இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் மாதங்களில் ஒன்றான மாசி மாதத்தில் மகா சிவராத்திரிக்கு பிறகு சிறப்புக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது மாசி மகம். மாசி மாத பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாளைத்தான் மாசி மகம் என்று சொல்கின்றனர். ‘மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர்’ என்றும், ‘மாசிக் கயறு பாசி படியும்’ என்றும் சொல்வதுண்டு. இப்பேர்பட்ட சிறப்புபெற்ற இந்த நாளில் புனித தலங்களிலுள்ள நீர்நிலைகளில் சென்று நீராடினால் பல ஜென்மங்கள் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் அனைத்து கோவில்களிலும் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதனாலேயே இந்த மாதத்தை கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வதுண்டு. அதிலும் கங்கை உட்பட அனைத்து புண்ணியநதிகளுமே சங்கமிப்பதாக கருதப்படுகிற கும்பகோணம் சென்று புனித நீராடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனாலேயே ஆண்டுதோறும் அங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இந்த நாளில் இந்துக்கள் அனைவருமே விரதம் இருந்து வழிபடுவர். குறிப்பாக பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கூடுதல் சிறப்பு. மாசி மாதத்தில்தான் பெண்கள் காரடையான் நோன்பு வைத்து புது மாங்கல்ய சரடு மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறப்பு என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மாசி மகத்தின் சிறப்புகள் என்னென்ன? இந்த நாளின் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மாசி மகம் என்றால் என்ன?

கும்ப ராசியில் சூரியன் இருக்கையில் சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் இருப்பார். இப்படி மாசி மாதத்தில் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வருகிற நன்னாள்தான் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு மாசி மகம் மார்ச் 12ஆம் தேதி வருகிறது. அந்த நாளில் அதிகாலை 3.53 மணி துவங்கி, மார்ச் 13ஆம் தேதி காலை 5.09 மணி வரைக்கும் மகம் நட்சத்திரம் இருக்கிறது. இதுபோல் தமிழ் மாதத்தின் தேதியை பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் மாசி மக நாளானது மாறுபடும். இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு திதி செலுத்தி வழிபடுவர். மேலும் கோவில்களுக்குச் சென்று கிரிவலம் வருவர். மாசி மகம் நன்னாளன்று நிறைய பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு. இப்படி செல்வதால் பாவங்கள் நீங்கி நன்மை கிட்டும் என்பது ஐதீகம். குறிப்பாக, கும்பகோணத்தில் நீராடுவது எப்படி சிறப்போ அதேபோல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதும் இந்த நாளின் சிறப்பாகும்.


குழந்தைப்பேறு வேண்டுவோர் மாசி மகத்தன்று விரதம் ஏற்று வழிபடல் வேண்டும்

இப்படி செய்வதால் வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி செல்வம் பெருகும், கடன் தொல்லை ஒழியும், குழந்தைப்பேறு உண்டாகும் என்பது பலரின் நம்பிக்கை. ஆண்டுதோறும் மாசிமகம் வருகிறதென்றாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாமகத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. மாசி பௌர்ணமியன்று மகம் நட்சத்திரம் சேருகிற நாள் மாசிமகம் என்று அழைக்கப்படுவதைப் போன்று, அதேநாளில் கும்ப ராசியில் சூரியன் இருக்க, குரு பகவான் சிம்ம ஓரையில் பயணிக்கும்போது வரும்நாள்தான் மகாமகம் அல்லது மாமாங்கம் என்று அழைக்கப்படுகிறது.

கும்பகோணம் ஏன் சிறப்பு பெறுகிறது?

சரி, மாசி மகத்திற்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. இந்த நாளில்தான் உமா தேவி என்று அழைக்கப்படுகிற அம்பிகை தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். அவர் அவதரித்த நாள் மட்டுமல்லாமல், இந்த நாளில்தான் பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை வெளிக்கொண்டுவந்த நாள் என்றும் நம்பப்படுகிறது. அதேபோல் பூமியில் ஒரு பிரளயம் ஏற்பட்டபோது அமிர்தம் அடங்கிய குடத்தை பிரம்மா அதில் மிதக்கவிட்டுள்ளார். அந்த குடத்தை சிவபெருமான் அடித்து உடைக்க, அதிலிருந்த அமிர்தம் சிதறி, குடம் உடைந்து உருண்டு ஓடியது. அப்படி குடம் ஓடிநின்ற இடம்தான் கும்பகோணம் என்பதால்தான் அங்கு நீராடுவது சிறப்பு பெறுகிறது. அதுமட்டுமல்லாமல், வருண பகவானுக்கு சிவ பெருமான் சாப விமோசனம் அளித்ததும் இதேநாளில்தான் என்பதாலேயே மூதாதையர்களை வழிபட்டு அவர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் இந்த நாளில் நம்முடைய பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. குறிப்பாக, கும்பகோணத்தில் மகாமக நதியில் ஏன் நீராடவேண்டுமென்று சொல்லப்படுகிறது என்று பலருக்கும் தெரியாது.


