
இந்தியாவின் பெருமைமிகு செங்கோட்டையின் 400 ஆண்டுகால வரலாறு தெரியுமா?
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்திய குடிமக்களால் உற்றுநோக்கப்படும் ஓர் இடமென்றால் அது செங்கோட்டை! சுதந்திர நாளான 1947, ஆகஸ்ட் 15-ல் முதன்முதலாக மூவர்ணக்கொடியை, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டெல்லி செங்கோட்டையில் ஏற்றிவைத்து உரையாற்றினார். அவர் தொடங்கிவைத்த அந்தப் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் விதமாக, அவரை தொடர்ந்துவந்த அனைத்து இந்திய பிரதமர்களும், சுதந்திர நாளன்று செங்கோட்டையில் கொடியேற்றி உரை நிகழ்த்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், சிறப்புமிக்க இந்தச் செங்கோட்டைக்கு, 400 ஆண்டுகால வரலாற்று முக்கியத்துவமும் வழிநெடுக நிரம்பியிருக்கிறது. இத்தொகுப்பில் செங்கோட்டையின் வரலாறை விரிவாக பார்ப்போம்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதல்முறையாக செங்கோட்டையில் பேசியபோது
முதலில் அழைக்கப்பட்ட பெயர் என்ன?
செங்கோட்டை முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் ''கிலா-இ-முபாரக்'' அதாவது "ஆசீர்வதிக்கப்பட்ட கோட்டை" என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்திய அரசின் வலைத்தளம் செங்கோட்டை முதலில் வெள்ளை நிறத்தில் இருந்ததாகக் கூறவில்லை. ஆனால் செங்கோட்டையின் வெளிப்புறம் ஆரம்பத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும், பின்னர் ஆங்கிலேயர்கள் அதை முழுவதுமாக சிவப்பு நிறத்தில் மாற்றியதாகவும், இன்க்ரெடிபிள் இந்தியா வலைத்தளம் தெரிவிக்கிறது.
ஷாஜகான் கட்டிய அழகிய செங்கோட்டை
குயிலா-ஐ-முபாரக் எனும் செங்கோட்டை
உலக அதிசயம் தாஜ்மஹாலைப்போலவே, பிரசித்தி பெற்ற டெல்லி செங்கோட்டையைக் கட்டியவரும் முகலாய மன்னர் ஷாஜகான்தான். 1638-ம் ஆண்டு வரை முகலாயர்களின் தலைநகராக இருந்த ஆக்ராவை, பழைய டெல்லி என்றழைக்கப்படும் ஷாஜகானாபாத்துக்கு மாற்றிய மன்னர் ஷாஜகான், அங்கு மிகப்பெரிய அரச மாளிகையைக் கட்ட முடிவெடுத்தார். அதைத் தொடர்ந்து 1639-ம் ஆண்டு, மே 12-ம் தேதி செங்கோட்டை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. அந்தக் காலத்திலேயே, இந்தக் காலத்தோடு மதிப்பிட்டால் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்குச் செலவிடப்பட்ட செங்கோட்டையை முழுவதுமாகக் கட்டி முடிக்க சுமார் 9 ஆண்டுகள் பிடித்தன.
அழகிய செங்கோட்டையின் உட்புறம்
400 ஆண்டு கால வரலாறு
செங்கோட்டையானது, டெல்லி மாநகருக்கு ஷாஜகான் அளித்த பரிசு என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் இது முகலாய ஆட்சிக் காலத்தின் அரசியலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பிரதிபலிக்கிறது. 'முகலாய சாம்ராஜ்யத்தின் பயணம்' என்ற தனது புத்தகத்தில் ஐரோப்பிய பயணி ப்ரான்காயிஸ் பெர்னியர், ஆக்ராவில் தாங்க முடியாத வெப்பம் நிலவியதால், டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்த டெல்லி பொருத்தமாக இருந்ததால், ஆக்ராவில் இருந்து தலைநகர் மாற்றப்பட்டது என்ற காரணமும் கூறப்படுகிறது.
