இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எல்லா பெற்றோருக்குமே தங்களுடைய குழந்தையை நல்ல இடத்தில் வைத்து பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக சிறுவயதிலேயே படிப்பை மட்டுமே கண்டிப்புடன் சொல்லித்தராமல் அதனுடன் சேர்த்து அவர்களுக்குள் இருக்கும் திறமைகளையும் கண்டறிந்து அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டால்தான் எதிர்காலத்தில் அவர்கள் நல்ல நிலையை அடைய முடியும். குழந்தை பிறந்தது முதல் டீனேஜ் வரையில் அவர்களுடைய மூளையின் செயல்திறன் வேகமாக இருக்கும் என்பதால் அந்த வயதில் செல்போன், டிவி என்று குழந்தைகளை விடாமல், நல்ல நல்ல விஷயங்களை பெற்றோர் சொல்லித்தர வேண்டும் என்கிறார் சிறப்பு கல்வியாளரும் மென்திறன் பயிற்சியாளருமான அகிலாண்டேஸ்வரி. இவர் சாதாரண குழந்தைகள் மட்டுமின்றி சிறப்பு குழந்தைகளையும் சாதனையாளர்களாக்கி அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துவருகிறார். குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களுடைய மூளையின் செயல்திறனை மேம்படுத்துவதிலும் பெற்றோர் மற்றும் குடும்பத்தின் பங்கு குறித்தும் எடுத்துரைக்கிறார் அவர்.

கண்களை திறந்து ரூபிக்’ஸ் க்யூப் solve செய்வதே மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு ரத்தன் டாடாவின் உருவத்தை கொண்டுவந்திருக்கிறார்களே! எப்படி?

ரூபிக்’ஸ் க்யூபை குழந்தைகளின் மூளைவளர்ச்சியை தூண்டுவதற்கான மிகப்பெரிய சாதனம் என்று சொல்லலாம். இப்போது நிறைய குழந்தைகள் அதிகமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள், எப்போதும் தனியாகவே இருக்கிறார்கள், எங்களிடம் பேசுவதேயில்லை என நிறைய பெற்றோர் சொல்கிறார்கள். இதுபோன்ற குழந்தைகளுக்கு நிறைய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில் குறிப்பாக, ரூபிக்’ஸ் க்யூப் குழந்தைகளின் மூளையைத் தூண்டி 20 முதல் 30 விநாடிகளுக்குள் அதை solve செய்யும் அளவிற்கு வேகமாக செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவை வல்லரசு நாடாக உருவாக்க அப்துல்கலாம் எப்படி பாடுபட்டாரோ அதேபோல மிகப்பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவும் நிறைய செய்திருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய அஞ்சலி செலுத்தவேண்டுமென்று நினைத்தோம். இதனால் குழந்தைகள் அவரைப்பற்றி நிறைய தெரிந்துகொள்வார்கள். அதேபோல் வெற்றி மட்டுமே வாழ்க்கை கிடையாது, ஏற்றதாழ்வுகள் இருக்கும் என்பதை புரிந்துகொண்டால்தான் வெற்றிபெற முடியும் என்ற அவருடைய கொள்கையை குழந்தைகளும் பின்பற்ற வேண்டும் என நினைத்துதான் இதை செய்தோம்.


ரூபிக்’ஸ் க்யூபால் செய்யப்பட்ட ரத்தன் டாடா உருவம்

ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். இந்த ரூபிக்’ஸ் க்யூபை கண்ணை கட்டிக்கொண்டு குழந்தைகளை செய்யவைத்ததற்கான நோக்கமே, மூளை வழியாக ஒரு செயலை செய்யவைக்கவேண்டும் என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் கண்ணை திறந்துகொண்டு ஒரு செயலை செய்வதைவிட கண்களை மூடிக்கொண்டு செய்தால் அதில் கவனம் கூடுதலாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

கண்ணை மூடிக்கொண்டு செய்தால் குழந்தைகளின் நடுமூளை செயல்திறன் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இது எல்லா குழந்தைகளுக்கும் சாத்தியமா?

