
சாம்பியன்ஸ் டிராபி - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்! ஆட்டத்தின் முழு விவரம்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதையடுத்து அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேநேரம் இந்தியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் தனது அணியின் நம்பிக்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக அதிரடியாக விளையாடிய சவுத் சகீல் & இந்தியாவின் குல்தீப் யாதவ்
தொடக்கம் முதலே தடுமாறிய பாகிஸ்தான்
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் 23 ரன்களிலும், இமாமுல் ஹக் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகில் ஆகியோர் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரிஸ்வான் 46 ரன்களில் ஆட்டமிழக்க, சவுத் ஷகில் 62 ரன்களில் அவுட் ஆனார். நடு வரிசையில் வந்த குஸ்தில் ஷா மட்டும் 38 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சதமடித்த விராட் கோலி
ஆரம்பமே இந்தியா அதிரடி!
கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் துணை கேப்டன் கில் நிதானமாக விளையாடி 52 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இந்திய அணி 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோது மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். ஸ்ரேயாஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொருபுறம் விராட் கோலி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். 67 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். இந்த ஜோடி 114 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தது. மறுபுறம் அபாரமாக விளையாடிய கோலி கடைசி வரை நின்று 111 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்தியா 42.3 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் ஷாகின் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாபர் ஆசமை வீழ்த்தி திருப்புமுனை தந்த ஹர்திக் பாண்டியா
ஹர்திக் அற்புத பந்துவீச்சு!
இந்த ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியது. இது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பாபர் ஆசமை அவுட்டாக்கி, விக்கெட் வீழ்ச்சியை ஹர்திக் பாண்டியா தொடங்கி வைத்தார். ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு, ஸ்லோபால், ஸ்விங் என பல்வேறு வேரியேஷன்களுடன் அற்புதமாக இருந்தது. 3.4 ரன்ரேட்டில் 8 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பாண்டியா. ஜடேஜா, அக்ஸர், குல்தீப் ஆகியோர் சேர்ந்து 26 ஓவர்களை வீசி, 129 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த 3 பேருமே, 4 ரன்ரேட்டுக்கு மேலாக ரன்களை வழங்கவில்லை. மேலும் ஆட்டத்தின் நடுப்பகுதியில் விக்கெட் வீழ்த்தாமல் இந்திய அணி திணறுகிறது என்ற தொடர் விமர்சனத்துக்கு இம்முறை பதில் அளித்து நடுப்பகுதியில் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தைத் திருப்பினர்.
சதமடித்து அசத்திய விராட் கோலி
விராட் கோலி ஆகச்சிறந்த சதம்
பாகிஸ்தானுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடிய விராட் கோலி இந்த ஆட்டத்திலும் தனது கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலியின் 51-ஆவது சதம் மட்டுமன்றி, சர்வதேச கிரிக்கெட்டில் 82-ஆவது சதம் ஆகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்புவரை விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் பற்றி பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால், அனைத்துக்கும் தனது சதத்தின் மூலம் கோலி பதில் அளித்துள்ளார். விராட் கோலி போன்ற பேட்டர்கள், இதுபோன்று ஏதாவது ஒரு இன்னிங்ஸ் கிடைத்துவிட்டால் இழந்த ஒட்டுமொத்த ஃபார்மையும் மீண்டும் கொண்டு வந்துவிடுவார்கள். இதையடுத்து, ரசிகர்கள், கிங் கோலி என்று சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய அணி
அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான இந்த அபார வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் சாம்பியன்ஸ் டிராபி கனவு இந்தியாவால் முடிவுக்கு வந்துவிட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
