இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

‘எந்த வினையானாலும் கந்த அருள் இருந்தால் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அழகன், குமரன், பாலன், ஆறுமுகன் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் முருகனின் கந்த சஷ்டி குறித்து நம்முடன் உரையாடுகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். மேலும் முருகனது பெருமைகள் குறித்தும், மகா சஷ்டியின் சிறப்பு பற்றியும் விளக்குகிறார் அவர்.

முருகனது பெருமைகளை பற்றி கூறுங்கள்!

‘சுக்கிற்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது, சுப்ரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமும் கிடையாது’ என்பது ஆன்றோர் வாக்கு. முருகன் என்று சொன்னாலே அவன் செவ்வாய் கிரகத்தை ஆட்சி செய்பவன். முருகன் என்றால் அங்க காரகன் என்று பெயர். அவனுடைய ஆறு தலைகளும் நமக்கு ஆறுதலை தருகிறது. முகம் என்பது முக்கியம் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. சுந்தரகாண்டத்தில் முருகனை பற்றிய குறிப்புகள் உள்ளன. ராமாயணத்தில் பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் ‘ஸ்கந்தனது உற்பத்தி’ பற்றி சொல்கிறார். முருகனின் பிறப்பின் தன்மையைக் கேட்டாலே அங்கு மழலைச் செல்வம் ஏற்படும் என்று சொல்கிறார். இந்த தெய்வத்தை கும்பிட்டால் இந்த பலன் கிடைக்கும் என்று எந்தவொரு தெய்வத்தையும் சிறப்பித்து எழுதாத விஸ்வாமித்திரர், முருகனை பற்றி நினைத்தாலே போதும், வாழ்க்கையில் எல்லா துன்பமும் நீங்கிவிடும் என அவனது திரு அவதாரத்தை போற்றிப் பாடியுள்ளார். ஆதிகாவியத்தில் முதலில் முருகனைப் பற்றி வருகிறது. கவி காளிதாசர், அகத்தியர், சுகபிரம்ம மகரிஷி போன்றோரும் முருகனை புகழ்ந்து பாடியுள்ளனர்.


முருகனை புகழ்ந்து பாடியுள்ள விஸ்வாமித்திரர் உள்ளிட்ட முனிவர்கள்

மாதந்தோறும் சஷ்டி வந்தாலும் மகா சஷ்டி ஏன் சிறப்பு வாய்ந்தது?

சூரியன் சிவனையும், சந்திரன் பராசக்தியையும், செவ்வாய் முருகனையும் குறிக்கக்கூடியது. நமது உடலில் தலை என்பது செவ்வாயை குறிக்கக்கூடிய மேஷ ராசி. ஆடு என்பது முருகனின் வாகனம். கழிவுகள் வெளியேற்றும் பகுதி எட்டாமிடம் விருச்சிகம். அதுவும் மேஷத்தினால் ஆளப்படக்கூடியது. இவை இரண்டையுமே முருகன்தான் ஆட்சி செய்கிறான். இவை இரண்டுமே சரியாக இயங்கவேண்டும். அதற்கு மனிதனுக்கு உணவிலும் உணர்விலும் கட்டுப்பாடு வேண்டும். முருகன் ஒரு தெய்வ சேனாதிபதி. முருகனை ராவுத்தன் என்பார் அருணகிரி பெருமான். ராவுத்தன் என்றால் குதிரையை ஓட்டுபவன். மேஷ ராசியில் முதலில் வரக்கூடியது கேது என்று சொல்லக்கூடிய அஸ்வினி நட்சத்திரம். அது குதிரை. உடல் இயங்குவதற்கு குதிரை திறன் தேவை. அஸ்வினி நட்சத்திரத்திற்கு பிராணா என்றும் பெயர். மேஷ ராசியில் இரண்டாவதாக வரக்கூடிய நட்சத்திரம் அப பரணி. இதற்கு அடுப்பை சொல்கிறார்கள். நாம் சாப்பிடும் உணவே கழிவுகளை உற்பத்தி செய்கிறது, மேலும் உடல் மாறுவதற்கும் அழிவதற்கும் அதுவே காரணமாகிறது. எனவே அப பரணியின் பெயர் யமா. இரண்டையும் சேர்த்தால் பிராணயாமா என்று வரும். எனவே மனிதனுக்கு உணவே மருந்தாகவும், விஷமாகவும் மாறும். எனவே மனிதன் 6 நாட்கள் உணவிலும், உணர்விலும் கட்டுப்பாட்டை கொண்டுவரும்போது உடல் ஆரோக்கியம் சீர்படுகிறது. முருகன் ஆரோக்கியத்தை குறிக்கக்கூடியவன். மனிதன் கவலையிலிருக்கும்போது அதிகம் உண்ணத் தொடங்குவான். எனவே அமாவாசையன்று உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் அதன் பிரதிபலிப்பு மறுநாள் கட்டாயம் உடலில் தெரியும்.


