இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கம்பீரமான தோற்றம், கூர்மையான பார்வை, தெளிந்த சிந்தனை, கடின உழைப்பு, கருணை உள்ளம், வள்ளல் குணம், பழகுதலுக்கு எளிமை, தமிழ் சான்றோன் என அத்துனை நல்லம்சங்களையும் ஒருங்கே பெற்றவர்தான் பத்திரிகை உலகின் முடிசூடா மன்னன் என்று அழைக்கப்படும் ஐயா பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார். "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப, 76 ஆண்டுகள் நிலையான புகழோடு சரித்திரமாகவே வாழ்ந்த ஐயா சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாறு, அக்கினி சிறகாய் விரிகிறது.

சிவந்தி ஆதித்தனாரின் ஆரம்பகால வாழ்க்கை

தினத்தந்தி நிறுவனர் சி.ப.ஆதித்தனார், லண்டனில் பார்-அட்-லா படித்துவிட்டு சிங்கப்பூரில் தொழில் செய்து வந்தார். அவருக்கும், கோவிந்தம்மாளுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் இரண்டாவது புதல்வராக, 1936 செப்டம்பர் 24ஆம் தேதி பிறந்தார் சிவந்தி ஆதித்தன். சிங்கப்பூரில் பிறந்த சிவந்தி ஆதித்தனாருக்கு மூதாதையர் பெயர் வைக்கப்பட்டதால், குடும்பத்தில் அனைவரும் அவரை கிருஷ்ணன் என்றே அழைத்தார்கள்.

இதனிடையே இரண்டாம் உலகப்போர் காரணமாக சி.ப.ஆதித்தனார், குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்தார். மதுரையில் 1942-ம் ஆண்டு தினத்தந்தியை தொடங்கி பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.


சிவந்தி ஆதித்தனாரின் இளமைக்கால புகைப்படங்கள்

இதனால் சிவந்தி ஆதித்தனாரின் ஆரம்ப கல்வி மதுரையில் தொடங்கியது. பின்னர் சென்னை ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில் படித்த சிவந்தியார், கல்லூரி பாடத்தை மாநிலக் கல்லூரியில் படித்தார். பி.ஏ. பட்டம் பெற்ற அவர், கல்லூரியில் படிக்கும் போதே தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தளபதியாக இருந்ததுடன், சென்னை மாநகரில் இருந்த அனைத்துக் கல்லூரிகளின் என்.சி.சி. படைகளுக்குத் தலைவராக (சார்ஜண்ட் மேஜர்) நியமிக்கப்பட்டார். சிறந்த கேடட் என்ற விருதையும் பெற்றார்.

தொழிலாளியாக பத்திரிகை நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்த சிவந்தியார்

கல்லூரி படிப்பை முடித்த சிவந்தி ஆதித்தனார், எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கிய தந்தையைப் பின்பற்றி, பத்திரிகைத் துறையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். முதலாளி மகன் முதலாளியாகத்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்றிய சி.ப.ஆதித்தனார், தனது மகன் சிவந்தி ஆதித்தன், தொழிலாளிகளோடு தொழிலாளியாக இருந்து, பத்திரிகை துறையின் அனைத்து பிரிவு வேலைகளையும் ஆழ்ந்து கற்றுத் தேர விரும்பினார். அதற்கு காரணம் பத்திரிகை தொழில் முழுவதையும் சிவந்தி ஆதித்தனார் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான். அவ்வாறு அறிந்துகொண்ட ஒருவரால்தான் பத்திரிகை தொழிலில் வெற்றி காண முடியும் என்பது பெரிய அய்யா சி.ப.ஆதித்தனாரின் திடமான நம்பிக்கை.

தந்தையின் உயர்ந்த எண்ணத்தை புரிந்துகொண்ட, தீர்க்கதரிசியான சின்ன அய்யா சிவந்தி ஆதித்தனார், அச்சுக் கோர்ப்பதில் தொடங்கி, பார்சல் கட்டி அனுப்புகிறவராக, பிழை திருத்துபவராக, நிருபராக, துணை ஆசிரியராக, பத்திரிகை விற்பனையாளராக என பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார்.


