இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ருமேனியாவின் டிரான்சில்வேனியா பகுதியில் அமைந்துள்ள ஹோயா-பாசியு காடு, உலகின் மிகவும் மர்மமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் காட்டை "பெர்முடா முக்கோணத்தின் சகோதரி" என்று அழைக்கின்றனர். ஹோயா-பாசியு காடு இன்றும் பல கேள்விகளுக்கு விடையளிக்காத மர்மமான இடமாக உள்ளது. அறிவியல் விளக்கங்கள் தேடப்பட்டாலும், இக்காடு தன் மர்மத்தை இன்றும் தக்க வைத்துள்ளது. இது பல சுற்றுலாப் பயணிகளையும், ஆய்வாளர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இக்காட்டிற்குச் செல்பவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் வழிகாட்டிகளுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இப்படி பல மர்மங்களை தன்னுள் வைத்திருக்கும் ஹோயா-பாசியு காட்டை பற்றி விரிவாக காண்போம்.


அடர்ந்த மரங்கள் நிறைந்த ஹோயா-பாசியு காடு

ஹோயா-பாசியு காடு அமைவிடம் மற்றும் வரலாறு :

ருமேனியாவின் க்ளூஜ்-நபோகா நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்தக்காடு சுமார் 250 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்தக் காட்டின் பெயர் ஒரு இடையனின் பெயரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடையன் தனது 200 ஆடுகளுடன் இக்காட்டில் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் டாசியன் மற்றும் ரோமானிய காலத்தில் இப்பகுதி புனித தலமாக கருதப்பட்டது. அதன்பிறகு பழங்குடி மக்கள் சடங்குகளை நடத்திய இடமாக ஹோயா-பாசியு காடு இருந்துள்ளது. குறிப்பாக இந்த இடத்தில் பல பழைய நாணயங்கள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


பயமுறுத்தும் வகையில் காட்டில் அமைந்துள்ள மரங்கள்

ஹோயா- பாசியு காட்டின் மர்ம நிகழ்வுகள் :

முதலில் இங்கு இருக்கும் வளைந்த மரங்கள் நம்மை மிகவும் பயமுறுத்தும். காட்டின் மையப்பகுதியில் உள்ள மரங்கள் விநோதமான முறையில் வளைந்துள்ளதால் நமக்கு பித்துபிடித்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த மரங்கள் அனைத்தும் ஒரே திசையில் வளைந்திருப்பது இன்றளவும் மர்மமாக உள்ளது. பல மரங்கள் அல்ஃபா எழுத்தின் வடிவத்தில் வளைந்துள்ளன. இங்கு வரும் பலர் விநோதமான ஒளிகளையும், உருவங்களையும் பார்த்ததாகக் கூறுகின்றனர். இக்காட்டில் நுழையும் பலருக்கு தலைவலி, குமட்டல், மற்றும் மயக்கம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்றபின்பு எலக்ட்ரானிக் சாதனங்கள் திடீரென செயலிழப்பதாகவும் புகார்கள் உள்ளன. குறிப்பாக அங்கு சென்ற மக்கள் விநோதமான சப்தங்களைக் கேட்டதாகக் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சில பகுதிகளில் காலநிலை திடீரென மாறுகிறது. எனவே இக்காட்டில் பேய்கள் உலவுவதாக மக்களிடம் அச்சம் நிலவுகிறது.


பசுமை சூழ்ந்து காணப்படும் ஹோயா-பாசியு காடு

ஹோயா-பாசியு காட்டில் நடந்த அறிவியல் ஆய்வுகள் :

பல அறிவியல் ஆய்வாளர்கள் இக்காட்டில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி காட்டில் உள்ள மண்ணில் அதிக அளவு காந்தப்புலம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சில பகுதிகளில் அதிக அளவு கதிர்வீச்சு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. UFO ஆய்வாளர்கள் இக்காட்டில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். EMF (எலக்ட்ரோமாக்னெடிக் ஃபீல்ட்) அளவீடுகள் எடுக்கப்பட்டு, அங்கிருக்கும் ஒலி மற்றும் அதிர்வு பதிவு செய்யப்பட்டு, பாராநார்மல் நிகழ்வுகள் ஏதும் இருக்கிறதா என ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளருர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


அச்சத்தை ஏற்படுத்தும் ஹோயா-பாசியு காடு

ஹோயா-பாசியு காட்டின் புள்ளிவிவரங்கள் :

