இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில், சூரல்மலை, மெப்பாடி, முண்டக்கை, அட்டமலை, நிலம்பூர் எனப் பல கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவு பாதிப்புகளை கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், பாதிப்பு குறித்து மீடியாக்களில் காட்டப்படும் மற்றும் சொல்லப்படும் தகவல்கள் மிகவும் சிறிய அளவே என்றும், உண்மையான பாதிப்பு வார்த்தைகளில் அளவிட முடியாதது என்றும் அப்பகுதியில் உயிர்தப்பிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

நடுநிசியில் வந்த ஆபத்து

வயநாட்டில் ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட கடும் நிலச்சரிவிற்கு காரணமாக, அதற்கு முந்தைய 48 மணிநேரங்களில் பெய்த கனமழை இருந்துள்ளது. ஊரே உறங்கி கொண்டிருந்த நடுநிசியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்ணில் புதையுண்டவா்களையும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மட்டுமின்றி ராணுவம், விமானப்படை உள்ளிட்டவையும் கை கோர்த்துள்ளன.


நிலச்சரிவு பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணிகள்

முற்றிலும் அழிந்த கிராமம்

நிலச்சரிவால் வயநாட்டில் சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்கள் அதிக சேதங்களைச் சந்தித்துள்ளன. இந்த கிராமங்களின் மலைமுகடுகளில் இருந்து பிறக்கும் சிற்றாறு, சூரல்மலையை ஒட்டிக் கீழே சென்று இருவஞ்சி என்ற ஆற்றை அடைகிறது. இந்த ஆறு, சில கிளை நதிகளுடன் இணைந்து சாலியாறாக மாறி வயநாடு முழுவதும் ஓடுகிறது. வயநாட்டில் கடந்த வாரம் பெய்த அதிகனமழை, இந்த சாலியாற்றில் அதிக நீர்வரத்தை உண்டாக்கியது. ஜூலை 30-ஆம் தேதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஏற்பட்ட முதல் நிலச்சரிவை எதிர்கொண்ட முண்டக்கை கிராமம், முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

வயநாட்டில் நம்பிக்கை பாலம் அமைத்த மேஜர் சீதா

வயநாட்டில் இப்படி ஒரு இயற்கை பேரழிவு ஏற்பட்ட நிலையில், உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கின. ஆனால், மீட்புப் பணிகளில் பெரிய தடைகள் இருந்தன. சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புப்பணிக்கான உபகரணங்கள், நிவாரண பொருட்களை அப்பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த சூழலில் அந்த இடத்தில் பெய்லி எனப்படும் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் அமைத்தனர். இந்த பாலம் கட்டப்பட்ட பின்னர்தான் ஆம்புலன்ஸ், மீட்பு உபகரணங்கள், அவசர வாகனங்கள் உள்ளிட்டவை அந்த இடத்தை அடைந்து மீட்புப்பணிகள் வேகமடைந்தன. இந்த பாலம் அமைக்கும் பணிக்கு தலைமை தாங்கி குழுவினரை வழிநடத்தினார், மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரியான மேஜர் சீதா ஷெல்கே. ஒரு பெண்ணாக இருந்து, இக்கட்டான நேரத்தில் திடமான தற்காலிக பாலத்தை எழுப்பிய மேஜர் சீதா ஷெல்கேவின் பணி பலராலும் பாராட்டப்பட்டது.

யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது

வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் தங்கள் உறவுகளை இழந்து தவியாய் தவித்து வருகின்றனர். குழந்தைகள் பெற்றோரை இழந்தும், பெற்றோர் குழந்தைகளை இழந்தும், பலர் உடன்பிறந்த உறவினர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் இழந்து செய்வதறியாது வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். உயிர்பிழைத்துள்ள ஒவ்வொருவரும், தங்களது உறவுகள் எங்காவது ஒரு இடத்தில் தப்பிப் பிழைத்திருக்க மாட்டார்களா? எங்காவது அவர்களை பார்த்துவிட மாட்டோமா என கண்களில் கண்ணீருடனும், கனத்த இதயத்துடனும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக முண்டக்கை கிராமத்தில் மனைவி, மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த 71 வயதான கருப்பையா என்ற முதியவர், தற்போது அனைத்து உறவுகளையும் தொலைத்துவிட்டு, அவர்கள் கிடைப்பார்களா என தள்ளாத வயதிலும் தளராமல் ஏக்கத்துடன் தேடி வருகிறார். எந்த முகாம்களிலும் அவர்கள் கிடைக்காத நிலையில், ஒருவேளை அவர்கள் இறந்திருந்தால், அவர்களின் உடலையாவது பார்த்துவிட மாட்டோமா என்று, பொக்லைன் இயந்திரங்கள் பூமியை தோண்டுவதை பார்த்துக் கொண்டே இருக்கிறாராம். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், காணும் இடமெல்லாம் இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன.


