இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மார்கழி மாதம் வந்தாலே அதிகாலை எழுந்து குளிர் தண்ணீரில் நீராடி, பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு, வாசலில் கோலமிட, ஆண்கள் பஜனைக்கு செல்வது இம்மாதத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கீதையில் ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணரே பாடும் அளவிற்கு பல்வேறு சிறப்புகளைக்கொண்ட மாதம் மார்கழி. தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருந்தாலும் மார்கழி மாதத்திற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. காரணம் இம்மாதம் தேவர்களுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது. தேவர்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒரு ஆண்டு என்பது ஒருநாள் போல கழியும் என்று சொல்கின்றனர். அப்படி தை மாதம் முதல் ஆனி வரை அவர்களுக்கு பகல் என்றும், ஆடி முதல் மார்கழி வரை அவர்களுக்கு இரவு என்றும் சொல்லப்படுகிறது. சூரிய பகவான் குரு பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இந்த மாதம் முழுக்க பல்வேறு இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் வேறு எந்தவித மங்கல நிகழ்ச்சிகளும் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை. சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம், பெருமாளின் வைகுண்ட ஏகாதசி மற்றும் அனுமன் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் இம்மாதத்தில் வருவதால் சைவ மற்றும் வைணவ ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்பே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேளதாள வாத்தியங்களுடன் சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படுகிறது. இப்படி தேவர்களுக்கு உகந்த மாதமாக போற்றப்படும் மார்கழியில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வழிபாட்டுக்கு உடனடி பலன்

மார்கழி தேவர்களுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதமானது தேவர்கள் கண் விழிக்கும் காலம் என்று சொல்கின்றனர். எனவே ஆண்டு முழுக்க இறைவனிடம் வேண்டாதவர்கள்கூட இந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாள் மனமுருகி வேண்டினால் உடனடி பதில் கிடைப்பதுடன், அடுத்த ஆண்டு முழுக்க அதன் பலனை காணலாம். குறிப்பாக இம்மாதத்தில் இறைவனிடம் காட்டும் பக்தியானது மனிதர்களை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்லும். மார்கழி மாதம் முழுவதுமே அதிகாலை 3.30 மணிமுதல் தேவர்களுக்கு உகந்த நேரம் என்று சொல்லப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை பூஜித்து வழிபட்டால் சிறப்பான பலன்கள் வாழ்க்கையில் வந்து சேரும். மார்கழி மாத சிறப்பு வழிபாட்டுக்கு சிறப்பு சேர்ப்பது மஹோத்ஸவம் என்று சொல்லப்படுகிற நாட்டிய மற்றும் இசைக் கச்சேரிகள். எனவே இம்மாதம் முழுக்க பல இடங்களில் நாட்டியம் மற்றும் இசை கச்சேரிகள் அரங்கேற்றப்படுகின்றன.


மார்கழியில் அதிகாலையில் நீராடி பெண்கள் கோலமிடுதல்

குறிப்பாக, திருப்பாவை, திருவெம்பாவை போன்ற, தெருக்களில் பாடி செல்லப்படும் பஜனை பாடல்கள்தான் பின்னர் திருவையாறு ஆராதனையாக மாறின. குழந்தைப்பேறுக்கு வேண்டுவோர், திருமணத்திற்கு காத்திருப்போர், கடன் பிரச்சினைகள் மற்றும் செல்வக்குறைபாட்டால் வருந்துவோர், பிணிகளால் அவதிப்படுவோர் என அனைவருமே இம்மாதத்தில் ஆலய தரிசனம் செய்தால் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக, ராகு - கேது தோஷமிருப்பவர்கள் இம்மாதத்தில் பெருமாள் மற்றும் கிருஷ்ணரை பிரார்த்தித்தால் அந்த தாக்கம் குறைவதை கண்கூடாக காணலாம். மார்கழி மாதத்தில் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதனால் ஓசோன் படலமும் பூமிக்கு அருகில் வரும். அதனால்தான் இந்த மாதத்தில் காலை நேரமே எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் எந்த நோய் இருந்தாலும் அதன் தாக்கம் குறையும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் பெண்கள் செய்வதை ஆண்களும், ஆண்கள் செய்வதை பெண்களும் விரும்பி செய்கின்றனர்.

மார்கழியும் அறிவியலும்

ஏற்கனவே சொல்லியபடி மார்கழி மாதத்தில் பூமியானது சூரியனுக்கு அருகாமையில் இருக்கும். பொதுவாக வெப்பக்கோளாக அறியப்படுகிற சூரியனுக்கு அருகில் செல்லும்போது உஷ்ணம்தான் அதிகரிக்கவேண்டும். ஆனால் பூமி பக்கத்தில் இருப்பதால் சூரிய கதிர்கள் பூமிமீது பட்டு தெறித்துவிடும். மேலும் தெறிக்கும் கதிர்களும் படாத பகுதியில் நாம் இருக்கிறோம். இதனால் வடபாதியில் வசிக்கும் நமக்கு குளிர் நிலவுகிறது. அதுவே பூமி சற்று விலகியிருந்தாலும் சூரிய கதிர்களின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருந்திருக்கும். நமக்கு குளிர் நிலவினாலும் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அதன் ஈர்ப்புவிசையும் அதிகமாகவே இருக்கும். இதனால் உடலின் சக்தி மையமானது கீழிருந்து மேல்நோக்கி இழுக்கப்படுகிறது. எனவே மனித உடல் சமநிலையையும், ஸ்திர தன்மையையும் அடைய ஏற்ற நேரமாக இம்மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் காலை நேரத்தில் செய்வதற்காகவே பிரத்யேக யோகா பயிற்சிகள்கூட இருக்கின்றன. மேலும் மனநல பிரச்சினை உள்ளவர்கள் மனதை சமநிலைபடுத்த உகந்த மாதமாக இருக்கிறது மார்கழி.


