இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திராவின் அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ஏறக்குறைய தனது இடத்தை பிடித்துவிட்டார் வாஷிங்டன் சுந்தர். அஸ்வினும் ஒரு சில வருடங்களில் ஓய்வு பெற்றுவிடுவார். அவரது இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில் வாஷிங்டன் சுந்தரின் கிரிக்கெட் பயணம் குறித்தும், நியூசிலாந்து தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டது குறித்தும் விரிவாக பார்ப்போம்.


தந்தையுடன் வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தரின் ஆரம்ப கால வாழ்க்கை

அக்டோபர் 5, 1999-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார் சுந்தர். இவர் ஒரு கிரிக்கெட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை எம். சுந்தர் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் அணியில் விளையாடியவர். இவருக்கு வாஷிங்டன் என்று பெயர் எப்படி வந்தது என்றால், தந்தை சுந்தருக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனை மிகவும் பிடிக்குமாம். ஆதலால் தந்தையின் ஆசைப்படி அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொண்டார். சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார் சுந்தர். 13 வயதில் தமிழ்நாடு U-16 அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று U-19 உலகக்கோப்பை இந்திய அணிக்கும் தேர்வானார்.


அறிமுக போட்டியில் அசத்திய சுந்தர்

சுந்தரின் கிரிக்கெட் பயணம்

2016-ம் ஆண்டு இந்திய U-19 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார். இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் 2017 ஐபிஎல்-லில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் அறிமுகமானார். அறிமுகமான முதல் தொடரிலேயே புனே அணியை இறுதி போட்டிவரை அழைத்து சென்றார் . தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக ஆரம்பித்தார். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அணியில் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமானார். அதன்பின் 2020 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் (2021) போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் அடித்தார். அதுமட்டுமில்லாமல் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். இரண்டாம் இன்னிங்ஸில் 22 ரன்கள் எடுத்தார். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகள் எடுத்து அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார்.


வாஷிங்டன் சுந்தர் - அஷ்வின்

நியூசிலாந்து தொடரில் அசத்தல்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டடுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வென்றிருக்கிறது. இந்தியாவில் வைத்து 36 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி ஒரு டெஸ்ட்டை வெற்றி பெற்று சாதனைப் படைத்திருக்கிறது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார். அதேபோல இரண்டாவது இன்னிங்ஸிலும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை காண்பித்துள்ளார்.


நியூசிலாந்துக்கு எதிராக 7 விக்கெட் கைப்பற்றி அசத்திய வாஷிங்டன் சுந்தர்

இது கடவுளின் திட்டம் - வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் திடீரென கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கலக்கிவிட்டார். இந்த அற்புதமான செயல்பாடை பற்றி வாஷிங்டன் சுந்தர் பேசுகையில், 'நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இதெல்லாமே கடவுளின் திட்டம் என்றுதான் நினைக்கிறேன். நான் வீசும் ஒவ்வொரு பந்திலும் என்னுடைய முழுத்திறனையும் வெளிக்காட்ட விரும்புகிறேன். ஒரு நாளின் தொடக்கத்திலிருந்தே நான் வீசும் முதல் பந்திலிருந்தே என்னுடைய 100 சதவிகிதத்தையும் கொடுக்க வேண்டும். நேற்றும் அப்படித்தான் என்னுடைய முதல் பந்திலிருந்தே நன்றாக வீசியதாகத்தான் எண்ணுகிறேன். லைன் & லெந்தை பேட்டருக்கு இடம் கொடுக்காமல் டைட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். முதல் செஷனில் பிட்ச்சில் ஸ்பின்னர்களுக்கு நிறையவே உதவி கிடைத்தது. நான் பெரிதாக எதையும் வித்தியாசமாக முயற்சி செய்ய நினைக்கவில்லை. வேகத்தை மட்டுமே கொஞ்சம் மாற்றி வீசினேன். மற்றபடி ஒரு சீரான லைன் & லெந்த்தை மெயின்டெயின் செய்யவே நினைத்தேன். ஆட்டத்தில் எனக்கு சிறப்பான தருணங்களே நிரம்பியிருந்தன. ஒரு பௌலராக எப்போதுமே அப்டேட்டடாக இருக்கவே விரும்புகிறேன். அது ரொம்பவே முக்கியமான விஷயம் என்று கூட நினைக்கிறேன். அதன் வழியாக இப்படியான சம்பவங்கள் நிகழும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.' என்றார்.

Updated On 5 Nov 2024 12:11 AM IST
ராணி

ராணி

Next Story