இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபாவளி என்றவுடனே நம் அனைவருக்குமே நினைவுக்கு வருவது வாண வேடிக்கைகளும், தித்திக்கும் இனிப்பு பலகாரங்களும், வண்ணமயமான புத்தாடைகளும் தான். அதிலும் குறிப்பாக, பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சி காலங்களில் தான் மக்கள் ஆடைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவர். தற்போது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டே இருக்கும் வேலையில் மக்கள் அனைவரும் தீபாவளிக்கான புத்தாடை பர்ச்சேஸில் மூழ்கி வருகின்றனர். தெருக்களிலும், துணிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளைப் பொறுத்தவரையில் காலத்திற்கு ஏற்றார் போல அதன் வகைகளும் வடிவங்களும் மாற்றம் பெற்றுகொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஆண்களின் ஆடைகளோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கான ஆடையின் வகைகள் ஏராளம். அந்தவகையில்இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு பெண்களுக்கான ஆடையின் வகைகள், விலை மற்றும் ட்ரெண்டிங் குறித்த தகவல்கள்பின்வருமாறு..

சாமுத்ரிகா பட்டு

சேலைகளுக்கும் பெண்களுக்குமான உறவு என்பது பல்லாயிரம் காலம் தொட்டே ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது. பட்டு என்பது காலம் காலமாக நமது பாரம்பரிய ஆடைகளோடு பிணைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பண்டிகைகளின் போது ஆண்களும் சரி, பெண்களும் சரி பட்டாடை உடுத்துவது உண்டு. குறிப்பாக பெண்கள் உடுத்தும் பட்டு சேலைகளில் எக்கச்சக்க அளவிலான பட்டு வகைகளை நாம் காணலாம். அதில் இந்த தீபாவளிக்கு என்றே ஸ்பெஷலாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பட்டு சேலை வகை தான் சாமுத்ரிகா பட்டு. சர்வ லட்சணங்கள் நிறைந்த சாமுத்ரிகா பட்டு என்று சொல்லக்கூடிய பட்டு சேலையின் வகையானது திருமணங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் விற்பனை ஆகக்கூடிய ஓர் ஆடையாகும். அதிக கணம் நிறைந்த இந்த சாமுத்ரிகா பட்டின் விலை 30000 ரூபாயில் இருந்து தொடங்கி 6 லட்ச ரூபாய் வரையில் விற்பனையாகிறது. இது முழுக்க முழுக்க காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர்களால் சில்வர் மற்றும் கோல்டு கோட்டிங் மட்டுமே பயன்படுத்தி செய்யப்படும் சேலை வகையாகும். இந்த சாமுத்ரிகா பட்டின் வடிவமானது ஒரே நிறத்தைப் பயன்படுத்தியும், இரண்டு அல்லது மூன்று நிறங்களைப் பயன்படுத்தியும் கூட வடிவமைக்கப்படுகிறது. பொதுவாகவே பட்டு ஆடைகளைப் பொறுத்தவரையில் ஆடைகளின் வேலைப்பாடுகள் மற்றும் தயாரிக்கப்படும் கால அளவுக்கு ஏற்ப விலையில் மாற்றம் ஏற்படலாம். வடிவமைப்பு என்று பார்க்கையில் சாமுத்ரிகாவில் பாரம்பரியமாக மட்டுமல்லாமல் காலத்தின் போக்குக்கு ஏற்றவாறு மாடர்னாகவும் சேலைகள் தற்போது அதிகளவில் வடிவமைக்கப்படுகிறது.


சர்வ லட்சணங்கள் நிறைந்த சாமுத்ரிகா பட்டு

சல்வார் மற்றும் குர்தீஸ்

இன்றைய நவீன பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளுள் ஒன்றாக இருக்கிறது சல்வார்ஸ் மற்றும் குர்தீஸ். முன்னரெல்லாம் பார்த்தால், பெண்கள் அதிகம் அணியும் ஆடை என்ற வரிசையில் பார்த்தால் நமது பாரம்பரிய உடையான சேலை மட்டும் தான் இருந்தது. ஆனால் தற்போது அது முற்றிலுமாக காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற்று மார்க்கெட்டில் பெண்களின் உடல் அளவிற்கு ஏற்றார் போல பல வகையான வடிவத்தில், பெண்களுக்காகவே பலவகையான பிரத்யேக ஆடைகள் தற்போது அதிகமாகி இருக்கிறது. பொதுவாகவே பண்டிகைக் காலங்களில் அதிகமாக அணியும் ஆடைகளுக்கான விற்பனையும், மாடல்களும் ஒரு படி மேல் தான் இருக்கும். எனவே நவீனயுகப் பெண்களுக்காகவே இந்த ஆண்டு தீபாவளியை ஒளிரூட்ட வண்ணமயமான நிறங்களில், புதுப்புது டிசைன்களில் சல்வார்ஸ் மற்றும் குர்தீஸ் ஆடைகள் கண்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு தீபாவளி ட்ரெண்டிங்கில் சல்வார்ஸ் மற்றும் குர்தீஸை பொறுத்த வரையில் ‘ஆலியா கட்’ என்ற மாடல் தான் தற்போது அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இதன் விலை ரூபாய் 1200 லிருந்து தொடங்கி 3200 வரையில் விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த அனார்கலியானது பலவைகையான நிறங்கள் மற்றும் மாடல்களிலும் காப்பர் கோட்டிங் கலந்த மாடலிலும் மார்கெட்டிற்கு வந்து, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு தற்போது விற்பனையில் அதிகளவில் உச்சத்தை தொட்டுள்ளது.


