இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கார்த்திகை மாதம் என்றாலே கார்த்திகை தீபமும், ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்கும் பக்தர்களும்தான் நினைவுக்கு வருவார்கள். மாதங்களில் சிறந்தது கார்த்திகைதான் என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். கார்த்திகைக்கு இணையான மாதம் இல்லை, கிருத யுகத்திற்கு இணையான யுகம் இல்லை, கங்கைக்கு நிகரான புனித நதியில்லை என்று ஸ்கந்த புராணத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருமண மாதம் என்றும், தோஷங்கள் நீக்கும் மாதம் என்றும் அழைக்கப்படும் கார்த்திகை மாதத்தின் மகிமைகள் குறித்தும், கார்த்திகை தேய்பிறை அஷ்டமி "கால பைரவர்" வழிபாடு குறித்தும் பார்க்கலாம்.

"கார்த்திகை"

இருளை நீக்கி ஒளியை பெருக்கி வாழ்வை வளமாக்கும் மாதம் கார்த்திகை. விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதம் கருமேகங்கள் சூழ்ந்து குளிர் காற்று வீசும் கூதிர் காலமாகும். அத்துடன் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 வகையான பூக்களில் முதலில் குறிப்பிடப்படும் காந்தள் மலர் அதிகம் பூக்கும் மாதமும் கார்த்திகைதான்.


காந்தள் மலர் அதிகம் பூக்கும் மாதம் கார்த்திகை

கார்த்திகை நட்சத்திரத்தின் பெயர் தாங்கி நிற்கும் இம்மாதம் மிகவும் மங்களகரமானது. சிவன், முருகன், விஷ்ணு ஆகிய மூவருக்கும் மிகவும் பிடித்தமான மாதம் இது. கார்த்திகை சோமவாரம், கார்த்திகை தீபம், கார்த்திகை தேய்பிறை அஷ்டமி ஆகியவை கார்த்திகை மாதத்தில் மிகவும் முக்கியமான விரத நாட்கள்.

கார்த்திகை சோமவாரம்

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் அனைத்தும் சிவபெருமானுக்கு உகந்த நாளாக அர்ப்பணிக்கப்பட்டு சோமவாரமாக அனுசரிக்கப்படுகிறது. பார்வதி தேவியோடு சேர்ந்திருக்கும் சிவன், சோமன் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உண்டு. சிவபெருமானுக்கு இந்த விரதத்தை முதன்முதலில் சந்திரன் அனுஷ்டித்ததால் சோமவார விரதம் என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் முக்கியமான விரதம் கார்த்திகை சோமவார விரதம். அபிஷேக பிரியரான சிவபெருமான், கார்த்திகை சோமவார விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம். சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருப்பவர்களுக்கு நற்பலன்களை அருள வேண்டும் என்று சந்திரன் வேண்டிக்கொண்டதற்கு இணங்க சிவபெருமான் அவ்வாறே அருளுகிறார் என்பது நம்பிக்கை.


பார்வதி தேவியோடு சேர்ந்திருக்கும் சிவன், சோமன் என்று அழைக்கப்படுகிறார்

கார்த்திகை சோமவாரம் விரதம் இருப்பவர்கள், சிவனின் அருளை பெற்று எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடலாம். கெட்ட சக்திகள், மனநோயிலிருந்து விடுபடலாம். அனைத்து செல்வங்களையும் பெற்று வளமான வாழ்க்கை வாழலாம். பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திகை தீபம்

விஷ்ணுவும் பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர்கள் என சண்டையிட்டபோது, அந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றிய தினமே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபம் மூன்று நாட்களாக கொண்டாடப்படுகின்றது. முதல்நாள் குமரலாய தீபம் என்றும், இரண்டாவது நாள் சர்வாலய தீபம் என்றும், மூன்றாவது நாள் விஷ்ணுவாலய தீபம் என்றும் வழிபடப்படுகிறது.

கார்த்திகை தீப திருநாளன்று திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத்திற்கு முன்னதாகவே சுமார் 2660 அடி உயர மலை மீது கொப்பரை வைக்கப்படும். அதில் டன் கணக்கில் நெய் ஊற்றப்பட்டு கார்த்திகை தீப திருநாளன்று மாலை 6 மணி அளவில் தீபம் ஏற்றப்படும். இதனை தரிசித்து, மக்கள் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றுவது வழக்கம். அந்த வகையில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் இல்லத்தில் 27 தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. இல்லங்களில் தீபம் ஏற்றி வழிபட்டால், இருள் அகன்று ஒளி மிகுந்த வாழ்க்கை அமையும் என்பதால், ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் பரணி தீபம்

கார்த்திகை தேய்பிறை அஷ்டமி

கார்த்திகையில் வரும் தேய்பிறை அஷ்டமி, கால பைரவருக்கு ஜென்மாஷ்டமி ஆகும். தனக்கு இருந்த 5 தலைகளால் கர்வம் கொண்ட பிரம்மனின் திமிரை அழிக்க, பிரம்மனின் ஒரு தலையை கொய்ய பைரவர் அவதரித்த நாளே கார்த்திகை தேய்பிறை அஷ்டமி என்பதால், அது பைரவருக்கு ஜென்மாஷ்டமியாக கடைபிடிக்கப்படுகிறது.

எனவேதான் மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு விசேஷம் என்றாலும் கார்த்திகை மாத அஷ்டமி மிக மிக சிறப்பு வாய்ந்ததாக வழிபடப்படுகிறது. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். பைரவாஷ்டமி, வைக்கத்து அஷ்டமி என்றெல்லாம் போற்றுகிறார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை தேய்பிறை அஷ்டமி வரும் நவம்பர் 23-ம் தேதி வருகிறது. அன்றைய தினம் கோயில்களில் பைரவருக்கு காலையும் மாலையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். சில கோயில்களில், காலை 7 மணிக்கெல்லாம் பூஜைகள் நடைபெறும். திருச்சி திருப்பட்டூரில் உள்ள பிரம்ம தேவன் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு ராகுகால வேளையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.


நினைத்ததை 30 நாளில் நிறைவேற்றித்தரும் கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

வழிபாட்டு பலன்கள்

கார்த்திகை தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து கால பைரவரை வணங்கி தங்களின் கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

அன்றைய தினம் மாலை வேளையில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு வடைமாலை சார்த்தி பக்தர்கள் வணங்குவார்கள். முடிந்தால், பக்தர்கள் வெண்பொங்கல், மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பான பலன்களை அருளும். செந்நிற மலர்கள், அரளி மலர்களை கொண்டு பைரவருக்கு மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கால பைரவர் சனிபகவானுக்கே ஆசானாக போற்றப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே சனி பகவானின் இன்னல்களில் இருந்து விடுபட கால பைரவரை சராணாகதி அடைந்துவிட்டால், துயரங்களில் இருந்து மீண்டுவிடலாம். கார்த்திகை தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு திருமணத் தடைகளை அகற்றுமாம். பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்களுக்கு தோஷத்தை நீங்குவதுடன், எம பயத்தை போக்குமாம். மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை வணங்கினாலே, அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள் என்பதும், பில்லி, சூனியம் அகன்று, வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

Updated On 25 Nov 2024 9:29 PM IST
ராணி

ராணி

Next Story