பத்திரிகை துறையின் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்து தினத்தந்தியின் நிர்வாகியாக 1959-ல் சிவந்தியார் பொறுப்பேற்பு

தினத்தந்தியின் நிர்வாகியாக பொறுப்பேற்பு

"தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்ற ஒளவையின் கூற்றிற்கு ஏற்ப, தந்தையின் சொல்லை அப்படியே பின்பற்றி, பத்திரிகை துறையின் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்த சின்ன அய்யா சிவந்தி ஆதித்தனாரிடம் 1959ஆம் ஆண்டு, ‘தினத்தந்தி’யின் நிர்வாகப் பொறுப்பை பெரிய அய்யா சி.ப.ஆதித்தனார் ஒப்படைத்தார். அச்சமயத்தில், சென்னை, மதுரை, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் இருந்து மட்டுமே தினத்தந்தி வெளிவந்து கொண்டிருந்தது. சிவந்தி ஆதித்தனாரின் நிர்வாகத் திறமையால், தமிழ்நாட்டை தாண்டி வெளி மாநிலங்களிலும் தினத்தந்தி வெளியானது மட்டுமன்றி, விற்பனையிலும் அதிரடியாக உயர்ந்து சாதனை படைத்தது. இதனை அறிந்து பண்டித ஜவஹர்லால் நேரு சின்ன அய்யாவை அழைத்துப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

மாலை நாளிதழ் தொடங்கி சாதனை

சென்னைக்கு வெளியே மாலை நாளிதழ் என்ற விதையை தூவி தனது 23-வது வயதிலேயே அதை விருட்சமாக்கியும் காட்டினார் சிவந்தி ஆதித்தனார். மாலை நாளிதழ் எப்படி போகும் என்று பரவலாக பேச்சு எழ, தனது கடின உழைப்பு மற்றும் தந்தையிடம் பெற்ற அனுபவ பாடத்தால் அந்த பேச்சுகளை வெற்று பேச்சுகளாக்கி சாதனை படைத்தார்.

அளவற்ற தமிழ்ப்பற்றுடைய அவர் தமிழ் மொழியை காக்க, தினத்தந்தி மற்றும் மாலைமலர் நாளிதழ்களை போர்வாளாக வீசினார். அதன் வீச்சில் மக்கள் தமிழுணர்ச்சி பெற்றார்கள். தினத்தந்தியின் முகப்பில் “வெல்க தமிழ்!” என்ற வாசகத்தை இடம்பெறச் செய்தது சிவந்தி ஆதித்தனாரின் ஆகச் சிறந்த செயல்களில் ஒன்று.


எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்பு

தினத்தந்தியின் இயக்குனரான சிவந்தி ஆதித்தனார்

1959-ல் தினத்தந்தியின் நிர்வாகியாக பொறுப்பை ஏற்ற சிவந்தியார், 1960-ம் ஆண்டு இயக்குனர் ஆனார். அந்த ஆண்டு, அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராசர் முன்னிலையில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. சிவந்தி ஆதித்தனார் தம்பதிக்கு 3 குழந்தைகள். மூத்த மகள் மாலா, இரண்டாவதாக மகன் பாலசுப்பிரமணிய ஆதித்தன், மூன்றாவதாக அனிதா என்ற மகள் என குடும்பச் சோலை வளர்ந்தது.

திரைப்பட நட்சத்திரங்களுக்கு ரசிகர் மன்றங்கள், நற்பணி மன்றங்கள் இருந்த நிலையில், அதனை மாற்றிக்காட்டினார் சிவந்தியார். நாடெங்கும் இவருக்கு நற்பணி மன்றங்கள் தொடங்கப்பட்டன. மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய் என முன்னாள் பிரதமர்களுடனும், தமிழகத்தில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என முன்னாள் முதலமைச்சர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தபோதும், அவர்கள் அழைத்தபோதும் நேரடி அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல், ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை சிவந்தி ஆதித்தனாரின் கரங்கள்
ஓய்வின்றி செய்தன.

சிவந்தியார் ஆற்றிவரும் பொதுப்பணிகளைக் கூர்ந்து கவனித்த மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவரை சென்னை மாநகரின் ஷெரீஃபாக 1982-ம் ஆண்டு நியமித்தார். தொடர்ந்து 2-வது முறையாக 1983-ம் ஆண்டும் ஷெரீஃபாக நியமிக்கப்பட்டு வரலாறு படைத்தார்.


உலகமே வியந்த அய்யாவின் ஆன்மிக பணிகள்

சிவந்தியாரின் ஆன்மிக தொண்டு

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட சிவந்தி ஆதித்தனார், சேர, சோழ, பாண்டிய மாமன்னர்களைப் போல் கோவில் திருப்பணிகளை ஆர்வமாக மேற்கொண்டார். குலதெய்வமான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஏராளமான திருப்பணிகளை மனமுருக செய்துள்ளார். முருகன் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டு செலவு இவர்களுடையதே. சிவந்தி ஆதித்தனார் செய்த ஆன்மிகத் திருப்பணிகளுக்கெல்லாம் முத்தாய்ப்பாக திகழ்வது தென்காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அவர் செய்த திருப்பணியே. பராக்கிரம பாண்டியனும், அவன் தம்பி குலசேகர பாண்டியனும் கட்டிய தென்காசி கோயில் கோபுரம் இடி மின்னல் தாக்கிச் சேதமடைந்து 220 ஆண்டுகள் மொட்டைக் கோபுரமாகவே காட்சி தந்தபோது, அதனை மீண்டும் எழுப்பும் பணியில் ஈடுபட யாரும் முன்வராதபோது, ஒன்பது நிலைகொண்ட 178 அடி உயர ராஜகோபுரத் திருப்பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனையாளர் அவர். இன்று அந்த கோபுரத்தை அண்ணாந்து பார்ப்பவர்கள் எல்லாம் மனதிற்குள் அய்யா சிவந்தி ஆதித்தனாரையும் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள்.

