இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் கம்பீர்?
சமீபத்திய டெஸ்ட் தொடரிலும் சரி, ஒருநாள் தொடரிலும் சரி இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதற்கு கம்பீரின் மோசமான பயிற்சிதான் காரணம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கம்பீருக்கும் வீரர்களுக்கும் இடையே அதிக கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பல செய்திகள் வெளியாகின்றன. மிகமுக்கியமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணியின் ஆட்டம் திருப்தியளிக்கவில்லை என்றால், தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே கம்பீரின் பயிற்சியாளர் நியமனம் தொடர்பான சர்ச்சை முடிவடையாத சூழலில், திடீரென அவரின் பதவிக்கு ஆபத்து வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுப்பில் கம்பீருக்கும், அணியின் வீரர்களுக்கும் இடையே நிலவும் பிரச்சினை பற்றி விரிவாக பார்ப்போம்.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஆனபோது
பயிற்சியாளர் கம்பீரின் பயணம்
ஐபிஎல் தொடரில் கம்பீர் ஆலோசகராக இருந்து கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் கம்பீரை சிவப்பு கம்பளம் விரித்து தலைமை பயிற்சியாளர் ஆக்கியது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி மிகப்பெரிய சறுக்கலை சந்தித்து வருகிறது. கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், சொந்த மண்ணில் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் தோல்வியை சந்தித்தது மட்டுமில்லாமல் தற்போது பார்டர் கவாஸ்கர் டிராஃபியிலும் வெல்வதற்கு வாய்ப்பில்லாத நிலை வந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற அஸ்வின்
அஸ்வினின் ஓய்விற்கு காரணம்?
தொடர் தோல்வியின் காரணமாக கவுதம் கம்பீரிடம் இருந்து பிசிசிஐ தரப்பில் சில விளக்கங்கள் கோரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததில் இருந்து இந்திய அணி வீரர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையில் தகவல் பரிமாற்றங்களில் சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் பொறுப்பில் இருந்தபோது வீரர்களுக்கு போதுமான தெளிவு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இளம் வீரர்கள் பலருக்கும் இந்திய அணியில் இருந்து ஏன் நீக்கப்படுகிறோம், ஏன் பெஞ்ச் செய்யப்படுகிறோம் என்கிற விளக்கம் கூட அளிக்கப்படுவதில்லையாம். ஏற்கனவே அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்கு கம்பீரும் மறைமுக காரணமாக அமைந்துள்ளார்.
கம்பீர் மற்றும் இந்திய அணி வீரர்கள்
வீரர்களுடன் கோபத்துடன் பேசிய கம்பீர்
இந்த தொடரில் ரோகித் சர்மா ரன்கள் அடிக்கத் தடுமாறி வருகிறார். அவரது கேப்டன்சியும் படுமோசமாக உள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் அட்டாக்கிங் ஃபீல்டிங் செய்து இந்திய அணியை வீழ்த்திய நிலையில், ரோகித் சர்மா எந்த ஒரு அட்டாக் ஃபீல்டிங்கும் வைக்காமல் மிகவும் சாதாரணமாக செயல்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், 4வது டெஸ்ட் முடிந்த பிறகு கம்பீர் இந்திய வீரர்களிடம் கடும் கோபத்துடன் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விராட் கோலியுடன் கம்பீர்
நன்றி கூறி வழியனுப்பி வைக்கப்படுவார்கள்
4வது டெஸ்ட் போட்டியில் அணியின் படுதோல்வியால் விரக்தி அடைந்த கம்பீர், வீரர்களிடம் டிரஸ்ஸிங் ரூமில் கடும் கோபத்துடன் பேசி இருக்கிறார். அதாவது மூத்த வீரர்கள் எவரின் பெயரையும் வெளிப்படையாக கூறாத கம்பீர், ''அணிக்காக சரியாக விளையாடுபவர்கள்தான் எனக்கு வேண்டும். அணிக்கு போதுமான பங்களிப்பு செய்யாத வீரர்கள் நன்றி கூறி வழியனுப்பி வைக்கப்படுவார்கள்'' என்று அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே மோதல்?
கம்பீர் - ரோஹித் சர்மா மோதல்
அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை நடைபெற உள்ள நிலையில், இதில் இந்தியா வெற்றி பெற கம்பீரின் அணுகுமுறை மாற வேண்டிய தேவை உள்ளது. கவுதம் கம்பீரின் இந்த பேச்சால் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் கடும் விரக்தியில் உள்ளனர். இது தவிர கம்பீர், ரோஹித் சர்மா இடையே அணி வீரர்கள் தேர்வில் மோதல் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. கம்பீரின் நெருக்கடியால் அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில், ரோஹித் சர்மா அதை விரும்பவில்லை என்றும் கம்பீரின் சில அணுகுமுறை ரோஹித்துக்கு பிடிக்கவில்லை என்றும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவங்களால் கடும் விரக்தியில் இருக்கும் ரோஹித் சர்மா, 5வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கம்பீருக்கு சாம்பியன்ஸ் கோப்பைவரை கால அவகாசம்
சாம்பியன்ஸ் டிராஃபி வரை கால அவகாசம்
இந்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேசுகையில், பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாட வேண்டியுள்ளது. அதன்பின் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட வேண்டும். சாம்பியன்ஸ் டிராஃபியிலும் இந்திய அணியின் ஆட்டம் முன்னேறவில்லை என்றால், கம்பீரின் பதவிக்கு ஆபத்து வரலாம். அதேபோல் ராகுல் டிராவிட்டுக்கு பின் அடுத்த பயிற்சியாளருக்கான மோதலில் கம்பீர் முதலிடத்தில் இல்லை. என்சிஏ தலைவராக இருந்த விவிஎஸ் லக்ஷ்மண்தான் அந்த பொறுப்புக்கு வரவிருந்தார். அதேபோல் சில வெளிநாட்டு பயிற்சியாளர்கள் 3 வடிவங்களுக்கும் பயிற்சியளிக்க முன்வரவில்லை. அதன்பின் சில சமரசங்கள் செய்யப்பட்டு, சில நிர்பந்தங்களுக்கு பின்னரே கம்பீர், பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் சாம்பியன்ஸ் டிராஃபிக்கு பின் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.