இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இஸ்லாமியர்களின் புனிதமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான் என்று சொல்லப்படுகிற ரமலான். இஸ்லாமியர்களின் நாள்காட்டியான ஷவ்வாலில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் சூரியன் உதிப்பது முதல் மறையும்வரை தண்ணீர் கூட அருந்தாமல், எச்சிலைக்கூட விழுங்காமல் கடுமையான நோன்பை கடைபிடிப்பர். 30 நாட்கள் விரதத்திற்கு பிறகு மாத இறுதியில் நோன்பு துறந்து பண்டிகை எடுப்பர். இந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் அருளப்பட்டதாக நம்புகின்றனர். அதன்மூலம்தான் வாழ்க்கைநெறிகள் கற்றுக்கொடுக்கப்பட்டதால் அந்த மாதம் முழுவதுமே சிறப்பானதாக கருதப்படுகிறது. இஸ்லாமியர்கள் தங்களது அனைத்து பண்டிகைகளையுமே நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை அடிப்படையில்தான் கொண்டாடுவதால் சந்திர நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டும் ரமலான் கொண்டாட்டமானது தோராயமாக 10 நாட்கள் பின்னோக்கி நகர்கிறது. இதனால் இன்னும் சில வருடங்களில் ஒரே ஆண்டில் இரண்டு ரமலான் கொண்டாடப்படும் என்று நிபுணர்கள் கணித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 31ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு குறித்தும், இதிலுள்ள சிறப்புகள் குறித்தும் காணலாம்.

ரமலான் மாதத்தின் சிறப்பு

இறைவன் அல்லாஹ் இந்த உலகில் தனக்கு விரும்பியதை செய்கிறான் என்பது இஸ்லாமியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதன்படி எப்படி தனக்கென மதீனா, மக்கா போன்ற புனித ஸ்தலங்களை தேர்ந்தெடுத்திருக்கிறானோ அதேபோல், அல்லாஹ்வே தனக்கென தேர்ந்தெடுத்த மாதமாக ரமலானை பார்க்கின்றனர். இந்த மாதத்தில்தான் புனித நூலான குர்ஆனை இறைவன் அருளியதாக நம்புவதால் அந்த மாதம் முழுவதையுமே இறைவன் சிறப்பித்திருப்பதாக நம்புகின்றனர். இந்த மாதத்தில் மக்கள் தங்களது சிந்தையை தெளிவுபடுத்த நோன்பு நோற்க வேண்டும். அதாவது ரமலான் மாதத்தில் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுவதாகவும், நரகத்தின் வாசல்கள் அடைபடுவதாகவும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதாகவும் ஹதீஸ்களில் கூறப்பட்டிருக்கிறது. எனவே இந்த நேரத்தில் பாவங்களை அல்லாஹ் கருணையுடன் மன்னிப்பதால் நோன்பு நோற்று வழிபடும்போது ஈடு இணையில்லாத பாக்கியங்களும் நன்மைகளும் வந்துசேரும் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதுபோக லைலத்துல் கத்ர் என்று சொல்லக்கூடிய ஓர் இரவு பிரார்த்தனைக்கு மிகுந்த பலன் கிட்டும். அதவாது லைலத்துல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்கள் வணங்கிய பலன் ஒரு இரவில் கிட்டும் என்பதாகும். ஒரு மனிதன் சராசரியாக 60 வருடங்கள் அதாவது 720 மாதங்கள் பூமியில் வாழ்கிறான். ஒருநாள் விடாமல் வழிபட்டாலும் வெறும் 720 மாதங்கள் மட்டும்தான் வழிபடமுடியும்.


