இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பல்வேறு கடைகளில் விலைகொடுத்து வாங்குகிறோம். கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கு காலாவதி தேதி, தரம் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விதிமுறைகள் ஒவ்வொரு மாநில மற்றும் நாட்டின் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகின்றன. அதேபோல் பொருட்களை வாங்குபவர்களும் அதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மேலும் அந்த பொருட்களால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறி பொருட்கள் விற்கப்பட்டாலோ அதுகுறித்து கேள்வி எழுப்பவும் நஷ்ட ஈடு பெறவும் வாங்குவோருக்கு உரிமை உண்டு. இதுதான் நுகர்வோர் உரிமைகள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் வரையறைகளுக்கு ஏற்ப நுகர்வோர் உரிமைகளும் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவை பொருத்தவரை தினசரி பொருட்கள் வாங்குவோர் மட்டுமல்லாமல் சிறு குறு தொழில் செய்ய மொத்தமாக பொருட்களை வாங்குவோரும் நுகர்வோர் என்றே அழைக்கப்படுகின்றனர். அப்படி பார்த்தோமானால் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோராகத்தான் இருக்கிறோம். அப்படி பொருட்களை வாங்குவோர் தெரிந்துகொள்ள வேண்டியவை குறித்தும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நுகர்வோர் உரிமைகள்

பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்குபவர்களை நுகர்வோர் என்கின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டு தேவைகள் மற்றும் சட்டங்களுக்கு ஏற்ப நுகர்வோருக்கான உரிமைகள் வரையறுக்கப்படுகின்றன. இன்றைய சந்தைகளில் மோசடி, ஏமாற்று வேலை மற்றும் முறைகேடுகள் அதிகமாக நடக்கின்றன. எனவேதான் பொருட்களை வாங்குவோர் தாங்கள் வாங்கும் பொருட்கள் குறித்து தெரிந்துகொள்ளும் அதிகாரத்தை வழங்கவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசே சட்டங்களை வகுத்திருக்கிறது. அதன்படி ஒரு பொருள் குறித்த தகவலை பெறவும், பொருட்களை தேர்ந்தெடுக்கவும், அதுகுறித்து முறையிடவும், தங்களுடைய குறைகளை தீர்த்துக்கொள்ளவும் நுகர்வோருக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உணவு, உடை, இருப்பிடம் மற்றும் உடல்நல பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகள் மற்றும் அதற்கான சேவைகளை ஒருவர் எளிதில் அணுகும் உரிமையை இந்த சட்டம் வழங்குகிறது. இந்த சட்டத்தின்கீழ் யார் வேண்டுமானாலும் தாங்கள் வாங்கக்கூடிய ஒரு பொருள் குறித்து அறிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது.


நுகர்வோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

மேலும் பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்து தெரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அதுகுறித்து விழிப்புணர்வுடன் இருப்பதும், தேவைக்கு அதிகமாக வாங்குவதை தவிர்த்தலும், தவறு செய்யும் வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் குறித்து புகாரளிப்பதும், பொருட்கள் மற்றும் சேவைகளை முறையாக பயன்படுத்தலும், சுற்றுச்சூழல் குறித்து பொறுப்புடன் இருப்பதும் நுகர்வோரின் கடமையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருட்களை வாங்க செல்லும்போது அங்குள்ள விற்பனையாளர்கள் வற்புறுத்தி ஏதேனும் பொருட்களை வாங்கச்சொன்னால் அதனை எதிர்க்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு. அதேபோல், ஒரு பொருளை வாங்கும்போது சில கடைகளில் பில் கொடுக்காமல் தவிர்ப்பர். அதை அவர்களிடம் கேட்டு வாங்கவும், அதுகுறித்து முழுமையான விவரங்களை பெறவும் நுகர்வோருக்கு உரிமை உள்ளது. ஒருபொருளை வாங்கிய பிறகு, அதனால் பிரச்சினை வருமாயின் அதுகுறித்து உடனடியாக விற்பனையாளரிடம் சொல்லலாம். தேவைப்படுமாயின் விற்பனையாளரின் முத்திரை மற்றும் கையொப்பத்தை உத்தரவாதமாக பெறவும் ஒரு பொருளை வாங்குவோருக்கு உரிமை உள்ளது. ஒவ்வொரு கடையிலும் தரமான பொருட்களை, சரியான எடையில் விற்க வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு, அளவு மற்றும் விலை விவரங்களை தகவல் பலகையில் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்க்கும்படியாக வைப்பது அவசியம். அங்கு தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது நுகர்வோர் சரியாக நடத்தப்படவில்லை என்றாலோ விற்பனையாளர் குறித்து புகாரளிக்க முழு உரிமை உண்டு.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில் 1986ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, 1987ஆம் ஆண்டுமுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 986-இன் கீழ் பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, கேட்டறியும் உரிமை, குறைதீர்க்கப்பெறும் உரிமை, நுகர்வோர் கல்வி பெறும் உரிமை, அடிப்படைத் தேவைகள் குறித்த உரிமை மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழலுக்கான சட்டங்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுகின்றன. ஒரு பொருள் அல்லது சேவை குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது தெரிந்துகொள்ள விரும்பினாலோ மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் அல்லது மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகலாம். அங்கு தங்களுடைய குறைகளை சொல்லவோ அல்லது தங்களுக்கான தேவைகளை பெறவோ வழக்கறிஞர்கள் தேவையில்லை. எளிய முறையில் தங்களுக்கு தெரிந்தவாறு தங்களுக்காக தாங்களே வாதாட முடியும்.


