இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கார்த்திகை மாதம். கார்த்திகை என்றாலே நம் மனதில் பல அழகான நினைவுகள் தோன்றும். கார்த்திகை மாதத்தில் காந்தல் பூக்கள் பூத்து குலுங்கும். வானில் விண்மீன்கள் மின்னும். இதில் மிக முக்கியமானது, கார்த்திகை மாதத்தில் பொழியும் சோனை மழை. இதனால் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்கும். இந்த அழகான காட்சிகளுக்கு இடையே, கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வரும் இந்தத் திருவிழா, இறைவன் ஒளி வடிவாகத் தோன்றியதை நினைவுபடுத்துகிறது. இந்த நாளில், இல்லங்களிலும் கோயில்களிலும் விளக்குகள் ஏற்றி வைத்து இறைவனை வழிபடுவது வழக்கம். இதில் குறிப்பாக திருவண்ணாமலையில் கொண்டாடப்படும் மகா கார்த்திகை தீபம் உலகப் புகழ்பெற்றது. இந்த தீபம் ஏற்றப்படும் நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து இறைவனை வழிபடுவார்கள். இப்படி பல பெருமைகளை கொண்ட, மிகவும் தொன்மை வாய்ந்த இந்த கார்த்திகை தீபத் திருநாளின் மகத்துவம் என்ன? கார்த்திகை தீபத்தை எங்கே? எப்படி? எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்? கார்த்திகை தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? போன்றவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

கார்த்திகை தீபமும் அதன் முக்கியத்துவமும்


கார்த்திகை தீபத் திருவிழா விளக்கு ஏற்றுதல் நிகழ்வு

கார்த்திகை தீபம் என்பது வெறும் ஒரு திருவிழா மட்டுமல்ல. இது சிவபெருமான் மற்றும் அவரது மகன் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான வழிபாட்டுமுறை. கார்த்திகை மாதத்தின் முடிவில் வரும் பௌர்ணமி தினத்தில், வானும் மண்ணும் ஒருசேர ஒளி வீசும். இந்த காலத்தில், சிவபெருமான் தன் அழகான திருக்கோலத்தை காட்டுவார், முருகன் தன் வேலை ஏந்தி அருள் பாலிப்பார். கார்த்திகை தீபத்தின் மிக முக்கியமான அம்சம் விளக்கு ஏற்றுவது. வீடுகளில், கோவில்களில், தெருக்களில் எங்கும் விளக்குகள் ஏற்றப்படும். இந்த விளக்குகளுக்குப் பின்னால் ஆழமான அர்த்தம் உள்ளது. விளக்கின் திரி: நம் அகங்காரத்தை குறிக்கிறது; விளக்கின் எண்ணெய்: நம் பிறவி இயல்பைக் குறிக்கிறது; விளக்கின் சுடர்: நம் உள்ளார்ந்த நடத்தையை குறிக்கிறது; வேதங்கள் கூறுவது என்னவென்றால், விளக்கின் சுடர் போல நம் அகங்காரத்தை எரித்துத் தள்ள வேண்டும். அதாவது, நம்மை மையமாகக் கொண்ட எண்ணங்களை விட்டுவிட்டு, மற்றவர்களையும், உலகையும் நேசிக்க வேண்டும். கார்த்திகை தீபம் என்பது வெறும் ஆன்மிக நிகழ்வு மட்டுமல்ல. இது நம் வாழ்வில் செழிப்பு மற்றும் ஐஸ்வர்யத்தை கொண்டுவரும் ஒரு அற்புதமான மனமாற்றம். விளக்கு ஏற்றுவது என்பது நம் வீட்டில் நேர்மறை சக்திகளை வரவழைத்து, எதிர்மறை சக்திகளை விரட்டும். அந்த ஒளி நம் இருள்களைப் போக்கி, நம் வாழ்வில் ஒளி கொண்டு வரும். அந்த ஒளியின் சக்தியை நாம் நம் வாழ்வில் ஏற்றுக்கொண்டு, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இந்த திருவிழாவை கொண்டாடுவதன் மூலம், நம் முன்னோர்களின் ஞானத்தை நாம் பெறலாம். நம் வாழ்வில் ஒளி, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒரு சேர உணரலாம்.

