அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது இறக்குமதி வரி விதிப்பை அமல்படுத்தியிருக்கிறார். இதனால் உலகளவில் பங்கு சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்த டாரிஃப் மற்றும் டிரேடிங் போர்களினால் உலக நாடுகள் பலவும் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பவர்கள் பெரும் பதட்டத்தில் இருக்கின்றனர். அதுபோக தங்கம் விலையும் மக்களை அச்சமூட்டுகிறது. பங்கு சந்தை முதலீடு குறித்தும், தங்கத்தை எப்படி முதலீடு செய்வது என்பது குறித்தும், இதுபோன்ற சமயங்களில் எப்படி தங்களது பங்கை காப்பாற்றிக்கொள்வது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறார் பங்கு சந்தை நிபுணர் நாகப்பன்.
ஸ்டாக் மார்க்கெட்டில் திடீர் மந்தநிலை (recession) எதனால் வருகிறது? இது சரியாகுமா?
பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து இருந்துகொண்டே இருப்பதால் மந்த நிலை என்று சொல்லமுடியாது. அதன் வேகம் அவ்வப்போது மட்டுப்படுகிறது. அமெரிக்காவில்கூட மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக்கூட தெரியவில்லை. வளர்ச்சி குறையலாம். குறுகிய காலத்தில் பங்குச்சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்பு கிடையாது. நீண்ட காலத்தில்தான் அந்த தொடர்பு இருக்கும். குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் பதட்டம், மகிழ்ச்சி போன்ற செயல்களின் அடிப்படையில்தான் பங்குச்சந்தையின் அன்றாட ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதன் அடிப்படையிலும் டாரிஃப் போரின் பாதிப்பாலும் பங்குச்சந்தை குறித்து மிகப்பெரிய அளவில் உலகெங்கும் பேசப்படுகிறது. அதேசமயம் இந்த போரில் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு பதிலடியாக அமெரிக்காக என்ன செய்யப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இதுபோன்ற நிச்சயமற்ற சூழ்நிலையால்தான் பங்கு சந்தை கணிக்கமுடியாத நிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
வர்த்தகப் போரால் பங்கு சந்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்
நிதி ஆலோசகராக முதலீட்டாளர்களுக்கு உங்களுடைய அறிவுரை என்ன?
தினசரி டிரேடர்களுக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் stop loss வைத்து டிரேடிங் செய்துகொண்டிருந்தாலும் சில நேரங்களில் தவறாக போய்விடுகிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும். அவர்களுடைய தகுதிக்குள் செய்துகொண்டே இருப்பார்கள். ஆனால் நீண்டகால முதலீட்டாளர்கள் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. இருந்தாலும் அதை கவனித்து அதன்மூலம் எப்படி ஆதாயம் பெறமுடியும் என்று பார்க்கவேண்டும். இந்த வீழ்ச்சியை எப்படி நமக்கு சாதகமாக்க முடியும் என்று பார்த்து அதையே வாய்ப்பாக்க வேண்டும். எதிர்கால பொருளாதார வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபட போவதில்லை என்ற நம்பிக்கை இருந்தாலும் போதும். இதுபோன்ற வீழ்ச்சியானது 2020, 2016, 2008, 2001, 1994, 1992, 1988 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. ஆனால் ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பிறகும் பங்கு சந்தை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. முதலீட்டாளர்களை பொருத்தவரை இதை ஒரு வாய்ப்பாக பார்த்தாலும் தீவிரமாக பங்குகளை வாங்கக்கூடாது. காத்திருந்து நிதானமாக மெல்ல மெல்ல பிரித்து வாங்க வேண்டும். ஏனென்றால் வீழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாட்களில் ஏற்றம் ஏற்பட்டு விடாது. அது நீண்ட நாட்கள் ஆகலாம். எனவே அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
பங்கு சந்தையின் தாக்கம் தங்கம் போன்ற மற்ற மார்க்கெட்டுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தற்காலிகமா?
தங்கம் விலை சென்ற ஆண்டு முழுவதும் ஏற்றத்தில் இருந்தது. தொடர் ஏற்றத்தில் இருக்கக்கூடிய எந்தவொரு சொத்திலும் ஒரு கட்டத்தில் சில மாற்றங்கள் இருக்கும். அப்படி தங்கம் அந்த உச்சத்தை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொட்டது. அடுத்த சில ஆண்டுகளுக்கு அதுதான் உச்சமாக இருக்கும். வேண்டுமானால் 5% வரை உயரலாம். அதற்குமேல் போக வாய்ப்பில்லை. பெரும்பாலும் பக்கவாட்டு நகருதலுக்கான காலகட்டமாகத்தான் அடுத்த ஒருசில மாதங்கள் இருக்கும். 2850 டாலரில் இருந்து 3150 டாலருக்குள், அதாவது 300 டாலர்கள் என்ற கணக்கில் 8லிருந்து 10%க்குள்தான் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு (2023) பங்குகளை வாங்குவதற்கான ஆண்டு. சென்ற ஆண்டு (2024) பங்குகளை விற்பதற்கான ஆண்டு. இந்த ஆண்டு தங்கத்தின் ஒரு பகுதியை விற்று பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஆண்டாக இருக்கப்போகிறது.