நுகர்வோருக்கான பாதுகாப்பு சட்டத்திலுள்ள அம்சங்கள்

நேரில் செல்ல முடியாவிட்டாலும் பதிவு தபால் மூலம் புகாரை அனுப்பி வைக்கலாம். இந்த வழக்கை நடத்த அதிகப்படியாக செலவுசெய்ய வேண்டியதில்லை. ஏதேனும் ஒரு பொருளை வாங்கி பயன்படுத்தியதால் உருவான பிரச்சினைகளால் ஏற்பட்ட செலவுக்கான நஷ்டஈடை பெறும் உரிமையானது இந்த சட்டத்தின்கீழ் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. அப்படி குறைதீர் மன்றங்களுக்கு தங்களுடைய புகார்களை அனுப்புவோர், யார்மீது வழக்குத் தொடுக்கிறார்களோ அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் தீர்வையும், தாங்கள் கூறும் குறைக்கான அத்தாட்சி நகலையும் இணைத்து அனுப்புவது அவசியம். தங்களுடைய புகாருக்கான தீர்வு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் அதுகுறித்து கேள்வியெழுப்ப ஏதுவாக, புகார் அனுப்பிய ரசீது மற்றும் புகார் நகலை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். சம்பந்தப்பட்ட துறையிலிருந்து பதில் வராதபட்சத்தில், ஒவ்வொரு மாவட்டத்தின் நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் தலைவராக அறியப்படுகிற மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்கலாம். அந்த மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். அப்படியும் பதில் கிடைக்காதபோது நஷ்ட ஈடு கேட்டு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரலாம்.

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

விற்பனையாளர் மற்றும் பொருட்களின் தரம் குறித்து கேள்வி எழுப்ப ஒருவருக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேபோல், தாங்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுகுறித்தெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆண்டுதோறும் டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நுகர்வோரின் தேவைகள் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இந்த நாளில் நடத்தப்படுகின்றன.


நுகர்வோரின் குறைகளை தீர்க்கும் வழிமுறைகள்

ஒவ்வொரு நாட்டிலும் மாகாணங்கள் வாரியாகவும், மாநில வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் நுகர்வோரின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை முதலில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகவேண்டும். அங்கு நடத்தப்படும் வழக்குகளுக்கு ரூ. 20 லட்சம்வரை நஷ்ட ஈடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். ஆனால் அங்கிருந்து வழக்கு, மாநில குறைதீர் ஆணையத்துக்கு செல்லும்போது அங்கு 20 லட்சத்திற்கும் மேல் 1 கோடி வரை நஷ்ட ஈட்டை பெறமுடியும். அதுவே அங்கும் நீதி கிடைக்காதபட்சத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தை அணுகலாம். இந்த ஆணையம் புதுடெல்லியில் அமைந்திருக்கிறது. அதன்மூலம் ரூ.1 கோடிக்கும் மேல்கூட நஷ்ட ஈட்டை பெறமுடியும். ஒரு தனிநபரால் சமாளிக்க முடியாத நுகர்வோர் பிரச்சினைகளை இதுபோன்ற ஆணையங்களின் உதவியுடன் நாடுவதன் மூலம் முறையான தீர்வை பெறமுடியும். இந்த ஆணையங்கள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் டிஜிட்டல் விற்பனையாளர்கள் மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும்.

Updated On 24 Dec 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story