இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்னும் இவ்வுலகில் பல மர்மங்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி குமரிகண்டத்தை போன்று நீருக்கடியில் ஒரு தீவு மூழ்கியதாக மர்ம கதை ஒன்று இருக்கின்றது. அட்லான்டிக் பெருங்கடலில் இருக்கும் இந்த தீவு பல கப்பல்களை காவு வாங்கியுள்ளது என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்படி பல கேள்விகளை கொண்டிருக்கும் இந்த தீவிற்கு விடைகளே கூற முடியாமல் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் திணறுகின்றனர். உலகத்தின் அற்புதமான கட்டிடக்கலை, பலம் வாய்ந்த ராணுவம், அரசியல், விஞ்ஞான ரீதியாக மிகவும் முன்னேறிய சமூகம் என பண்டைய நாகரீகத்தில் வாழ்ந்த ஒரு நகரம் ஒரே நாளில், ஓர் இரவில் முற்றிலுமாக அழிந்து வீழந்தது என கிரேக்க தத்துவஞானி ப்ளாட்டோ கூறும் அட்லான்டிஸை சுற்றி இருக்கும் மர்மங்கள் ஏராளம். பல மர்மங்கள் நிறைந்துள்ள அட்லான்டிஸ் தீவை பற்றி விரிவாக பார்ப்போம்.


கடலுக்குள் மூழ்கிபோன அட்லான்டிஸ் தீவு

மனைவிக்காக அட்லான்டிஸ் தீவை உருவாக்கிய மன்னன்

புகழ் பெற்ற அட்லான்டிஸ் தீவை போஸிடான் என்னும் அரசன் அவர் மனைவிக்காக உருவாக்கினார். பிறகு அவர் தனது மகன் அட்லான்டிஸுக்கு ராஜாவாக முடி சூட்டி, அவர் பெயரையே இந்த தீவுக்கும் இதைச்சுற்றி உள்ள கடலுக்கும் பெயரிட்டார். பின்னர் அட்லான்டிஸின் மகன் இளவரசர் சோலோன் பிறப்பதற்கு சுமார் 9,000 ஆண்டுகளுக்கு முன்பு, அட்லான்டிஸின் கடலை சுற்றியுள்ள சக்திவாய்ந்த இளவரசர்கள் மத்தியத் தரைக்கடலின் பல நிலங்களைக் கைப்பற்றி இறுதியாக அட்லான்டிஸ் தீவையும் கைப்பற்றினார்கள். அதன்பிறகு ஏதெனியர் கூட்டாளிகளால் தோற்கடிக்கப்பட்டனர் என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி.


அட்லான்டிஸ் கடலில் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தும் ஆராய்ச்சியாளர்கள்

அட்லான்ட்டிஸ் மர்மம்!

கிரேக்க தத்துவவாதியான ப்ளாட்டோவின் நூல் ஒன்றின் ஒரு சில பக்கங்களில் உள்ள உரையாடல்களான “டிமேயஸ்” மற்றும் “கிரிட்டியாஸ்” ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள புராணத் தீவுதான் இந்த அட்லான்ட்டிஸ் தீவு . கிட்டத்தட்ட 2,400 ஆண்டுகளாக மேற்கத்திய வரலாற்றாசிரியர்களை குழம்ப வைக்கும் ஒரு மந்திர வார்த்தை இது. கி.மு 9,600-ல், ஒரே இரவில் கடலுக்குள் மூழ்கிப்போன ஒரு அதி சக்திவாய்ந்த, பலம் பொருந்திய ராஜ்ஜியம் என இதனைப் ப்ளாட்டோ குறிப்பிடுகிறார்.


அதிக வளங்கள் நிறைந்த அட்லான்டிஸ் தீவு

அட்லான்டிஸின் வளங்கள்

அட்லான்டிஸ் என்று அழைக்கப்படும் இந்த தீவானது பல அழகான இயற்கை வளங்கள் நிறைந்தது. இராணுவ வீரர்கள், ஆயுதங்கள், பிரம்மாண்ட கட்டிடங்கள், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் இங்கு இருந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்த தீவில் விவசாயம் செய்யச் செழுமையான மண், தூய்மையான நீரூற்றுகள், பசுமையான தாவரங்கள், வனங்கள் மற்றும் விலங்குகள், தங்கம் பதிக்கப்பட்ட கட்டிடங்கள் எனப் பல பொக்கிஷங்களை உடையது இந்த தீவு எனவும் கூறுகின்றனர். பல துறைகளில் பிற நாடுகளை விட இப்பகுதி மேலோங்கி இருந்திருக்கிறது என மக்கள் மத்தியில் இன்றும் ஒரு ஆழ்ந்த எண்ணம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பிறகு நாம் இந்த தீவை எப்போதாவது கண்டுபிடித்து இருக்கிறோமா? இந்த தீவு இருப்பதைப் பற்றிய சான்று ஏதேனும் இருக்கிறதா? இதை நம்பலாமா? வேண்டாமா? எனப் பல கேள்விகள் மக்கள் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.


