இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவராக கே. அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் பகிரங்கமாக முன்வைத்து வருகிறார். இதனாலேயே அண்ணாமலை எங்கு சென்றாலும் அவர் என்ன சொல்லப்போகிறார் என ஊடகங்கள் அவரை பின்தொடர்கின்றன. ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சி என எதையும் அவர் விட்டு வைப்பதில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவை சில நாட்களாகவே விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அதனால் அதிமுகவினர் அண்ணாமலைமீதும், பாஜக தலைமையின்மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிமுக - பாஜக கூட்டணி இனிமேல் இல்லை என அதிரடியாக அறிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆனால் அண்ணாமலையைத்தான் எதிர்க்கிறோம்; பாஜகவை அல்ல என தெரிவித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. கூட்டணி முறியவில்லை என்கிறார் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி. இறுதியில் கூட்டணியில்தான் இருக்கிறோம்; ஆனால் கட்சிக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். ஆனால் அதிமுகவின் முன்னாள் தலைவர்கள் பாஜக தேசிய தலைமையை நாடியுள்ளனர். அண்ணாமலையின் நோக்கம் என்ன? பாஜக - அதிமுக கூட்டணியில் என்னதான் நடக்கிறது? என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அதிமுகவுடனான அண்ணாமலையின் அணுகுமுறை

கடந்த ஜூலை மாதத்திலிருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும் அக்கட்சி குறித்தும், தலைவர்கள் குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார். இதனால் சில காலமாகவே கூட்டணியில் விரிசல் விழுந்து வருகிறது. முன்பிருந்த பாஜக தலைவர்களைக் காட்டிலும், அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக உடனான அவரது அணுகுமுறை சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. கூட்டணி கட்சி என்றாலும் அதிமுக, பாஜகவின் கொள்கைகள் மாறுபட்டவை எனவும், யாருக்காகவும் எதற்காகவும் தனது அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது எனவும் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இதனாலேயே அதிமுக மூத்த தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான மோதல்போக்கானது தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்கவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்து வருகிறார்.

கடந்த மார்ச் மாதமே, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க விருப்பமில்லை எனவும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பாஜக மேலிடம் முடிவுசெய்தால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை பேசினார். அவருடைய இந்த முடிவை வரவேற்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவிலிருந்து ஆட்களை கூட்டிச்சென்றால்தான் திராவிடக் கட்சிகள் வளரும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அண்ணாமலையும் கூறியிருந்தார்.


முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை

தொடர்ந்து ஜூன் மாதம் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் ஊழல் செய்த காரணத்தால்தான் முன்னாள் முதலமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என அண்ணாமலை தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைத்தான் அண்ணாமலை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என அதிமுக தலைவர்கள் கொதித்தெழுந்தனர். இதனால் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக.

அண்ணா குறித்து அண்ணாமலை

பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் உரையாடவும், ஊழலுக்கு எதிராகவும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தேசிய அளவிலான விவாதங்களுக்கு வித்திட்டன. தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செப்டம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட அண்ணாமலை, “1956ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி கோயிலில் 10 நாட்கள் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதில் அழைக்கப்படாத விருந்தாளியாக கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 4ஆம் நாளன்று, உமையாளை விமர்சித்துப் பேசினார். இதனையறிந்து அங்குவந்த முத்துராமலிங்க தேவர், உமையவளை தப்பாக பேசியது யார்? கடவுளை நம்ப மறுப்பவர்கள், கடவுளை நம்புபவர்களை பற்றிப் பேசக்கூடாது. இதுவரை மதுரை மீனாட்சி அம்மனுக்கு பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. இன்னொருமுறை அவ்வாரு பேசினால், அம்மனுக்கு ரத்தத்தில் அபிஷேகம் நடக்கும் என்று ஆக்ரோஷமாக பேசினார். இதற்காக, பிடிஆர் மற்றும் அண்ணாதுரை இருவரும் முத்துராமலிங்க தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து வந்தனர்” எனப் பேசியிருந்தார்.


முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.வி சண்முகம்

அதிமுக எதிர்வினை

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு திராவிட கட்சிகள் சார்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. “அண்ணாமலை இப்படியே ஆணவமாக பேசிக்கொண்டிருந்தால், கூட்டணி குறித்து ஒரு முடிவை எடுக்கவேண்டுமென தலைமைக்கு வலியுறுத்துவோம்” என்று முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பகிரங்கமாக சாடினார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “கூட்டணியை பொருத்தவரை பாஜக, அதிமுகவுடன் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். இதுதான் எங்கள் நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடும். ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்தவொரு கருத்தையும் தன்மானமுள்ள எந்தவொரு அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். பாஜக தலைவருக்கே தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதிமுக என்கிற சிங்கக்கூட்டத்தைப் பார்த்து அண்ணாமலை என்கிற சிறுநரி ஊளையிடுகிறது. தனியாக நின்றால் நோட்டாவுக்கும் கீழ்தான் அண்ணாமலை ஓட்டு வாங்குவார். அண்ணாமலை ஒரு வேஸ்ட் லக்கேஜ். அண்ணா, பெரியாரை பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று கடுமையாக விமர்சித்தார்.


ஜெயலலிதா குறித்து அண்ணாமலையின் பேச்சும் அதிமுக எதிர்வினையும்

கூட்டணி விரிசல்?

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “கூட்டணியில் இருப்பதால் நான் யாருக்கும் அடிமை கிடையாது. தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்யமுடியாது. அதற்கான அவசியமும் இல்லை. மோடியை முன்னிலை படுத்தித்தான் தேர்தலை எதிர்கொள்கிறோம். இதை அதிமுகவும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனக்கு யாருடனும் எந்த பிரச்சினையும் இல்லை. தமிழக பாஜகவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. நான் நேர்மையாக அரசியல் செய்கிறேன். என் நேர்மையை குறைசொன்னால் சும்மா விடமாட்டேன். பாஜகவின் வளர்ச்சியைக்கண்டு பொறாமைப்படுகிறார்கள். சி.வி சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். எந்தக் கட்சிக்கும் பாஜக போட்டியில்லை. தமிழகத்தில் பாஜக வளரவேண்டும். தமிழக வாக்காளர்களில் 65 சதவீத வாக்குகளை திராவிடக் கட்சிகள் பிடித்திருக்கின்றன. மீதமுள்ள 35 சதவீத வாக்குகளில் மாறுபட்ட அரசியல் இருக்கவேண்டும். அண்ணாதுரை பேசியதைத்தான் நான் சுட்டிக்காட்டி பேசினேன். நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. அதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது” என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

தமிழகத்தில் பாஜகவின் கை ஓங்குமா?

அதிமுகவும் பாஜகவும் இப்படி மாறி மாறி சண்டையிட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இதே கூட்டணி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவில் உள்கட்சி பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில், பாஜகவுடனான கூட்டணி முறிவு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் இதில் நெருக்கடி ஏற்படும் எனவும் குறிப்பிடுகின்றனர்.


தமிழகத்தில் பாஜக நிலை

இருப்பினும், இதுவரை பாஜக தேசிய தலைமை எடப்பாடி பழனிச்சாமியிடம் சுமுகமாகவே நடந்துவருகிறது. எப்படியிருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து போட்டியிட்டாலும்கூட தமிழகத்தில் இவர்களுடைய வெற்றி என்பதற்கான சாத்தியக்கூறுகள் சற்று குறைவாக இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுக அதிரடி முடிவு

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர்கள் பாஜக தேசிய தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் நட்டாவை நேரில் சந்தித்த அதிமுக மூத்த தலைவர்கள், அண்ணாமலையை மாற்றவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் தமிழகத்தில் பாஜக அரசியல் வியூகங்கள் மாற்றி அமைக்கப்படுமா? அண்ணாமலை பதவி நீக்கப்படுவாரா? என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Updated On 2 Oct 2023 6:33 PM GMT
ராணி

ராணி

Next Story