சிறப்பு வாய்ந்த மகா சஷ்டியில் அருள்புரியும் காமேஸ்வரி

அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமையை ஆளக்கூடியவள் காமேஸ்வரி. சூரியனும் சந்திரனும் சற்று விலகும்போது சிறு ஒளிக்கீற்று தென்பட்டு தன்னம்பிக்கையை கொடுக்கும். அந்த நாளின் திதி கணபதியின் பெயர் பால கணபதி. இந்த நாளில் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு, மனதை நேர்வழியில் செலுத்த துவங்கினால், உடலும் உள்ளமும் தெளிவுறும். ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாக இருக்குமென்பதால், மனிதன் தனது ஆற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு இறை வழிபாடானது அவசியம். உடலையும், உள்ளத்தையும் தயார் செய்துகொள்ள 6 நாட்கள் தொடர்ந்து முருகனை வழிபடவேண்டும். இதுதான் கந்த சஷ்டி விரதம்.

கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்வது எப்படி?

இப்போது நிறையப்பேர் அலுவலகம் உட்பட பல்வேறு வேலைகளுக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். எனவே எந்த விரதம் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை தேவை. அதேபோல் வேலைசெய்யும் சூழலையும் கவனிக்கவேண்டும். தினசரி ஒருவேளை விரதம் அல்லது சைவ உணவு விரதம் இருக்கலாம். எனவே இறைவனுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, இறை பிரார்த்தனையை கேட்கவேண்டும். அகத்தியர் தனது சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்த முருகபெருமான் மந்திரத்தை தினமும் 6 வேளை சொல்லிவந்தால், முருகன் பிரம்மாண்ட பொருளாதார முன்னேற்றத்தை அருளுவார். சொந்த வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்களும் மந்திரத்தை சொல்லலாம்.


சஷ்டி விரதத்தை முறைப்படி மேற்கொள்ளும் வழிமுறைகள்

கந்த சஷ்டி வழிபாட்டு முறை என்ன?

முருகனின் வரைபடத்தையோ, புகைப்படத்தையோ வைத்து, சிவப்பு நிற பூவை போட்டு, மயிலுக்கும் தனிப்பட்ட முறையில் பூ போடலாம். கந்த சஷ்டி காலங்களில் அரைத்த மஞ்சள் மற்றும் சந்தனத்தால் கோயில்களில் இருக்கும் நாகங்களுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் வட இந்தியர்கள். இதனால் அவர்களுக்கு பெரும் பொருளாதார வசதிகள் ஏற்படுகின்றன. எனவே கந்த சஷ்டி காலங்களில் வீட்டில் நாக உரு இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்யலாம் அல்லது வீட்டின் அருகிலிருக்கும் கோயிலில் உள்ள நாக சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யலாம். முருகனின் வழிபாடு எங்கே நடக்கிறதோ அங்கே அனைவரும் அமைதியாக இணையுடன் இருப்பார்கள். அதேபோல் செவ்வாய் தோஷம் நீங்கும். முருக பெருமானுக்கு ஜல ஜன்மனே என்ற பெயர் இருக்கிறது. எனவே வீட்டிற்கு பக்கத்திலிருக்கும் ஓடையில், சிறு தேனை ஊற்றி, ‘நிலத்திற்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால் மன்னித்துவிடு’ என்று கந்த சஷ்டி விரதத்தின் 6 நாட்களிலும் செய்யவேண்டும். அதேபோல் முருகனுக்கு தேன், திணைமாவு படைத்து வணங்கினால் மிகப்பெரும் நன்மை ஏற்படும். இந்த வருடம் சஷ்டி விரதம் நடக்கக்கூடிய காலகட்டத்தில் செவ்வாய் பூச நட்சத்திரத்தில் இருக்கிறார். பூசம் சனீஸ்வரரின் நட்சத்திரம் என்றாலும் அதற்கு ஆளுமை குரு. பிரகஸ்பதி பிறந்த நட்சத்திரமும்கூட. கந்த புராணத்தை வாங்கி தினமும் 2 பக்கத்தை வாசிக்க துவங்கவேண்டும். ஒவ்வொரு நாளிலும் முதல் 10-15 நிமிடங்கள் இறை வழிபாட்டுக்கென ஒதுக்கி துவங்கவேண்டும்.


