இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஓவியங்களில் தஞ்சை ஓவியங்களுக்கு எப்போதும் தனி சிறப்பும், மவுசும் உண்டு. சோழர்கள் ஆட்சி காலத்தில் தோன்றிய இந்த ஓவியங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு இன்று உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்தான். தஞ்சை ஓவியங்களை கண்டு அன்றைய ஆங்கிலேயர்களே ஆச்சரியப்பட்டு தங்களுக்கும் இதுபோன்ற ஓவியங்கள் வேண்டும் என்று வரைந்து பெற்றுக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. பெரும்பாலும் தஞ்சை ஓவியங்கள் இந்து மத கடவுள்கள் சார்ந்து வரையப்பட கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த ஓவியங்களின் அழகை கண்டு அனைவருமே வாங்கிச்செல்கின்றனர். அந்த வகையில் தஞ்சை ஓவியத்தில் நன்கு அனுபவம் பெற்றவரும், அந்த ஓவியங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று காட்சிப்படுத்தி வருபவருமான ஓவியர், இயக்குநர் என பன்முகங்களை கொண்ட ராஜா மகேஷ், பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதன் நேர்காணலை இந்த கட்டுரையில் காணலாம்.

தஞ்சை மண்ணில் பிறந்து வளர்ந்த உங்களுக்கு ஓவியத்தின் மீதான ஆர்வம் என்பது எப்படி வந்தது?

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிற்கு அப்பாவின் நண்பர் ஒருவர் அடிக்கடி வருவார். அவர் ஒரு மிகச்சிறந்த ஓவியர். அவர் வரும் சமயத்தில் நான் என்னுடைய சிலேட்டில் கிறுக்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அதில் ஏதாவது ஒரு ஓவியத்தை வரைந்து கொடுத்துவிட்டு போவார். அவரை பார்த்துதான் எனக்கு ஓவியத்தின் மீதான ஆர்வம் ஏற்பட்டது. பள்ளி படிப்பை முடித்த கையோடு ஓவியம் தொடர்பாக படிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில் தஞ்சாவூர் ஓவியம் வரைவதற்கு பயிற்சி கொடுக்கிறோம் என்ற விளம்பரம் ஒன்று பத்திரிகையில் வந்தது. பிறகு அந்த விளம்பரம் பற்றி விசாரித்து நானும் நேர்காணலுக்குச் சென்றேன். ஆயிரம் பேர் கலந்து கொண்ட நேர்காணலில் இறுதியாக வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் நானும் ஒருவன். ஒருவழியாக தஞ்சை ஓவியக் கலையை கற்றுக்கொண்டு வெளியில் வந்து நான் வரைந்த ஓவியங்களை படைப்புகளாக வைக்கும்பொழுது அதனை யாரும் வாங்க முன்வரவில்லை. பிறகு மற்றவர்களை பார்த்து சுவர் விளம்பரங்கள் எழுதுவது, தியேட்டர் வாசலில் திரைப்படங்கள் என்னென்ன வெளியாகப் போகிறது போன்ற அறிவிப்பு தொடர்பாக வரைவது என்று எனது பணியை தொடங்கினேன். அப்போது எனக்கு 5 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் சென்று வரைந்துவிட்டு வருவேன். அப்படி அங்கு எனது வரையும் திறமையை பார்த்த லித்தோகிராஃபி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் என்னை ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியில் அமர்த்தினார். அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினேன். பிறகு நண்பரின் அழைப்பை ஏற்று கும்பகோணத்தில் 2 ஆண்டுகள் இதே லித்தோகிராஃபி துறையில் பணியாற்றினேன்.


