தமிழ் மாதங்களில் 10-வது மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாள்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு உகந்தநாள் என்றும் சொல்லப்படுகிறது. மாதம்தோறும் வரும் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி அதாவது தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி மாதந்தோறும் வரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், ஒரு வருடத்தில் வரக்கூடிய மூன்று முக்கியமான அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கலாம். அது எந்தெந்த அமாவாசைகள் என்று பார்த்தால் ஆடி அமாவாசை, மகாளயபட்ச அமாவாசை என்று சொல்லக்கூடிய புரட்டாசி மாத அமாவாசை, தை அமாவாசை ஆகியவையாகும். இந்த மூன்று அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, தை அமாவாசையானது இன்னும் விசேஷமானது. முன்னோர்களின் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற அமாவாசையான இந்த தை அமாவாசையானது, சிவ வழிபாட்டிற்கும் உகந்த ஒரு நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் 2025-ஆம் ஆண்டுக்கான தை அமாவாசையானது எப்போது வருகிறது? அதன் சிறப்புகள் என்ன? அமாவாசை திதி எப்போது ஆரம்பித்து முடிகிறது? போன்ற பல்வேறு தகவல்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவம்
அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தல்
பொதுவாக ஒருவர் இறந்தவுடன், அவரது ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்து, தன்னுடைய பரலோகப் பயணத்தைத் தொடங்கி, முன்னோர்களின் பூமியான பித்ரு லோகத்தை அடைகிறது. அவர்களின் கர்மாவிற்கு ஏற்ப, அடுத்த பிறவியை எடுக்கும்வரை அந்த ஆன்மாவானது பித்ரு லோகத்திலேயே தங்கிவிடுமாம். அப்படி பித்ரு லோகத்தில் தங்கி வசிக்கும்போது, அவர்கள் பசி மற்றும் தாகத்தின் வேதனையை உணர்கிறார்கள். உடல் இல்லாத நிலையில் தாங்களாகவே எதையும் சாப்பிடவோ குடிக்கவோ முடியாத நிலையில், தங்கள் பசியைத் தணிக்க, அவர்கள் தங்களுடைய முந்தைய வாழ்விடமான பூமிக்கு வருகிறார்கள். அப்படி அவர்கள் வரும்போது அவர்களுடைய சந்ததிகள் மந்திரங்களை உச்சரித்து, எள்ளு, தண்ணீர் தெளித்து புனித சடங்குகளை மேற்கொள்கின்றனர். அப்படி நம்பிக்கையுடனும் அன்புடனும் செய்யப்படும் சடங்குகள் வழியாக முன்னோர்கள் தங்கள் பசி தீர்ந்து மனம் மகிழ்ந்து தங்கள் சந்ததியினர் மீது ஆசீர்வாதங்களைப் பொழிவார்களாம்.
தை அமாவாசையில் செய்ய வேண்டியவை
அமாவாசையன்று நதியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்தல்
தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை தை அமாவாசை என்று அழைப்பது வழக்கம். இந்து மதத்தினருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த நாள் முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. தை மாதம் துவங்கி, ஆனி மாதம் வரையிலான உத்தராயண காலத்தில் நிகழும் முதல் அமாவாசையான இந்த தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன், அதாவது ஒரு கடன் வாங்கினால் எப்படி அடைப்போமோ அதேபோன்று மூத்தோர் கடன் என்று சொல்லக்கூடிய இந்த கடன்களையும் அமாவாசை தோறும் முறைப்படி வழிபாடு செய்து அடைக்க வேண்டும். இதனை சரிவர செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றம், உயர்வு, மகிழ்ச்சி மட்டுமின்றி நாம் செய்யும் எந்த ஒரு காரியமும் தடையின்றி நடந்துகொண்டே இருக்கும். அதனால்தான், முன்னோர்களை மகிழ்விக்கும் வகையில், தவறாது தை அமாவாசை அன்று தர்ப்பணம், திலா ஹோமம், பிண்ட தர்ப்பணம் என மூன்று விதங்களில் முன்னோர்கள் வழிபாடு செய்யப்படுகிறது. இவை அவர்கள் இறந்தபோது செய்யப்படும் சிரார்த்த காரியங்களை போல் மிகவும் புனிதமானதாகும். அமாவாசை நாட்களில் கடல், ஆறு, நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள புனித தலங்களில் இவற்றை செய்வது இன்னும் விசேஷமானதாக இருக்கும். காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்து வந்தால் இன்னும் சிறப்பு. அன்றைய தினம் முன்னோர்களின் பெயரால் தானம் செய்தால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சியடையும்.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
தாய் இல்லாதவர்கள் அமாவாசை தர்ப்பணம் கொடுக்க மாட்டார்கள். தந்தை இல்லாதவர்கள் மட்டும்தான் தர்ப்பணம் கொடுப்பார்கள். பொங்கல் தினத்தன்று முன்னோர்களை வணங்காதவர்கள் இந்த தை அமாவாசை நாளில் வணங்கலாம். அதேபோன்று தந்தையை இழந்தவர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தில் அகால மரணம், பிரசவத்தின் போது உயிர்விட்டவர்கள், தற்கொலை செய்துகொண்டவர்கள் ஆகியோருக்கு தர்ப்பணம் செய்யாமல் படையல் போடுவதும் நல்லது.