சூரபத்மனை வென்று மரத்தை பிளந்து உருவாக்கப்பட்ட மயில் மற்றும் சேவல்

கந்த சஷ்டியில் முக்கியமானதே சூர பத்மனை வதம் செய்வதுதான். அந்த சூரசம்ஹாரம் பற்றி சொல்லுங்கள்!

சூரசம்ஹாரத்துக்கும் மற்ற அவதாரங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம். ஒருமுறை நாரத மகரிஷி, “எத்தனையோ அவதாரங்களை எடுத்தாய்! கிருஷ்ண அவதாரத்திற்கு பிறகு கடைசியாக கல்கி அவதாரம்தான் எடுப்பேன் என்கிறாய்! கடைசியாகத்தான் வருவாய் என்றால் அதுவரை எங்களை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?” என்று பெருமாளை கேட்டாராம். அதற்கு பெருமாள், “சுப்ரமணியன், கந்தன், குகன், கார்த்திகேயன் என்று சொல்லக்கூடிய என்னுடைய மருமகன் இருக்கிறான்” என்று சொல்கிறார். இப்போதுகூட போர்களில் சண்டை ஏற்பட்டால், பூமிக்கடியில் குடைந்த குகையில் ஒளிந்துகொள்கிறார்கள். அங்கு குகனாக நின்று காப்பாற்றுகிறான் முருகன். எனவேதான் கந்த சஷ்டியின் 6 நாட்கள் முருகனை வழிபடும்போது அவன் குகனாக தன் இதய குகையிலே வைத்து காப்பாற்றிவிடுவான். இந்த ஆண்டு கந்த சஷ்டி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அடுத்த ஆண்டு இந்தியாவிற்கு செவ்வாய் திசை செவ்வாய் புத்தி ஆரம்பிக்கிறது. இந்த 7 வருடங்களும் இந்தியாவில் முருகன் வழிபாடு அதிகமாக இருந்தால் பல்வேறு நன்மைகள் உலகத்திற்கே மிகுதியாக வந்துசேரும்.


வள்ளி மற்றும் தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகன்

சூரசம்ஹாரத்திற்கு வருவோம். மற்ற அவதாரங்கள் எல்லாம் தன்னிடம் வந்த பொருட்களையெல்லாம் அழித்துவிடும். ஆனால் முருகன் மட்டும் ஒரு பொருள் தன்னிடம் வந்தால் அதை மாற்றி, ஏற்றி முன்னேற்றி விடுவான். சூரன் பல்வேறு வடிவங்களில் வருகிறான். நாம் உடலாக பிறப்பெடுக்கும்போது நமக்குள் 49 மறுகணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. முருகனின் மாமனாரான இந்திரன் ஒரு விளக்கத்தை கொடுக்கிறான். திதி என்ற காஸ்யப்பரின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. அதற்குள் இருக்கும் வாயுவின் தத்துவத்தை 49ஆக பிரித்துவிடுகிறான். அதற்கு மறுகணங்கள் என்று பெயர். அதாவது மனிதனுக்குள் 49 வகையான சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால்தான் ஏழேழு பிறவி என்றெல்லாம் சொல்கிறார்கள். இவை அனைத்தையும் சீர்படுத்தவேண்டுமென்றால் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லக்கூடிய 6 இயந்திரங்கள் தேவை. சூரபத்மன் என்பவன் மாமரமாக, மாங்கனியாக வருகிறான். நமது உடலில் முதுகெலும்பானது சக்திவேலாக நிற்கிறது. அதில் இறைவன் நல்லதொரு சிந்தனையை ஏற்றிவிடுகிறான். அதை முருகன் இயக்கும்போது ஆசை என்னும் மரமானது பிளவுற்று நிற்கிறது. முருகனுக்கு நிராகுலன் என்பதால் அவருக்கு சஞ்சலப்படாத மனது இருக்கிறது. சூரபத்மன் முருகனை குழப்பினாலும் மனம் அசையாமல் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறது. அப்போது அந்த மரம் பிளவுற்று ஒன்று மயிலாகவும், மற்றொன்று இலகுவான பறவையாகவும் (சேவல்) மாறிவிடுகிறது. சஷ்டி விரதத்தை தொடங்கும்போது வழிபடக்கூடியவள் காமேஸ்வரி. அவள் ஆசையை தருபவள். அதுவே ஆறாம் நாள் விரதத்தை முடிக்கும்போது வழிபடக்கூடியவள் வஜ்ரேஸ்வரி. இவளால் வாழ்க்கையும் உடலும் வஜ்ரமாக மாறி, வைரம்போல் ஜொலிக்க வைக்கிறாள்.


