இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்திய அளவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே டிராஃபியில் விதர்பா அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த அணியின் கேப்டன் கருண் நாயர். யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதபடி ரன் குவித்து வருகிறார் அவர். இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். சில வீரர்கள் எவ்வளவு சாதனை படைத்தாலும் அவர்கள் இந்திய அணியில் தொடர்ந்து சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார்கள். அதில் கருண் நாயரும் ஒருவர். தற்போது மிகச் சிறப்பாக விளையாடிவரும் கருண் நாயர், சாம்பியன்ஸ் டிராஃபி இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை. இது தற்போது பெரிய சர்ச்சையாகிவுள்ளது. இதுகுறித்து சச்சின் உள்ளிட்ட பெரிய ஜாம்பவான்கள் இந்திய அணியின் தேர்வாளர்களை விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு பேரின் ஆதரவை பெற்றுள்ள கருண் நாயர் யார்? ஏன் இவரை இந்திய அணி தேர்வாளர்கள் ஒதுக்கினர்? என்பதை பற்றியெல்லாம் விரிவாக இப்பதிவில் பார்ப்போம்.


பஞ்சாப் அணிக்காக கருண் நாயர் விளையாடியபோது

கருண் நாயரின் ஆரம்பகாலம்

கருண் நாயர், 6 டிசம்பர் 1991 அன்று ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்தார். இவரது பெற்றோர் கலாதரன் நாயர் மற்றும் பிரேமா நாயர். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரைச் சேர்ந்தவர்கள். மெக்கானிக்கல் இன்ஜினியராக இருக்கும் கலாதரன், கருண் நாயர் பிறந்த நேரத்தில் ஜோத்பூரில் பணியமர்த்தப்பட்டிருந்தார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் பெங்களூரு கோரமங்களாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் பணியாற்றினார். நாயரின் தாயார் பிரேமா பெங்களூரில் உள்ள சின்மயா வித்யாலயாவில் ஆசிரியையாக உள்ளார். கருணுக்கு ஸ்ருதி நாயர் என்ற மூத்த சகோதரியும் இருக்கிறார். கருண் நாயர் 28 மார்ச் 2001 அன்று கோரமங்களா கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். பிறகு அவரது குடும்பம் பெங்களூருவுக்கு குடிபெயர்ந்து சின்மயா வித்யாலயாவில் படித்தார். அதன்பிறகு சிறந்த கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக பிராங்க் அந்தோனி பப்ளிக் பள்ளிக்கு மாறினார்.


இங்கிலாந்திற்கு எதிராக முச்சதம் அடித்தபோது

முச்சதம் அடித்து சாதனை

மே 5, 2016 அன்று ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான இந்திய ODI மற்றும் T20 அணிகளில் நாயர் இடம் பெற்றார். 11 ஜூன் 2016 அன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்த தொடரில் தனது ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதன்பிறகு 26 நவம்பர் 2016 அன்று, சமொஹாலியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். ஆட்டமிழக்காமல் 303 ரன்களை அடித்தார். அப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று இன்னிங்ஸ்கள் மட்டுமே ஆடினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் டிரிபிள் சதம் அடித்த மிக விரைவான பேட்ஸ்மேன் ஆனார். வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது முச்சதம் அடித்தவர். அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் சதத்தை டிரிபிளாக மாற்றிய மூன்றாவது வீரர் கருண் நாயர்தான். அப்படி சிறப்பாக செயல்பட்ட இவர் அதன்பிறகு நடந்த தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்திய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டார்.


கருண் நாயரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்

கம்பேக் கொடுத்த கருண்!

கருண் நாயர் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். ஆனால் அதற்குப் பிறகு சிறப்பாக செயல்பட தவறியதால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் இந்தியாவின் உள்நாட்டு தொடரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய நிலையில், இவர் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் ஐபிஎல் தொடரிலும் இவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே டிராஃபியில் விதர்பா அணிக்காக தனது ஒட்டுமொத்த திறமையை வெளிப்படுத்தி இருக்கும் கருண் நாயர், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் 752 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். இது உள்நாட்டு கிரிக்கெட்டில் யாருமே படைத்திடாத மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் சாம்பியன் டிராபி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் இவ்வளவு சிறப்பாக விளையாடியும் ஒரு நாள் அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இவருக்கு நம்பிக்கை அளிக்கும் சில வார்த்தைகளை கூறியிருக்கிறார்.


கருண் நாயருக்கு ஆறுதல் அளித்த சச்சின் டெண்டுல்கர்

ஆறுதல் அளித்த சச்சின்

இது குறித்து சச்சின் கூறும் பொழுது ”ஏழு இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 752 ரன்கள் அடிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு அசாதாரணமான விஷயமாகும். இதுபோன்ற செயல்கள் யாவும் வெறுமனே நடந்து விடுவதில்லை. அபார கவனம் மற்றும் அபார கடின உழைப்பு போன்றவற்றினால் மட்டுமே வருகிறது. இனி தொடர்ந்து முன்னேறி, கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பெரிய மாற்றம் நடக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.


விஜய் ஹசாரே தொடரில் அசத்திய கருண் நாயர்

என் கனவு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது! மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினேன்!

தன்னுடைய இத்தகைய கம்பேக் குறித்தும், தனது கனவு குறித்தும் செய்தி ஊடகம் ஒன்றில் மனம் திறந்திருக்கிறார் கருண் நாயர். அதில், "நாட்டுக்காக விளையாடுவதே என் கனவு. அந்தக் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அதற்காகத்தான் நாம் இந்த விளையாட்டை விளையாடுகிறோம். எனவே, நாட்டிற்காக விளையாடுவதே என்னுடைய ஒரே இலக்கு. இது என்னுடைய மூன்றாவது கம்பேக் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ, அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் என்னால் முடிந்த ரன்களைக் குவிக்க வேண்டும். அது மட்டுமே என்னால் செய்ய முடியும். மற்ற எதுவும் என் கையில் இல்லை. எனவே, அணிக்கு நான் தேர்வாகும்வரை அது கனவாக மட்டுமே இருக்கும். ஆனாலும், நான் ஏற்கனவே கூறியது போல, ஒரு நேரத்தில் ஒரு இன்னிங்ஸில் கவனம் செலுத்த விரும்புகிறேன். மற்றபடி நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை. இது பல வருட கடின உழைப்பு, விடாமுயற்சி என்று நான் நினைக்கிறேன். அது தவிர இதில் எந்த ரகசியமும் இல்லை.மேலும், அச்ச உணர்வு எல்லோருக்குள்ளும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், என்னுடைய கிரிக்கெட் முடிவுக்கு வரும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. அது எங்கே செல்கிறது? நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? இது எப்படி நடந்தது என்ற எண்ணங்கள் உண்டு. அதிலிருந்து நீங்கள் வெளியே வந்து, என்ன நடக்கிறது? என்பதைப் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுக்கும். அப்போது மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

Updated On 21 Jan 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story