இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

காதல்! இந்த 3 எழுத்து வார்த்தையை தொடாமல் மானுடர்கள் யாருமே தங்களோட வாழ்க்கை பயணத்தை கடக்க முடியாது. இல்ல இல்ல... நான் காதலிச்சதே இல்லை என்று யாராவது சொன்னா.. அது பொய்யாக இருக்கலாம். ஏன்னா, மனிதர்களின் இயற்கையான உணர்ச்சி காதல். யாராக இருந்தாலும், அவங்களோட வாழ்க்கை பயணத்துல ஏதாவது ஒரு நொடியாவது அந்த ஃபீல் நிச்சயம் வந்துட்டு போகும். அதை வெளிப்படையாக சொல்லி, உண்மையாக நேசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். மற்றபடி சூழ்நிலைகள் காரணமா நிறைய பேர் ஜஸ்ட் லைக் தட், அந்த ஃபீல கடந்துட்டு போய்டுவாங்க. அப்படி எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒருமுறையாவது வரும் காதல் பற்றி விளக்கமா பாக்கலாம் வாங்க.

காதலின் வகைகள்!


திரைப்படங்களில் நடிகர், நடிகைகளின் காதல் காட்சிகள்

என்னது காதலின் வகைகளா? ஆமாங்க.. ஆமாம்.. இதுலயும் நிறைய வெரைட்டி இருக்கு. குட்டி வயசுல பக்கத்து வீட்டு பசங்களோட விளையாடும் போது ஒரு காதல், பள்ளி காதல், கல்லூரி காதல், சாலையில் தினந்தோறும் பாக்குற யாராவது ஒருவர் மீது காதல், பாவப்பட்டு வரும் கருணை காதல், அழகுல மயங்கிவரும் கவர்ச்சிக் காதல், உடலை பார்த்து மட்டும் வரும் காமக் காதல், அரிதான மனமொத்த காதல், கல்யாணம்வரை டைம்பாஸ் காதல், அலுவலக காதல், பயணக் காதல், சினிமா பிரபலங்கள் மீது வரும் காதல், இன்றைய சோஷியல் மீடியா உலகத்துல பார்க்காமலேயே காதல், வேறு வழியின்றி திருமண காதல், கணவன்-மனைவி உறவை மீறிய காதல் என்று நிறைய சொல்லக்கிட்டே போகலாம். இதை படிக்கிற சில பேருக்கு என்ன கண்றாவிடா இது என தோன்றலாம். மேலே குறிப்பிட்டுள்ள சில, இன்ஃபாக்ச்சுவேஷன் தானே... தவறான உறவு தானே... எப்படி காதல் ஆகும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. அப்படி கேக்குற உங்களுக்கு புரியுது எது காதல் என்று.. ஆனால் நிறைய பேர் இது தெரியாம எல்லாத்தையும் போட்டு குழப்பிக்குறாங்களே! அதுல சில பேர் சிலவற்றை படிச்சிட்டு, இதுதான் காதல், காதல்ல எதுவுமே தப்புக் கிடையாது, காதல் என்று வந்துவிட்டால் எல்லாம் சரி... இப்படியெல்லாம் டயலாக்கா பேசுவாங்க... தன்னுடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்களை நியாயப்படுத்துவதற்கு.

அப்ப எதுதான் காதல்?

காதலை விளக்குவது ரொம்ப கடினம். நீயின்றி நான் இல்லை என்று சொல்வதும் காதல்தான். பிரியமானவருக்கு நாமே பிரச்சினையாக மாறும்போது, பிரிவதும் காதல்தான். சில நேரங்களில் நீயா.. நானா.. என மோதிக்கொள்வதும் காதல்தான். முழுமனதுடன் விட்டுக்கொடுப்பதும் காதல்தான். எதுவா இருந்தாலும் நான் கூடவே நிற்பேன்னு சொல்வதுவும் காதல்தான். இடைவெளி தேவைப்படும்போது தள்ளி நின்று ரசிப்பதும் காதல்தான். ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா நாம நேசிக்கும் நபரை அப்படியே அவருடைய இயல்பில் விட்டுவிடுவதே காதல்தான். நாம் நேசிக்கும் நபருக்கு துரோகம் செய்யாமல், அவரை நெருக்கடிக்கு ஆளாக்காமல், சுதந்திரமாக செயல்படவிடுவதும் காதல்தான். காதல் பற்றி கம்யூனிஸத்தின் தந்தை என அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸ் எளிமையா விளக்கியிருக்காரு. காதல் என்பது ’மனித நேயம்’. அவ்வளவேதான். ஆழ்ந்த மனித நேயத்தின் வெளிப்பாடாக இருவருக்குமிடையே காதல் பூக்கும்போது வாழ்க்கை அவர்களை தலைகீழாகவும் மாற்றாது. பிரித்தும்விடாது.