தன் உறவுகளை தேடி அலையும் முதியவர்

வாயில்லா ஜீவனின் பாசப் போராட்டம்

வயநாட்டில் கண்ணீரை வரவழைக்கும் சோகக் காட்சிகளுக்கு இடையே ஆறுதலான நிகழ்வுகளும் நம்பிக்கை அளிக்கின்றன. நிலச்சரிவுக்கு பின், தன்னை தூக்கி வளர்த்த பெண்மணியை காணாமல் தேடி அலைந்த வாயில்லா ஜீவனான நாய் ஒன்று, 6 நாட்களுக்கு பிறகு அவரை பார்த்ததும் ஓடோடி சென்று பாசத்தை பொழிந்த காட்சி அதனை கண்டவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

நிலச்சரிவு குறித்து முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழப்பு

சூரல்மலை கிராமத்தை சேர்ந்த நீது ஜோஜோ என்ற பெண்தான் வயநாடு நிலச்சரிவு குறித்து முதன்முதலில் தகவல் கொடுத்துள்ளார். கடந்த 30-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது வீட்டுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்துள்ளது. தூக்கத்திலிருந்து விழித்துபார்த்த அவர், தான் பணிபுரியும் வயநாடு மருத்துவ அறிவியல் நிறுவனத்துக்கு முதலில் தகவல் கொடுத்துள்ளார். யாராவது வந்து தங்களை காப்பாற்றுமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதையடுத்து அந்த நிர்வாகத்தினர், தீயணைப்புத் துறையை தொடர்புகொண்ட மீட்புக் குழுவை அங்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதான் நிலச்சரிவு தொடர்பாக மீட்புக் குழுவுக்கு கிடைத்த முதல் தகவல் எனக் கூறப்படுகிறது. ஆனால் தீயணைப்புத் துறை அந்த இடத்திற்கு செல்வதற்கு முன் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டுவிட்டது. நீது ஜோஜோவின் கணவர், குழந்தை, பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், வீட்டின் அருகிலுள்ள மலை ஒன்றின் மீது ஏறி சென்று உயிர்பிழைத்துள்ளனர். நீது மட்டும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளார்.


நிலச்சரிவு குறித்து முதலில் தகவல் கொடுத்த நீது ஜோஜோ உயிரிழப்பு

இப்படி ஒரு அழிவை கேரளா பார்த்ததில்லை!

கேரளாவில் இதுவரை ஏற்பட்ட நிலச்சரிவுகளிலேயே இதுதான் மிகப்பெரியது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜூலை 23-ஆம் தேதியே நிலச்சரிவு ஆபத்து குறித்து கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், கேரள அரசு அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 31-ஆம் தேதி தெரிவித்தார். அமித்ஷாவின் குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். அவ்வாறு எந்த எச்சரிக்கையும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகளின் இந்த பேச்சு, நிலச்சரிவு குறித்த முன்னறிவிப்பு அமைப்புகள் (Early Warning System - EWS) மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்கூட்டியே கணிக்கப்பட்டதா நிலச்சரிவு?

இந்தியாவில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய நிலவியல் ஆய்வு மையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை கனமழை குறித்தும், நிலச்சரிவு அபாயங்கள் குறித்தும் எச்சரிக்கைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அந்த முன்னறிவிப்புகள் துல்லியமாக இல்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஜூலை 26 முதல் 30-ஆம் தேதி வரையிலான நாட்களில், “சோதனை முன்னறிவிப்பு செயலிழந்த 28-ஆம் தேதியைத் தவிர அனைத்து நாட்களிலும்” இந்திய நிலவியல் ஆய்வு மையம் நிலச்சரிவு அபாயம் குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டதாகக் கூறியுள்ளது. அதேநேரம் கேரளாவில் “ஜூலை 26-ஆம் தேதி வைத்திரி தாலுகாவிலும், 30-ஆம் தேதி வைத்திரி மற்றும் மானந்தவாடியிலும் மிதமான முன்னறிவிப்பைத் தவிர பிற நாட்களில் நிலச்சரிவு அபாயம் குறைவாகவே இருப்பதாக, இந்திய நிலவியல் ஆய்வு மையத்தின் நிலச்சரிவு முன்னறிவிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன."


இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலச்சரிவு அபாய மாவட்டங்களின் பட்டியல்

நிலச்சரிவை கணிப்பது கடினம்?

சாலியாற்றில் ஏற்பட்ட அதிக நீர்வரத்தால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதே நிலச்சரிவுக்கான தொடக்கமாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட சூழல்களில், “நிலச்சரிவின் தொடக்கப்புள்ளி ஓரிடமாக இருக்கும்; ஆனால், அது சரிந்துகொண்டே வந்து மற்றொரு இடத்தில் அதன் வீரியம் பெரிதாகி, சேதங்களை விளைவிக்கும். இத்தகைய சூழல்களில், இந்தப் பகுதிகள்தான் நிலச்சரிவால் பாதிக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்,” என்று சொல்கின்றனர் கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிலவியல் ஆய்வாளர்கள். அத்துடன் மண்ணின் தன்மை, அதன் அடர்த்தி குறித்த தகவல், மழைப்பொழிவு, மண்ணின் ஈரப்பதம் குறித்த நிகழ்நேர தரவுகள் உள்ளிட்டவற்றை சேகரிக்கும் தரவுத்தளம் நம்மிடம் முழுமையாக இல்லாததும் நிலச்சரிவை கணிக்க நமக்கு பெரும் சவாலாக இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வயநாட்டில் குறைந்துபோன காடுகளின் பரப்பளவு

நிலச்சரிவுக்கு பல்வேறு காரணிகள் சொல்லப்பட்டுவரும் நிலையில், வயநாட்டில் காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வயநாடு வனவிலங்கு சரணாலயத்தின் மேலாண்மைத் திட்டத்தின் தரவுகளின்படி, 1950-ஆம் ஆண்டில் வயநாட்டில் காட்டுப்பகுதி 1,811.35 சதுர கிலோமீட்டராக இருந்தது. 2021-ம் ஆண்டு இது 863.86 சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளது. மொத்தத்தில் 947.49 சதுர கிலோமீட்டர் காடுகள் குறைந்துள்ளன. அதேநேரம் தோட்டப்பயிர் மற்றும் சாகுபடி பரப்பளவும் அதிகரித்துள்ளதாம்.


வயநாட்டில் குறைந்துபோன காடுகள் - சதுர கிலோ மீட்டர் அளவுகோள் கணக்கீடு

இஸ்ரோவின் 'நிலச்சரிவு அட்லஸ்'

இந்தியா முழுவதும் நிலச்சரிவு அபாயம் உள்ள 147 மாவட்டங்களின் பட்டியலை 'நிலச்சரிவு அட்லஸ்' என்ற பெயரில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதில் டாப் 50 மாவட்டங்கள் பட்டியலில் கேரளாவிலிருந்து 13 மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. வரிசைப்படி திருச்சூர் 3-ம் இடத்திலும், பாலக்காடு 5-ம் இடத்திலும், மலப்புரம் 7-ம் இடத்திலும், கோழிக்கோடு 10-ம் இடத்திலும், வயநாடு 13-ம் இடத்திலும், எர்ணாக்குளம் 15-ம் இடத்திலும், இடுக்கி 18-ம் இடத்திலும், கோட்டயம் 24-ம் இடத்திலும், கண்ணூர் 26-ம் இடத்திலும், திருவனந்தபுரம் 28-ம் இடத்திலும், பத்தனம்திட்டா 33-ம் இடத்திலும், காசர்கோடு 44-ம் இடத்திலும், கொல்லம் 48-ம் இடத்திலும் மற்றும் ஆலப்புழா 138-ம் இடத்திலும் உள்ளன.


வயநாடு நிலச்சரிவு காட்சி - இஸ்ரோவின் 'நிலச்சரிவு அட்லஸ்' பட்டியலில் உள்ள கேரளாவின் மாவட்டங்கள்

இஸ்ரோவின் இந்த பட்டியலில் தமிழகத்தின் கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய மாவட்டங்களும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On 12 Aug 2024 11:57 PM IST
ராணி

ராணி

Next Story