3 வயது முதல் 13 வயது வரையிலான எல்லா குழந்தைகளாலும் இதை செய்யமுடியும். அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஏனென்றால் குறிப்பிட்ட வயதுவரை மூளை வளர்ச்சி மற்றும் மேம்பாடானது அபரிமிதமாக இருக்கும். அந்த நேரத்தில் என்ன சொல்லிக்கொடுத்தாலும் விரைவில் கற்றுக்கொள்ள முடியும். படிப்பு, நடத்தை, சமூகத்துடன் ஒன்றிப்போதல், விழிப்புணர்வு, செல்போனுக்கு அடிமையாதல், அதிலிருந்து வெளிவருதல் போன்ற அனைத்துமே நடுமூளையை தூண்டிவிடுவதன்மூலம் செய்யமுடியும். நடுமூளையை தூண்டிவிடுவது என்பது முழு உடலையும் இயக்கவைப்பதுதான். இதற்காக ஸ்பெஷலாக சாப்பிடவேண்டும், மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. யோகா, தியானம், உடற்பயிற்சி என இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கின்றன. அவற்றை செய்தாலே போதும். உதாரணத்திற்கு, நடுமூளை செயல்பாட்டால் உன்னித்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும்போது கண்களை கட்டிக்கொண்டே எதிரே ஒருவர் செய்யும் யோகாவைக்கூட குழந்தைகள் செய்கிறார்கள். இப்படி செய்வதால் குழந்தைகளுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


கண்களை கட்டிக்கொண்டு பயிற்சி பெறுவதால் அதிகரிக்கும் நடுமூளை செயல்திறன்

சில குழந்தைகள் எல்லாருடனும் நன்றாக பேசி துருதுருவென சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். ஆனால் சில குழந்தைகள் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கிறார்களே! இது எதனால்?

பெற்றோரின் வளர்ப்புதான் இதற்கு காரணம். முன்பெல்லாம் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே வளைகாப்பு செய்து நல்ல சத்தத்தை கேட்க வைப்பது, மியூசிக் கேட்பது, நல்ல நல்ல புத்தகங்களை படிப்பது என சமூகமே வேறுமாதிரி இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அவர்களுக்கு மன அழுத்தம் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. அதேபோல் இப்போது பெரும்பாலும் சிசேரியன்மூலம்தான் குழந்தை பிறக்கிறது. அதனால் குழந்தை பிறந்தபிறகு அம்மாவால் எல்லா வேலைகளையும் செய்ய முடிவதில்லை. இப்போது பெரும்பாலானோர் கூட்டுக்குடும்பங்களில் இருப்பதில்லை. எனவே குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. அம்மாவுக்கு தன்னை கவனித்துக்கொள்ள நேரம் தேவைப்படுவதால் குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பது, டிவி பார்க்க விடுவது, அதிகம் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு டயாபர் போட்டுவிடுவது என இருப்பதால், இது குழந்தைகளை உளவியல்ரீதியாக பாதிப்பதுடன், அவர்களுடைய வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை சரிசெய்தாலே அவர்களிடையே நல்ல மாற்றத்தை பார்க்கமுடியும். குறிப்பாக, குழந்தைகள் வளரும் பருவத்தில் அம்மா அவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். அதுபோக, தாத்தா, பாட்டி போன்றோரும் அதிகம் பேசினால்தான் குழந்தைகளின் கற்பனைத்திறன் அதிகரிக்கும். அப்படி கற்பனை செய்தால்தான் அவர்கள் அதை வார்த்தைகளால் வர்ணிக்க முயற்சிப்பர். இதனால் பேச்சுத்திறமையும் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை வெளிப்படுத்தும்விதமாக அவர்களுடைய தாய்மொழியில் பேச அனுமதிப்பது அவசியம்.


குழந்தைகளுக்கு டயாபர் பயன்படுத்துவதால் குறையும் உணர்ச்சித்திறன்

இப்போது நிறைய பெற்றோர்கள் பிஸியாக இருக்கின்றனர். அவர்கள் கட்டாயம் டயாபர்தான் குழந்தைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அது எப்படி குழந்தைகளை பாதிக்கும்?