லைலத்துல் கத்ர் என்று சொல்லப்படும் சிறப்பு பிரார்த்தனை ஏறெடுத்தலின் பலன்கள்

ஆனால் லைலத்துல் கத்ர் வழிபாட்டின்மூலம் ஆயிரம் மாதங்களின் பலனை பெற்றுவிட முடியும். இதில் குறிப்பாக, ஆயிரம் மாதங்கள் 2 ரக்அத்கள் தொழுத பலனை ஒரு இரவில் 2 ரக்அத்கள் தொழுகையின்மூலம் பெறலாம் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க லைலத்துல் கத்ரானது ரமலான் மாதத்தில் கடைசி 10 நாட்களில் வருகிறது. அதவாது அந்த 10 நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் தொழுகை செய்யவேண்டும். நிறையப்பேர் 27ஆம் இரவுதான் லைலத்துல் கத்ர் என்று நினைப்பது தவறு என்கின்றன பல இஸ்லாமிய கருத்துகள். இந்த சிறப்பு பிரார்த்தனை தவிர, இறுதி 10 நாட்கள் க்யாம் உல் லைல் பிரார்த்தனையும் ஏறெடுக்கப்படும்.இது நள்ளிரவில் செய்யப்படுகிற தொழுகை. ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் பிறையை தேடுங்கள் என்று முகமது நபி கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த 10 நாட்களும் மசூதிகளில் நள்ளிரவில் சுமார் ஒன்றரை மணிநேரம் முதல் 3 மணிநேரம் வரைக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரார்த்தனை நடைபெறும். இந்த சக்திவாய்ந்த தொழுகைமூலம் இறைவனை கிட்டிச்சேரலாம். இந்த பிறையின் அடிப்படையில்தான் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். எனவேதான் ஆண்டுதோறும் பிறை தெரிகிற நாளை கணக்கிட்டு ஏதேனும் இரண்டு நாட்களில் ஒரு நாள் பண்டிகை எடுக்கப்படுகிறது.

நோன்பு எதற்காக கடைபிடிக்கப்படுகிறது?

பிறை தெரிவதன் அடிப்படையில் ரம்ஜான் கொண்டாடப்படுவதால் ஒவ்வொரு நாடுகளுக்குமிடையே இந்த கொண்டாட்டம் மாறுபடுகிறது. இந்தியாவை பொருத்தவரை இந்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்கியது. இந்த மாதத்தின் பிறை தெரிவதன் அடிப்படையில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என தீர்மானிக்கப்படும். ரம்ஜானை ஈத்-உல்-பித்ர் என்றும் அழைக்கின்றனர். அதாவது பிறை மாதம் என்று அழைக்கப்படுகிற ரமலான் மாதம் பிறையில் தொடங்கி அமாவாசை முடிந்தபிறகு மீண்டும் பிறையிலேயே முடியவேண்டும். அதனால்தான் சவுதி அரேபியாவில் முந்தையநாள் ரம்ஜான் கொண்டாடப்பட்டால் அடுத்த நாள் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-பித்ர் என்பதற்கு ஃபித்ராக்களின் பண்டிகை என்று அர்த்தம். தானம் வழங்குவதைத்தான் ஃபித்ரம் என்று சொல்கின்றனர். எனவே இந்த மாதத்தில் நோன்பு வைப்பதோடு மட்டுமல்லாமல் ஏழை எளியவர்களுக்கு தானதர்மம் செய்யவேண்டும் என்பதும் இஸ்லாமியர்களின் கடமையாக பார்க்கப்படுகிறது.