செங்கோட்டையின் உட்புறம் இருக்கும் லாகூர் நுழைவு வாயில்
கோட்டையின் கட்டமைப்பு
தாஜ்மஹாலின் கலை வடிவத்தையே மிஞ்சும் அளவுக்கு மிகவும் நேர்த்தியான கலை ஓவியங்கள், நுட்பமான சிற்பங்கள் என அலங்கார வேலைப்பாடுகளுடன்கூடிய பல்வேறு மாட மாளிகைகள், மதில் சுவர்கள், அறைகள், கூடங்கள் எனக் கலைப் பொக்கிஷங்களாக நிரம்பிவழிகிறது செங்கோட்டை. குறிப்பாக, 245 ஏக்கருக்கு பரந்து விரிந்திருக்கும் செங்கோட்டையின் மதில் சுவர்கள் சுமார் 2.41 கி.மீ சுற்றளவுக்கு நீண்டிருக்கின்றன. அதனுள்ளே அரச வம்சத்தினரையும், முக்கிய விருந்தாளிகளையும் மேளம் கொட்டி, இசை நிகழ்ச்சியுடன் வரவேற்கும் `நவுபுத் கானா' எனப்படும் இசை மன்றம், பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு மன்னர் ஷாஜகானால் விசாரிக்கப்படும், பளிங்கு அரியணைகளுடன்கூடிய `திவான்-இ-அம்' எனப்படும் பொதுமன்றம், நாட்டின் முக்கியப் பிரச்சினைகள், ரகசிய அரசு விவகாரங்கள் போன்றவற்றை அரசு அதிகாரிகள், பிறநாட்டுத் தூதுவர்களிடம் மன்னர் விவாதிக்கும் `திவான்-இ-கஸ்' எனும் சிறப்பு மன்றம், ஷாஜகானின் மகன் மன்னர் ஔரங்கசீப்பின் தனிப்பட்ட வழிபாட்டுக்காக கட்டப்பட்ட `மோட்டி மஸ்ஜித்' எனும் சிறிய மசூதி, மலர் வடிவ ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருக்கும் தனி வழிபாட்டு அறை, உறங்கும் அறை, உடை மாற்றும் அறை என மூன்று பெரிய அறைகளைக்கொண்டிருக்கும் `கஸ் மஹால்' எனப்படும் மன்னர் குடியிருக்கும் சிறப்பு மாளிகை ஆகியவை உள்ளன.
லாகூர் நுழைவுவாயில்
செங்கோட்டையின் மிக முக்கியமான நுழைவுவாயில் இதுதான். முக்கிய பிரமுகர்கள், தூதர்கள் மற்றும் மனுதாரர்களால் அப்போது இந்த நுழைவுவாயில் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் அக்பர் ஆட்சிகாலத்தில் செங்கோட்டையை பார்வையிட வந்த பிஷப் ஹீபர், "நான் பார்த்ததிலேயே சிறந்த நுழைவுவாயில் மற்றும் நடைக்கூடம் இதுதான்" என்று இதனை குறிப்பிட்டுள்ளார். ஔரங்கசீப் காலகட்டத்தின் போது (1658-1707), அனைத்து பிரதான நுழைவுவாயில்களுக்கு முன்பும் 10.5 மீட்டர் உயரம் கொண்ட பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. கோட்டையை மணமகளாக்கி, அந்த முகத்திற்கு முக்காடு அணிந்திருக்கிறாய் என்று ஆக்ராவில் சிறையில் இருந்த ஷாஜகான், தன் மகன் ஔரங்கசீப்பிற்கு, இந்த பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
செங்கோட்டையின் மிக முக்கியமான நுழைவுவாயில்
படையெடுப்பு! கொள்ளை!
சீக்கிய மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், இரானிய ஆட்சியாளர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் தொடர்ச்சியாகச் சிதைக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும், மாற்றியமைக்கப்பட்டும் பல்வேறு மாறுதலுக்குள்ளானது செங்கோட்டை. குறிப்பாக, 1739-ம் ஆண்டு செங்கோட்டைக்குப் படையெடுத்த இரானிய மன்னன் நதிர்ஷா, கோஹினூர் வைரம் பதித்த மயில் சிம்மாசனத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். 1783-ம் ஆண்டு டெல்லியின் முக்கியப் பகுதிகளில் கொள்ளையடித்த, கரோர்சிங்கிய குலத்தைச் சேர்ந்த படைத்தலைவர் சர்தார் பகேல் சிங்கின் படையினர் செங்கோட்டையைக் கைப்பற்றினர். அதன் பின்னர், 18-ம் நூற்றாண்டில் மராத்தியர்களாலும், ரொஹிலாக்களாலும் செங்கோட்டை கொள்ளையடிக்கப்பட்டது. கடைசியாக, 1857-ம் ஆண்டு டெல்லியின் கடைசி முகலாய மன்னர் பகதுர்ஷா ஜாபருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவியது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த இந்திய கலகக்காரர்களுக்கு, செங்கோட்டையில் அடைக்கலம் கொடுத்து, ஆயுத உதவியும் வழங்கினார் மன்னர் பகதுர்ஷா. ஆங்கிலேயர்களின் தீவிரமான தாக்குதலில் டெல்லி செங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வீழ்ந்தது. செங்கோட்டையிலேயே சிறைவைக்கப்பட்ட மன்னர் பகதுர்ஷா, ஆங்கிலேயர்களின் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
செங்கோட்டையில் குவியும் சுற்றுலா பயணிகள்
செங்கோட்டையின் இன்றைய நிலை
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் செங்கோட்டையைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். திங்கட்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப்பயணிகளுக்காக செங்கோட்டை திறக்கப்படுகிறது. தொல்லியல் அருங்காட்சியகம், இந்திய போர் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக முகலாய வரலாற்றை விவரிக்கும் ஒலி, ஒளிக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. மேலும், பயணிகள் வசதிக்காக சுற்றுலா வழிகாட்டிகள், உணவகங்கள், கழிவறைகள், சக்கர நாற்காலிகள், வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர நாளன்று, இந்திய பிரதமர்கள் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் இடமாக இருந்துவருகிறது. பாரசீக, ஐரோப்பிய, இந்தியக் கலை வடிவங்கள் ஒருசேர சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோட்டை, யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
