இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அட்சய திருதியை என்பது சமணர்களின் புனித நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்குவது சிறப்பு தரும், இதனால் பொருள்வளம் சேரும் என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் நம்பிக்கை. ஆனால் வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை ஏறிக்கொண்டே போகிறது. எனவே பணம் படைத்தவர்களுக்குக்கூட இந்த ஆண்டு தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாக போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மட்டும்தான் சிறப்பா? அதுதவிர வீட்டில் செல்வம் சேர என்ன பரிகாரம் செய்யலாம் என்பது சாமானியர்களின் கேள்வியாக இருக்கிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கவேண்டும் என்ற குறிப்பே வரலாற்றில் இல்லை என்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். அப்படியானால் இந்த நாளில் என்னென்ன வழிபாடுகளை செய்தால் வாழ்க்கையில் ஏற்றம் முன்னேற்றத்தை காணலாம் என்பதையும் எடுத்துரைக்கிறார் அவர்.

இந்த ஆண்டு அட்சய திருதியையின் சிறப்பு என்ன?

‘ஷயம்’ என்றால் அழிவுக்கு உட்பட்டது என்று பொருள். அதுவே அட்சயம் என்றால் அழிவற்றது என்றும், வளர்ந்துகொண்டிருப்பது, வளத்தை தந்துகொண்டிருப்பது என்றும் பொருள். நேற்றைய தினத்தை விடவும் நாளை நன்றாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான் எல்லாருமே இருக்கிறோம். நான் வாழ்க்கையில் முன்னேறிவிட மாட்டேனா? எனக்கு ஏதேனும் ஒரு வேலை கிடைத்துவிடாதா? வெளிநாட்டுக்கு சென்றுவர மாட்டேனா? ஆரோக்கியமாக இருக்க மாட்டேனா? தினசரி பொழுது நன்றாக இருக்காதா? என்பது போன்ற ஆசைகள் எல்லாருக்குமே இருக்கும். ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. அன்றைய நட்சத்திரம் ரோகிணி. இது கிருஷ்ணருடைய நட்சத்திரம். கிருஷ்ணரை நினைத்தாலே வாழ்க்கையில் நலமும் வளமும் பெருகும் என்பார்கள். அதுவும் அட்சய திருதியை நாளில் கிருஷ்ணரை ருக்மணியுடன் சேர்ந்து நினைத்தால் அளவற்ற செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்கக்கூடிய பொருளாதார நிலை எங்களுக்கு இல்லை என்று பலர் வருத்தப்படுகின்றனர். அதனால் எளிமையான முறையில் அட்சய திருதியை கொண்டாடினாலும் மிகுந்த பலனை பெறலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


அட்சய திருதியை அன்று கிருஷ்ணரை ருக்மணியுடன் சேர்த்து வழிபடுவது சிறப்பு

அட்சய திருதியையில் உதவி செய்து பயன்பெற்றவர்கள் யார்?

சமண மதத்தில் ரிஷபானந்தர் என ஒரு தீர்த்தங்கரர் இருந்தார். முதல் தீர்த்தங்கரரான இவர் வாழ்ந்த காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் மிகுந்த நெருக்கடியில் இருந்தான். அப்போது ரிஷபானந்தர் 400 நாட்கள் கடும் தவத்தில் இருந்தார். தன்னால் அந்த சோதனையை தாங்க முடியவில்லையே என்று நினைத்த மன்னன் அட்சய திருதியை அன்று ரிஷபானந்தருக்கு கரும்பு சாறை கொடுத்து வணங்கினானாம். உடனே அவனது இன்னல்கள் தீர்ந்தது. எனவே அட்சய திருதியை அன்று இயலாதவர்களுக்கோ துறவிகளுக்கோ ஏதேனும் ஒரு பழச்சாறு வாங்கி கொடுக்கவேண்டும். இதனால் செல்வம் பெருகும். அடுத்து 6வது அவதாரமான பரசுராமர் அவதாரம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். இது சுக்கிரனின் தன்மையை கொண்டது. வாழ்க்கையில் வசதி, சௌகர்யம் வேண்டுமென நினைப்பவர்கள் சுக்கிரனை வணங்கவேண்டும். தண்ணீரை வீணாக்கக்கூடாது. அட்சய திருதியை அன்று யாருக்காவது நீர்மோரை வாங்கிக்கொடுக்கவேண்டும். நிறையப்பேர் பரசுராமர் திருமணம் செய்யவில்லையே, மகாவிஷ்ணு தனித்திருந்த அவதாரம் ஆயிற்றே என்று நினைப்பார்கள். எனவே அவரை அன்னை பத்மாவுடன் நினைத்து, எங்களுடைய ஏழ்மையை நீக்கு என்று வேண்டி, 10 பேருக்காவது அட்சய திருதியை நாளில் நீர்மோர் வாங்கி கொடுத்தால் செல்வம் பெருகும்.