கார்த்திகை தீபத்தின் பின்னணியில் உள்ள புராணங்கள்


பிரம்ம தேவர் மற்றும் நாராயணன்

ஒரு காலத்தில், பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே யார் உயர்ந்தவர் என்ற எண்ணம் தோன்றியது. இந்தப் போட்டி மிகுந்த உச்சத்திற்கு சென்றதால், பிரபஞ்சமே குழம்பித் தவித்தது. இந்த இருவரையும் சமாதானப்படுத்தி, உண்மையான உயர்வை உணர்த்த வேண்டும் என்று சிவபெருமான் முடிவு செய்தார். அதன்படி, சிவபெருமான் எல்லையற்ற நெருப்பின் வடிவமாக தோன்றினார். அந்த நெருப்பு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பின் மேல் மற்றும் கீழ் எங்கே முடிகிறது என்பதை கண்டுபிடித்து தனக்குச் சொல்லுமாறு பிரம்மா மற்றும் விஷ்ணுவிடம் கூறினார். பிரம்மா அன்னம் போன்ற பறவை வடிவத்தை எடுத்துக்கொண்டு, நெருப்பின் மேல் பகுதியை அடைய முயற்சித்தார். விஷ்ணு ஒரு பன்றியின் வடிவத்தை எடுத்துக்கொண்டு, நெருப்பின் அடிப்பகுதியை அடைய முயற்சித்தார். இருவரும் தங்கள் தங்கள் வழியில் பயணித்தனர். ஆனால், எவ்வளவு தூரம் சென்றாலும் நெருப்பின் முடிவை அடைய முடியவில்லை. நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் என காலம் சென்றன. ஆனால், பிரம்மா மற்றும் விஷ்ணு இருவரும் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்தனர். அவர்கள் இருவரும் எவ்வளவு சென்றாலும், நெருப்பு முடிவடையாமல் எரிந்து கொண்டே இருந்தது. இதன் மூலம், சிவபெருமானின் சக்தி எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்தனர். தங்களின் அகந்தையை விட்டுவிட்டு, சிவபெருமானின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலையில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் பெரிய தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபம், சிவபெருமானின் அளவற்ற சக்தியையும், பிரகாசத்தையும் குறிப்பதாக புராணங்கள் கூறுகின்றன.


திருவண்ணாமலை உச்சியல் தீபம் ஏற்றும் நிகழ்வு

அதேபோல் மற்றொரு புராணக் கதையின்படி, சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து ஆறு சுடர்கள் தோன்றியதாகவும், அந்த ஆறு சுடர்களும் பூமியில் விழுந்து ஆறு அழகான ஆண் குழந்தைகளாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆறு கன்னிப் பெண்கள் தத்தெடுத்து வளர்த்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆறு குழந்தைகளும் தனித்தனியாக வளர்ந்தாலும், அவர்கள் அனைவரும் சிவபெருமானின் அம்சங்களே என்பதை உணர்ந்த பார்வதி தேவி, தன் தெய்வீக சக்தியால் அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே ஆண் குழந்தையாக இணைத்து, முருகன் என்ற பெயரிட்டு அழைத்தாள். இவ்வாறு முருகப்பெருமான் அவதரித்த தினமே கார்த்திகைத் திருநாளாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் விளக்குகள் ஏற்றி, பூஜைகள் செய்து, முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

திருவண்ணாமலையின் சிறப்புகள்


பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி என முக்தி தலங்களில் ஒன்றாக விளங்கும் அற்புதமான திருத்தலம் திருவண்ணாமலை. இந்தத் தலத்தில் எம்பெருமான் அக்கினி சொரூபமாக, ஜோதி பிழம்பாக நின்று அருள் பாலிக்கிறான். அந்த அனலின் அழகிய அரண்மனையான திருவண்ணாமலை கோயிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்கின்றோம் என்றால், எப்போதும் ஒரு வினோதமான உணர்வு நமக்கு ஏற்படும். வெளியே எவ்வளவு குளிர் இருந்தாலும், கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒருவித வெப்பம் சூழ்ந்து கொள்ளும். அந்த சமயம் இப்போதே நமக்கு இப்படி இருக்கிறதே "சுவாமி ஜோதிப்பிழம்பாக நின்றபோது எப்படி இருந்திருப்பார்?" என்ற எண்ணம் மனதில் தோன்றும். இன்றும் அந்த கோயிலில் உணர்கின்ற வெப்பத்தை நினைத்து நம் உடல் நடுங்கி விடும். அந்த அளவுக்கு அந்தத் தலம் பரிசுத்தமானது. இந்த அற்புதமான தலத்தில் பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் மட்டுமல்ல, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் "நான் இருக்கின்றேன், துன்பம் ஒருபோதும் உங்களை அண்டாது" என்று சொல்வதற்காகவே எம்பெருமான் நெருப்பு மழையாக நின்று காட்சி கொடுத்தான். அந்த அற்புதமான நாளைதான் நாம் தீபத்திருநாளாக கொண்டாடி வருகிறோம்.


