இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கிரிக்கெட் உலகில் தலைசிறந்த அணிகளில் இந்தியாவும் நியூசிலாந்தும் உள்ளன. ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடும். இந்தியாவிற்கு ஐசிசி தொடர்களில் மிகவும் சவாலான அணி என்றால் அது நியூசிலாந்துதான். 1975 உலகக்கோப்பை ஆரம்பித்ததுமுதல் தற்போதுவரை இந்தியா நியூசிலாந்து இடையேயான போட்டி என்றால் எப்பொழுதும் விறுவிறுப்பாக இருக்கும். இதுவரை 12 முறை மோதியுள்ள இரு அணிகளில் இந்திய அணி 6 போட்டிகளிலும் , நியூசிலாந்து 5 போட்டிகளிலும், ஒரு போட்டி முடிவில்லாமலும் போனது. இந்தநிலையில்தான் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இக்கட்டுரையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த விறுவிறுப்பான ஆட்டங்கள் குறித்தும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை பற்றியும் விரிவாக காணலாம்.


1975-ல் அதிரடியாக ஆடிய நியூசிலாந்தின் கிளென் டர்னர்

1975 - கிளென் டர்னரின் அசத்தலான சதத்தால் வென்ற நியூசிலாந்து

1975 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் 10-வது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 60 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்தியாவின் சையது அபித் அலி 70 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் பிரையன் மெக்னி 3 விக்கெட்டுகளும், ரிச்சர்ட் ஹார்ட்லீ , டேலீ ஹார்ட்லீ மற்றும் ஹெட்லே ஹோவார்த் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி கிளென் டர்னரின் அசத்தலான சதத்தால் 233 ரன்னை சேஸ் செய்தது. ஆட்டநாயகனாக கிளென் டர்னர் தேர்வு செய்யப்பட்டார்.


84* ரன்கள் குவித்த ப்ருஸ் எட்கர்

1979 - ஹார்ட்லீ மற்றும் மெக்னி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா

1975 தோல்விக்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பையில் மீண்டும் நியூசிலாந்தை சந்தித்தது. முதலில் ஆடிய இந்திய அணி 182 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் 55 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மெக்னி மற்றும் ஹார்ட்லீ 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி ஒரே ஒரு விக்கெட் மட்டும் இழந்து எளிதில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ப்ருஸ் எட்கர் 84 ரன்கள் குவித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.


1987 உலகக்கோப்பையில் இந்திய கேப்டன் கபில் தேவ்

1987 - நியூசிலாந்திற்கு எதிராக முதல் வெற்றி

தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பையிலும் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்திய அணி, 1983 உலகக்கோப்பை வென்ற அதே உத்வேகத்தோடு இம்முறை வெற்றியை சுவைத்தே ஆகவேண்டும் என்று களமிறங்கியது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 252 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நவ்ஜோத் சிங் சித்து 75 ரன்களும், கபில் தேவ் 72 ரன்களும் அடித்தனர். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 236 ரன்களில் சுருண்டது . ஆட்டநாயகனாக கபில் தேவ் தேர்வு செய்யப்பட்டார்.


2019 உலகக்கோப்பையில் ரன் அவுட் ஆன இந்திய வீரர் தோனி

2019 - அரைஇறுதியில் தோற்ற இந்திய அணி

மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த அரையிறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து, மீண்டும் அதே இடத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது. ஆனால், நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், இந்திய அணி 49.3வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்களில் சுருண்டது. இதன் மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.


2023 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி

2023 - அரைஇறுதியில் துவம்சம் செய்த இந்தியா

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இறுதியில் இந்திய அணி 398 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 105 ரன்களும் எடுத்து அசத்தினார். இதில் விராட் கோலி ஓடிஐ கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடித்தார். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்


மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

2025 - நியூசிலாந்தை வென்று சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் குவித்தது. டேரில் மிட்செல் 63 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 53 ரன்களும் எடுத்தனர். ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்து வீசவே நியூஸிலாந்தின் நெட் ரன் ரேட் குறைந்தது. ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய நியூசி அணி மிடில் ஆர்டரில் ரன்ரேட் நான்குக்கும் குறைவாக எடுத்தது. இந்திய அணியைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 252 ரன்களை இலக்காகக் கொண்டு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆரம்ப வீரர்களாக இந்திய அணியில் களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 58ஆவது அரைசதத்தை அடித்தார். கடைசியாக கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பாண்டியா 18 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜடேஜா கடைசியில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியுள்ளது. மேலும், மூன்றாம் முறையாகவும் சாம்பியன்ஸ் டிராபியை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதற்கு முன்னதாக சவுரவ் கங்குலி மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையிலான அணிகள் டிராபியை வென்ற நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On 11 March 2025 10:33 AM IST
ராணி

ராணி

Next Story