இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலக கால்பந்து ஜாம்பவானான அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, தனது அணியினருடன் வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவிருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் மெஸ்ஸி, எதற்காக? எங்கு? எப்போது? வருகிறார் என்பது குறித்த தகவல்களை பார்ப்போம்.

லியோனல் மெஸ்ஸி!

"லியோனல் மெஸ்ஸி" என்பது வெறும் பெயர் அல்ல. கால்பந்தாட்ட உலகில் ரசிகர்களின் தாரக மந்திரம்! மெஸ்ஸியின் முழுப் பெயர் லியோனல் ஆண்ட்ரேஸ் மெஸ்ஸி குசிட்டினி. ஜூன் 24, 1987 அன்று அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் பிறந்தார். மெஸ்ஸிக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்த இளம் சிறுவன், தனது சுறுசுறுப்பு மற்றும் திறமையால் தன்னைக் கடந்து வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, கால்பந்து சாம்ராஜ்யத்தின் அசாதாரண உலகளாவிய சின்னமாக மாறினார்.


தனது கால்பந்தாட்ட தொடக்க காலத்தில் மெஸ்ஸி

மற்ற எல்லா ஹீரோக்களையும் போலவே, மெஸ்ஸியின் வாழ்க்கையும் சவால்கள் நிறைந்தவையாகவே இருந்தது. 11 வயதிலேயே மெஸ்ஸிக்கு வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலை அவரது கால்பந்து கனவுகளை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவரது குடும்பத்தினரின் வலுவான ஆதரவு மற்றும் பார்சிலோனா ஃபுட்போல் கிளப்பின் ஒப்பந்த சலுகையுடன், மெஸ்ஸி ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தார். கிளப் அவரது சிகிச்சைக்கு நிதியளித்ததுடன், அவரது திறமையை வெளிப்படுத்த ஒரு தளத்தையும் வழங்கியது. இதன் பலன், கால்பந்து வரலாற்றில் ஒரு ஜாம்பவானாக மெஸ்ஸியின் பயணம் எதிர்கால தலைமுறையினருக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்து வருகிறது.

மைதானத்திற்கு வெளியே, மெஸ்ஸி ஒரு அர்ப்பணிப்புள்ள குடும்ப மனிதர். தனது குழந்தைப் பருவ காதலியான அன்டோனெலா ரோக்குஸ்ஸோவை மணந்த அவர், மூன்று ஆண் குழந்தைகளின் தந்தை. எளிமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற மெஸ்ஸி, தனது குடும்பம் மற்றும் மனிதநேயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.


மனைவி மற்றும் தனது 3 மகன்களுடன் லியோனல் மெஸ்ஸி

மெஸ்ஸிக்கு இந்தியாவில் தீவிர ரசிகர்கள்!

இந்தியாவில் மெஸ்ஸிக்கு அதிகளவிலான ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டை வெறியாக கொண்டிருக்கும் கேரள மாநிலத்தில் மெஸ்ஸிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்த சூழலில்தான் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக, அம்மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் வி. அப்துர் ரஹிமான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால், எப்போது என்பதை தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்து அணியினர் நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாட, வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்தியாவில் கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் முயற்சியாக அர்ஜென்டினா அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரரான ஹெச்.எஸ்.பி.சி. இந்தியா நிறுவனம் வருகிற அக்டோபர் மாதம் இந்தப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம், உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி உள்பட அர்ஜென்டினா அணியினர் இந்தியா வரவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2011-ல் இந்தியா வந்த மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி, இதற்கு முன் கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்தார். கொல்கத்தாவில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் விளையாடினார். சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த அந்த போட்டியில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


ஆட்டம் ஒன்றில் கோல் அடித்த மகிழ்ச்சியில்...

அக்டோபரில் கேரளாவில் நடைபெறும் போட்டி!

நட்பு ரீதியிலான கால்பந்து கண்காட்சி போட்டிகள் கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ளன. சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியை நடத்தக்கூடிய உள்கட்டமைப்பு கேரளாவில் உள்ளதாகவும், சிறப்பாக போட்டியை நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அம்மாநில விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அர்ஜென்டினா அணி நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள் கேரள விளையாட்டுத்துறையுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்களோ மெஸ்ஸியின் வருகையை எதிர்பார்த்தும், அர்ஜென்டினா அணி வீரர்களின் ஆட்டத்தை பார்க்கவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Updated On 22 April 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story