
மகளிர் கிரிக்கெட்டில் கலக்கும் தமழ்நாட்டு வீராங்கனை "கமலினி" யார்?
2008-ல் தொடங்கிய ஆடவருக்கான IPL கிரிக்கெட் தொடர் இதுவரைக்கும் 17 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பெண்களுக்கும் IPL பாணியிலேயே மகளிர் பிரீமியர் லீக் (WPL) என்ற கிரிக்கெட் தொடரை பிசிசிஐ 2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி இருந்தது. இந்நிலையில் 2025-ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கான ஏலம் டிசம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. அந்த ஏலத்தில் ஜி கமலினி என்ற தமிழக வீராங்கனையை மும்பை அணி நிர்வாகம் வாங்கியது. வெறும் 10 லட்ச ரூபாயை அடிப்படை விலையாக கொண்டிருந்த கமலினியை 1.60 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியது இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. யார் இந்த தமிழக வீராங்கனை கமலினி? என்பதை பற்றி விரிவாக இத்தொகுப்பில் காணலாம்.

U - 19 தமிழக அணி கேப்டன் கமலினி
யார் இந்த கமலினி?
16 வயதேயான கமலினி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த குணாளன் - சரண்யா தம்பதியின் மகள் ஆவார். லாரி உரிமையாளரான குணாளன், கல்லூரி மாணவராக இருந்த போது கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை நிறைவேறாத நிலையில் தனது மகனை கிரிக்கெட் வீரராக்கி பார்க்க அவர் விரும்பியுள்ளார். அதன்பிறகு கொரோனா கால கட்டத்தில் தனது மகனுக்கு வீட்டிற்கு அருகே உள்ள மைதானத்தில் வலை கட்டி தினசரி கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளார்.அப்பொழுது அவர்களுக்கு உதவியாக கமலினி கூடைகளில் பந்துகளை சேகரித்து கொடுத்து வந்துள்ளார். அப்போது 12 வயதாக இருந்த கமலினி பந்தை எடுத்து அசாதாரணமாக வீசியதை பார்த்து வியந்து அதன் பின்னரே மகளுக்கும் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளார். அங்கிருந்துதான் கமலினியின் கிரிக்கெட் பயணம் தொடங்கியுள்ளது.

சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற கமலினி
சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி
மதுரையில் கிரிக்கெட் வீராங்கனைகள் பயிற்சி பெறுவதற்கான உயர்தர புல் தரை மைதானம் இல்லாததால் அவர் குடும்பத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார். அதன் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து கமலினி பயிற்சி பெற்றார். மாதம் ரூ.8 ஆயிரம் கட்டி தினமும் 5 மணி நேரம் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார். தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய கமலினி, உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெற்றார்.
முதல்தர போட்டியில் அசத்தல்
தமக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திய கமலினி, உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை பெற்றார். 2021ஆம் ஆண்டு 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக கமலினி விளையாடினார். 36 அணிகள் கலந்து கொண்ட அந்த தொடரில் அதிக ரன்கள் (485 ரன்கள்) குவித்து அவர் முதல் இடத்தை பிடித்தார். ஆனால் தமிழ்நாடு அணி அரை இறுதியில் தோல்வியடைந்தது. பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி அதிக ரன் குவித்தவர்களில் இரண்டாவது இடம் பிடித்தார்.
ஆசிய டி20 கோப்பையில் அசத்திய கமலினி
அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான கமலினி, அவ்வப்போது சுழற்பந்து வீசவும் செய்வார். தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் விளையாடி வருகிறார். அண்மையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போட்டியில் கமலினி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகித்தார். அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் கமலினி 79 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் இவர் அடித்த 8 சிக்சர்களும் அடங்கும்.

இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய கமலினி
மதுரை டூ மும்பை இந்தியன்ஸ்
கமலினியின் திறமையே ஏலத்தில் அவருடைய மதிப்பை உயர்த்தியது என்று சொல்லலாம். விக்கெட் கீப்பரான கமலினியால், பகுதி நேர சுழற்பந்துவீச்சாளராகவும் செயல்பட முடியும். இதை உணர்ந்தே மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்கிவிட வேண்டும் என மல்லுக்கட்டியது. இதில் தமிழக வீராங்கனை கமலினி பெயர் வந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்க கடும் போட்டி போட்டது. வெறும் பத்து லட்சம் அடிப்படை விலையாக கொண்டிருந்த கமலினிக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் வாங்கி இருக்கிறது.

ரூ.1.60 கோடிக்கு மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட கமலினி
நூலிழையில் இழந்த வாய்ப்பு
பிப்ரவரி 14-ஆம் தேதி பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டி தொடங்கியது. இதில் இரண்டாவது போட்டியில் மும்பையும் டெல்லியும் மோதின. இதில் தமிழகத்தை சேர்ந்த கமலினி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நூலிழையில் வாய்ப்பு யஸ்டிகாவிடம் சென்றது. சர்வதேச அனுபவம் யஸ்டிகாவிடம் இருந்ததால் வாய்ப்பு அவர் பக்கம் சென்றது. அதுமட்டுமில்லாமல் மும்பையும் இந்த ஆட்டத்தில் தோற்றது. இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். ரூ.1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்து வெளியே எதற்கு உட்கார வைக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்திய U-19 உலகக்கோப்பையில் மிகச்சிறந்த ஃபார்மில் கமலினி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