கும்பகோணத்திலிருக்கும் புனித நீர்நிலைகளில் நீராடினால் கிடைக்கும் பலன்கள்

பிற இடங்களில் செய்த பாவம் காசியில் தீரும் என்று சொல்வதுண்டு. ஆனால் காசியில் பாவம் செய்தோருக்கே அதிலிருந்து விமோசனம் வேண்டுமானால் அவர்கள் கும்பகோணத்தில் நீராடவேண்டுமாம். அத்தகைய சிறப்புமிக்க கும்பகோணத்திலுள்ள திருக்கோவில்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்து அங்குள்ள புண்ணிய நதிகளில் தீர்த்த நீராடினால் 7 ஜென்மங்களுக்கு செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். அந்த நாளில் இறந்துபோன முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு கடன் செய்தால் நன்மை கிட்டும். மாசிமகத்தன்று மட்டுமல்லாமல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாமகத்தன்று கும்பகோணத்தில் வெகு சிறப்பாக திருவிழா எடுக்கப்படும். இதில் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொள்வர். பல நூற்றாண்டுகளாக கும்பகோணத்தில் கொண்டாடப்படும் இந்த மகாமக தினத்தன்று, தங்களுடைய பாவங்களை போக்க மக்கள் எப்படி தன்னில் நீராடுகிறார்களோ, அதுபோல் நதி தேவதைகளும் மக்களால் தனக்குள் விழுந்த பாவத்தை போக்க கும்பகோண திருத்தலத்திற்கு வந்து புனிதம் பெறுவதாக தலப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

எந்த தெய்வத்தை வழிபடுவது?

பொதுவாகவே சிவராத்திரி என்றால் அது சிவனுக்குரியது என்றும், ஏகாதசி என்றால் அது பெருமாளுக்குரியது என்றும், தைப்பூசம் என்றால் அது முருகனுக்குரியது என்றும் சொல்வதுண்டு. அதுபோல, மாசி மகம் எந்த தெய்வத்துக்கு சிறப்பு பெறுகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டுமானால் இந்த நாளில் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் மனதார வழிபடலாம். வேண்டுமானால் நம் முன்னோர்களையும்கூட திதியிட்டு வழிபடலாம். தாட்சாயணியாக உமாதேவி அவதரித்த நாள் இது என்பதால் சக்தி வேண்டும் பெண்கள், இந்த நாளில் அம்பிகையை நினைத்து விரதமேற்று வழிபடலாம். மாசி மகத்தன்றுதான் முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே மாசி மகத்தன்று முருகனுக்கும் தீபமேற்றி வழிபடலாம். பாதாள உலகில் இருள்சூழ்ந்து கிடந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து மீட்டுவந்த நாளும் மாசிமகம் என்பதால் இந்த நாளில் பெருமாளையும் வழிபடலாம். ஞானம், புத்தி, முக்தி வேண்டி வழிபடுவோர் கேது பகவானை கும்பிடலாம். இதனால் அறிவாற்றல் மேம்படும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே நவகிரக சந்ததியில் இருக்கிற கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.


மாசி மகத்தன்று தெய்வங்களை வழிபடும் முறை

மகம் நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். எனவே இந்த நாளில் ஆறுகள், குளங்கள், கடல்கள் போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் மற்றும் பித்ரு கடன் செய்யவேண்டும். மேலும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். வெளியே எங்கும் செல்ல முடியாவிட்டாலும் வீட்டிற்கு அருகிலிருக்கும் நீர்நிலைகளிலாவது நீராட வேண்டும். இந்த நாளில் விரதம் இருக்க விரும்புகிறவர்கள் அதிகாலையே எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவரவேண்டும். இப்படி செய்வதால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். அதேபோல், ஆண்குழந்தை வேண்டுமென்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை நோக்கி வேண்டினால் நிச்சயம் ஆண்குழந்தை கிட்டும். மாசி மகத்தன்று அதிகாலை குளித்துவிட்டு, மகாவிஷ்ணுவுக்கு துளசி அபிஷேகம் செய்தால் வைகுண்டத்திலேயே இடம் கிட்டும். அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்ய வெற்றிகளும், வாழ்க்கையில் இன்பங்களும் தேடிவரும். மாசி மகத்தன்று கும்பகோணம் மட்டுமல்லாமல் நெல்லையப்பர் கோவிலிலுள்ள பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா எடுக்கப்படும். இதை அப்பர் தெப்பம் என்று சொல்கின்றனர். இந்த நாளில் வராக பெருமாளை வழிபட்டால் சொந்த வீடு, நிலம் வாங்கும் பாக்கியம் கிட்டும். குறிப்பாக, ஒரு கலசத்தில் சுத்தமான நீரை எடுத்து அதில், துளசி, வில்வம், பச்சை கற்பூரம், பூக்கள் மற்றும் விபூதி ஆகியவற்றை போட்டு அவரவர் குல தெய்வத்திற்கு விளக்கேற்றி பூஜிக்கலாம். இப்படி எதுவுமே செய்ய முடியாதவர்கள் மாசி மக புராணம் படித்தாலும் புண்ணியம் கிட்டும்.

Updated On 11 March 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story