இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-0 என்கிற கணக்கில் இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர். 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது இந்திய அணி. இந்த தோல்விக்கு மிகமுக்கிய காரணம், ஆடுகளம், ஸ்பின் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்துள்ளது. எப்பொழுதும் இரண்டாவது மூன்றாவது நாட்களுக்கு பின்னர்தான் ஆடுகளங்கள் வறட்சியாகி ஸ்பின் பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த தொடரில் முதல் நாளிலிருந்தே பந்து நன்கு திரும்பியது. இதனால் வீரர்களும் விளையாடுவதற்கு கஷ்டப்பட்டார்கள். இந்த கட்டுரையில் இந்தியாவில் இருக்கும் சிறந்த கிரிக்கெட் மைதானங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.


ஈடன் கார்டன் மைதானத்தில் தனது 100வது சதத்தை அடித்த சச்சின் டெண்டுல்கர்

இந்தியாவின் பழமையான மைதானம் - ஈடன் கார்டன்

ஈடன் கார்டன் இந்தியாவின் பழமையான கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஒன்றாகும். இது 1864இல் திறக்கப்பட்டது. இது அப்போதைய கவர்னரான ஆக்லாந்து பிரபுவின் ஈடன் சகோதரிகளின் நினைவாக பெயரிடப்பட்டது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் இந்தியாவில் இருக்கும் மற்ற மைதானங்களை விட மிக மிகப் பழமையானதாகும். இது சுமார் 20 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 1864ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் 1934ஆம் ஆண்டுமுதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஈடன் கார்டன் பிட்ச்சை பொறுத்தவரை வரலாற்றில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டுக்குமே சமமாக இருந்து வருகிறது. எனவே இங்கு திறமையை வெளிப்படுத்தும் யாராக இருந்தாலும் நல்ல பலனை பெறலாம். 1987ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இங்குதான் தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. இந்த மைதானத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி இங்குதான் நடந்தது. அதுமட்டுமில்லாமல் சச்சின் டெண்டுல்கரின் 100வது சர்வதேச சதமும் இங்குதான் அரங்கேறியது.


பாகிஸ்தான் வீரர்களை பாராட்டிய சென்னை மக்கள்

முதல் டெஸ்ட் வெற்றி - M.A சிதம்பரம் மைதானம்

இந்தியாவில், பல்வேறு மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும், சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதும் கிரிக்கெட் வரலாற்றின் பல வரலாற்று சுவடுகளை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஏ. சிதம்பரத்தின் நினைவாக இந்த மைதானத்திற்கு எம்.ஏ. சிதம்பரம் மைதானம் எனப் பெயர் வைக்கப்பட்டது. இந்திய நாட்டின் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பை முதன் முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான், 1934ஆம் ஆண்டு நடைபெற்றது. அதேபோல் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்தியா தன் முதல் டெஸ்ட் வெற்றியை இந்த மைதானத்தில்தான் ருசித்தது. அதன்பிறகு 12 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி, 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு, இந்திய ரசிகர்கள் அனைவரும், எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினார்கள். சிறந்த விளையாட்டு ரசிகர்கள் எப்போதும் பாகுபாடின்றி சிறந்த விளையாட்டை ஊக்குவிப்பார்கள் என்பதற்கு இது சிறந்த சான்றாக அமைந்தது. பாகுபாடின்றி சிறந்த விளையாட்டை ஊக்குவிப்பதில் சென்னை ரசிகர்கள் சிறந்தவர்கள் என்பதையும் காட்டியது.


அருண் ஜேட்லி மைதானத்தில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய அணில் கும்ப்ளே

கிரிக்கெட் மைதானமான மன்னரின் கோட்டை - அருண் ஜேட்லி மைதானம்

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு பின், டெல்லியின் ஃபெரோஸ் ஷா கோட்லா விளையாட்டு அரங்கத்துக்கு அருண் ஜேட்லி ஸ்டேடியம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் 1883இல் நிறுவப்பட்டது. இந்தியாவில் செயல்படும் மைதானத்தில் இதுதான் மூன்றாவது பழமையான சர்வதேச கிரிக்கெட் மைதானமாகும். முன்னதாக ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம் வெலிங்டன் பெவிலியன் என்று அழைக்கப்பட்டது. 1351 முதல் 1388 வரை ஆட்சி செய்த டெல்லி பேரரசர் ஃபெரோஸ் ஷா துக்ளக்கின் பெயரிலிருந்து இந்த மைதானத்தின் பெயர் பெறப்பட்டது. முன்பு இது ஒரு மைதானம் அல்ல, கோட்டை என்று கூறப்படுகிறது. மேலும் அதன் அருகாமையில் மைதானம் கட்டப்பட்டது. வரலாற்றின் படி, பிரிட்டிஷ் ஆட்சியின்போது, ​​ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் விளையாட வெலிங்டன் பெவிலியனைக் கட்டினார்கள். ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சுமார் 41,820 இருக்கைகள் உள்ளன. 1948 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இங்கு பல சாதனைகள் நடந்துள்ளன. அதில் 1999ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையின் பழமையான கிரிக்கெட் மைதானம்

பிரபோர்ன் ஸ்டேடியம், கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவுக்கு (சிசிஐ) சொந்தமான பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். இந்த மைதானத்தில்தான் 1997-98ல் மும்பை மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் 'மாஸ்டர்-பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் முதல்தர கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட இந்த மைதானம் 7 டிசம்பர் 1937 அன்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. தொடக்கப்போட்டி CCI மற்றும் லார்ட் டென்னிசன் அணிக்கு இடையே நடைபெற்றது. வான்கடே மைதானம் திறக்கப்பட்ட பிறகு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு பிரபோர்ன் மைதானத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. இந்த மைதானத்தின் அமைப்பே சிறப்பாக இருக்கும். இந்த மைதானம் மற்ற மைதானங்களை விட வித்தியாசமாக இருக்கும். ஏனென்றால் மற்ற மைதானத்தின் வடிவம் எல்லாம் வட்டம் அல்லது ஓவல் வடிவத்தில் இருக்கும். இங்குதான் மைதானம் சதுர வடிவில் இருக்கும். இந்த மைதானத்தில் சுமார் 20000 நபர்கள் அமரலாம்.


மொஹாலி மைதானத்தில் ரோஹித் சர்மா தனது மூன்றாவது சர்வதேச இரட்டை சதத்தை அடித்தபோது

வரலாற்று சிறப்பை கொண்ட மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம்

இந்தர்ஜித் சிங் பிந்த்ரா ஸ்டேடியம், பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் என்றும் மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் முதன்மையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். பஞ்சாபின் சண்டிகருக்கு அருகிலுள்ள மொஹாலியில் அமைந்துள்ள இது, எண்ணற்ற உள்நாடு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறது. 1992 மற்றும் 1993க்கு இடையில் கட்டப்பட்ட இந்த மைதானம் முதலில் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்டது. 26,000 பேர் அமரும் திறன் கொண்ட இந்த மைதானத்தில் வசதியான இருக்கைகள், விஐபி மற்றும் கார்ப்பரேட் பெட்டிகள், ஊடக வசதிகள் மற்றும் பகல்-இரவு போட்டிகளுக்கான லைட் வசதிகள் உள்ளன. இந்த மைதானத்தில்தான் ரோஹித் சர்மா தனது மூன்றவது சர்வதேச இரட்டை சதத்தை அடித்தார். இந்த பிட்ச் ஸ்பின் பந்துவீச்சிற்கு ஏற்றது.

Updated On 18 Nov 2024 11:56 PM IST
ராணி

ராணி

Next Story