காட்டின் மொத்த பரப்பளவு 250 ஹெக்டேர். சுற்றளவு 8 கிலோமீட்டர். இதன் உயரம், கடல் மட்டத்திலிருந்து 400-700 மீட்டர். குறிப்பாக மர்ம இடம் என்று சொல்லப்படும் பகுதி சுமார் 30 ஹெக்டேர். இங்கு தாவர வகைகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 170 வகைகளுக்கு மேலாக இருக்கும். இதில் மர இனங்கள் மட்டும் 30 வகைகளுக்கு மேல் இருக்கும். 15-க்கும் மேற்பட்ட அரிய தாவர இனங்கள் இருக்கும். 25 வகைகளுக்கு மேலான மருத்துவ தாவரங்கள் உள்ளன. இத்தனை வகையான தாவரங்கள் ஹோயா-பாசியு காட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஆண்டுக்கு சராசரியாக 50000 பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதிகபட்ச பார்வையாளர்கள் கோடை காலத்தில்தான் வருவர்.


பல ஆய்வுகள் மேறகொள்ளப்பட்டு வரும் ஹோயா- பாசியு காடு.

ஹோயா-பாசியு காட்டின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் :

இங்கு ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 8°C முதல் 10°C வரை இருக்கும் . கோடைகாலத்தில் அதிகபட்சமாக வெயில் 32°C வரை இருக்கும். குளிர்காலத்தில் குறைந்தபட்சம் -15°C வரை இருக்கும். ஆண்டுக்கு சராசரியாக மழைப்பொழிவு 700-800 மி.மீ வரை மழை பதிவாகிறது. மே-ஜூலை மாதங்களில்தான் அதிக மழை பொழிகிறது. இங்கு பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கோடைகாலத்தில்தான் வருகை தருகின்றனர்.

ஹோயா-பாசியு காட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் :

ருமேனியா அரசு இங்கு மர நடவு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கிறது. சராசரியாக ஆண்டுக்கு 5,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. குறிப்பாக உள்ளூர் இன தாவரத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது. இதை வருடத்திற்கு ஒருமுறை பள்ளி மாணவர்கள் இங்கே வந்து செய்கின்றனர். எதிர்காலத்தில் புதிய ஆராய்ச்சி மையமும் இங்கு திறக்கப்படவுள்ளது.

உலகம் முழுவதும் அறியப்பட்ட ஹோயா-பாசியு காடு :

20 ஆம் நூற்றாண்டில், எமில் பார்னியா என்ற இராணுவ தொழில்நுட்ப வல்லுநர், காட்டின் குறிப்பிட்ட இடம் மீது UFO என்று கூறக்கூடிய அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் ஒன்றை புகைப்படம் எடுத்துள்ளார். அதன் பின்னர்தான் அந்த இடம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆர்வத்தை ஈர்த்தது. காட்டின் குறிப்பிட்ட அந்த பகுதி கிளியரிங் என்று அழைக்கப்படுகிறது. காட்டிற்கு நடுவே நீள்வட்டமாக ஒரு இடம் வெறுமனே பொட்டலாகக் கிடக்கிறது. அதைத்தான் கிளியரிங் என்று அழைக்கின்றனர். கிளியரிங் என்பது குறிப்பிட்ட வனப்பகுதி இடத்தில் செடிகளோ, மரங்களோ வளராததையே குறிக்கிறது. வளமான காட்டிற்கு நடுவே ஒரு வேற்று நிலம் இருப்பதும் மர்மமாகவே உள்ளது. இது தவிர, காடுகளுக்கு வருபவர்கள் லேசான பதற்றம், அமைதியின்மை முதல் கடுமையான தடிப்புகள், தலைவலி மற்றும் தீக்காயங்கள் போன்ற உடல் வெளிப்பாட்டுக் காரணங்கள் வரை பல விஷயங்களை எதிர்கொள்வதாக கூறுகின்றனர். இதற்கு காரணம் காட்டின் மண்ணாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறுகிறார்கள். ஆய்வுகள், மண்ணின் சில பகுதிகள், கதிரியக்கத்தின் இயல்பான அளவை விட அதிகமாக இருப்பதைக் காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கை யுரேனியம் இருப்பதால் அங்கு கதிரியக்க காரணத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறுகின்றனர்.

Updated On 5 Nov 2024 12:08 AM IST
ராணி

ராணி

Next Story