உலகில் அனைத்து உயிர்களுமே ஒரு அணுவில் இருந்துதான் தோன்றுகிறது. அப்படி சத்ய யுகத்தில் விஷ்ணு பகவான் முதன்முதலாக மீன் அவதாரம் எடுத்தார். உண்மைக்கு பேர்போன அரசன் முன்பு சிறிய கொம்பு மீனாகத் தோன்றி மகா பிரளயத்திலிருந்து அம்மன்னனையும் அவனுடைய மக்களையும் காப்பாற்றினார். இறைவன் மீனாக அவதரித்து மன்னனுக்கு காட்சியளித்த அந்த நாளைத்தான் மத்ஸ்ய ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர். மற்ற பண்டிகைகளைப்போல இந்த நாளைக்குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இருந்தாலும் மத்ஸ்ய ஜெயந்தி அன்று விஷ்ணு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாளில் இறைவனை வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். மேலும் மத்ஸ்ய அவதாரத்தின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறையையும் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
மத்ஸ்ய அவதாரம் எதனால்?
மத்ஸ்ய அவதாரம் என்ற பெயர் பலருக்கு புதிதாக கேட்கப்படுவது போன்று இருக்கலாம். பாண்டியர்களின் கொடியிலே 2 மீன்கள் சலசலத்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறோம். ராசிக்கட்டத்திலே 12வது இடத்தில் மீன் என்று சொல்லக்கூடிய மீனம் பற்றி அறிந்திருக்கிறோம். மீன் என்பது ஒரு பெரும் கருத்தை உள்ளடக்கியது. உலகில் முக்கால்பகுதி கடல்தான் இருக்கிறது. அதில் நிலப்பரப்பு மிகவும் குறைவு என்றால் மனிதர்கள் வாழக்கூடிய நிலப்பரப்பு மிகமிக குறைவு. கடகம், விருச்சிகம், மீனம் மூன்றும் நீர் ராசிகள்தான். கடகம் என்பது ஓடக்கூடிய ஆறு, விருச்சிகம் என்பது தேங்கிய நீர்நிலை, மீனம் என்பது கடல். இந்த 3 ராசிக்காரர்களுக்குமே மிகப்பெரிய பரிகாரமாக அமையக்கூடியது மத்ஸ்ய ஜெயந்தி. இவர்களுக்கு மட்டுமல்லாமல் நாக தோஷம் இருக்கக்கூடியவர்களுக்கும் இந்த நாளில் பரிகாரம் கிட்டும். ராகு - கேது என்கிறோம். தசாவதாரத்தில் ராகு என்றால் வராகத்தை குறிக்கக்கூடியது. அதுவே கேது என்றால் பெரிய மீனை குறிக்கக்கூடியது. பெரிய மீன்கள் கடலுக்குள் அமைதியாக இருக்கும். வெளிப்படாது. அதனால்தான் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாத ஞானியையும் குறிக்கக்கூடியதாக இருக்கிறது கேது. ஆய்வுக்காக கடலுக்குள் செல்லும்போதுதான் அதிலுள்ள அத்தனை வண்ணங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொள்ள முடியும். கடல், முத்தையும் பவளத்தையும் தரக்கூடியது. இவை இரண்டையும், சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரத்துடன் சேர்த்து சொல்வார்கள். முத்து, பவளம் இரண்டையும்தான் எல்லாரும் அணியமுடியும். பெண்களின் தாலிச்சரடில்கூட மங்களகரமாக பவளத்தைத்தான் அணிகிறார்கள். உலகில் முதல் அவதாரமாக பெருமாள் எடுத்தது மீன் அவதாரம் என்கிறார்கள். எத்தனையோ பில்லியன் உயிரணுக்களில் ஒரு உயிரணு மனிதனாக பிறக்கிறது. அந்த உயிரணுவின் அமைப்பானது மீன்போன்றுதான் இருக்கும். சிவபெருமான் கூட மதுரையம்பதியில் சந்திரசேகரனாக வந்தபோது மீனவராகத்தான் திருவிளையாடலை விளையாடினார். சென்னை, மும்பை போன்ற பெரும் மாநகரங்களை பார்த்தோமானால் அவையெல்லாம் கடலை ஒட்டித்தான் தோன்றியிருக்கும். எனவே கடலை ஒட்டி ஏதோ ஒரு வளர்ச்சி இருக்கிறது. சமீபத்தில்கூட அரிய வகை மீன்கள் கடலிலிருந்து வெளிப்படுவதாக செய்திகளை பார்த்தோம். அதுபோல மனிதனுக்கு எப்போதெல்லாம் தீங்கு வருமோ அப்போதெல்லாம் மீன்கள் கடலிலிருந்து வெளிப்பட்டு, ‘உனக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது’ என்பதை உணர்த்துகிறது. உடலுக்கு தேவையான பெரும்பாலான மருத்துவ பொருட்களைக்கூட மீன்களிலிருந்துதான் எடுக்கிறார்கள். எனவே மீன்கள் ஏதோ ஒரு வகையில் நன்மை செய்வதுடன், பலருக்கு வாழ்வாதாரத்தையும் தந்துகொண்டிருக்கின்றன.

