவர்மீது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகாரளித்தார் சுச்சனா. ஆனால் அதற்கு முன்பே, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே விவாகரத்து கோரியிருந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது, தனது கணவனின் ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் இருப்பதாகவும், எனவே ஜீவனாம்சமாக மாதம் 2.5 லட்சம் தனக்கு வேண்டுமெனவும் கோரியிருந்தார் சுச்சனா. ஆனால் அதற்கு கோர்ட்டில் வைத்தே வெங்கட் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வெங்கட் தனது மகனை சந்திக்கலாம் எனவும் கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் இந்த தீர்ப்பு சுச்சனாவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

மகனுடன் கோவாவிற்கு சென்ற சுச்சனா

இந்நிலையில் பெங்களூருவிலுள்ள யஷ்வந்தபுரம் ரெசிடன்சி சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த சுச்சனா, தனது 4 வயது மகன் சின்மயை கூட்டிக்கொண்டு ஜனவரி 6ஆம் தேதி கோவா சென்றிருக்கிறார். அங்கு குறுகிய காலம் வாடகைக்கு தங்கக்கூடிய ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கிறார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்த சுச்சனா, மீண்டும் பெங்களூருவுக்கு திரும்ப எண்ணி தனக்கு ஒரு வாடகை கார் ஏற்பாடு செய்து தருமாறு அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால் கோவாவிலிருந்து பெங்களூருவுக்கு காரில் செல்வதைவிட விமானத்தில் செல்வதுதான் நல்லது எனவும், மேலும் வாடகையும், நேரமும் மிச்சமாகவும் எனவும் ஊழியர்கள் கூறியபோதிலும், அதற்கு மறுப்பு தெரிவித்த சுச்சனா, ஜனவரி 8ஆம் தேதி பெங்களூருவுக்கு கிளம்பியிருக்கிறார்.

சுச்சனா தங்கியிருந்த அறையை சுத்தம் செய்யபோன அடுக்குமாடி குடியிருப்பு ஊழியர்கள் அங்கு ரத்தம் படிந்த துணியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அங்கு வந்தபோது சுச்சனாவுடன் அவரது மகன் இருந்ததாகவும், திரும்பி செல்லும்போது உடன் இல்லை எனவும், அதுகுறித்து கேட்ட ஊழியர்களிடம், தனது மகனை அங்குள்ள தோழி ஒருவர் வீட்டில் விட்டிருப்பதாகவும் சுச்சனா கூறியதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் சுச்சனாவை தொடர்புகொள்ள முயன்றிருக்கின்றனர். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியாததால், உடனடியாக கார் ஓட்டுநரை தொடர்புகொண்டனர். சுச்சனாவிடம் போனை தரச்சொன்ன போலீசார், அவரது மகன் சின்மய் குறித்து கேட்டதும், அவர்களிடமும் தனது தோழி வீட்டில் விட்டிருப்பதாக கூறியதுடன், தோழி வீட்டின் முகவரியையும் கொடுத்திருக்கிறார் சுச்சனா.


இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சுச்சனா - வெங்கட் ராமன் விவாகரத்து வழக்கு

உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அந்த முகவரி போலி என்பது தெரியவந்ததுடன், அவர்கள் மீண்டும் கார் ஓட்டுநரை தொடர்புகொண்டு அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டனர். சுச்சனா சென்ற கார் கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் இருப்பதாக ஓட்டுநர் கூறியதையடுத்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர் கோவா போலீசார். கார் ஓட்டுநரும் போலீசாரும் கொங்கனி மொழியில் உரையாடியதால் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து சுச்சனாவுக்கு தெரிந்திருக்கவில்லை.

சூட்கேஸில் சின்மயின் உடல்

சித்திரதுர்காவிலுள்ள ஐமங்களா காவல் நிலையத்தில் காரை நிறுத்தியவுடன் சந்தேகமடைந்த சுச்சனா, ஏன் இங்கு காரை நிறுத்துகிறீர்கள்? என கேட்டிருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் வரும் ஓட்டுநர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக தங்களது செல்போனை இதுபோன்று குறிப்பிட்ட காவல்நிலையத்தில் ஒப்படைப்பது வழக்கம் என கூறி சமாளித்திருக்கிறார் ஓட்டுநர். காரிலிருந்து சுச்சனாவை இறக்கிய போலீசார், அவர் கொண்டுவந்த உடைமைகளை பரிசோதித்தபோது, ஒரு சூட்கேஸில் அவருடைய மகனின் உடல் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனையடுத்து சுச்சனாவை உடனடியாக போலீசார் கைது செய்தனர்.

சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. கோவாவிற்கு சென்று அறை எடுத்து தங்கிய இரண்டு மணிநேரத்திலேயே மகனை கொன்றதுடன், சுமார் 19 மணிநேரம் அங்கேயே இருந்துள்ளார். அதன்பிறகுதான் உடலை சூட்கேஸில் அடைத்து வாடகை கார் எடுத்து பெங்களூருவுக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார். உடற்கூராய்வில் குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. அதனால் தலையணையால் குழந்தையை அழுத்தியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஹோட்டல் அறையில் ரத்தக்கறைகள் எப்படி வந்தது? என்பது குறித்து சுச்சனாவிடம் விசாரித்தபோது, தனது மகனை தான் எதுவும் செய்யவில்லை எனவும், தூங்கி எழுந்து பார்த்தபோது தனது மகன் இறந்து கிடந்ததாகவும், அதனால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியிருக்கிறார் சுச்சனா. ஆனால் அந்த வார்த்தைகள் எதுவும் நம்பும்படியாக இல்லை என்பதால் சுச்சனாவின் கணவர் வெங்கட்ராமனை தொடர்புகொண்டு இதுகுறித்து போலீசார் தெரிவித்தனர்.


