![மினி உலகக்கோப்பை கிரிக்கெட்! - கோப்பையை வெல்லுமா இந்தியா? மினி உலகக்கோப்பை கிரிக்கெட்! - கோப்பையை வெல்லுமா இந்தியா?](https://www.ranionline.com/h-upload/2025/02/10/386406-sports-dp-5.webp)
மினி உலகக்கோப்பை கிரிக்கெட்! - கோப்பையை வெல்லுமா இந்தியா?
மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை 8 வருடங்களுக்கு பின் மீண்டும் நடக்கவிருகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025, பிப்ரவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பெரிய போட்டியில் உலகின் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் இதில் அடங்கும். இறுதிப் போட்டி மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து ஆட்டங்களும் துபாயில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மிகப்பெரிய போட்டியும் பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றால், அந்தப் போட்டியும் துபாயில் நடைபெறும். முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி கலப்பு மாதிரியில் விளையாடப்படும். மினி உலகக்கோப்பையின் வரலாறு என்ன? இம்முறை போட்டி எப்படி இருக்கும் என்பன குறித்து இத்தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
முதல் நாக் அவுட் கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் டிராபியின் பழைய பெயர் என்ன?
1998-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அப்போது இந்தப் போட்டிக்கு நாக் அவுட் என்று பெயரிட்டது. 2002-ஆம் ஆண்டு அதன் பெயரை மாற்றி சாம்பியன்ஸ் டிராபி என்று வைத்தது. சாம்பியன்ஸ் டிராபியின் முதல் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது.
கென்யாவிற்கு எதிராக அப்போதைய இந்திய கேப்டன் கங்குலி சதமடித்தார்
சாம்பியன்ஸ் டிராபியின் ஆரம்ப காலம்
1998-இல் ஐசிசி-யால் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபியின் குறிக்கோள் என்னவென்றால் டெஸ்ட் விளையாடாத நாடுகளில் விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதற்காக ஒரு குறுகிய கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்பதுதான். கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற மற்றொரு பெரிய கிரிக்கெட் நிகழ்வின் ஒன்றாக இந்த சாம்பியன்ஸ் கோப்பை இருக்கின்றது. முதல் சாம்பியன்ஸ் டிராபி வங்கதேசத்தில் ஜூன் 1998-இல் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் இரண்டு சாம்பியன்ஸ் டிராபிகள் ஐசிசி அசோசியேட் உறுப்பு நாடுகளான பங்களாதேஷ் மற்றும் கென்யாவில் நடத்தப்பட்டன. அந்த நாடுகளில் விளையாட்டின் பிரபலத்தை அதிகரிக்கவும், பின்னர் சேகரிக்கப்பட்ட நிதியை அவர்களின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பயன்படுத்தவும் அங்கு நடத்தப்பட்டன.
மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி
முதல் நாக் அவுட் கோப்பை (சாம்பியன்ஸ் டிராபி)
முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1975-ஆம் ஆண்டும், அதன் பிறகு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்பட்டது. இந்தப் போட்டி பொதுவாக முழு ஐசிசி உறுப்பு நாடுகளால் விளையாடப்பட்டது. ஐசிசி மினி உலகக்கோப்பை என்று சாம்பியன்ஸ் டிராபியை அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் விளையாடாத நாடுகளில் விளையாட்டின் வளர்ச்சிக்காக நிதி திரட்டும் ஒரு குறுகிய கிரிக்கெட் தொடராகும். முதல் இரண்டு போட்டிகள் பங்களாதேஷ் மற்றும் கென்யாவில் நடத்தப்பட்டன.
2006-ஆம் ஆண்டு இங்கிலாந்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா
நாக் அவுட் கோப்பை டூ சாம்பியன்ஸ் கோப்பை
2002-ஆம் ஆண்டு முதல் போட்டிகள், ஐசிசி உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு, அணிகளின் எண்ணிக்கை எட்டாக குறைக்கப்பட்டது. பின்னர் 2 வருடங்களுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டு "மினி உலகக் கோப்பை" என்று அழைக்கப்பட்டது. இந்த தொடர் ஐசிசியின் முழு உறுப்பினர்களையும் உள்ளடக்கி ஒரு நாக்-அவுட் போட்டியாக திட்டமிடப்பட்டது. இந்த தொடர் அறிமுகமானதால் உலகக் கோப்பையின் மதிப்பும் முக்கியத்துவமும் குறையலாம் என்று ஒரு சில கிரிக்கெட் நிபுணர்கள் விமர்சித்தனர். முதலில் அனைத்து ஐசிசியின் முழு உறுப்பினர்களும் இந்த தொடரில் பங்கு பெற்றனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல், போட்டி தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஐசிசி ODI தரவரிசையில் எட்டு உயர் தரவரிசை அணிகளை மட்டுமே கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை விளையாடப்படும் என்கிற அறிவிப்பை ஐசிசி வெளியிட்டது. தொடக்கத்தில் இருந்து 7 நாடுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்து மூன்று முறை இந்த தொடரை நடத்தியுள்ளது.
அதிக சதமடித்த கிறிஸ் கெயில் மற்றும் சவுரவ் கங்குலி
சாம்பியன்ஸ் டிராபியில் சாதனை
இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்தவர் மேற்கிந்திய தீவை சேர்ந்த கிறிஸ் கெயில். சுமார் 791 ரன்களை இதுவரை குவித்துள்ளார். தனி நபர் அதிகபட்சமாக ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பிலவர் இந்தியாவிற்கு எதிராக 145 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருக்கிறது. இந்த தொடரில் அதிக சதங்களை இந்தியாவை சேர்ந்த ஷிகர் தவான் மற்றும் சவுரவ் கங்குலி அடித்திருக்கின்றனர். இருவரும் தலா 3 சத்தங்கள் அடித்திருக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் நியூசிலாந்தை சேர்ந்த கெயில் மில்ஸ் 28 விக்கெட்களை வீழ்த்தியுளார். ஓர் அணியாக நியூசிலாந்து அணி யுனைடெட் ஸ்டேட்டஸ் அணிக்கு எதிராக 347 ரன்கள் குவித்ததே இன்றுவரை அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.
2013-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
இந்த ஆண்டு போட்டி எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய 4 அணிகளுக்கு இடையே கடுமையாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்த 4 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கும் இந்தியா, கடைசியாக 2013-ஆம் ஆண்டு எம்எஸ் தோனியின் தலைமையில் போட்டியை வென்றது குறிப்பிடத்தக்கது.
![ராணி ராணி](/images/authorplaceholder.jpg?type=1&v=2)