அமாவாசை நாளன்று தவிர்க்க வேண்டிய உணவுகள்
அமாவாசை உணவில் தவிர்க்க வேண்டிய சர்க்கரை வள்ளி கிழங்கு
அமாவாசை நாளன்று சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் செரிமான பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அந்த நாளில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சமைத்து உண்பது நல்லது. அசைவ உணவுகளிலேயே சில காய்களையும் அமாவாசை நாளில் சமைக்க கூடாது என்றும் கூறுவது உண்டு. அப்படி பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகளான சர்க்கரை வள்ளி கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்த்து உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றை சாப்பிடலாம். கீரைகள் செய்வதை தவிர்த்துவிட வேண்டும். அமாவாசை நாளன்று ஒருவேளை மட்டும் அரிசி உணவு சாப்பிடுவது நல்லது.
அமாவாசை விரதம்
அமாவாசை படையல்
ஒருவேளை, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய தவறினால் அவர்களின் சாபத்தை பெற நேரிடும். அப்படி அவர்களின் சாபத்தை பெரும் பொழுதுதான் திருமண தடை,தொழிலில் பிரச்சினை, வேலையின்மை, குழந்தையின்மை, அகால மரணம், தீராத நோய் போன்ற கஷ்டமான காலங்கள் நம் வாழ்வில் உண்டாவதாக சொல்லப்படுகிறது. அதனால், பித்ரு தோஷம், பித்ரு சாபம் நீங்க வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக தை அமாவாசை நாளன்று, இறந்த ஆத்மாக்களுக்கு சாந்தம் அளிக்கவும், அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறவும் தவறாது சடங்கு, சம்பிரதாயங்களை பின்பற்றி விரதம் இருந்து பூஜை செய்வது நல்லது. இதுவரை செய்யாதவர்களும், செய்ய தவறியவர்களும் இதனை பின்பற்றுவதன் மூலம் உறவுகளிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதோடு, ஆரோக்கியம், செல்வம், வெற்றி, அமைதி ஆகிய அனைத்தும் கிடைக்கும்.
2025 தை அமாவாசையின் சிறப்புகள்
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு
தை மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசிக்கின்றார். ஜோதிட ரீதியாக சூரியன் பிதுர்காரகன் என்றும், சந்திரன் மாதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அமாவாசை என்பது மாதுர்காரகனும், பிதுர்காரகனும் ஒன்றாக இருக்கும் காலம் ஆகும். எனவேதான் பிதுர்காரகனான சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இதனை புண்ணிய காலம் என்றும் கூறுவதுண்டு. அந்த வகையில், 2025ம் ஆண்டின் முதல் அமாவாசையாக வரும் தை அமாவாசை, ஜனவரி 29-ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. இந்த அமாவாசை திதியானது ஜனவரி 28-ஆம் தேதியான செவ்வாய் கிழமை இரவு சுமார் 8 மணியளவில் துவங்கி, அடுத்த நாளான ஜனவரி 29-ஆம் தேதி மாலை சுமார் 7 மணி வரை உள்ளது. அன்று பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் இணைந்தே அமைந்துள்ளது. தை அமாவாசை வரும் நாளன்று புதன்கிழமை என்பதால் காலை 7.30 முதல் 9 மணி வரையிலான நேரம் எமகண்டம் ஆகவும், பகல் 12 முதல் 1.30 வரையிலான நேரம் ராகு காலமாகவும் உள்ளது. பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்துவிட வேண்டும் என்பதால், இந்த நேரங்களை தவிர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.