இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதிய நான்காவது போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (15.11.24) டர்பனில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பேட்டர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா அபாரமாக ஆடி, இருவரும் சதத்தை பூர்த்தி செய்தனர். இதில் 9 சிக்ஸர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் திலக் வர்மா. அதுமட்டுமில்லாமல் 120 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். குறிப்பாக இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது சதம். மூன்றாவது t20 போட்டியிலும் திலக் வர்மா சதமடித்திருந்தார். இப்படி குறுகிய காலத்தில் இந்திய அணியின் ஆஸ்தான பேட்ஸ்மேனாக உருவாகியுள்ள திலக் வர்மாவை பற்றி விரிவாக பார்ப்போம்.


U-19 உலகக்கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியபோது

திலக் வர்மாவின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கை

ஹைதராபாத்தில் பிறந்த திலக், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். தனது பள்ளிப்படிப்பின் போதே கிரிக்கெட் பயிற்சியில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். பெற்றோர் அவரின் கிரிக்கெட் கனவுகளுக்கு முழு ஆதரவு அளித்தனர். தனது 12 வயதில் ஹைதராபாத் மாநில அணியில் இடம்பெற்றார். உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி U-19 உலகக்கோப்பையில் இடம்பிடித்தார். பின்னர் 2020 அண்டர்-19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தார். வெறும் 7 போட்டிகளில் 389 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.


இந்திய அணியின் அடுத்த சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படும் திலக் வர்மா

ஐபிஎல் பயணம்

2022-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். தனது முதல் சீசனிலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். முதல் சீசனில் 416 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த தொடரில் மும்பை அணியின் முன்னணி வீரர்கள் சொதப்பியபொழுது தனி ஆளாக நின்று மும்பை அணிக்காக போராடினார் திலக். அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டதால் மும்பை அணியின் சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேனாக வேகமாக ரன்கள் எடுக்கும் திறன் பெற்றவர் திலக்.


இந்திய அணி வீரர்கள் சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா

திலக் வர்மாவின் சர்வதேச ஆரம்பம்

இளம் வயதிலேயே ஐபிஎல் போன்ற உயர்மட்ட போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வந்ததால் ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரானார். தொடர்ச்சியான சிறந்த ஆட்டத்தால் சர்வதேச போட்டிக்கு முன்னேறினார். அதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமான முதல் ஆட்டத்திலேயே அரை சதமடித்து அசத்தினார். அடுத்த ஆட்டத்தில் 49* ரன்கள் அடித்து இந்திய T20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். அதன்பின் ஒருசில ஆட்டங்களில் சறுக்கலை சந்தித்தாலும் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இவர்மீது அதீத நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இவரை ஊக்கப்படுத்தினார். சமீபத்தில் மும்பை அணி இவரை 8 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.


தென் ஆப்ரிக்கா தொடரில் சதமடித்த சஞ்சு சாம்சன்

தென் ஆப்ரிக்கா தொடரில் சாதனை

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது தேர்வு சரி என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. 20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணி என்றும், தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த அணி என்றும் சாதனை புரிந்துள்ளது.


சஞ்சு மற்றும் திலக்கின் அதிரடியான பார்ட்னர்ஷிப்

சஞ்சு சாம்சன் - திலக் வர்மாவின் அதிரடி

இந்திய அணியின் ஓபனர்களான சஞ்சு சாம்சன் - திலக் வர்மா ஆகியோர் நல்ல தொடக்கத்தை தந்தனர். 5.5 ஓவரில் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 73 ரன்கள் என எட்டிய நிலையில், அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த சாம்சன் - திலக் வர்மா ஜோடி, தென் ஆப்பரிக்கா பவுலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. அவர்களின் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கியதோடு இருவரும் சதமடித்து, 210 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர்.


தொடர்நாயகன் விருது வென்ற திலக் வர்மா

இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா கலக்கல்

அதேபோல் 22 வயதாகும் இளம் இந்திய பேட்ஸ்மேனான திலக் வர்மா கடந்த போட்டியில் சதமடித்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது சதமடித்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த இன்னிங்ஸில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அத்துடன் கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர் நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார். 41 பந்தில் சதமடித்து அதிவேக சதத்தின் சாதனையிலும் இணைந்துள்ளார். ஒரு தொடரில் 2 சதமடித்த பெருமை இவரைதான் சேரும். அதுமட்டுமில்லாமல் இத்தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். இதன்மூலம் இந்திய அணியின் அடுத்த சுரேஷ் ரெய்னாவாக உருவெடுத்திருக்கிறார் திலக் வர்மா.

Updated On 25 Nov 2024 9:30 PM IST
ராணி

ராணி

Next Story