மார்கழியில் திருமணம் செய்யக்கூடாது என்பதற்கான காரணம்

மார்கழியில் செய்யவேண்டியவை - செய்யக்கூடாதவை

மார்கழி மாதம் முழுக்க பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். பெண்கள் வாசலில் கோலமிட்டு, அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியிட்ட ஒரு அகல்விளக்கு ஏற்றுவதுடன், பூஜையறையிலும் விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நாமத்தில் குறைந்தது 9 முறை பாராயணம் செய்து வழிபடல் அவசியம். மார்கழி மாதத்தை தேவர் மாதம் அல்லது தனுர் மாதம் என்றும் அழைக்கின்றனர். பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் பூஜை மற்றும் தனுர்வியதிபாத வழிபாடு நடத்தும்போது பித்ருக்களின் பரிபூரண ஆசி நம்மை வந்தடையும். கோவில்களில் நடைபெறும் பூஜைக்கு நம்மால் இயன்ற ஏதேனும் ஒரு உதவியை செய்யவேண்டும். அதாவது பூஜைக்கு வருவோருக்கு பிரசாத நைவேத்தியத்தை வழங்கவேண்டும். மாதம் முழுக்க முடியாவிட்டாலும் குறைந்தது ஓரிரு நாட்களாவது இதை செய்யும்போது வருடம் முழுக்க அன்னதானம் செய்த பலன் நமக்கு கிட்டும். மேலும் தினந்தோறும் பூஜையில் பங்கேற்பதும் இறைவனின் பரிபூரண அருளை நமக்கு பெற்றுத்தரும்.

மார்கழி மாதத்தில் பூமியின் வடபாதியான நாம் வசிக்கும் பகுதியில் குளிர் அதிகமாக இருப்பதால் இந்த சமயத்தில் விதை விதைத்தால் சரியாக முளைக்காது. அதாவது ஒரு உயிர் உருவாவதற்காக சக்தி மந்தநிலையில் இருக்கும். எனவேதான் மனிதர்களாகிய நாமும் உடலின் சக்தியை அதிகரிக்கவும், சேமிக்கவும் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறோம். பூமியில் பயிர்க்கரு எப்படி உருவாகாதோ, அதேபோல் மனிதர்களும் கருவுறுதலுக்கு இம்மாதம் ஏற்றதல்ல என்பதாலேயே மார்கழியில் பொதுவாக திருமணங்கள் செய்யப்படுவதில்லை. மேலும் திருமணமானவர்களும்கூட பெரும்பாலானோர் இந்த மாதத்தில் தங்களது இணையருடன் சேர்வதில்லை. எனவேதான் மார்கழியில் திருமணம் செய்யக்கூடாது என்ற மரபையே காலங்காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வருகின்றனர்.


டல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சியில் ஈடுபடுதல் அவசியம்

மார்கழியை ‘பீடை மாதம்’ என்று சொன்னாலும் ஆன்மிக வழிபாட்டுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த மாதத்தில் நல்ல விஷயங்கள் தொடங்கக்கூடாது மற்றும் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது என்று ஏன் சொல்லப்படுகிறதென்றால், இந்த மாதத்தில் சூரியனின் ஈர்ப்புவிசை கீழ்நோக்கி செயல்படுகிறது. எப்போது விசை கீழ்நோக்கி செயல்பட்டாலும் அது நல்லவற்றை தொடங்குவதற்கு ஏற்ற நேரமாக இருக்காது. எப்போது சக்தி மேல்நோக்கி செயல்படுகிறதோ அப்போதுதான் முயற்சிகளும் மேலோங்கி வெற்றியடையும். எனவேதான் சந்ததிகள் வாழ்ந்து பெருகக்கூடிய இடமாக பார்க்கப்படுகிற புதிய வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை செய்யக்கூடாது, வீட்டிற்கு பால் காய்ச்சக்கூடாது போன்றவற்றை நம் முன்னோர்கள் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு உடலையும், மனதையும் தயார்செய்யக்கூடிய மாதமாக மார்கழி இருப்பதால் இந்த மாதத்தில் லௌகிகத்தை வெறுத்து, ஆன்மிகத்தில் திளைக்கவேண்டும். மேலும் உடலையும் மனதையும் ஸ்திரப்படுத்தி திடமாக இருப்பதன்மூலம் எதையும் எதிர்கொள்ளும் துணிவும் தைரியமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Updated On 23 Dec 2024 5:26 PM IST
ராணி

ராணி

Next Story