
ஒவ்வொரு மதத்திலும் ஆன்மாவை தூய்மைப்படுத்தவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் விரதம், நோன்பு மற்றும் தவக்காலம் என குறிப்பிட்ட நாட்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அப்படி கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படுவதுதான் தவக்காலம். ஏசு உலத்திற்கு மனிதனாக அவதரித்து வந்து இறைப்பணி செய்து, சிலுவையில் அறைந்து கொலைசெய்யப்பட்டார். சிலுவையில் அறைவதற்கு 40 நாட்கள் முன்பு அவர் அதற்காக தன்னை தயார்படுத்தினார். அந்த 40 நாட்களை நினைவுகூறும் விதமாக கிறிஸ்தவர்கள் இன்றுவரை தவக்காலத்தை கடைப்பிடிக்கின்றனர். சாம்பல் புதன் அல்லது திருநீற்று புதன் என்பதில் தொடங்கி ஏசுவை சிலுவையில் அறைந்த நாள்வரை இந்த நாட்கள் அனுசரிக்கப்படும். கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளுடன் தவம் கலைக்கப்பட்டு விருந்துண்டு விழா எடுக்கப்படும். இந்த தவக்காலத்தில் விரதம் ஏற்று, நற்குணங்களை வளர்த்துக்கொண்டு இறைவனுடனான தொடர்பை வலுப்படுத்தி, தான தர்மம் செய்யவேண்டிய காலகட்டமாக இது பார்க்கப்படுகிறது. உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவக்காலம் ஏசுவை சிலுவையில் அறைந்தவுடனே உருவாக்கப்பட்டதா என்றால் இல்லை. ஒருசில நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் கிறிஸ்தவர்கள், தவக்காலம், புனித வெள்ளி மற்றும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் போன்றவற்றை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். தவக்காலம் என்றால் என்ன? எதனால் இந்த நாட்கள் பின்பற்றப்படுகின்றன? பார்க்கலாம்.
தவக்காலம் எதனால் பின்பற்றப்படுகிறது?
கிறிஸ்தவர்களை பொருத்தவரை 40 என்ற எண் நிறைய இடங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களுடைய புனித நூலான பைபிளில் இஸ்ரவேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்துவந்தது, கிறிஸ்தவர்களின் முற்பிதாக்களில் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிற மோசேவுக்கு இறைவன் வனாந்தர வாழ்வை அனுமதித்தது போன்றவை 40 வருடங்கள்தான். மோசே கட்டளைகளை பெற கடவுளோடு இருந்ததும் 40 நாட்கள்தான். அதுபோல் ஏசு மனிதனாக அவதரித்து இறைப்பணியை மேற்கொள்ளும் முன்பு தன்னை தயார்ப்படுத்த 40 நாட்கள் விரதம் இருந்து பிசாசினால் சோதிக்கப்பட்டு, அதில் ஜெயித்தபிறகே தனது இறைப்பணிக்குள் காலடி எடுத்து வைத்தார். இப்படி ஒவ்வொரு முக்கிய நிகழ்விலும் 40 என்ற எண் கிறிஸ்தவ மதத்தில் முக்கியத்துவம் பெறுவது போன்றே 40 நாட்கள் தவக்காலமும் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சாம்பல் புதன் அல்லது திருநீற்று புதன் என்ற நாளிலிருந்து தவக்காலம் தொடங்குகிறது. மண்ணிலிருந்து மனிதன் உருவாக்கப்பட்டான் என்பதை நினைவூட்டும்விதமாக அந்த நாளில் கத்தோலிக்க தேவாலயங்களில் திருச்சபை கூட்டப்பட்டு, அனைவர் நெற்றியிலும் சாம்பலால் சிலுவை அடையாளம் போடப்படும். அதேபோல் மற்ற பிரிவுகளிலும் தேவாலயங்களில் திருக்கூட்டம் நடத்தப்படும்.

