இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஐபிஎல் என்றாலே ரசிகர்களுக்கு மனதில் தோன்றுவது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான சார்பட்டா பரம்பரை மோதல்தான். இந்த இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய சக்திகளாக திகழ்கின்றன. மேலும் இவை ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போது, அது ஒரு கிரிக்கெட் பண்டிகையாகவே மாறிவிடுகிறது. இரு அணிகளும் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. ஆனால் அவற்றின் நேருக்கு நேர் சந்திப்புகள் எல்கிளாசிகோ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையே யார் அதிக வெற்றி பெற்றுள்ளார்கள், அதிகபட்ச ஸ்கோர் என்ன என்ற புள்ளி விவரங்களை பற்றியும், இரண்டு அணிகளும் மோதிய சிறந்த ஆட்டத்தை பற்றியும் விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


2010 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்

நேருக்கு நேர் மோதல் புள்ளிவிவரம்

2025 சீசன் வரை, சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் ஐபிஎல் தொடரில் 36 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் 20 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதே சமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை மும்பையின் மேலாதிக்கத்தை காட்டினாலும், சிஎஸ்கே அணியும் முக்கியமான தருணங்களில் தங்கள் பலத்தை நிரூபித்துள்ளது. குறிப்பாக, இறுதிப்போட்டிகளில் இவ்விரு அணிகள் மோதியபோது, சிஎஸ்கே 2010 ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது, ஆனால் 2019 இல் மும்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.


2025 ஆம் ஆண்டு சென்னை அணியால் ரீட்டைன் செய்யப்பட்டவர்கள்

சென்னை அணியின் ப்ளேயிங் 11

கடந்த முறை கேப்டன் ருதுராஜ் தொடக்க வீரர், மூன்றாவது வீரர் என மாறிமாறி களமிறங்கினார். இம்முறை ருதுராஜ் ஆரம்ப வீரராக களம் இறங்குகிறார். இதேபோன்று கடந்த சீசனில் விளையாடாத கான்வே, இம்முறை அணிக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கே-வின் பலத்தை அதிகரித்து இருக்கிறது. அதேபோன்று நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவும் தொடக்க வீரராக இருக்கிறார். ரச்சின் ரவீந்திரா தற்போது பேட்டிங், பந்துவீச்சு என நல்ல ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு அடுத்து சிவம் துபேவும், ஜடேஜாவும், தோனியும் உள்ளனர். அதற்கடுத்து தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஷாம் கரன், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிராணா, இளம் வேகபந்துவீச்சாளரான அஞ்சுல் காம்போஜ், நூர் அகமது ஆகியோரும் அணியை வலுப்படுத்துகின்றனர். இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்காக தற்போது முதல் முறையாக விளையாடும் ராகுல் திருப்பாதி, இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படுகிறார்.


2025 ஆம் ஆண்டு மும்பை அணியால் ரீட்டைன் செய்யப்பட்டவர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் 11

5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனிலும் பலம் வாய்ந்த அணியை கொண்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் திறமையான வீரர்கள் உள்ளனர். முதல் போட்டியில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்கினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்கை பார்த்தால், ரோகித் சர்மா, ரியான் ரிகல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர். மிடில் ஆர்டரில் வில் ஜாக்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் ஆட்டத்தை முடிக்கும் பெரிய பொறுப்பை கொண்டிருப்பார்கள். இந்த முறை மிட்செல் சாண்ட்னர் அணியில் உள்ளார். அவரும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடியவர். டிரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சாஹர், புதிய பந்துவீச்சு கூட்டணியில் இருப்பார்கள். ஏற்கனவே அணியில், ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார். ஆனால் காயம் காரணமாக அவர் முதல் பாதியில் சில போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக ரீஸ் டாப்லி, அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளனர். இது தவிர, சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர், முஜீப் உர் ரஹ்மான், கரண் சர்மா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.


இரு அணிகளின் முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் ரோகித் சர்மா

மும்பை சென்னை மோதிய போட்டிகள்

இந்த இரண்டு அணிகளும் இதுவரை நான்கு இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த நான்கில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2010, 2013, 2015 மற்றும் 2019 ஆகிய நான்கு ஐபிஎல் தொடர்களிலும் இந்த அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. அதில் 2010 ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்ற மூன்று இறுதிப் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணியே வெற்றி பெற்றது. இதில் மற்றொரு ஆச்சரியமும் உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா நான்கு முறை மோதின. அதாவது லீக் சுற்றில் இரண்டு முறையும், பிளே ஆஃப் சுற்றில் ஒரு முறையும், இறுதிப் போட்டியில் ஒரு முறையும் மோதின. பிளே ஆஃப் சுற்றிலும், இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் மோதுவது மிகவும் அரிதான ஒரு விஷயமாகும். ஆனால் அதை மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்று முறை செய்துள்ளன.

முதல் போட்டியில் வென்ற சென்னை

நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கத்தில் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். சென்னை அணியின் லெவனிலேயே சர்ப்ரைஸ் இருந்தது. கான்வேயையும் பதிரனாவையும் பென்ச்சில் வைத்திருந்தார்கள். ரச்சின், நூர், சாம் கரண், நேதன் எல்லீஸ் என நான்கு வெளிநாட்டு வீரர்களை ருதுராஜ் லெவனில் எடுத்திருந்தார். பவர்ப்ளேயிலேயே சென்னை அணி ஆட்டத்துக்குள் வந்துவிட்டது. கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே லெக் சைடில் வட்டத்துக்குள்ளேயே அடித்து ரோஹித் டக் அவுட் ஆனார். கலீல் வீசிய அடுத்த ஓவரில் ரிக்கல்டன், இன்சைட் எட்ஜ் ஆகி போல்ட் ஆனார். மும்பை அணியின் ஓப்பனர்கள் இருவருமே பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அஷ்வினை பவர்ப்ளேக்குள்ளாகவே அழைத்து வந்திருந்தனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணிக்கு திரும்பியிருக்கும் அஷ்வின் முதல் ஓவரிலேயே வில் ஜாக்ஸின் விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார். இறுதியில் தீபக் சஹார் ஒரு நல்ல கேமியோவை ஆடியதால் மும்பை அணி 150 ரன்களை கடந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. அதன்பின் களமிறங்கிய சென்னை அணி ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது.

Updated On 25 March 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story