மீன் அவதாரத்தை குறிக்கும் பாண்டிய சின்னம் மற்றும் சமீபகாலமாக கடலிலிருந்து வெளிப்படுகிற அரிய மீன்கள்
மத்ஸ்ய ஜெயந்தி உருவானது எப்படி?
மார்ச் 31ஆம் தேதி மத்ஸ்ய ஜெயந்தி வருகிறது. நல்லவற்றை கேட்டால் நாகதோஷம் அகன்றுவிடும் என்று சொல்லுவர். மத்ஸ்ய அவதாரத்திற்கு சென்னை ஈசிஆர், ஈரோடு தயிர்ப்பாளையம் போன்ற ஒருசில இடங்களில் மட்டும்தான் கோவில்கள் இருப்பதால் எல்லாராலும் போகமுடியாது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினால் அங்கு மத்ஸ்ய அவதாரத்தின் அருள்நிலைகள் உண்டு. எனவேதான் மத்ஸ்ய அவதாரத்தின் கதையை கேட்டாலே நாகதோஷம் போய்விடும். உலகத்திலேயே 3 பேர்தான் பிறக்கும்போதே கருவிலேயே திருவுடையவர்கள் என்று சொல்வார்கள். அவர்கள் மதுரை மீனாட்சி, திருஞானசம்பந்தர் மற்றும் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி ஆகியோர். இதில் ஸ்ரீ சுகபிரம்ம மகரிஷி சொன்ன கதைதான் இது. உலகம் பிரளயத்தில் ஆட்படும். நமது கருத்துப்படி ஒரு யுகம் என்பது 432 கோடி வருடங்கள் என வகுக்கப்படுகிறது. இந்த யுகம் தோன்றும்போது சத்யவிரதன் என்ற ஒரு மன்னன் இருந்தான். பாண்டிய நாட்டின் மன்னனான இவன் சத்தியத்தையே பேசக்கூடியவன். இவன் மதுரையம்பதியை ஆண்டுவந்தான். எப்போதும் உண்மையையே பேசக்கூடிய அந்த மன்னன் ஒரு நீர்நிலைக்கு சென்றபோது அங்கு சிறிய மீனை பார்த்தான். கேதுவை குறிக்கக்கூடிய அந்த மீன் மன்னனிடம் பேசத்துவங்கியது. அது ‘நான் இருக்கிற இந்த தண்ணீர் எனக்கு சிறியதாக இருக்கிறது. நான் ஒரு சிறிய குட்டையில் இருக்கிறேன். என்னை ஒரு பெரிய இடத்தில் வைத்துவிடு’ என்றது. உடனே மன்னன் அந்த மீனை ஒரு பெரிய தங்கக்கிண்ணத்தில் வைத்தான். மறுநாள், அதுவும் தனக்கு போதவில்லை என்று சொல்கிறது. இப்படியே மன்னன் இடத்தை மாற்ற மாற்ற, அந்த மீன் இன்னும் பெரிதாக இடம் வேண்டுமென கேட்டது. இப்படியே கேட்டுக்கொண்டிருந்த மீன் 7வது நாள் இப்படியாக பேசியது. ‘மன்னா எனக்கு கடலும் பத்தாது’ என்றது. உடனே ஏன்? என மன்னன் கேட்டான். அதற்கு, ‘ஒரு தேடல் இருக்கும்போது, உனக்கான ஞானத்தை நீ தேட தேட எதுவும் பத்தாது. ஞானம் என்பது விரிவடைந்துகொண்டே இருக்கும்’ என்றது.

