
ஐபிஎல் வரலாற்றில் 150-வது வெற்றியை பெற்ற முதல் அணி! மும்பை இந்தியன்ஸ் சாதனை!
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை சாம்பியன் பெற்ற அணிகளாக திகழ்ந்த மும்பை இந்தியன்ஸும், சிஎஸ்கேவும் இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கிய ஆரம்பத்தில் இந்த 2 அணிகளுமே தொடர் தோல்விகளை சந்தித்துவந்ததால் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. சிஎஸ்கே அணி இன்னும் புள்ளி பட்டியிலில் கீழே இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக நடைபெற்ற ஆட்டங்களில் அடுத்தடுத்து 5 முறை வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது. வெறும் 10 நாட்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது? என்பதுதான் மற்ற அணி ரசிகர்களை தற்போது வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஐபிஎல் அணிகளில் இதுவரை பலம்வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்ட சிஎஸ்கே இந்த முறை வீரர்களை தேர்வு செய்வதில் சொதப்பியதே அதன் தொடர் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டாலும் தேர்வு செய்த வீரர்களின் ஆட்ட யுக்திகளை மாற்றி தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்துவரும் மும்பை இந்தியன்ஸ், மற்ற அணிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக உருவாகியிருக்கிறது.
தொடர் தோல்வி டூ தொடர் வெற்றி - என்ன காரணம்?
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியதுமே முதல் ஆட்டமே அதிக சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையில்தான். அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றிபெற தோல்வியை தழுவியது எம்.ஐ. ஆனால் ஐபிஎல்லை பொருத்தவரை முதல் ஆட்டத்தில் மும்பை அணி எப்போதுமே தோல்வியடைவது சகஜம்தான் என்பதால் அடுத்தடுத்த ஆட்டங்களில் கட்டாயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் 5 போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டுமே வெற்றிபெற்றது. இதனால் டாப் அணிகள் என அழைக்கப்பட்ட மும்பை மற்றும் சென்னை அணி இரண்டின் மீதுமே ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில்தான் கடைசி 10 நாட்களில் மும்பை அணி தனது ஆட்டத்தையே மாற்றியமைத்திருக்கிறது. சென்னை அணி கொஞ்சம்கூட போராடாமல் தோல்வியை தழுவிவந்த நிலையில், ஒவ்வொரு போட்டியிலும் மும்பை அணி இறுதிவரை போராடியது குறிப்பிடத்தக்கது. சரி, திடீரென இந்த அணிக்கு எப்படி இவ்வளவு வலிமை வந்தது? என்பதுதான் மற்ற அணிகளின் ஆச்சர்யமே. சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ராவை மீண்டும் அணியில் சேர்த்திருப்பது மும்பை அணிக்கு மிகப்பெரிய பக்கபலமாக மாறியிருக்கிறது. இந்திய அணியின் சிறந்த யாக்கர் பவுலரான இவர் முதல் ஒருசில போட்டிகளில் விளையாடாததால் எதிரணிகள் எளிதில் ரன்களை அள்ளி குவித்தன. பொதுவாக யாக்கர் பந்துவீச்சின்மூலம் ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. இது எதிரணிக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதாலேயே இந்த அணியின் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அப்படிப்பட்ட பந்துவீச்சாளரான பும்ரா தற்போது தனது மோசமான யாக்கர்கள் மூலம் எதிரணியை திக்குமுக்காட வைத்துவருகிறார். உலகின் சிறந்த டெட் பவுலர்களில் ஒருவர் பும்ரா, அவருடைய பவுலிங்கில் ரன்கள் எடுப்பது மிகவும் கடினம் என்று சிஎஸ்கே தோனியே அவரை பாராட்டி இருக்கிறார். பும்ராவை போன்றே மும்பை அணிக்கு மற்றொரு பக்கபலம் என்றால் அது வேகபந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்ட்.
மும்பையின் தொடர் வெற்றிக்கு பும்ராவின் யாக்கர்களும் காரணம்!