கந்த சஷ்டிக்கு சிறப்புபெற்ற திருச்செந்தூர் கோயில்

சூரசம்ஹாரம் என்றாலே திருச்செந்தூரை சிறப்புவாய்ந்ததாக சொல்கிறார்களே! ஏன்?

குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கையை குறிக்கக்கூடியது திருச்செந்தூர். செவ்வாய் எங்கு நீச்சமடைகிறாரோ அங்கு குரு உச்சமடையும். அதேபோல், செவ்வாய் உச்சமடையும் வீட்டில் குரு நீச்சமடைகிறார். இந்த இரண்டும் சேர்ந்த இடம் திருச்செந்தூர். ஐந்து சித்தர்கள் தினமும் வெவ்வேறு வடிவங்களில் வந்து தினமும் இங்கு முருகப்பெருமானை வேண்டி வரம்பெறுவதாக சொல்கிறார்கள். அதேபோல் பூண்டி மகான் தினமும் திருவண்ணாமலையிலும் இருப்பாராம், திருச்செந்தூரிலும் இருப்பாராம். இதுபோக, ஆதிசங்கர பகவத்பாதருக்கு வயிற்றுப்பிணி வந்தபோது, அவரது குருநாதரான பதஞ்சலி முனிவரிடம் வேண்டுகிறார். அப்போது அவர், திருச்செந்தூருக்கு சென்று வழிபட ஆதிசங்கருக்கு வலியுறுத்துகிறார். இத்தனை சிறப்புகள் வாய்ந்தது திருச்செந்தூர். எனவே சஷ்டிவிரத காலத்தில் மிகப்பெரும் பொருட்செல்வம் மற்றும் ராஜ உத்தியோகம் வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்டு வழிபட வேண்டும்.


சஷ்டி விரதம் முடிந்து கட்டாயம் பார்க்கவேண்டிய முருகனின் திருக்கல்யாணம்

திருக்கல்யாணம் பற்றி சொல்லுங்கள்!

முருகப்பெருமானின் திருக்கல்யாணம் சர்வ மங்களங்களையும் நல்கக்கூடியது. எப்போதுமே ஒரு இதிகாசத்தையோ, புராணத்தையோ எடுத்தால் அதை யுத்தத்துடன் நிறைவுசெய்யக்கூடாது. எனவே வள்ளி, தெய்வானையுடன் முருகனது திருக்கல்யாணத்தில் முடிகிறது சஷ்டி விரதம். முருகனின் அவதாரத்தைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. யார் ஒருவர் முருகனின் திருக்கல்யாணத்தை மனக்கண்களால் காண்கிறார்களோ அவர்களது பல்வேறு தோஷங்கள் நீங்கிவிடும் என்கிறார் கவி காளிதாசர். எனவே தினமும் சுப்பிரமணியன் என்று சொன்னாலே வாழ்க்கையில் நல்லதொரு பொருளை உருவாக்கி, வளம்பல தந்துவிடுவான் முருகன்.

Updated On 11 Nov 2024 6:07 PM GMT
ராணி

ராணி

Next Story