அழிக்கப்பட்ட அட்லான்டிஸ் தீவு

ப்ளாட்டோவின் கூற்று

ப்ளாட்டோவின் எழுத்தில் மனித நிலைப்பாடுகள் குறித்து மிகச்சரியான உண்மைகள் இல்லாதிருந்தால், இந்த அட்லான்ட்டிஸ் என்ற பெயர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மறக்கப்பட்டிருக்கும். பளாட்டோ தன் நூலில் அட்லான்ட்டிஸ் குறித்து பிரித்து மேய்ந்து, மிகத் துல்லியமாக எழுதியுள்ளார். அவரது எழுத்துகள் அட்லான்ட்டிஸ் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கான ஒரு முழுமையான கையேடு. அரசியல், ராணுவம், தொழில்நுட்பம், வர்த்தகம், கலாசாரம், மதம், வாழ்க்கை முறை என அத்தனை விஷயங்களை விவரித்து எழுதியுள்ளார். அவர் குறிப்பிடும் இந்த இடம் உலக வரைபடத்திலேயே இல்லை என்றாலும் அவரது இந்த மிகத் துல்லியமான எழுத்துகள்தான் இன்றுவரை ஆராய்ச்சியாளர்களையும் தொல்பொருள் ஆய்வாளர்களையும் அட்லான்ட்டிஸை நோக்கிய பயணத்தை தொடரச் செய்கிறது.


கடலின் அடியில் நடைபெறும் ஆராய்ச்சி

அட்லான்ட்டிஸ் கதையின் தோற்றம்!

அட்லான்ட்டிஸின் கதையை தனது தாத்தாவிடமிருந்து கேட்டதாக ப்ளாட்டோ தனது 'கிரிட்டியாஸ்' புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அவர் தாத்தா அதை ப்ளாட்டோவின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த ஏதெனிய அரசியல்வாதியான சோலோனிடமிருந்து கேட்டதாகவும், சோலோன் அதை ஒரு எகிப்திய பாதிரியாரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும், அந்தப் பாதிரியார் அது 9,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்தததாகவும் எழுதியுள்ளார். ஆக மொத்தத்தில் ப்ளாட்டோவே நேரில் பார்க்காத ஒரு நகரம்தான் அட்லான்ட்டிஸ். எனவே அவரது கதைகளுக்கு சுவை சேர்க்க எழுத்தப்பட்ட புனைவு இது என்றும், அதைச் சொல்வதில் அவரது நோக்கம் ஒரு சிறந்த சமுதாயத்தைப் பற்றிய அவரது கருத்துகளை உயர்த்துவதாகவே இருந்துள்ளதாகவும் சிலர் வாதிடுகின்றனர்.

மர்மம் தீர்க்கப்படாத பில்லர்ஸ் ஆஃப் ஹெர்குலஸ்

ஹெர்குலஸின் தூண்கள் என்பது மத்தியதரைக் கடல் மற்றும் அட்லான்ட்டிக் பெருங்கடலுக்கும் இடையில் உள்ள பதினான்கு கிலோமீட்டர் அகலமுள்ள ஜலசந்தியின் பழங்காலத்துப் பெயராகும். இதன்படி அட்லான்ட்டிஸின் மிகச்சிறந்த அமைவிடம் ஸ்பெயினின் தெற்கு பகுதியாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தெற்கு ஸ்பெய்னின் நூற்றுக்கணக்கான ஏக்கர் தூரத்திற்கு பரந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலத்திற்கு கீழ்தான் அட்லான்ட்டிஸ் நகரம் புதைந்து போனதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். 1922-ல் ஜார்ஜ் பார்சர் மற்றும் அடால்ஃப் ஷெல்டன் எனும் இரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில்தான் புதையுண்ட அட்லான்ட்டிஸ் நகரம் இருந்தது என்று சொன்னதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகு வந்த ஜெர்மன் நிபுணர்கள் இந்த இடத்தை சேட்டிலைட் மூலம் பெறப்பட்ட படங்களிலிருந்து ப்ளாட்டோ கூறிய அட்லான்ட்டிஸ் நகரின் வடிவமைப்பு ஒத்துப்போவதை உறுதி செய்தனர். 1679-ம் ஆண்டில் ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஓலாஸ் ருட்பெக் 'அட்லான்ட்' என்ற நான்கு தொகுதிகளைக் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார், அதில் ஸ்வீடன்தான் அட்லான்ட்டிஸின் அசல் தலம் என்றும், அனைத்து மொழிகளும் ஸ்வீடிஷ் மொழியிலிருந்து வந்தவை என்றும் நிரூபிக்க முயன்றார். ஆனால் அதனை ஸ்வீடிஷ் மக்கள் தவிர வெளியே யாரும் நம்பவில்லை.

Updated On 17 Dec 2024 12:05 AM IST
ராணி

ராணி

Next Story