இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

வாழ்க்கையில் தீராக்கடன் நீங்கவும் திருமணம் வேண்டியும் தவமிருப்போர் பால முருகனை மனதில் நினைத்து ஒரு எளிய மந்திரத்தை சொல்ல வாழ்க்கையில் அனைத்து நலன்களும் செல்வங்களும் வந்து சேரும். குறிப்பாக, முருகனை போற்றி புகழ்ந்துவந்த சித்தர்களின் வழியை பின்பற்றினால் பல அருள்கள் வாழ்க்கையில் கிட்டும் என்கிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த். தமிழ்க்கடவுளான முருகன் பற்றியும், அவரை வழிபட்ட சித்தர்கள் பற்றியும், அந்த சித்தர்கள் கூறிய எளிய பரிகாரங்கள் குறித்தும் நமக்கு எடுத்துரைக்கிறார் அவர்.

எல்லாருக்குமே பழனியம்பதி என்று சொன்னாலே போகர்தான் ஞாபகத்திற்கு வருவார். போகர், கோரக்கர், கொங்கனர், புலிப்பாணி என்று பல சித்தர்கள் வாழ்ந்து, தங்கள் தவநிலையை பெருக்கிக்கொண்ட இடம்தான் பழனியம்பதி. பழனி என்றால் இயற்கையுடன் ஒன்றுபடுதல் என்ற பொருளும் உண்டு. அப்பேர்ப்பட்ட சிறப்புடைய பழனி என்ற நாமத்தை சொன்னாலே பல வினைகள் தீர்ந்து பலம், நலம் சேரும். சித்தர்களை 3 விதத்தில் சொல்வார்கள். திருமூலரின் வழிமுறைகளை பின்பற்றி வந்தவர்களை மூல வர்க்கம் என்பர். நந்தீஸ்வரரின் வழிமுறைகளை பின்பற்றுபவர்களுக்கு நந்தி வர்க்கம் என்று பெயர். அடுத்து பழினியிலிருக்கும் முருக பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு அவர் அருளிய வழிமுறைகளை பின்பற்றி, அதனால் மக்களுக்கு பல்வேறு நலன்களை தந்தவர்களுக்கு பால வர்க்கத்தினர் என்று பெயர். பால என்ற வார்த்தையை திருப்பிப்போட்டால் லாப என்று வரும். வாழ்க்கையில் எல்லாருமே லாபத்தை எதிர்பார்க்கிறார்கள். பால வர்க்கத்தில் அனைவருக்கும் மூல குருவாக இருப்பவர் அகத்தியர். அவருடைய வழியில் வந்தவர்தான் போகர். வாழ்க்கையில் சந்தோஷம், சௌகர்யம் மற்றும் வசதியைத்தான் போகம் என்பர். அனைவருமே அருளும், பொருளும் வேண்டித்தான் இறைவனை நாடுகிறோம். பொருள் இருந்தால்தான் போகங்களை அனுபவிக்கமுடியும். அதன்மூலம்தான் யோகத்தையும், ஞானத்தையும் அடையமுடியும். இதற்கான வழிமுறைகளை வகுத்துக்கொடுத்தவர் போகர்.


பழனியில் முருகனுக்கு கோவில் கட்ட காரணமாக இருந்த போகர் சித்தர்

பழனி என்று சொன்னாலே போகர் சித்தர்தான் நினைவுக்கு வருவார். அவருடைய வழிவந்த சித்தர்கள் யார்? அவர்களால் நடந்த அதிசயங்கள் என்னென்ன?