இவர் மும்பை அணிக்காக விளையாடிய 9 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆரம்பத்தில் இவரை அணியை விட்டு நீக்கியிருந்தாலும் தற்போது இவரை மீண்டும் சேர்த்துக்கொண்டு, பவர் ப்ளேவில் பும்ராவுடன் சேர்த்து களமிறக்கிவருகிறது. பவுலிங்கில் இந்த இருவரும் கில்லி என்றால் பேட்டிங்கில் மும்பை இந்தியன்ஸுக்கு எப்போதுமே முக்கிய வீரராக திகழ்ந்துவருகிறார் சூர்யகுமார் யாதவ். இவரது ஆட்டத்தை ஆரம்பகட்ட போட்டிகளுடன் ஒப்பிடுகையில் இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. களத்தில் நின்று ஆடக்கூடிய வீரர் என்ற பெருமையை மும்பை அணிக்கு சேர்ப்பவராக இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
ரோஹித் சர்மாவிற்கு விழும் புகழாரங்கள்
மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் மும்பை அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான ரோஹித் சர்மாவை பற்றி கட்டாயம் பேசவேண்டி இருக்கிறது. காரணம், முதல் நான்கைந்து போட்டிகளில் மிகவும் தடுமாறி வந்த ரோஹித் சர்மா இப்போது முற்றிலும் தன்னை மாற்றியமைத்திருக்கிறார். மும்பை அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா மற்றும் சென்னை அணியின் தோனி போன்றோர் இந்த முறை ஆட்டத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டனர். ஆனால் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக வெளியேற அந்த அணியை வழிநடத்தும் பொறுப்பை ஏற்ற தோனி, இப்போது அந்த அணியின் ஒருசில வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக செயல்பட்டார் என்பதை அனைவராலும் பார்க்கமுடிந்தது. அதேபோல், மும்பை அணியின் ரோஹித் சர்மா களத்தில் நின்று ஆடாமல் அதிரடி காட்டி சீக்கிரத்தில் அவுட்டாகி சென்றுவிடுவதாக சொல்லப்பட்டது. பெரும்பாலும் பவர் ப்ளேவில் பேட்டிங் செய்து வெறும் 2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து வந்த அவர், தற்போது முதல் 10 ஓவர்களுக்கும் மேல் நின்று விளையாட ஆரம்பித்துவிட்டார். அதிரடி காட்டாமல் நின்று ஆடுவதாலேயே குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்து அணிக்கு வலிமை சேர்ப்பவராக மாறியுள்ளார். இந்த அணியில் இப்போது சேர்க்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்கூட, கடைசி ஆட்டத்தில் ரோஹித்தின் அபார ஆட்டத்தை பார்த்து வியந்து, உலக தரத்திலான வீரர் ரோஹித் சர்மா என்று புகழ்ந்திருக்கிறார். இந்த ஆண்டு மும்பை அணி இடம்பெற்ற போட்டிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த போட்டியில் இந்த அணி வெற்றிபெற காரணமாக அமைந்த ரோஹித் சர்மாவின் பங்களிப்பை பற்றி கட்டாயம் பேசியே ஆகவேண்டும்.
நடப்பு ஐபிஎல்லின் ஆரம்பத்தில் தோனி மற்றும் ரோஹித் சர்மா மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 15.4 ஓவர்களில் எட்டிப் பிடித்தது மும்பை அணி. அதற்கு வெறும் 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த ரோஹித்தின் ஆட்டம் முக்கிய பங்காற்றியது எனலாம். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடக்கம். அரை சதம் எடுத்து இவர் அவுட்டானாலும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்திலேயே நின்றார். இப்படி ஒவ்வொரு வீரரும் தங்களது முழு பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் மும்பை அணிக்கு வழங்கி வருவதே இந்த அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கேப்டன்சியை சிறப்பாக கையாள துவங்கியிருக்கும் ஹர்திக் பாண்டியா
மும்பை அணி குறித்து பேசும்போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. 2 ஆண்டுகளாக இந்த அணியின் கேப்டன் பதவியை ஏற்றிருக்கும் ஹர்திக், தனது சிறந்த பங்களிப்பை கொடுத்துவருகிறார். கடந்த ஐபிஎல்லின்போது இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் நடப்பு ஐபிஎல்லில் தனது முழு கவனத்தையும் ஆட்டத்தில் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது மனைவி நடாஷாவை பிரிந்த ஹர்திக் உடனே பிரிட்டிஷ் நடிகை ஜஸ்மின் வாலியா என்பவரை காதலிக்கத் தொடங்கினார். இந்த ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே மும்பை அணி ஆடும் போதெல்லாம் அங்கு ஜஸ்மின் தவறாமல் கலந்துகொள்கிறார். இதனால் ஆரம்பத்தில் மும்பை அணியின் தோல்விக்கு ஹர்த்தின் கவனக்குறைவு காரணம் என்று விமர்சிக்கப்பட்டாலும் இப்போது ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆல்ரவுண்டரான இவர் பவுலிங் பேட்டிங் என இரண்டிலும் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்துவருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் கேப்டன் ஹர்த்திக்கின் பங்களிப்பு
ஐபிஎல் போட்டிகளில் 150-வது வெற்றி
மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோற்கடித்தது. இது ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி பெற்ற 150-வது வெற்றியாகும். இதன்மூலம் ஐபிஎல் தொடர்களில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை பெற்றது. மும்பை அணி இதுவரை 271 போட்டிகளில் விளையாடி 150 வெற்றி, 121 தோல்விகளை சந்தித்துள்ளது.
ப்ளே ஆஃபிற்குள் போகும் வாய்ப்பு எப்படி?
புள்ளிப் பட்டியலில் தற்போது 3-வது இடத்தில் இருக்கும் மும்பை அணி, அடுத்த 4 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்துவிடும். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டிகள் பலமிக்க அணிகளுக்கு எதிராக இருக்கப்போகிறது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக, அடுத்து குஜராத் டைடன்ஸ், அதற்கடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக போட்டிகள் உள்ளன. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி, பலமிக்க மூன்று அணிகளுக்கு எதிராக 2 கட்டாய வெற்றிகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
