இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், எப்போது பூமிக்கு திரும்புவார் என்ற கேள்வி உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் எழுந்துள்ளது. ஒரு வார பயணமாக விண்வெளிக்கு சென்ற அவர், தற்போது 50 நாட்களை கடந்தும் பூமிக்கு திரும்பவில்லை. அவர் விண்வெளிக்கு சென்ற விண்கலம் பழுதானதால், விண்வெளியிலேயே சிக்கிக்கொண்ட சுனிதா, எப்படி? எப்போது? பூமிக்கு திரும்புவார் என்று கேள்விகள் எழுந்த நிலையில், விண்வெளியில் அவருக்கு மோசமான உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவர் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...

ஜூன் 5 அன்று விண்வெளிக்கு புறப்பட்ட சுனிதா

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸும், மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து புறப்பட்டு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார்கள். விண்வெளியில் ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை முடித்துக்கொண்டு ஜூன் 13-ம் தேதியே அவர்கள் பூமிக்கு புறப்படுவார்கள் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அறிவித்தது. ஆனால் நாசா அறிவித்தது போல அவர்கள் இருவரும் ஜூன் 13-ம் தேதி பூமிக்கு புறப்படவில்லை. விண்கலனில் ஏற்பட்ட கோளாறால், நாசாவின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுரைப்படி, சுனிதாவும், புட்சரும் பூமிக்கு திரும்புவதற்கான தங்களது பயணத்தை நிறுத்திவிட்டு விண்வெளியிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.


ஜூன் 5-ம் தேதி புட்ச் வில்மோரும், சுனிதா வில்லியம்ஸும் விண்வெளிக்கு புறப்பட்டபோது

ஸ்டார்லைனர் விண்கலத்தில் என்ன கோளாறு?

பூமிக்குத் திரும்ப வேண்டிய போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது. மேலும் விண்கலனை உந்தித் தள்ளும் இயந்திரமான த்ரஸ்டரிலும் பிரச்சினை எழுந்தது. இதனால் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் குறித்த நேரத்தில் விண்ணிலிருந்து பூமிக்கு புறப்பட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான், மற்றொரு அபாயமும் விண்வெளியில் நிகழ்ந்தது. விண்வெளியில் கடந்த 2022-ம் ஆண்டுமுதல் செயலற்று சுழன்று கொண்டிருந்த ரஷ்யாவின் செயற்கைக்கோள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஆயிரக்கணக்கான துகள்கள் சிதறி, மிகப்பெரிய அளவிலான குப்பைகள் விண்வெளியில் சேர்ந்தன. மேலும் செயற்கைக்கோளானது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் விண்வெளி நிலையத்தை தாக்கும் ஆபத்தும் ஏற்பட்டது. இதையடுத்து விண்வெளி மையத்திலிருந்த சுனிதாவும், புட்ச்சரும் அங்குள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டனா்.

இந்த நிலைமை சீராகி, பின்னர் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பூமிக்கு திரும்ப தேதி குறிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் போயிங் ஸ்டார்லைனரில் கோளாறு ஏற்பட்டு, பயண தேதிகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.


ஸ்டார்லைனர் விண்கல பயணத்தில் சுனிதா வில்லியம்ஸ் & புட்ச் வில்மோர்

சொதப்பிய போயிங் நிறுவனம்

பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அவ்வப்போது விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்துவருவது வழக்கம். இந்த பணிகளை நாசாவே மேற்கொண்டுவந்த நிலையில், அண்மையில்தான் தனியார்வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது

இதையடுத்து விமான தயாரிப்பில் முன் அனுபவம் பெற்ற போயிங் நிறுவனம், சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரும் பணியை ஏற்றுக்கொண்டது. இதற்காக ஸ்டார்லைனர் என்ற விண்கலனை தயாரிக்கும் பணியை தொடங்கியது. ஸ்டார்லைனர் விண்கலன்மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், புட்ச்சரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.


திட்டமிட்ட காலத்தைவிட அதிக நாட்கள் விண்வெளியில் தங்குவதால் கடுமையான உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம்

பூமியிலிருந்து புறப்படும்போதே வாயு கசிவு?

