இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டும் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களின் உதவியுடன் நாட்டின் முன்னேற்றம் மற்றும் பல்வேறு துறைகளையும் சமநிலைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டின் பட்ஜெட் தயாரிப்பில், தலைமை பொருளாதார ஆலோசகரான வி. ஆனந்த் நாகேஸ்வரன், நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை செயலாளரான டாக்டர் மனோஜ் கோவில், பொருளாதார விவகார செயலாளர் அஜய் சேத் மற்றும் நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் கந்தா பாண்டே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கடந்த 2 பாஜக ஆட்சிகளில் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்துவரும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2025 - 26 நிதியாண்டு பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

பதினெட்டாம் மக்களவையின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், கடந்த 3 ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் காகிதமற்ற, டிஜிட்டல் வடிவிலேயே தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டின் பட்ஜெட், இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் சீரமைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி உரையை தொடங்கினார். மத்திய பட்ஜெட்டை அவர் வாசிக்கத் தொடங்கியதுமே சில எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தெலுங்கு கவிதையை சுட்டிக்காட்டிய அமைச்சர், உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா வளர்ந்துள்ளதாகவும், பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

விவசாயத்துறையில் முன்னேற்றம்

இந்திய மக்கள்தொகையில் 54% வேளாண் தொழிலை நம்பியிருப்பதால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கான சிறந்த திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டன. உலக நாடுகளின் பொருளாதார வரிசையில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சியானது தொடர்ந்து சரிந்துகொண்டே போகிறது. இதற்கு வேளாண் துறையில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என்று பொருளாதார நிபுணர்களின் தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது விவசாயிகள் லாபம் பெற்றால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். அதற்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயர்வு ஏற்படாமல் இருக்க, விளைச்சல் காலத்திலேயே தானியங்கள் மற்றும் பயிர்களை பதப்படுத்தி சேமிக்கும் திட்டங்களை வகுத்து அதற்கு அரசு நிதி ஒதுக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில், பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம், குறிப்பாக, உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க திட்டம், இதன்மூலம் 6 ஆண்டுகளில் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடையவேண்டுமென்ற இலக்கு நிர்ணயம், அதேபோல் பழங்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை பெருக்கவும் திட்டம், அதுபோக, சாகுபடிக்கான சிறந்த விதைகளை நாடு முழுவதும் விநியோகிக்க திட்டம், அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைத்தல், பீகாரில் மாநில விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம், 7.7 கோடி விவாசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு மூலம் குறுகிய கால கடன் பெற நடவடிக்கை, இதன்மூலம் ஒரு விவசாயி ரூ. 5 லட்சம் வரை கடன் பெற வசதி போன்ற திட்டங்கள் விவசாயிகள் மற்றும் வேளாண் துறையின் முன்னேற்றத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.


கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகள் மற்றும் குறு தொழில் செய்வோர் கடன் பெற திட்டம்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன்

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒருபங்கு வகிக்கும் சிறு, குறு தொழில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவேண்டும் என்பது பலதரப்பின் கோரிக்கையாக இருந்தது. இதனால் நாட்டில் பல கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த துறையைச் சேர்ந்தவர்களுக்கு இப்போதுள்ள மூலதன பொருட்களை வாங்கும் திறன் குறைவு, பண தட்டுப்பாடு, பணத் தேக்கம், மூலப்பொருட்களின் விலையேற்றம், கடன் வட்டி விகிதம் மற்றும் இறக்குமதி செலவினங்கள் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும் வகையிலான திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டன. இந்நிலையில் புத்தாக்க நிறுவனங்களுக்கு கடன் வட்டியில் சலுகைகள், கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி, சிறு, குறு நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக கொள்ளும் வகையில் வசதிகள், சிறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன்கள், கிராமப்புறங்களில் கூடுதலாக 1.5 லட்சம் தபால் நிலையங்கள், இவற்றின்மூலம் ஊரகப்பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உலகின் 2வது மீன்வளத்துறையாக விளங்கும் இந்தியாவில் மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டைகள்மூலம் வழங்கப்படும் குறுகிய கால கடன் 3 லட்சம் முதல் 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உத்யாம் தளத்தில் பதிவு செய்த குறுதொழில் நிறுவனங்களுக்கு கடன் அட்டை மூலம் சிறப்பு சலுகைகள், நீண்டகால மற்றும் குறுகிய கால கடனை உறுதிசெய்தல், நீர்ப்பாசன வளர்ச்சி போன்றவை செய்துதரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொம்மை தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடிவரை கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் மருத்துவக் கல்லூரிகளுக்கான திட்டங்கள் மற்றும் மருந்துகளுக்கு சலுகைகள் அறிவிப்பு

கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கு சிறந்த திட்டங்கள்

ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்குதல், நாடு முழுவதுமுள்ள மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்டு வசதி, மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைத்தல், கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்குதல் போன்றவை முக்கிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உயிர்காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருகிறது. அதுபோக 6 வகை மருந்துகளுக்கு வரியை 5% என குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட பெண்களும் தொழில்முனைவோர்!

ஏற்கனவே பிரதமர் கூறியிருந்தது போன்றே பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த முறையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பெண்களின் சுயதொழில் கடன்கள் மற்றும் திட்டங்கள், கிராமப்புறங்களில் பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்கள் மற்றும் சிறுசேமிப்புத் திட்டங்கள் போன்றவை அமலில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பட்டியலினப் பெண்களுக்கென்று தனிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பெண்களை தொழில் முனைவோர்களாக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக தொழில் தொடங்கவிருக்கும் பட்டியலினப் பெண்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 2 கோடி வரை கடன் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.


பட்டியலினப் பெண்களுக்கு சுயதொழில் ஏற்பாடு - வருமான வரியில் சலுகை மாற்றங்கள்

வருமான வரி - சிறப்பு சலுகைகள்!

வணிகர் சங்கங்கள் சார்பில் அனைத்து பொருட்களுக்குமான ஜிஎஸ்டி வரியை 4 அடுக்கு, 5 அடுக்கு என்பதை மாற்றி ஒரே நாடு, ஒரே வரி என மாற்றவேண்டுமெனவும், அதேபோல் 10% மேல் வரி இல்லாமல் அதை குறைக்கவேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. குறிப்பாக வருமான வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பலருக்கும் மகிழ்ச்சித் தரக்கூடிய சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தனிநபரின் ஆண்டு வருவாய்க்கு வருமான வரி முன்பு ரூ. 7 லட்சம் வரை இல்லை என்ற நிலையிலிருந்து தற்போது அது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ.1 லட்சம்வரை சம்பளம் வாங்குவோருக்கு வருமான வரி கிடையாது. அதேநேரம் வருமான வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.12 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு, அவர்களின் வருமானத்தில் 4 லட்சம் வரை வரி கிடையாது. அதன் பிறகான வருமானத்திற்கு...

ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை - 5% வருமான வரி

ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை - 10% வருமான வரி

ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை - 5% வருமான வரி

ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை - 20% வருமான வரி

ரூ. 20 லட்சம் முதல் ரூ. 24 லட்சம் வரை - 25% வருமான வரி

ரூ. 24 லட்சத்துக்கு மேல் - 30 % வருமான வரி செலுத்தவேண்டும். மூலதன ஆதாயங்கள் தவிர, மற்ற மாத வருவாய்க்கு வரி இல்லாத வகையில் வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு ரூ. 50 ஆயிரமாக இருந்த வரிவிலக்கு உச்ச வரம்பானது ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும் கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் வரி சலுகை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.


பீகார் மாநிலத்துக்கு சிறப்பு நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு

பீகாருக்கு ஏன் முக்கியத்துவம்?

2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றிபெற காரணமாக அமைந்த ஆந்திரா மற்றும் பீகாரைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் எதிரொலியாக கடந்த ஆண்டின் பட்ஜெட்டிலேயே பீகார் மற்றும் ஆந்திராவின் வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் மற்றும் நிதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள காரணத்தால் இந்த ஆண்டின் முழு பட்ஜெட்டிலும் பீகாருக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும், பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும், ஐஐடி பாட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும், தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும், விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டங்கள், தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடங்குதல் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுபோக சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டங்கள் வகுக்கப்படும் எனவும், லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி குறைக்கப்படுவதால் மின்சார வாகனங்களின் சுங்க வரி குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிவி பேனல்களுக்கான சுங்க வரி 20% அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

Updated On 4 Feb 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story