இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒருவர். இவர் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகளே கிடையாது. அதிவேக 50 விக்கெட்களை வீழ்த்தியதிலிருந்து தற்போது 500 விக்கெட்களை கைப்பற்றியதுவரை பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார் அஸ்வின். அவர் இந்தியாவின் சுழல் ஜாம்பவான் என்று சொன்னால் மிகையாகாது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வினின் திடீர் முடிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அஸ்வினின் தந்தையும் சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்ததால் இன்னும் அஸ்வினின் ஓய்வு முடிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுப்பில் அஸ்வின் கடந்து வந்த பாதையை பற்றியும், அஸ்வினின் ஓய்வு பற்றியும் விரிவாக பார்ப்போம்.


முதல்தர போட்டிகளில் அஸ்வின் அறிமுகமானபோது

அஸ்வினின் ஆரம்ப காலம்

செப்டம்பர் 17, 1986ஆம் ஆண்டு சென்னையில் ரவிச்சந்திரன் மற்றும் சித்ரா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அஸ்வின். இவரது தந்தை ரவிச்சந்திரன், வேகப்பந்து வீச்சாளராக மெட்ராஸ் கிளப் அணிக்காக விளையாடியுள்ளார். தனது பள்ளிப்படிப்பை பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியிலும், புனித பேடின் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். ஒய்.எம்.சி.ஏ. அணிக்காக தனது ஒன்பது வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் அஸ்வின். இவரது ஆரம்ப காலத்தில் சந்திரசேகர் ராவிடம் பயிற்சி பெற்றார். தனது இளம் வயதில் போட்டிகளில் துவக்க வீரராக வாழ்க்கையை தொடங்கினார் அஸ்வின். ஆனால் அதில் பெரிதாக வெற்றி காணாததால் பின்னர் ஒரு வலது கை சுழற்பந்துவீச்சாளராக மாறினார். அதன்பிறகு சென்னையிலுள்ள சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்


தமிழ்நாடு அணிக்காக விளையாடியபோது

முதல்தர போட்டிகளில் அறிமுகம்

ரஞ்சிக் கோப்பை மற்றும் இதர முதல்தர போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார் அஸ்வின். அதன்பின் 2006ஆம் ஆண்டு தனது 20வது வயதில் ஹரியானாவுக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டிற்காக முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆறு விக்கெட் வீழ்த்தினார். பிறகு, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் ஆந்திராவிற்கு எதிராக தமது ஆட்டத்தைத் துவங்கினார். முக்கியமாக 2008-09ல் விஜய் ஹசாரே கோப்பையை வென்ற தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டனாக இருந்தார்.


2011 உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வின்

சர்வதேச போட்டிகளில் அசத்தல்

ஜூன் 5-ஆம் தேதி 2010 அன்று இலங்கை அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை ஆடினார் அஸ்வின். இவர் 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. அதன்பிறகு 15 பேர் கொண்ட 2011 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் உலகக்கோப்பையில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அஸ்வின், ஒருநாள் போட்டி மற்றும் T20 போட்டிகளை விட டெஸ்டில்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தினார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இதுவரை 537 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அஸ்வின், மொத்தமாக 765 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 6 சதம் அடித்திருகிறார். பல முக்கியமான தருணங்களில் இந்திய அணிக்கு அஸ்வின் கைகொடுத்திருக்கிறார்.


டெஸ்ட் போட்டிகளில் அசத்திய அஸ்வின்

அஸ்வினின் சாதனைகள்

இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் அவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 953 விக்கெட்களை வீழ்த்தி முதல் இடத்தில் இருக்கிறார். அதே போல, அஸ்வின் இந்திய அணிக்காக 537 டெஸ்ட் போட்டி விக்கெட்களை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே முதல் இடத்தில் 619 விக்கெட்களுடன் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேனாக ஆறு சதங்களை அடித்து இருக்கிறார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3503 ரன்களையும் எடுத்து இருக்கிறார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். மிக அதிக வயதில் ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ஐந்து விக்கெட்களை வீழ்த்திய ஆல் ரவுண்டர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை 20க்கும் அதிகமான முறையும், ஒரே இன்னிங்ஸில் 5க்கும் அதிகமான விக்கெட்களை 30 முறைக்கும் அதிகமாக வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் வேறு யாரும் செய்ததில்லை. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை.