பங்கு சந்தை வீழ்ச்சியால் தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் தாக்கம்
ஆனால் நிறையப்பேர் 2023இல் பங்குகளையும், 2024இல் தங்கத்தையும் வாங்கியிருப்பார்கள். இது சகஜமாக நிகழக்கூடியதுதான். இதனால் எல்லோருக்கும் வரக்கூடிய வருமானம் கிடைக்கும். சற்று வித்தியாசமாக செயல்படுபவர்களுக்கு வருமானமும் சற்று வித்தியாசமாக இருக்கும். அதில் லாபமும் இருக்கலாம், நஷ்டமும் இருக்கலாம். இந்த ரிஸ்க் எடுக்க துணிபவர்களுக்கானதுதான் பங்கு சந்தை. அப்படி இல்லாதவர்களுக்கு நிரந்தர வைப்பு போன்று அரசின் காப்பீட்டு தொகையான 5 லட்சத்துடன் பாதுகாப்பான முதலீடுகள் இருக்கின்றன. இரண்டுக்கும் நடுவில் வேண்டுமென நினைப்பவர்கள் நல்ல மியூச்சுவல் ஃபண்டில் அல்லது தங்கம், ரியல் எஸ்டேட், வெள்ளி, கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு சந்தை என பிரித்து முதலீடு செய்யலாம்.
அமெரிக்காவில் டிரம்ப்பின் வரி விதிப்பால்தான் இந்த தாக்கம் வந்ததாக சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை?
பங்கு சந்தை ஏற்றத்தில் இருந்தது. எனவே இறங்குவதற்கான காலகட்டத்தை பார்த்திருந்தது. இல்லாவிட்டால் நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். அவை ஒத்துப்போகாததால் இறங்கிவிட்டது. அது இறங்கி நேர்க்கோட்டில் வருகிற சமயத்தில் டிரம்ப்பின் அறிவிப்பும் வந்தது. இந்த அறிவிப்பு குறித்து முன்கூட்டியே எல்லாருக்கும் தெரியும். போர் என்பது தீர்க்கப்படாத சில சிக்கல்கள். காலாட்படை, கப்பற்படை, விமான படை என நடந்துவந்த போர்கள், இப்போது பொருளாதாரத்தை வைத்து நடத்தப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு நாட்டிலும் நிதி சார்ந்த பங்கு சந்தைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஒரு நாட்டின்மீது இதுவும் ஒருவிதமான தாக்குதலாகத்தான் பார்க்கப்படுகிறது. இதிலிருந்து கொஞ்சம் தப்பியிருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் மாறலாம். வியட்நாமை பார்த்தோமானால் எந்தவிதமான வரியும் இல்லாமல் அவர்களுடைய பொருளை இறக்குமதி செய்துகொள்ள தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறது. ஆனால் சீனா அதை எதிர்க்கிறது. அப்படியே இந்தியாவை பார்த்தால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியான முடிவை எடுப்பதால் இந்த சூழ்நிலைகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதில் ஒரு தெளிவு வர 2 முதல் 3 மாதங்கள் ஆகும். ஆனால் இப்போது நடக்கும் ட்ரேடு போர் மற்றும் டாரிஃப் போர் போன்றவை தற்போதைய சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைத்திருக்கிறது என்பது உண்மை.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் பங்கு சந்தையில் வீழ்ச்சி
தங்கம் விலையில் 38% இறக்கம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை?
அதை கணிக்கமுடியாது. ஆனால் அப்படி நடந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தெரிந்திருக்க வேண்டும். சந்தையை கணிக்க முயற்சிக்க கூடாது. தினமும் சாப்பிடும் உணவைப் போன்றுதான் பார்க்கவேண்டும். பிடித்த உணவாக இருந்தால் அதிகம் சாப்பிடுவதோ அல்லது பிடிக்காத உணவு என்றால் சாப்பிடாமலே விடுவதோ சரியாக இருக்காது. அதுபோல் சந்தை ஏறலாம், படுதோல்வியை சந்திக்கலாம் அல்லது பக்கவாட்டு நகர்தலுக்கும் போகலாம். மூன்றில் எது நடந்தாலும், தான் என்ன செய்யப்போகிறோம் என்ற யுக்தியில் தெளிவாக இருக்கவேண்டும். பயப்படுபவர்களுக்கு பங்கு சந்தை ஒத்துவராது. கையாள தெரிந்திருக்க வேண்டும்.
பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கும், புதிதாக வர நினைக்கும் முதலீட்டாளர்களுக்கும் உங்களுடைய அட்வைஸ் என்ன?
இப்போது யாரும் அறிவுரைகளை கேட்கும் மனநிலையில் இருப்பதில்லை. அதேசமயம் பங்கு சந்தையை யாராலும் கணிக்கவும் முடியாது. அதில் எந்த உத்தரவாதமும் கிடையாது. இவ்வளவு லட்சம் கோடி இழப்பு என்று சொன்னால், அதற்கு முன்பு அத்தனை லட்சம் கோடி சம்பாதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே அர்த்தம். இவை அனைத்துமே கற்பனை மதிப்பீடுகள்தான். இவை அனைத்தையும் தாண்டி பங்கு சந்தையில் நீண்ட காலம் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதில்லை. தினசரி டிரேடிங் அல்லது குறுகிய கால டிரேடிங்கில் மாட்டிக்கொள்வோர்தான் அதிகம் இருக்கிறார்களே தவிர, வலுவான நிறுவனங்களில் முதலீடு செய்து இழந்தவர்கள் குறைவு.