நாகதோஷத்திற்கு சிறந்த தீர்வை தரும் மத்ஸ்ய ஜெயந்தி வழிபாடு
அந்த மீன் கிடைத்த முதல்நாளைத்தான் மத்ஸ்ய ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர். ஏனென்றால் பெருமாளுக்கு பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது. ஜெய-அந்தி என்றால் முதலும் முடிவுமின்றி வெற்றியை தந்துகொண்டே இருப்பது என்று அர்த்தம். இந்த கதையை கேட்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகள் வந்துகொண்டே இருக்கும். இப்படி 7 நாள் கண்ட மீன் மீது மன்னனுக்கு ஒரு பற்று ஏற்பட்டது. அந்த மீன் மன்னனிடம், ‘மன்னா பிரளயம் வரப்போகிறது. அதாவது பிரள-லயம் வருகிறது. லயம் என்றால் ஒன்றில் ஒன்றிவிடுவது. எனவே என்னுள் ஒரு படகைக் கட்டு. உன்னை நான் கரைசேர்க்கிறேன். உனக்கு வாழ்க்கையில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தந்துவிடுகிறேன். இந்த பிரளயம் வற்றும்வரை யான் உன்னையும், உன் மக்களையும் காப்பாற்றுகிறேன்’ என்று சொல்கிறது. சொன்னபடியே செய்தும்விட்டது. இதை உற்றுப்பார்த்தோமானால் மனிதன் ஒரு செல்லிலிருந்து எப்படி பரிமாண வளர்ச்சியடைந்து வந்தான் என்பது புரியும். மீன், அதன்பிறகு நீரிலும் நிலத்திலும் இருக்கக்கூடிய ஆமை, அதற்கும் அடுத்த நிலையான வராகம், அடுத்து பாதி மனிதன், பாதி மிருகம் என்று சொல்லக்கூடிய நரசிம்மம், அதன்பிறகு அடுத்த நிலையான வாமனன் என பரிமாணம் நடக்கிறது. அதன்பிறகு பரசுராமர் என்று சொல்லக்கூடிய ஏர்க்கலப்பை, அதாவது விவசாயத்தை நோக்கி மனிதன் நகருகிறான்.

மத்ஸ்ய ஜெயந்தி அன்று மீன்களுக்கு உணவளித்து வழிபடல்
மத்ஸ்ய ஜெயந்தி நாளில் எப்படி வழிபடலாம்?
மார்ச் 31ஆம் தேதி வருகிற மத்ஸ்ய ஜெயந்தி நாளில் அருகிலிருக்கும் நீர்நிலைக்குச் சென்று அங்குள்ள மீன்களுக்கு சிறிது பொரியை தூவி வணங்கலாம் அல்லது வீட்டிலேயே மத்ஸ்ய அவதாரத்தின் கதையை கேட்கலாம். அல்லது மத்ஸ்யத்தின் அஷ்டோத்தர சதநாமாவளி என்பதை கேட்கலாம். மனதார இறைவனை வணங்கி ஒவ்வொரு பிரளயத்திலும் எங்களை காப்பாற்று என்று கேட்கலாம். அந்த கதையை பார்த்தோமானால் அதில் மன்னனால் ஒரு அளவிற்குத்தான் கட்டுப்படுத்த முடிகிறது. மீன் வளர்ந்துகொண்டே போக போக கிண்ணத்தில் தொடங்கி கடல்கூட பத்தாமல் போகிறது. அதுபோல், பிரச்சினையானது ஒரு கட்டத்தில் நம் கட்டுப்பாட்டை மீறி போய்விடும். அப்போது நம்மைத் தாண்டி இருக்கிற பிரபஞ்ச சக்தியிடம் சரணடைந்துவிட்டால் நடப்பது யாவும் நலமாகத்தான் நடக்கும் என்று உணர்ந்துகொள்ளலாம். மத்ஸ்ய அவதாரத்திற்கென்று கோவில்கள் அதிகம் இல்லாததால் வீட்டிலேயே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை யூடியூபில் ப்ளே செய்துவிடலாம். மத்ஸ்ய அவதாரத்தின் கதையை கேட்கலாம். இதனால் கேது தோஷம் பெருமளவு நீங்கிவிடும். கால சர்ப்பதோஷத்தால் வந்த பெருங்கவலை மாறி பெரும் செல்வம் வந்துசேரும். தடைப்பட்ட செயல்கள் மீண்டும் துவங்கும்.