தவக்காலத்தின் தொடக்கமாக நெற்றிகளில் சிலுவை அடையாளம் போடப்படும் சாம்பல் புதன் நாள்
அந்த நாளிலிருந்து துவங்கும் தவக்காலமானது ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்புக்கு முந்தைய நாளான புனித சனி வரை நீடிக்கிறது. இந்த 40 நாட்களிலும் கிறிஸ்தவர்கள் எந்தவொரு சுப காரியத்தையும் செய்யமாட்டார்கள். பெரும்பாலான வீடுகளில் மாமிசம் சமைக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள். தங்களுடைய ஆன்மா மற்றும் சரீரத்தை இறைவனுக்கு நேராக திருப்ப ஜெபம், தியானம் என பக்தியை வளர்ப்பதில் நேரம் செலவிடுவர். குறிப்பாக, மனித வாழ்வு நிலையற்றது என்பதை புரிந்துகொள்ளவும், நம்முள் பகை, கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவை இருக்கக்கூடாது எனவும், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தவும் இந்த 40 நாட்களும் பெரும்பாலான தேவாலயங்களில் சிலுவை தியான கூட்டங்கள் நடத்தப்படும். உலகெங்கும் வாழ்கிற கத்தோலிக்கர்கள் இந்த 40 நாட்களை இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்ததை நினைவூட்டும் நாட்களாக அனுசரிக்கின்றனர்.
தவக்காலம் உருவான வரலாறு!
ஏசு உலகத்தில் மனிதனாக அவதரித்ததை வைத்துதான் கி.மு - கி.பி என பிரிக்கப்படுகிறது என்பது நம் அனைவரும் அறிந்ததே. கி.பி முதலாம் நூற்றாண்டில் ஏசு இவ்வுலகைவிட்டு சென்றபிறகு, அவருடைய சீடர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவின் பிறப்பு, அவர் மக்களுக்காக ஆற்றிய சேவை, செய்த அற்புதங்கள் மற்றும் சிலுவையில் அறையப்பட்டது, அதன் பின்னணி, எப்படி இவ்வுலகைவிட்டு எழுந்தருளி பரலோகம் சென்றார் என்பது குறித்த போதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர். இப்படி ஏசு குறித்த செய்தி உலகெங்கும் பரவியபோதுதான், கிறிஸ்தவம் என்ற மதமே உருவானது. வாரத்தின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை ஏசு உயிர்த்தெழுந்ததாலேயே வாரந்தோறும் அந்த நாளில் தேவாலயங்களில் கூடுகைகளும் தொழுகைகளும் இடம்பெறுகின்றன. குறிப்பாக, யூதர்களின் ஓய்வுநாளான சனிக்கிழமையைவிடவும் ஞாயிற்றுக்கிழமையே உலகம் முழுக்க முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஏசு மீண்டும் உலகிற்கு வருவார் என்று சொல்லப்பட்டிருப்பதால் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கூடுகைகளை ஏற்படுத்தினர். அதில் இறைவனின் புகழை பாடுதல், அப்பம் பிடுதல் மற்றும் பகிர்ந்து கொடுத்தல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் செலுத்தினர்.

ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி நாள்
இப்படி படிப்படியாக கிறிஸ்தவ மதம் மேலோங்கியபோது, அதுசார்ந்த கருத்துகளும் அதற்கான வடிவங்களும் ஏற்படுத்தப்பட்டன. அப்படி முதல் நூற்றாண்டின் இறுதியில்தான் கிறிஸ்தவ மதம் உலகெங்கும் படிப்படியாக பரவியது. இப்படி இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏசுவின் பிறப்பு மட்டுமன்றி அவருடைய இறப்பு மற்றும் உயிர்ப்பையும் ஆண்டுக்கு ஒருமுறை நினைவுகூர்ந்தனர். ஏசுவின் பிறப்பு மற்றும் இறப்பை நினைவுகூரும் முறைமையானது 2ஆம் நூற்றாண்டில் தோன்றியிருந்தாலும் 3ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தவக்காலம் கடைபிடிக்க ஆரம்பித்தனர். முதலில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளுக்கு முன்பிருக்கும் 3 வாரங்கள் ஞாயிறு தவிர்த்து மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடும் விரதத்தை