இந்துக்கோயில்களுக்கு மட்டுமல்ல, மத நல்லிணக்கத்தைப் போற்றி இஸ்லாமியர்களின் மசூதி, கிறிஸ்துவர்களின் தேவாலயம் போன்றவற்றிற்கும் உதவிகள் புரிந்துள்ளார். சிவந்தி ஆதித்தனாரின் ஆன்மிகப் பணிகளைக் கண்டு மனம் நெகிழ்ந்த கிருபானந்த வாரியார் சுவாமிகள், அவரை அவதார புரு‌ஷர் என்றும், செம்மன செம்மல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.


துப்பாக்கி சுடுதலில் பல்வேறு பதக்கங்களை குவித்த சாதனையாளர்

விளையாட்டிலும் முத்திரை

விளையாட்டுத் துறையிலும் தனது முத்திரைப்பதித்தார் சிவந்தியார். சர்வதேச கைப்பந்து சங்க தங்கப்பதக்கத்தை அய்யா தலைமையிலான அணி வென்று காட்டியது. துப்பாக்கிக்சுடும் போட்டியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பதக்கங்களை குவித்தார். ஆசிய விளையாட்டு போட்டியில் 28 பதக்கங்களை குவித்து சின்னய்யா தலைமையிலான அணியே மகுடம் சூட்டியது. 2010 ஆசிய ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பெருமைமிக்க வரலாறும் உண்டு.

ஆகச்சிறந்த கல்விப்பணி

டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் கல்வி பணியை பற்றி சொல்ல வேண்டுமானால், அவர் கொடுத்த கல்வி நிலத்தினும் பெரிது. நீரினும் ஆழமானது. வானினும் உயர்ந்தது. திருச்செந்தூரில் ஆதித்தனார் நிறுவிய கல்லூரியை, பல்கலைக்கழகம் அளவுக்கு சிவந்தி ஆதித்தனார் உயர்த்தினார். தென் மாவட்டங்களில் ஏழை எளிய குடும்பங்களில் பிறந்த ஏராளமான குழந்தைகளின் கல்விக்கு வித்திட்டவர் சின்னய்யா.

அய்யாவை தேடிவந்த "பத்மஸ்ரீ" பட்டம்

இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் சிறந்த சேவை புரிந்ததற்காக, சிவந்தி ஆதித்தனாருக்கு கடந்த 2008ஆம் ஆண்டில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. மேலும் தமிழகத்தின் 5 முன்னணி பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. அய்யாவின் உழைப்பால் அச்சு ஊடகம் மட்டுமன்றி தொலைக்காட்சி ஊடகத்திலும் "தந்தி குழுமம்" 2012-ல் கால் பதித்து, மக்கள் மனங்களில் இன்று நீங்கா இடம் பிடித்துள்ளது.


அய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதளித்து கவுரவித்த மத்திய அரசு

குருவை மிஞ்சிய சிஷ்யர்

ஒரு மரம் பல கிளைகளை பரப்பலாம்... ஆனால் ஒரு மனிதர் பல்வேறு துறைகளில் தடம் பதித்து அத்துனையிலும் சரித்திர வெற்றி காண்பது ஆச்சரியமே! அப்படிப்பட்ட சரித்திரப்பிறவி கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி தனது மூச்சை நிறுத்திக்கொண்டது. அவரது சாதனைகளை பிரதிபலிக்கும் நினைவு இல்லம் சென்னை போயஸ் கார்டனில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், 2020-ல் திருச்செந்தூரில் மணிமண்டபம் கட்டி திறந்திருக்கிறது தமிழக அரசு.

குருவை மிஞ்சிய சிஷ்யர்கள்தான் குருவுக்கே பெருமை. சிவந்தியாரும் ஒரு வகையில் குருவை மிஞ்சிய சிஷ்யரே. பத்திரிகையாளர், கல்வியாளர், வள்ளல், ஆன்மிகச்செல்வர், மனித நேயர், விளையாட்டு வீரர், தொழிலதிபர் என்று பன்முகங்களை கொண்ட சிவந்தியார், சரித்திர சாதனை படைத்ததில் தனது குருவான தந்தை சி.ப. ஆதித்தனாரை மிஞ்சிய தனயர் என்றே சொல்லலாம்.

Updated On 22 April 2024 11:51 PM IST
ராணி

ராணி

Next Story