நெருப்பு மழையாக காட்சி கொடுக்கும் எம்பெருமான்

எம்பெருமானை மேலே தேடி பறந்து போய்க்கொண்டிருந்த பிரம்ம தேவராலும், கீழே தேடி போய்க்கொண்டிருந்த நாராயணனாலும் காணமுடியாவில்லை. ஏன் என்றால் செல்வ செருக்கினாலும், கல்வியின் செருக்கினாலும் இறைவனை காண்பது என்பது முடியாத காரியம் என்பதாலேயே, இந்த உண்மைகளை நமக்கு உணர்த்துவதற்காகவே, திருவண்ணாமலைக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. அண்ணாமலை என்றால் என்ன? அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது. பிரம்மாவால் முடியையும், விஷ்ணுவால் அடியையும் அளவிட முடியாத அந்த மாபெரும் மலை என்பதால் அது அண்ணாமலை எனப்பட்டது. இறைவன் நம்மைவிட மிக உயர்ந்தவர் என்பதை உணர்த்துவதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் அண்ணாமலையார் என அழைக்கப்படுவதும் இதனால்தான். திருவண்ணாமலையை நினைக்கும் போதெல்லாம், நம் உள்ளிருக்கும் ஆணவம், அகந்தை, பொய்யான பெருமிதம் ஆகியவற்றை நீக்கி, இறைவனை நோக்கி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தோன்றும். இதனாலேயே "நினைக்க முக்தி தரும் தெய்வீக திருத்தலம் திருவண்ணாமலை" என்ற வாக்கு, நம் முன்னோர்களால் நமக்கு வழங்கபட்டது.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறைகள்


கார்த்திகை தினத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் அகல்விளக்கு தீபங்கள்

தீபம் ஏற்றுவது என்பது வெறும் விளக்கு ஏற்றுவது மட்டும் அல்ல. அது ஒரு பாரம்பரியம், ஒரு நம்பிக்கை. திருவண்ணாமலை மலையில் ஏற்றப்படும் மகாதீபத்தின் ஒளியைப் போலவே, வீடுகளிலும் ஒளி வீச வேண்டும் என்பதற்காகவே இந்த தீபங்கள் ஏற்றப்படுகின்றன. திருவண்ணாமலை மலையின் உச்சியில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்படும். அதைப் பார்த்து, நாம் நம் வீடுகளிலும் விளக்குகள் ஏற்ற வேண்டும். ஆனால், 6.05 மணிக்கு மேல்தான் விளக்கேற்ற வேண்டும். இதற்காக, நாம் புதிதாக 5 முதல் 10 விளக்குகள் வாங்கி, பழைய விளக்குகளையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். இந்த விளக்குகளை நன்றாகக் கழுவி, மஞ்சள் குங்குமம் இட்டு தயார் செய்து வைக்க வேண்டும். கார்த்திகை தீப நாளில், மாலை 5 மணிக்கே வீட்டு வாசலில் கோலமிட்டு, விளக்குகளை எடுத்து வைக்க வேண்டும். குறைந்தது 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக எத்தனை விளக்குகள் வேண்டும் என்றாலும் ஏற்றலாம். வாசலில் கோலத்தின் மீது தாம்பூலம் வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முதலில் வாசலில் விளக்கேற்றி, பிறகு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் ஏற்றிய விளக்கை வெளியே எடுத்துச் செல்லக்கூடாது. வாசலில் வைத்த குத்துவிளக்கு 30 நிமிடங்கள் எரிந்தால் போதும். பிறகு அதை உள்ளே எடுத்து வைக்கலாம். வீட்டின் மற்ற இடங்களில் ஏற்றிய விளக்குகளை அடிக்கடி தூண்டிவிட வேண்டாம். இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து விளக்கேற்ற நல்ல பலன் கிடைக்கும்.


இருளை அகற்றும் விளக்கின் ஒளி

இதுதவிர கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கென்று சில முறைகளும், வழக்கங்களும் இருக்கின்றன. அதாவது, கிழக்கு நோக்கி விளக்கை ஏற்றினால், நம்முடைய கஷ்டங்கள் தீரும். மேற்கு நோக்கி ஏற்றினால், கடன் தொல்லை நீங்கும். வடக்கு நோக்கி ஏற்றினால், திருமணத் தடை நீங்கும். தெற்கு நோக்கி ஏற்றினால் தீமை வரும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஒரு முகம் கொண்ட விளக்கு நம் விருப்பங்களை நிறைவேற்றும். இரண்டு முகம் கொண்ட விளக்கு குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும். மூன்று முகம் கொண்ட விளக்கு குழந்தை பாக்கியத்தைத் தரும். நான்கு முகம் கொண்ட விளக்கு வறுமையை நீக்கி செல்வத்தைத் தரும். ஐந்து முகம் கொண்ட விளக்கு எல்லா நன்மைகளையும் தரும் என்பதே நம்பிக்கை. இதே போல் விளக்கில் நெய் ஊற்றினால் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும். எள் எண்ணெய் ஊற்றினால், எல்லாவிதமான தீய சக்திகளும் நம்மை விட்டு விலகிவிடும். விளக்கெண்ணெய் ஊற்றினால் நமக்குப் புகழ் கிடைக்கும். நெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அம்மனை வணங்கினால் அன்னையின் அருள் கிட்டும் எனவும் நம் முன்னோர்கள் கூறுவார்கள். இதில் கவனிக்க வேண்டியது விளக்கை வாயாலோ அல்லது கையாலோ அணைக்கக் கூடாது. பூவால் அதனை குளிர்விக்கலாம் அல்லது தூண்டும் குச்சியில் லேசாக அழுத்தலாம்.

Updated On 9 Dec 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story