காதல் ப்ரபோஸ் செய்யும் வரைபடம்

காதல் பற்றிய இன்றைய பார்வை

இன்றைய காலக்கட்டத்தில் காதல் செய்யும் பலரும் சொல்வது, நான் உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். அனைத்து காதலை விடவும் என்னுடைய காதல் புனிதமானது. இது தெய்வீக காதல்... என்றெல்லாம் தம்பட்டம் அடிக்கும் போக்கு அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் தெய்வீகம், புனிதம் என்றெல்லாம் எதுவுமில்லை. எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே பயணிக்கின்றன என்ற டயலாக்கை போல, எல்லா காதல்களுக்கும் பாலின ஈர்ப்பே மையக் கருவாக இருப்பதுதான் உண்மை என்றும், அதுவே அன்பு, பன்பு என பல்வேறு முகமூடிகளுடன் பவனி வருவதாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறாங்க. உடல், பொருள், ஆவி என அனைத்தையும் எவ்வித ஒளிவு மறைவின்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதே காதல் என்ற உறவின் உண்ணதும் என்றும், காதல்-காமம் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்தவை என்றும் சொல்றாங்க. அதேநேரம் அந்த காதல் கையில் கிடைத்த பிறகு, அதுல ஒரு உதாசீனமும், சலிப்பும் ஏற்பட்டு, நினைத்தபோது இனித்த காதல், கிடைத்த பிறகு கசந்து விடுவதாகவும் மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறாங்க.


அன்புக்குரியவர்களிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு

காதலில் எது வெற்றி? எது தோல்வி?

காதல் தோற்பதில்லை; காதலர்கள்தான் தோற்கிறார்கள் என்ற வாக்கியம் மிகவும் பிரபலமானது. முதல் நிலையான கண் பார்வையில் தொடங்கும் காதல், அடுத்த நிலையான பால் மயக்கத்திற்கு சென்று புரிதல், விட்டுக்கொடுத்தல் என நிலையான உறவில் ஆணும், பெண்ணும் திடமாக இருக்கும்போது வெற்றியடைகிறது. காதல் வந்துவிட்டால், புழு கூட பாம்பை போல படமெடுக்கும் என்று சொல்வார்கள். ஆம், வெற்றிகரமான காதல் என்பது கோழைக்கும் வீரத்தை வரவைக்கும். வாழ்க்கையின் அடுத்து நிலைக்கு நம்மை உயர்த்தும். அதேநேரம், அக்கறை என்ற பெயரில் செய்யப்படும் ஓவர் டாமினேஷன், அதீத அன்பு என்ற பெயரில் துணைக்கு நெருக்குதலை உண்டாக்குதல், உதாசீனம், ஒருவருடன் உறவில் இருந்து கொண்டே பிற நபர்களுடனும் உறவில் இருப்பது போன்ற காரணங்களால் தோல்வியடைகிறது காதல்.


'அலைபாயுதே' படத்தில் மாதவன் - ஷாலினி இடம்பெறும் காதல் காட்சிகள்

மேலும் தனித்தனி வீடுகளில் இருந்துகொண்டு காதலர்களாக சந்தோஷமாக வாழ்ந்தவர்கள், ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழும்போது அதிக சண்டையிட்டு பிரிவதை நிறைய பார்த்திருப்போம். காரணம், உறவுகள் நெருங்கும்போது, அவர்களின் முகமூடிகள் கழன்று, உண்மையான முகம் வெளிப்படும். இதன் காரணமாகவே உலகப்புகழ் பெற்ற எத்தனையோ காதல் ஜோடிகள் திருமண உறவில் இணைந்து சில காலத்திலேயே பிரிந்திருக்கின்றன. சரித்திர காதலர்களான லைலாவும், மஜ்னுவும் திருமண பந்தத்தில் இணைய முடியாமல் போனதன் காரணமாகவே இன்றும் சரித்திர காதலர்களாக போற்றப்படுவதாகவும், ஒருவேளை திருமணம் செய்திருந்தால் கண்டிப்பாக பிரிந்திருப்பார்கள் என்றும் நிறைய பேர் வேடிக்கையாக சொல்லக் கேட்டிருப்போம். மேலும் யதார்த்தமாக, வாழ்க்கையின் ஒரு அங்கமாக மட்டுமே காதலை ஏற்பவர்கள் அதில் வெற்றியடைகின்றனர். வாழ்க்கையே காதல்தான், காதல் மயமானதுதான் என்று முழுவதும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குபவர்கள் தோல்வி அடைவதாக சொல்லப்படுகிறது.

Updated On 19 Feb 2024 11:50 PM IST
ராணி

ராணி

Next Story