குழந்தை சின்மய்யுடன் சுச்சனா - மகன் இறப்பிற்கு பிறகு

விவாகரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல்தான் காரணமா?

வேலை தொடர்பாக இந்தோனேஷியா சென்றிருந்த வெங்கட்ராமன் உடனடியாக இந்தியா திரும்பினார். உடற்கூராய்விற்கு பிறகு குழந்தையின் உடலை அடக்கம் செய்த வெங்கட்ராமனிடம் இதுகுறித்து ஜனவரி 13ஆம் தேதி விசாரணை நடத்தினர். அதில், தனக்கும் தனது மனைவிக்குமிடையேயான விவாவரத்து வழக்கு முடியும் தருவாயில் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் எனவும் கூறியுள்ளார். மேலும் கடந்த 5 வாரங்களாக தனது மகனை பார்க்க சுச்சனா அனுமதிக்கவில்லை எனவும், அதனால்தான் சின்மயை கோவாவிற்கு அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவித்ததுடன், கடைசியாக தான் இந்தியாவில் இல்லாததால் மகனுடன் வீடியோ காலில் பேசியதாகவும் கூறியிருக்கிறார் வெங்கட். இந்நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள சுச்சனாவிடம் தனது மகனை கொன்றது குறித்து விசாரித்ததில் அவர் இன்னும் குற்றத்தை ஒப்புகொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு தனது கணவர்தான் காரணம் என காவல்நிலையத்தில் வைத்தே வெங்கட்ராமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் சுச்சனா.

சிறுவன் மரணத்தில் திடீர் திருப்பம்

சுச்சனாவிடம் நடத்திய விசாரணையில் அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் போலீசார் பிற விசாரணைகளில் ஈடுபட்டதில் சுச்சனாதான் குற்றவாளி என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர். காரணம், ஜனவரி 6ஆம் தேதி கோவாவிற்கு செல்வதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பே சுச்சனா ஏற்கனவே கோவா சென்றுள்ளார் எனவும், அங்கு ஒருசில நாட்கள் தங்கிய நிலையில் இந்த கொலையை அவர் திட்டமிட்டு செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கால், மெசேஜ் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் தனது கணவரை தொடர்புகொள்வதைவிட மெயில் அனுப்புவதையே சுச்சனா வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். நீதிமன்ற தீர்ப்பின்படி வெங்கட் தனது மகனை பார்க்க புத்தாண்டு பிறந்த சமயத்தில் வரலாம் எனக்கூறி குறிப்பிட்ட லொகேஷனையும் வெங்கட்டிற்கு பகிர்ந்திருக்கிறார் சுச்சனா. ஆனால் அந்த சமயத்தில் தனது மகனுடன் அவர் கோவா சென்றுவிட்டார்.


சின்மய் கொலை வழக்கு விசாரணையின்போது

இதனால் சுச்சனா குறிப்பிட்ட லொகேஷனுக்கு வந்து காத்திருந்த வெங்கட் நீண்ட நேரம் அவர்கள் அங்கு வராததால் வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் செய்திருக்கிறார். அதற்கு பதில் ஏதும் வராததால் அங்கிருந்து கிளம்பியதாக போலீஸாரின் விசாரணையில் கூறியிருக்கிறார். மேலும் சுச்சனா தனது மகனுடன் கோவாவில் தங்கியிருந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதும் அங்கு யாரும் வந்துபோகவில்லை எனவும், இதனால் சுச்சனாதான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் எனவும் உறுதியாக நம்புகின்றனர் போலீசார்.

என்னதான் கணவன் - மனைவி சண்டையாக இருந்தாலும் 8 வருடங்கள் காத்திருந்து பெற்ற மகனை ஒரு தாய் கொலை செய்யும் அளவிற்கு துணிவாரா? அப்படியே அவர் கூறுவதுபோல, தான் தனது மகனை கொல்லைவில்லை என்றால் ஏன் இதுகுறித்து யாருக்கும் தெரிவிக்காமல் உடலை சூட்கேஸில் மறைத்து கொண்டுவர வேண்டும்? இந்த கொலையின் பின்னணி என்ன? 99% சுச்சனா மீது குற்றம் உறுதியான பின்பும் ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்? என்று போலீசாரே குழம்பி போயுள்ளனர். ஒரு AI நிறுவனத்தின் CEO பெற்ற மகனையே கொன்று சூட்கேஸில் அடைத்து கொண்டுவந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தீவிர விசாரணையை முடுக்கியுள்ளனர் கோவா போலீசார்.

Updated On 29 Jan 2024 6:43 PM GMT
ராணி

ராணி

Next Story