பிரபல நடிகை ஷகிலா மீது தாக்குதல் ஏன்? நடந்தது என்ன?
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது நடிப்பால், "கவர்ச்சி அணுகுண்டு" என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை ஷகிலா. பட வாய்ப்புகள் சற்று குறைந்ததால் பிரபல தனியார் தொலைக்காட்சி உள்பட சில யூ டியூப் சேனல்களிலும் நிகழ்ச்சி தொகுப்பளராக அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஷகிலாவை அவரது வளர்ப்பு மகளே தாக்க முற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. அப்படி என்னதான் நேர்ந்தது நடிகை ஷகிலாவிற்கு? இந்த பதிவு உங்களுக்கு தெளிவாக்க வருகின்றது.
யார் அந்த ஷகிலாவின் தத்துப்பெண் ஷீத்தல்? என்ன நடந்தது நடிகை ஷகிலாவிற்கு?
கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் கவர்ச்சியால் ரசிக நெஞ்சங்களை கட்டிப் போட்ட நடிகை ஷகிலா, தான் திருமணம் செய்து கொள்ளாத காரணத்தால் தனது சொந்த அண்ணன் மகளான ஷீத்தல் என்னும் பெண் குழந்தையை 6 மாத கைக்குழந்தையாக இருக்கும் போதே தத்தெடுத்து தனது சொந்த மகள் போல வளர்த்து வந்துள்ளார். ஆசை ஆசையாய் அன்பினை கொட்டி வளர்த்த அன்பு மகள் ஷீத்தல், தீடீரென மாறி போன காரணம் என்ன? பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள், அது போன்றுதான் வளர்ப்பு மகள் ஷீத்தலுக்கும் நடிகை ஷகிலாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை ஷகிலா
இதனையடுத்து அவரது வளர்ப்பு மகளான ஷீத்தல், சென்னை கோடம்பாக்கத்தில் பக்கத்திலேயே வசிக்கும் தனது சொந்த பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தனது வளர்ப்பு தாயான நடிகை ஷகிலாவை காண ஷீத்தல் வந்துள்ளார். ஷீத்தலுடன், அவரது சொந்த தாய் சாக்ஷி, சகோதரி ஷமீலாவும் நடிகை ஷகிலாவை காண வந்துள்ளனர். அப்போது வாய் தகராறு ஏற்படவே ஷீத்தல் நடிகை ஷகிலாவை தாக்க முயன்றதாக கூறப்படும் நிலையில் ... தான் வளர்த்த மகளே தன்னிடம் இப்படி நடந்து கொள்வதை சற்றும் எதிர்பார்க்காத நடிகைக்கு மிஞ்சியது ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான். உடனே சுதாரித்து கொண்ட நடிகை ஷகிலா, தனது மகளை சமாதானம் செய்ய தனது பெண் வழக்கறிஞரும், தோழியுமான சௌந்தர்யாவுக்கு ஃபோன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்த நிலையில் எல்லோரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகை ஷகிலா மற்றும் வளர்ப்பு மகள் ஷீத்தல்
அரங்கேறிய அத்துமீறல் தாக்குதலும், காவல்துறை விசாரணையும்
பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த சமாதான பேச்சு வார்த்தையில் சமாதானமடையாத நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான ஷீத்தல் தீடீரென எழுந்து ஷகிலாவின் பெண் வழக்கறிஞரான சௌந்தர்யாவின் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நடிகை ஷகிலாவின் பெண் வழக்கறிஞர் சௌந்தர்யா கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஷீத்தல் மீது புகாரளித்துள்ளதாகவும், காவல்துறையினர் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளான ஷீத்தல், அவரது சொந்த தாய் சாக்ஷி மற்றும் ஷீத்தலின் சகோதரி ஷமீலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

தனது வழக்கறிஞருடன் நடிகை ஷகிலா
"வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதை"
"வளர்த்த கடா மார்பில் பாயும் " என்ற பழமொழி என்னவோ நடிகை ஷகிலாவின் வாழ்க்கையில் மெய்யானது சற்று வருந்தத்தக்க விஷயமாகிவிட்டது உண்மையென்றாலும் கூட காவல்துறையின் முறையான விசாரணையின் பிறகே யார் மீது தவறு என்று முழு உண்மையும் உலகிற்கு தெரியவரும் என்பது மட்டுமே நிஜம். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஷீத்தலின் பெற்றோரும் இந்த சம்பவத்திற்கு உடந்தை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தற்செயலான ஒன்றா? அல்லது நடிகை ஷகிலாவின் சொத்துகளுக்காக குறி வைத்து நிகழ்த்தப்பட்டதா? இதற்கு பின்னணி என்ன? இது போன்ற நமது கேள்விகளுக்கெல்லாம் காவல்துறையினர் இரு தரப்பினரையும் வைத்து விசாரணை செய்தால் மட்டுமே நடந்தது என்ன என்ற உண்மை தெரிய வரும்.

தனது சகோதரியுடன் ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல்
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் நடிகை ஷகிலா
இதனிடையே சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தம் பக்க நியாய கருத்துகளை ஊடகங்களில் முன்வைத்திருந்தனர். ஒரு பக்கம் ஷகிலாவின் வளர்ப்பு மகளான ஷீத்தல், ஷகிலாவின் வழக்கறிஞர்தான் முதலில் தன்னை தாக்க வந்தார் என்றும், அதன் பிறகு நாங்கள் சண்டையிட்டோம் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை ஷகிலாவோ தனது வளர்ப்பு மகள் மீது தான் கொண்ட அதீத பாசத்தினால் அவள் வரவர தன் பேச்சை கேட்பதில்லை என்றும், அவளை எந்த கேள்வியும் கேட்க கூடாது என்று சொல்வதாகவும், மீறினால் இப்படி தன்னிடம் சண்டை போடுவதாகவும் கூறியிருந்தார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக ராணி ஆன்லைன் நடிகை ஷகிலாவை தொடர்பு கொண்டு கேட்டபோது "இதெல்லாம் எங்க குடும்பத்துல ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சினை. அதனை அவள் தெரியாமல் சற்று பெரிதுபடுத்திவிட்டாள். ஒரு சிறு பிரச்சினையை அவள் காவல்துறைவரை எடுத்துச் சென்றுவிட்டாள். மற்றபடி ஒன்றுமில்லை என சுருக்கமாக முடித்துக் கொண்டார். நடிகை ஷகிலாவிற்கு ஏற்பட்ட இந்த குடும்ப பிரச்சினை, ஒரு நல்ல பாடத்தை நம் எல்லோருக்குமே கற்றுக் கொடுத்துள்ளது. அதாவது "கண்டிப்புடன் வளர்க்கப்படாத பிள்ளை ஒருநாள் கண்டனத்துக்குரிய பிள்ளையாக மாறும் என்பதே அது". இதற்கு யாருமே விதிவிலக்கு அல்ல என்பது மட்டுமே நிஜம்.