பூமியிலிருந்து விண்கலன் புறப்பட்டபோதே ஹீலியம் வாயு சிறிதளவில் கசிந்த போதும், ஸ்டார்லைனர், ஜூன் 5ஆம் தேதி, திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்பட்டது. ஹீலியம் கசிவு மிகச் சிறிய அளவிலேயே இருந்ததாகவும், விண்கலனில் ஹீலியம் அதிக அளவில் இருந்ததால், சிறிய அளவிலான கசிவு, விண்வெளி பயணத்திட்டத்தை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் பொறியாளர்கள் நம்பியதால், விண்கலன் வானில் செலுத்தப்பட்டது.

ஆனால் விண்வெளி பயணத்தைத் தொடங்கிய ஸ்டார்லைனரில், மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக இருந்த 28 த்ரஸ்டர்களில் 5 த்ரஸ்டர்கள் விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான 5 த்ரஸ்டர்களில் பின்னர் 4 த்ரஸ்டர்கள் மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.


விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்

கடுமையான உடல்நலப் பிரச்சினை ஏற்படலாம்?

திட்டமிட்ட காலத்தைவிட அதிக நாட்கள் விண்வெளியில் தங்குவதால், சுனிதா வில்லியம்ஸுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைவு என்பதால், உடலில் உள்ள திரவங்கள் மேல்நோக்கி பாய்கின்றன. இதனால் சரியான திரவ சமநிலையை பராமரிக்க முடியாமலும், சுத்திகரிப்பு பணியை சரியாக செய்ய முடியாமலும் சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் எலும்புகளிலிருந்து கேல்சியம் வெளியேற்றம் அதிகரிப்பதால், சிறுநீரகத்தில் கல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்றும், கதிர் வீச்சுகளால் சிறுநீரக திசுக்களும் பாதிக்கப்பட்டு, நாள்பட்ட சிறுநீரக கோளாறு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் விண்வெளியில் காஸ்மிக் கதிர்வீச்சுகள் அதிகம் உள்ளதால், புற்றுநோய் அபாயமும் அதிகம் உள்ளதாக எச்சரித்துள்ளனர். கடுமையான கதிர்வீச்சு ஒருவரின் டிஎன்ஏ-வைக் கூட பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இருவரையும் விரைவாக பூமிக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உறுதியான தகவலை தெரிவிக்காத நாசா

போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பிரச்சினை விரைவாக முடிக்கப்பட்டு, சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால் தேதியை கூற முடியாது எனவும் நாசா கூறிவிட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸும், புட்ச்சரும் எப்போதுதான் பூமிக்கு திரும்புவார்கள் என்ற கவலை, இந்தியா மற்றும் அமெரிக்கா மக்களிடையே எழுந்துள்ளது.


தாங்கள் நலமாக உள்ளதாக விண்வெளி நிலையத்திலிருந்து பேசிய சுனிதா மற்றும் புட்ச் வில்மோர்

போயிங் நிறுவனம் என்ன சொல்கிறது?

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இயக்கப்பட்டிருக்கும் போயிங் விண்கலத்தின் ஃப்ளைட் கன்ட்ரோலர் த்ரஸ்டர்கள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சோதனைகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனையின்போது சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் ஸ்டார்லைனர் கலிப்சோவிற்குள் அமர்ந்து தகவல்களை வழங்கியதாகவும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது. எனவே இருவரும் மிக விரைவில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவார்கள் என போயிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் ஆகஸ்டு மாதம் பூமிக்கு திரும்ப அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

பயப்பட தேவையில்லை - சுனிதா

பதற்றமான சூழலுக்கு இடையே விண்வெளியிலிருந்து பேசிய சுனிதா வில்லியம்ஸ், தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும், விண்கலனில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் சோதனைகளை வெற்றிகரமாக செய்து கொண்டுள்ளதாகவும், ஒரு வேளை எமெர்ஜென்சி ஏற்பட்டால் விண்கலனுக்கு சென்று அன்டாக் செய்து புறப்படவும் தயாராக இருப்பதாகவும் தைரியத்துடன் கூறியுள்ளார். இதனால், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் தைரியமாக இருப்பது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

Updated On 5 Aug 2024 10:33 PM IST
ராணி

ராணி

Next Story