இன்றைய பெண்கள் விரும்பும் சல்வார் மற்றும் குர்தீஸ்

அனார்கலி

தீப ஒளியை விட பிரகாசமாக பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்கின்றது பெண்களுக்கான அனார்கலி ஆடை. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏராளமான பெண்கள் விரும்பி அணியும் இந்த அனார்கலி ஆனது நாளுக்கு நாள் புதுப்புது டிசைன்களில், பண்டிகைக் காலங்களாக இருந்தாலும் சரி, திருமணம் அல்லது சுபநிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி நமது இந்திய பெண்களும், சிறுமிகளும் இந்த அனார்கலியை அதிகளவில் அணிந்து மகிழ்கின்றனர். கண்களைக் கவர்ந்து இழுக்கும் வண்ணமிகு கற்கள், பல்வேறு வண்ணங்களிலும் இந்த அனார்கலியானது வடிவமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, அனார்கலியில் புதுப்புது மாடல்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவை ஆலியா கட், இந்த தீபாவளிக்கு அதிகம் விற்பனையில் இருக்கும் இந்த ஆலியா கட் மாடலை அனார்கலியோடு இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுபோக மஸ்தானி மாடல் அனார்கலி, வண்ண கற்கள் பயன்படுத்தாத சாதாரண மாடல் அனார்கலி போன்ற வகைகளில் வடிவமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை என்று பார்க்கையில் அந்தந்த ஆடையின் தனித்துவத்திற்கு ஏற்றவாறு அதன் விலையில் மாற்றம் பெறலாம். சாதாரண சில்க் காட்டன் அனார்கலியின் விலை ரூபாய் 2000 த்தில் இருந்து தொடங்கி மஸ்தானி அனார்கலியின் விலை 15,000 ரூபாய் அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


பல வண்ணங்களில் ஜொலிக்கும் அனார்கலி

லெஹங்கா

லெஹங்கா ஆடை வகை என்பது பெண்கள் அதிகளவில் சுபநிகழ்ச்சிகளில் உடுத்திக்கொள்ளும் ஆடை ஆகும். இந்த லெஹங்கா உடையை பெரும்பாலும் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதியில் உள்ள பெண்கள் தான் அதிகளவில் பயன்படுத்தினர். ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் முற்றிலுமாக மாறி நமது தமிழக பெண்களுக்கும் கூட மிகவும் பிடித்தமான ஒரு உடையாக மாறி இருக்கிறது. லெஹங்கா ஆடை வகையைப் பொறுத்த வரையில் பாரம்பரிய முறைப்படி, காலத்திற்கு ஏற்றார் போல நவீன முறையிலும் இந்த ஆடை அமைந்து பெண்களுக்கு ஒரு அழகான பாரம்பரிய தோற்றத்தை அவர்களுக்கு அளிக்கிறது. லெஹங்காவில் பல்வேறு வகைகள் இருக்கிறது. அவை சேலை லெஹங்கா, ஷரரா கட் லெஹங்கா, ஸ்டைல் லெஹங்கா, பிராட் ஃப்ளேவர்டு லெஹங்கா என இன்னும் பல வகைகள் உள்ளன. பொதுவாகவே லெஹங்காவின் தரத்தை பொறுத்தே அதன் எடையும் அதிகரிக்கும். ஆடையின் விலை குறித்து பார்த்தால் ரூபாய் 2000 த்தில் துவங்கி ரூபாய் ஒரு லட்சம் வரையில் அந்தந்த ஆடைக்கு உரிய வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு விலையில் மாற்றம் பெறலாம். இதில் இந்த தீபாவளிக்கு கிரேப் மற்றும் நெட் மெட்டீரியல் லெஹங்கா வகைகள் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


பெண்கள் விரும்பும் லெஹங்கா ஆடை

Updated On 14 Nov 2023 12:08 AM IST
ராணி

ராணி

Next Story