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு துணி கட்டி தொட்டிலில் தூங்கவைப்பார்கள். அப்போது சிறுநீர் கழித்தால் உடனே குழந்தை விழித்து அழ ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகளின் உணர்ச்சித்திறன் அதிகரிக்கும். அதுவே டயாபர் போடும்போது ஈரமான உணர்ச்சியே இல்லாமல் குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும். அதனால் வளர்ந்த பிறகும் சிறுநீரை கட்டுபடுத்தும் பழக்கமே இல்லாமல் போய்விடும். அதுபோக, இரவு தூங்கும்போது போடும் டயாபரை காலையில்தான் மாற்றுவார்கள். அதற்குள் குழந்தை இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழித்திருக்கும். அதுவே பல்வேறு தொற்றுகளுக்கு வழிவகுத்துவிடும். எனவே தவிர்க்கமுடியாத நேரங்களில் மட்டுமே டயாபர் போடலாம். ஆனால் அப்படியே போட்டாலும் அதில் சிறுநீர் கழித்து குழந்தைகளுக்கு பழக்கம் இருக்காது என்பதால் அதில் போகமாட்டார்கள்.

குழந்தைகள் பெரும்பாலும் 8 மாதம் முதல் ஒன்றரை வயதிற்குள் பேச ஆரம்பித்துவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு உடல்நல பிரச்சினைகளால் பேசமுடியாமல் இருக்கலாம். ஆனால் மற்ற குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையுமே இல்லையென்றாலும் பேசுவதில்லையே ஏன்?

எல்லா குழந்தைகளுமே பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அந்த குழந்தைகள் இருக்கும் சமூகம், பெற்றோர், தாத்தா - பாட்டி போன்ற வீட்டு சூழ்நிலைகள்தான் அவர்களுடைய வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. உதாரணத்திற்கு அதிகம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மொழியே இல்லாத ஒன்றை கற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த தெரிவதில்லை. வீட்டில் அம்மா பேசும் மொழி ஒன்றாகவும், செல்போனில் பார்க்கும் மொழி ஒன்றாகவும் இருக்கும்போது அவர்களால் சரிவர பேசமுடிவதில்லை. இதனால் இப்போது ஸ்க்ரீனிங் ஆட்டிஸம் என்ற பிரச்சினையே குழந்தைகளுக்கு வருகிறது. அதாவது உடலில் எந்த பிரச்சினையும் இல்லையென்றாலும் செல்போன் பார்ப்பதால் மட்டுமே சரிவர பேசமுடியாமல் இருப்பதுதான். இப்படித்தான் இப்போது நிறைய குழந்தைகள் 3 அல்லது 4 வயதாகியும் பேசாமல் இருக்கின்றனர்.


பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதால் டிவி, செல்போன் பயன்பாடு குறையும்

டிவி மற்றும் செல்போனை குழந்தைகள் பயன்படுத்தாமல் இருக்க என்ன செய்வது?

இது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்கான நேரத்தையும் சௌகர்யத்தையும் பெற்றோர்தான் ஏற்படுத்தி தரவேண்டும். பெற்றோர் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதை பார்க்கும் குழந்தைகளும் அதையேதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும். எனவே பெற்றோர் குழந்தைகளை வெளியே கூட்டிச்சென்று நிறைய விஷயங்களை சொல்லித்தர வேண்டும்.

இந்த தலைமுறை பெற்றோருக்கு சொல்வது என்ன?

எல்லா பெற்றோருமே தங்களுடைய குழந்தைகள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை எல்லாம் வெளியே கொண்டுவர நினைக்கிறார்கள். இது நல்லதுதான் என்றாலும் குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை பெற்றோர் புரிந்துகொண்டு அதை செய்யவேண்டும். எப்போதும் படிப்பு என்று மட்டுமே இல்லாமல் குழந்தைகளிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறுவயதில் குழந்தைகள் நன்றாக படித்தாலும், படிப்புடன் சேர்த்து திறமைகளையும் வளர்த்துக்கொண்டவர்கள்தான் வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடையமுடியும். எனவே குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டுவருவது பெற்றோரின் கைகளில்தான் இருக்கிறது.

Updated On 9 Dec 2024 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story