இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம் நாட்டில் ஒரு சில விளையாட்டிற்கே முக்கியத்துவம் கொடுத்து ஊக்கமளித்து வருகின்றனர். ஆனால் பல விளையாட்டுகள் இன்னும் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றன. அப்படி உலகளவில் பிரபலமடைந்த ஸ்கேட்டிங் விளையாட்டு, இந்தியாவில் பிரபலமடையாமலும் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கிறது. இவ்விளையாட்டை ரசிப்பவர்கள் ஏராளம். ஆனால் இந்த விளையாட்டை வாழ்க்கையாக எடுத்து விளையாடுபவர்கள் மிகவும் குறைவே. இப்படி இந்த விளையாட்டின் எதிர்காலம் குறித்து இவ்வளவு கேள்விகள் இருப்பினும், தமிழகத்தை சேர்ந்த 16 வயது கோபிகா, ஸ்கேட்டிங் விளையாட்டில் தேசிய அளவில் சாதனை படைத்து இருக்கிறார். ஸ்கேட்டிங் மட்டுமில்லாமல் பளுதூக்குதல் மற்றும் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார். அவரது பயணத்தை பற்றியும், அவரது அனுபவத்தை பற்றியும் விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.


சிறுமி கோபிகா ஸ்கேட்டிங் விளையாடும்போது

கோபிகாவின் விளையாட்டு ஆர்வம்

16 வயதான கோபிகா, தனது 7 வயதில் ஸ்கேட்டிங் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். இவர் ஸ்கேட்டிங் மட்டுமில்லாமல் பளுதூக்குதல் விளையாட்டிற்கான பயிற்சியையும் அப்பொழுதே தொடங்கியுள்ளார். அதன்பிறகு பளுதூக்குதல் போட்டிக்காக இந்தோனிசியா வரை சென்றிருக்கிறார் கோபிகா. அங்கு இவரின் திறமையை பார்த்த இந்தோனிஷிய வீரர், இவருக்கு அந்நாட்டு மதிப்பில் ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். தற்போது பளுதூக்குதலுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருகிறார் கோபிகா.


தமிழக அரசு நடத்திய விழாவில் பரிசு தொகையை பெற்றபோது...

ஸ்கேட்டிங் விளையாட்டை ஊக்குவிக்கும் தமிழக அரசு

சிறுவயதில் தந்தையுடன் பூங்காவிற்கு செல்லும்போது அங்கு பயிற்சி பெற்று கொண்டிருந்த மாணவர்களை பார்த்து கோபிகாவுக்கு ஸ்கேட்டிங் மீது ஆர்வம் வந்ததாம். தேசிய அளவு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதற்காக தமிழக அரசு இவருக்கு 2.5 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக கொடுத்துள்ளது. சமீபத்தில் நடந்த எஸ்.ஜெ.எஃப். ஸ்கேட்டிங் இறுதி போட்டியில் வென்றதற்காக 6 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் கொடுத்துள்ளது தமிழக அரசு.


சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள கோபிகா

கோபிகாவின் ஸ்கேட்டிங் பயிற்சி

2018-ஆம் ஆண்டு நடந்த தேசிய அளவு ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கோபிகா, 4 வருட இடைவெளிக்கு பின்னர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த 4 வருடமும் கோபிகாவிற்கு மிகவும் சவால் நிறைந்ததாக இருந்துள்ளது. இதனிடையே 2019-ஆம் ஆண்டு தேசிய அளவு போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது இடது கையில் பலத்த அடி பட்டதோடு, தொடர்ச்சியாக காயம் ஏற்பட்டதால் தங்கப்பதக்கம் வெல்லுவதற்கு கால தாமதம் ஆனதாக கோபிகா கூறினார். அதன்பிறகு RSFI ஸ்கேட்டிங் போட்டியின்போது இடுப்பில் அடிப்பட்டு தங்கப்பதக்கம் வாய்ப்பை இழந்தார். ஸ்கேட்டிங் பயிற்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வந்தாலும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்று பள்ளியிலேயே முதலிடம் வந்திருகிறார் கோபிகா.


ஸ்கேட்டிங் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்தபோது...

ஸ்கேட்டிங் விளையாட்டின் பயன்கள்

ஸ்கேட்டிங் விளையாடும் போது உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் வேலைசெய்யும். இதனால் நம் உடம்பு இன்னும் வேகமாக செயல்படும். அத்துடன் SGFI ஸ்கேட்டிங் போட்டியில் வென்றால் அதன் மதிப்பின் அடிப்படையில் கல்லூரியில் இடம் மற்றும் அரசு வேலை கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் ஸ்கேட்டிங் விளையாட்டிற்கென்று தற்போது பெரிய பரிசு தொகையும் கொடுக்கப்படுகிறது.


பளுதூக்குதல் போட்டியில் கோபிகா

கோபிகாவின் பளுதூக்குதல் ஆர்வம்

ஸ்கேட்டிங் கிட்ஸ் என்கிற பயிற்சி மையத்தில், விஜயராஜ் என்கிற ஸ்கேட்டிங் பயிற்சியாளரின் கீழ் தனது ஸ்கேட்டிங் வாழ்க்கையை தொடங்கியுள்ளார் கோபிகா. கோபிகா ஸ்கேட்டிங் மட்டுமில்லாமல் பளுதூக்குதலிலும் சிறந்து விளங்கி வருகிறார். கோபிகாவின் தந்தை பளுதூக்குதலில் தேசிய அளவிலான வீரர் என்பதால், அவரே தனது மகளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். இதனால் பளுதூக்குதலிலும் எக்கச்சக்க பரிசுகளை வாங்கி குவித்துள்ளார் கோபிகா. தற்போது உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மாரத்தான் போட்டியிலும் அசத்தல்

ஒரு நபரால் ஒரு விளையாட்டில் கவனம் செலுத்துவதே கடினம். ஆனால் இவர் ஸ்ேகட்டிங், பளுதூக்குதல் மட்டுமில்லலாமல் மாரத்தான் போட்டியிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார். தமிழ் மாரத்தான் என்று சென்னையில் நடந்த மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தியிருகிறார். இவருக்கு பெரும் துணையாய் நிற்பது இவரது பள்ளிதான். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு வற்புறுத்தாமல் அனைத்து விளையாட்டிற்கும் இவரை அனுப்பி வைத்து ஊக்கமளித்து வருகிறது.


விருதுகள் மற்றும் பத்தகங்களுடன் கோபிகா

செலவு மிகுந்த ஸ்கேட்டிங் விளையாட்டு

ஸ்கேட்டிங் விளையாட்டின் உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகள் என்று கிட்டத்தட்ட வருடத்திற்கு 4 லட்சம் ரூபாய் செலவாவதாக தெரிவிக்கும் கோபிகா, நாம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் நமக்கான ஸ்பான்ஸர் தேடி வருவார்கள் என்று கூறுகிறார். நாம் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் விளையாட்டிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. இருந்தபோதிலும் உண்மையாக நாம் முயற்சி செய்தால், அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெறலாம் என சக வீரர், வீராங்களைகளுக்கு நம்பிக்கை அளிக்கிறார் கோபிகா. ஸ்கேட்டிங் விளையாட்டிற்கு தனது அம்மா பெரும் துணையாக இருப்பதாகவும், தந்தை பளுதூக்குதலுக்கு உறுதுணையையாக இருப்பதாகவும் கோபிகா தெரிவித்துள்ளார்.

Updated On 4 Feb 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story