இஃப்தார் உணவை சாப்பிட்டு நோன்பு முறித்தல்

நோய் பாதிக்கப்பட்டோர், வயது முதிர்ந்தோர், சிறு குழந்தைகள் போன்றோர் நோன்பு நோற்க தேவையில்லை. அதேபோல், மாதவிடாய் காலங்களில் பெண்கள் நோன்பு வைக்கக்கூடாது. வைத்தபிறகு பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அத்துடன் நோன்பை பெரும்பாலும் முடித்துக்கொள்வார்கள். இது தவிர வேறு ஏதேனும் காரணங்களால் நோன்பை தொடரமுடியாமல் போனால் ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு நோன்பு நாட்களை கடைபிடிக்கலாம். நோன்பு நோற்பவர்கள் காலையில் உண்ணும் உணவுக்கு சஹரி என்றும், நோன்பு துறப்பதற்காக மாலையில் உண்ணும் உணவுக்கு இஃப்தார் என்றும் பெயர். சஹரியை சூரியன் வெளிப்படுவதற்கு முன்னமே சாப்பிடவேண்டும் என்பதால் அதிகாலை 4 மணிக்கெல்லாம் பெரும்பாலும் சாப்பிட்டுவிடுவார்கள். அதேபோல் நோன்பை துறக்கும்போது முதலில் ஒன்று அல்லது 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடித்து துறக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து சாப்பிடும் உணவுகள்தான் இஃப்தார் என அழைக்கப்படுகின்றன. இதில் நோன்பு கஞ்சி சிறப்பு பெறுகிறது. இப்படி 30 நாட்களும் சராசரியாக 12 முதல் 13 மணிநேரம் நோன்பு நோற்கப்படுகிறது. நோன்பின்போது தொழுதுகொள்வதுடன் குர்ஆனை வாசிப்பதிலும் அதிக நேரம் செலவிடவேண்டும். இதனால் மக்களிடையே பகை, பொறாமை, விரோதம், பழிவாங்கும் எண்ணம், காழ்ப்புணர்ச்சி போன்றவை நீங்கி சகிப்புத்தன்மையும், நிதானமும் அதிகரிக்கும். இதுபோன்ற நோன்புகளை கடைபிடித்து அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டதால்தான் நபிகள் நாயகத்திற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் மேலோங்கி இருந்ததாக இஸ்லாமிய புனித நூல்களில் பல்வேறு சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய மக்களிடையே சகிப்புத்தன்மை என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் ஒருவர் உங்களை அவமானப்படுத்தினாலோ, குறை சொன்னாலோ, ஏளனம் செய்தாலோ அதை பொறுத்துக்கொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு இணையாக பேசவோ அல்லது பதிலுக்கு அவமானப்படுத்தவோ கூடாது என்றும் நபிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள அனைத்து மதத்தவருமே பின்பற்றினால் குற்றங்கள் இருக்காது என்பதை உணர்த்தும்விதமாகவே சகிப்புத்தன்மை அதிகரிக்கும் மாதமாக ரமலானை பார்க்கின்றனர்.


ஒரு ஆண்டில் 2 ரமலான்கள் குறித்து துபாய் வானியல் குழு சிஇஓ ஹசன் அகமது அல் ஹரரி விளக்கம்

இனிமேல் ஒரு ஆண்டில் 2 ரமலான்கள்?

எல்லா மதத்திலுமே ஒவ்வொரு பண்டிகையும் ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும். அதுபோலத்தான் பக்ரீத், ரமலான் போன்ற இஸ்லாமிய பண்டிகைகளும். அதில் பிறையின் அடிப்படையில் வரக்கூடிய ரமலான் பண்டிகையானது சந்திர நாட்காட்டியின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது. அதனால் ஆண்டுதோறும் ரமலான் மாதமானது 10 - 11 நாட்கள் பின்னோக்கி நகர்ந்துகொண்டே வருகிறது. அதனால் உலகெங்கும் பின்பற்றப்படுகிற கிரிகோரியன் கேலண்டரில் ரமலான் மாதமானது முன்னோக்கி நகர்ந்துகொண்டே போகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூன், ஜூலை மாதங்களில் கொண்டாடப்பட்ட ரம்ஜான் பண்டிகை, 2025இல் மார்ச் மாதம் கொண்டாடப்படுகிறது. அதுவே 2030ஆம் ஆண்டில் இது இன்னும் முன்னோக்கி நகரும் என்பதால் நாம் பின்பற்றுகிற ஒரு கேலண்டர் ஆண்டிலேயே 2 ரமலான்கள் வருமென கணக்கிடப்பட்டிருப்பதாக துபாய் வானியல் குழு சிஇஓ ஹசன் அகமது அல் ஹரரி தெரிவித்துள்ளார்.

Updated On 25 March 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story