எளியோருக்கு நீர்மோர் வழங்குவதும், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வழிபடுவதும் சிறப்பு

அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமி அவதரித்த தினமாகவும் அட்சய திருதியை நாள் கருதப்படுகிறது. மேலும் மகாபாரத யுத்தகாலத்தில்தான் இந்த நாள் வருகிறது. வனவாசம் சென்ற திரௌபதி இந்த நாளில் யாருக்கும் அன்னதானம் செய்யமுடியவில்லையே என்று பரிதவிக்கிறாள். அப்போது தினமும் சூரிய நாராயணரை வழிபடுகிறாள். சூரியன் குறித்து இவ்வாறு கேள்விப்பட்டிருப்பீர்கள். சூரியன் ஒரு ரதத்தில் அமர்ந்துள்ளார். அந்த ரதத்தில் குதிரைகளை நாகங்களால் கட்டியுள்ளனர். முன்னால் தேவதைகள் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இதில் சூரியன் என்பது ஆத்மா, கயிறு என்ற பாம்பானது மூச்சுக்காற்று. முன்னால் செல்லக்கூடிய குதிரைகள் என்பது சிந்தை, அந்த தேவதைகள்தான் ஆசைகள். எனவே ஆசைகள் நியாயமாக இருந்தால் அட்சய திருதியை அன்று சூரிய நாராயணனை சில நிமிடங்கள் வணங்கிவிட்டு, சூரிய மந்திரத்தை 3 முறை சொல்லி, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தரையில் சிறிது தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் வழிபட வேண்டும். அட்சய திருதியை அன்று ஏதேனும் ஒரு வகையில் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வழிபட்டால் வாழ்க்கையும் வளர துவங்கும். அரச மரத்தை வழிபட்டால் நன்மைகள் பெருக துவங்கும்.


அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குதல் குறித்து சாஸ்திரத்தில் எந்த குறிப்பும் இல்லை!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் உள்ளது. ஆனால் இப்போது தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால் எல்லாராலும் வாங்க முடியாது. எனவே அதற்கு பதிலாக என்ன வைத்து வணங்கலாம்?

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கவேண்டும் என்ற குறிப்பு சாஸ்திரத்தில் எங்கும் கிடையாது. இந்த நாளை பொருத்தமட்டில் நல்லவற்றை தானம் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பதுதான். எந்த பொருளை தானம் செய்கிறோமோ அந்த பொருள் பெருகும் என்றுதான் குறிப்புகள் இருக்கின்றன.

அட்சய திருதியையில் எதை வாங்கினால் நிலையான செல்வத்தை பெறமுடியும்?

ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதுதான் அட்சய திருதியை அன்று செய்யவேண்டிய முக்கியமான செயல். அந்த அளவிற்கு வசதி இல்லாதவர்கள் சிறிது அரிசி மாவு மற்றும் சிறிது வெல்லம் இரண்டையும் கலந்து வாழை இலை அல்லது அரச மர இலையில் வைத்து எறும்புகள் சாப்பிடுமாறு பிள்ளையார் கோவிலுக்கு கொண்டுசென்று வைத்து வணங்கினாலே போதுமானது. ஸ்வர்ணம் சேரவேண்டும் என்ற குறிப்புகளே இல்லையென்றாலும் ஸ்வர்ணம் சேருவதற்கான பரிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள், மஞ்சள் பொடி பாக்கெட்டை வாங்கிக்கொண்டு அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று கொடுத்துவிட்டு வரலாம். அதுவும் முடியாதவர்கள் மஞ்சள் நிற பூக்களை வாங்கி வீட்டில் வைத்து வழிபட்டாலும் முழு பலன் கிடைக்கும். இதுவும் முடியாதவர்கள், ‘லக்‌ஷ்மீம் தேவீம், மாம் ஷரணம் பிரபத்யே’ என்ற மந்திரத்தை அட்சய திருதியை அன்று 9 முறை சொல்லலாம். இப்படி 48 நாட்கள் சொல்லலாம். இதனால் 3 முதல் 6 மாதங்களுக்குள் பொருளாதார நிலைமை முன்னேறி இருக்கும்.


அட்சய திருதியை அன்று சரஸ்வதி வழிபாடு - பச்சை குடை வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

எதிரிகளால் தொல்லை, கடன், வழக்கு போன்ற பிரச்சினைகள் இருந்தால், ‘துர்கா தேவீம், மாம் ஷரணம் பிரபத்யே’ என்ற மந்திரத்தை சொல்லலாம். கல்வி வேண்டுபவர்கள் ‘சரஸ்வதி (வித்யா) தேவீம், மாம் ஷரணம் பிரபத்யே’ என்ற மந்திரத்தை சொல்லலாம். எந்தவொரு மந்திரமாக இருந்தாலும் அட்சய திருதியை அன்று தொடங்கினால் கட்டாயம் பலிக்கும் என்பது விதி. ஏனென்றால் முகூர்த்தமே பார்க்காமல் ஒரு நாளில் செயல்படலாம் என்றால் அது விஜய தசமி மற்றும் அட்சய திருதியை நாட்கள்தான். வெள்ளை நிற பூக்கள், உப்பு, சர்க்கரை போன்றவற்றை இந்த நாளில் வாங்கலாம். கணக்கு புத்தகத்தில் லாபம் 369 ரூபாய் என்று எழுதி வைக்கலாம். அதுவே பெரிய செல்வம் சேரவேண்டுமென்று ஆசை வந்துவிட்டது என்றால் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை வாங்கி சாமியை நினைத்து சாப்பிடலாம். 4 பேருக்கு பிரசாதமாக பகிரலாம். இதுதவிர அட்சய திருதியை அன்று வண்ணமயமான குடையை வாங்குங்கள். பச்சை என்றால் பொருளாதாரம், நிலம் சார்ந்த முன்னேற்றம் தரும், மஞ்சள் என்றால் ராஜ்ய பதவியை தரும், வெள்ளை என்றால் வீட்டில் அமைதியை தரும், கருப்பு என்றால் கண் திருஷ்டியை நீக்கும் என்றெல்லாம் நம்பிக்கை உண்டு. அந்த குடையை தினமும் 2 முறை திறந்து மூடி வீட்டில் வைத்துவிட வேண்டும். மழைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரிய அளவில் கடன் வாங்கி தங்கம் வாங்கவேண்டாம். நம் வசதிக்குள் எது சாத்தியமோ அதை செய்தால் போதும். ஏதாவது ஒரு மந்திரத்தை அன்று துவங்கினால் மிகுந்த நன்மை தரும். தங்கம் விலை விண்ணை தொடுவதால் ஒரு வருடத்திற்கு தேவையான பொருளாதார வசதி இருந்தால் மட்டுமே தங்கம் வாங்குவதை பற்றி யோசியுங்கள்.

Updated On 29 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story