அஸ்வினின் திடீர் ஓய்வு முடிவு

அஸ்வினின் ஓய்வு சர்ச்சை

ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார். இந்த தீடீர் ஓய்வு முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அஸ்வின் பாதி தொடரில் ஓய்வை அறிவிக்க காரணம் என்ன? அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சரியாக வாய்ப்பு கொடுக்காததால்தான் அவர் ஓய்வை அறிவித்தாரா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் அஸ்வினுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அளிக்கப்பட்ட வாய்ப்பும் அவர் ஓய்வு பெறப்போகிறார் என்பதை அறிந்த பின்னரே அளிக்கப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அஸ்வினை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்போவதில்லை என தெரிந்தேதான் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது. தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தே அஸ்வின் இரண்டாவது போட்டிக்கு முன்பே ஓய்வு பெறும் முடிவை எடுத்து இருக்கிறார். பின்னர் அவருக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மீண்டும் அவர் நீக்கப்பட்டார். 537 விக்கெட்கள் வீழ்த்திய பின்னும் வெளிநாடுகளில் தன்னை பிளேயிங் லெவனில் சேர்க்கப் போவதில்லை என்பதை அறிந்த அஸ்வின் ஓய்வு முடிவு எடுத்து இருக்கிறார்.


இந்திய வீரர் அஸ்வின் மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன்

அஸ்வின் தந்தையின் சர்ச்சை பேச்சும், வேடிக்கையான ரிப்ளையும்

அஸ்வினின் ஓய்வு குறித்து அஸ்வினின் தந்தை பேசுகையில், அஸ்வின் ஓய்வு பெறுவது எனக்கும் கடைசி நிமிடத்தில்தான் தெரிய வந்தது. அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை நானும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டேன். அதற்காக எனக்கு எந்த சோகமும் இல்லை. ஆனால் அஸ்வின் ஓய்வை அறிவித்தது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், இன்னொரு பக்கம் சோகம்தான். அதற்காக என் மகனின் முடிவில் நான் தலையிடக் கூடாது. ஓய்வு அறிவிப்புக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று தெரியவில்லை. அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஆனால் தொடர்ச்சியாக அவமானம் செய்யப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவரின் ஓய்வு முடிவு எமோஷனலானது. ஏனென்றால் கடந்த 14 முதல் 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நீண்ட காலத்திற்கு அவமானத்தை தாங்கி கொண்டிருக்க முடியாது. அதனால் ஓய்வு முடிவை எடுத்திருக்கலாம். சிறுவயதில் பயிற்சிக்காக பைக்கில் கொண்டு சென்று மைதானத்தில் விடுவேன். அதனை கடந்து பெரிதாக கிரிக்கெட்டில் தலையிட்டதில்லை. ஆனால் படிப்பு, கிரிக்கெட் இரண்டிலும் அஸ்வின் கவனம் செலுத்த ஆதரவாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்.. அவரின் பேச்சை மன்னிக்கவும்.. அவர் செய்தியாளர்களிடம் பேசிய அனுபவம் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.


அஸ்வினுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி வாழ்த்து

அஸ்வினை வாழ்த்தி கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நீங்கள் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பல ஆஃப் பிரேக் பந்துகளை உங்களிடமிருந்து அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், நீங்கள் ஒரு கேரம் பந்தை வீசினீர்கள். நீங்கள் இந்தியாவுக்காக சிறந்த ஆட்டத்தை விளையாடியவர் என்ற அடிப்படையில் உங்கள் முடிவை அனைவரும் புரிந்துகொள்வார்கள். எப்பொழுதும் அணியை முன்னிலைப்படுத்தி விளையாடியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.




அஸ்வினின் ஓய்வால் ஆதங்கப்பட்ட முன்னாள் கேப்டன் கபில் தேவ்

ஆதங்கப்பட்ட கபில் தேவ்

அஸ்வினின் ஓய்வு முடிவு குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கபில் தேவ். இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும், அவரது முகத்தில் அந்த வேதனையை தான் பார்த்ததாகவும், அவர் மகிழ்ச்சியாக இல்லை என்றும், அது தனக்கு வருத்தம்தான் என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார். தான் மட்டும் அங்கு இருந்திருந்தால் அஸ்வின் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள கபில், அஸ்வினுக்கு சொந்த மண்ணில் நல்லதொரு ஃபேர்வெல் பார்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On 24 Dec 2024 12:14 PM IST
ராணி

ராணி

Next Story