ஓவியர் ராஜா மகேஷ் கைவண்ணத்தில் உருவாகி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காட்சிப்படுத்தப்படும் ஓவியங்கள்

இதற்கிடையில், நாளிதழ்கள் குறிப்பாக சினிமா தொடர்பான செய்திகளை படிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால், எனக்கு சினிமாவுக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்காக பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தஞ்சையில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன். இரண்டு, மூன்று ஆண்டுகள் எப்படியோ போராடி அலைந்து திறிந்து பலனளிக்காமல் 1992-ல் நண்பர்களோடு இணைந்து முத்துப்பாண்டி என்றொரு படத்தை சொந்தமாக தயாரித்து எடுத்தேன். ஆனால் அது எனக்கு கைகொடுக்கவில்லை. பாதியிலேயே நின்றுபோனது. இந்த நேரம், அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அறிமுகம் கிடைத்து அவரிடம் உதவியாளராக பணியில் சேர்ந்தேன். அவர்தான் என்னுடைய குருநாதர். அவருடன் மூன்று, நான்கு படங்கள் பணியாற்றி, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு படத்தை இயக்க களமிறங்கி சாருஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் தம்பி உடையான் என்றொரு படத்தினை எடுத்து வெளியிட்டேன். அந்த படம் எனக்கு ஓரளவு கைகொடுத்தது. இருந்தும் குடும்பம் சென்னையிலேயே செட்டில் ஆனதால் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இன்னொருபுறம் ஓவியங்கள் வரையாமலும் இருக்க முடியவில்லை. அதனால் தஞ்சை ஓவியங்களையும் விடாமல் வரைந்து டெல்லி போன்ற நகரங்களிலும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தி வருகிறேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நான் வரைந்த ஓவியங்கள் கலாநிதி மாறன் வீட்டு பூஜை அறையில் இன்றும் இருக்கின்றன. அவர் வீட்டில் மட்டுமல்ல பெரிய பெரிய விஐபி-க்கள் வீடுகளிலும் நான் வரைந்த தஞ்சை ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.


ஆயில் பெயிண்டிங்கில் வெவ்வேறு தோற்றங்கள் கொண்ட விநாயகர் படங்கள்

தஞ்சாவூர் ஓவியங்களை நான் முதன் முதலாக எடுத்துச்சென்று டெல்லியில் காட்சிப்படுத்தும்போது இது என்ன? நீ யாரு? எதுக்கு இவற்றையெல்லாம் இங்கு கொண்டு வந்திருக்கிறாய்? இந்த ஓவியங்களில் இருக்கும் கோல்ட் உண்மைதானா! இல்லை பொய் சொல்கிறாயா? என்றெல்லாம் சண்டைக்கு வருவார்கள். அதையெல்லாம் கடந்துதான் தஞ்சை ஓவியங்களை பிரபலப்படுத்தி விற்பனை செய்து வந்தோம். தஞ்சை ஓவியங்களில் கடவுள் படங்கள்தான் அதிகம் இருக்கும். இன்று பலரும் தஞ்சை ஓவியங்களை தங்களது வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி அதனை வாங்க ஆரம்பித்துள்ளனர். நான் சென்னை வரும்போது தஞ்சை ஓவியம் தொடர்பாக ஒரு ஆர்ட் கேலரி மட்டுமே இங்கு இருந்தது. ஆனால் இன்று மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் சென்னையில் மட்டும் 20 இடங்களில் தஞ்சை ஓவியங்கள் தொடர்பான ஆர்ட் கேலரி செயல்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களிலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் தஞ்சை ஓவியங்கள் பிரதான இடம்பிடித்துள்ளன. தஞ்சாவூர் ஓவியங்களுக்கு அடுத்த படியாக எல்லோரும் விரும்புவது ஓவியர் ரவிவர்மாவின் படைப்புகளைத்தான்.

தஞ்சாவூர் ஓவியங்களிலேயே மாடர்ன், ட்ரெடிஷனல் என்று இரண்டு வகைகள் உள்ளன. அதுபற்றி உங்களின் கருத்து?