ரோமர்கள் மற்றும் மேற்கத்தியர்கள் கடைபிடித்தனர். அதன்பிறகே பைபிளில் முக்கிய எண்ணாக பார்க்கப்படுகிற 40 என்பதை கணக்கில் எடுத்து 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்தனர். ஏசு யூத மார்க்கத்தவர் என்பதாலும், யூதர்களின் சூழ்ச்சியால் அவர் கொலைசெய்யப்பட்டதாலுமே அவர்களுடைய முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பஸ்கா பண்டிகையை ஒட்டி கிறிஸ்துவின் இறப்பின் துக்கநாட்களும் அனுசரிக்கப்படும். அதாவது மோசே இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்துவந்தபோது, அவர்கள் பஸ்கா என்ற அப்பம் பிடும் நாளை அனுசரித்தனர். அதுமுதல் யூதர்கள் அந்த நாளை பண்டிகையாகவே கொண்டாடினர். ஏசுவும் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தனது சீடர்களின் பாதங்களை கழுவி, அப்பம் மற்றும் திராட்சை ரசம் பரிமாறி ‘என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு இவ்வுலகை விட்டுச்சென்றார். அந்த நாளைத் தொடர்ந்துதான் ஏசு சிலுவையில் அறையப்பட்டார். அதேபோல், சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு எருசலேம் நகரத்துக்காக ஏசு புறப்பட்டபோது அவரை கழுதையில் ஏற்றி, நகர்வலமாக கொண்டுசென்றனர். அப்போது சிறுவர்கள் அவருக்கு குருத்தோலைகளை பாதைகளில் போட்டு ‘ஓசன்னா’ என்று பாடினர். இந்த நாளும் தவக்காலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லப்போனால் சாம்பல் புதனில் தொடங்கி குருத்தோலை ஞாயிறுடன் 40 நாட்கள் நிறைவடையும். அதன்பிறகு துக்கங்கொண்டாடலாக பெரிய வியாழன், சிலுவையில் அறையப்பட்ட நாளாகிய புனித வெள்ளி, ஏசுவின் உடல் கல்லறையில் இருந்த நாளாகி புனித சனி ஆகியவை கடைபிடிக்கப்படுகின்றன. இதில் ஏசு உயிர்த்தெழுந்ததற்கு முன்பு கடைசி 40 மணிநேரம் துக்க மணிநேரங்களாக அனுசரிக்கப்படுகிறது.

கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளே ஈஸ்டர் பண்டிகை
உறவை மேம்படுத்தும் காலம்!
தவக்காலம் என்பது துக்கம் அனுசரிக்கும் காலம் மட்டும் என்றில்லாமல் ஒருவருடனான உறவை மேம்படுத்தவும், இறைவனிடம் சேரவும் உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. ஏசு மனிதனாக அவதரித்து 30 வயதுக்கு பிறகுதான் தன்னை இறைப்பணியில் ஈடுபடுத்தினார். சுமார் மூன்றரை வருடங்கள் ஓய்வின்றி, காலநேரம் பார்க்காமல் இறைப்பணியில் ஈடுபட்டு, தன்னை சுற்றிவாழ்ந்த மக்களுக்கு பல்வேறு அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து இறைவனின் மகிமையை பறைசாற்றினார். இறைவன் எப்படி தன்னை தாழ்த்தி மனிதனாக உருவெடுத்து அனைத்து ஜீவராசிகளிடமும் எந்தவித பாகுபாடுமின்றி அன்பு செலுத்தினாரோ அதுபோல் உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும், பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும், தன்னிடமிருக்கும் குறைகளை களைந்து மனமாற்றத்தை ஏற்படுத்தவும் தவக்காலத்தை பயன்படுத்தவேண்டுமெனவும் அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, ஏசு கூறிய நற்போதனைகளை மனதில் ஏற்றி அதை வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த நாட்களில் தேவாலயங்களில் எடுத்துக்கூறப்படும். இந்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய தவக்காலம் ஏப்ரல் 17ஆம் தேதி புனித வெள்ளியன்று நிறைவுபெறுகிறது. இந்த தவக்காலத்தை அனுசரிக்கும் அனைவரும் ஏசு சிலுவையில் ஏற்ற துன்பங்கள், பாடுகள், போராட்டங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து தங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