ஓவியங்களில் மாடர்ன், ட்ரெடிஷனல் என்று பிரிப்பதையே நான் ஒத்துக் கொள்வதில்லை. காரணம், ஒரு ஓவியர் புதிதாக ஒன்றை உருவாக்கினால் அதனை மாடர்ன் என்றும், பழையவற்றை வரைந்தால் அது ட்ரெடிஷனல் என்றும் பிரித்து கூறுகிறார்கள். ஆனால், தஞ்சை ஓவியங்களை வரையும் ஒரு ஓவியன் தினமும் அதில் வித்தியாசமான விஷயங்களை புகுத்தித்தான் வரைகிறான். அது புதுமை தானே. அப்படி இருக்கும்போது அதை பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. யார் ஓவியம் வரைந்தாலும் அதற்கு கணக்கெல்லாம் வைக்க முடியாது. ஓவியத்தை பொறுத்தவரை அழகாக வரைய வேண்டும். அதை எங்கு வைத்தாலும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அழகாக இருக்கிறதே என்று வாங்கிவிட்டு ஒருவாரம் கழித்து இதென்ன ஓவியம். என்னமோ பெயிண்ட் அடுச்சு கொடுத்துவிட்டான் என்று வாங்கியவர் நினைத்தால், அந்த ஓவியம் தோற்றுப் போய்விட்டது என்று அர்த்தம். ஆனால், எப்போதுமே இந்த ஓவியம் இங்குதான் இருக்க வேண்டும். அதை நான் ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றிவிட்டால் அப்பொழுது அந்த ஓவியம் வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம். அப்படியான உணர்வை பெரும்பாலும் தரக்கூடியது தஞ்சாவூர் ஓவியங்கள். காரணம் அதில் இருக்கும் வேலைப்பாடுகள்.


தங்கம் சேர்க்கப்பட்டு வரையப்பட்ட கிருஷ்ணரின் ஓவியம்

தஞ்சாவூர் ஓவியங்கள் தொடர்பான ஆர்ட் கேலரி நீங்கள் வைத்தபோது, அதனை பார்வையிட வந்த நட்சத்திரங்கள் யார் யார்? அதில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்றால் யாருடையது?

ஒவ்வொரு படியாகத்தான் நான் வளர்ந்து வந்தேன். முதல் முறையாக நான் ஆர்ட் கேலரி வைக்கும்போது அதனை நேரில் வந்து திறந்து வைத்தது நடிகர் சரத்குமார்தான். அதே மாதிரி எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருக்கிறார். அவர் கேலரி உள்ளே நுழைந்ததுமே சந்தோஷத்தில் பாட ஆரம்பித்து விடுவார். பிறகு என்னை கட்டிப்பிடித்து முதுகில் தட்டி நீ தைரியமானவன். சரியான விஷயத்தைதான் செய்து கொண்டிருக்கிறாய் என்று கூறுவார்.

நீங்கள் வரையும் தஞ்சை ஓவியங்களில் பெரும்பாலும் சிவன், முருகன் போன்ற கடவுள்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஓவியங்களை மதத்தை தாண்டி வாங்கிச் செல்கிறவர்கள் இருக்கிறார்களா?

நிச்சயமாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களும் வருவார்கள். வந்து நுழைந்ததும் பார்ப்பதற்கு அழகாக இருந்தால் இது எந்த கடவுள் என்று கேட்பார்கள். கல்விக்கான கடவுள் என்று சொன்னால் அதை வாங்கிச் செல்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் எல்லோருமே அதே மனநிலையில் வரமாட்டார்கள். சிலர் எங்களுக்கு ஜீசஸ் படம் வரைந்து தருகிறீர்களா என்று கேட்டே வாங்கிச் செல்வார்கள். நாங்களும் வரைந்து கொடுப்போம். இதை தாண்டி கடவுள்கள் இல்லாத விஷயங்களான அன்னம், யாளி, கோயில் போன்றவற்றையும் ஓவியங்களில் கொண்டுவந்து வரைகிறோம். ஆனாலும், இவற்றில் முதன்மையாக இருப்பது கடவுள்களின் ஓவியங்கள்தான். இன்றைக்கு பெரிய அளவில் செட்டிலாகி இருக்கக்கூடிய ஓவியர்கள் அனைவருமே இந்து கடவுள்களை வெவ்வேறு விதமான தோற்றங்களில் வரைந்தவர்கள்தான். அதேபோன்று, மதத்தை தாண்டி இந்து கடவுள்களை தனக்கு தோன்றிய விதங்களில் வரைந்த ஒரே காரணத்திற்காக எம்.எஃப்.உசைன் நாடு கடத்தப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. இப்படி ஓவியன் இல்லாமல் உலகம் இல்லை. வண்டி, வீடு, ஆடை என அனைத்துமே அவன் வடிவமைப்பதுதான்.

Updated On 10 Jun 2024 6:22 PM GMT
ராணி

ராணி

Next Story