19, 20ஆம் நூற்றாண்டுகளில் பழனியம்பதியில் மானூர் சுவாமிகள் என்று ஒருவர் வசித்துவந்தார். இவர் எங்கிருந்து வந்தார்? யார்? என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரியாது. திடீரென ஒரு ஒளி போன்று இவர் பழனி பகுதியில் தோன்றுவாராம். பச்சை நிற உடை அணிந்திருப்பாராம். அவர் வரும்போது எங்கிருந்தோ கிளிகள் சத்தமிட துவங்குமாம். அவர் வரும்போதே விபூதி, சந்தன வாசமும், மெல்லிசையாக முருகா என்ற ஓசை கேட்பதுடன், மயில்களும் அகவ துவங்குமாம். அவர் வசித்த இடத்தின் பெயராலேயே மானூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டாராம். ஏழடி உயரம் இருப்பாராம். இவர் அமைதியாக போவாராம். இவர் வாழ்ந்த காலத்தில் சுற்றிலும் மழை பொழிந்தாலும் இவர்மீது மட்டும் பொழியாதாம். இவர் செல்லும்போது அப்படியே புகைமூட்டம் போன்று மறைந்துவிடுவாராம். இவர் வாழ்ந்த காலத்திலேயே சட்டி சுவாமிகள், சல்லி சுவாமிகள், அழுக்கு சுவாமிகள், அணுக்க சுவாமிகள் என்று பஞ்சபூத தத்துவத்தை உள்ளடக்கிய சித்தர்கள் இருந்தார்களாம். இவர்கள் அனைவருமே போகர் வழிவந்தவர்கள். மானூர் சுவாமிகள் வரும்போது எப்போதும் அமைதி நிலவுவதுபோல அவரை நினைத்தாலே அங்கு பிரச்சினைகள் தீரத் துவங்குமாம். சித்துகள் செய்வதில் மானூர் சுவாமிகளுக்கு ஈடோ, இணையோ இல்லை என்பார்கள்.

மானூர் சுவாமிகள் செய்த அதிசயங்களில் ஒன்றிரண்டை பகிருங்கள்!

மானூர் சுவாமிகள் ஒரு அரச மரத்து குச்சியை எடுத்து தரையில் கிறுக்கி, இதோ பழனியை பார், மதுரையை பார் என்று இருந்த இடத்திலிருந்தே காட்டுவாராம். அந்த வகையில் ஒருவர், திருமணமே நடக்கவில்லை என்றும் தீராத கடன் இருக்கிறது என்றும் சொல்ல, மானூர் சுவாமிகள் குச்சியால் தரையில் வரைந்து மதுரை மீனாட்சி அன்னையின் பட்டாபிஷேகத்தை காட்டுகிறார். அதை பார்த்துச்சென்ற அந்த நபரின் வாழ்க்கையில் சில நாட்களில் திருமணமும், பொருள் வளமும் வந்து சேர்ந்தது. அதுபோல தங்களுடைய வீட்டிலும் ஒரு திருமணம் நடந்துவிடாதா, கணவருக்கு வேலை கிடைத்துவிடாதா என்று ஏங்குவோர், தினமும் ஒரு 5 நிமிடம் என்ற கணக்கில் 48 நாட்கள் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக வீடியோவை செல்போனில் பார்த்தாலே கட்டாயம் திருமணம் கைகூடி வரும். பொருள் வளம் சேரும். எந்த காட்சியை காண்கிறோமோ அது நன்மையை தரும் என்பதை இப்படி மானூர் சுவாமிகள் உணர்த்தியிருக்கிறார். அதாவது ஆசிரியர் கற்றுக்கொடுத்தாலும் ஒரு குருவானவர் சுட்டிக்காட்டுவார். எனவே குருவின் செயல்களிலிருந்து பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மானூர் சுவாமிகள் உடுத்தியிருந்த பச்சை துண்டை உடுத்திக்கொண்டு முருகனை வழிபட்டால் அதன் வலிமை அதிகமாகும். நிறத்திற்கு ஒரு தன்மை உண்டு. அருணகிரி நாதர் மற்றும் சுகபிரம்ம மகரிஷி போன்றோர் கிளியாக மாறின சிறப்புகள் பச்சைக்கு உண்டு. எனவே இவர்களை நினைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்யலாம்.


ஆங்கிலேயர்களையும் அலறவிட்ட மானூர் சுவாமிகள்

மற்றொருமுறை பிரிட்டிஷ்காரர் காலத்தில் ஒருவர் பெரிய வழக்கோடு வந்து ஐயா காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறார். உடனே மானூர் சுவாமிகள் ஒரு குச்சியை எடுத்து தரையில் ஒரு கட்டத்தை வரைந்து, அதில் பதினெட்டாம்படி கருப்பின் நிகழ்ச்சி நடப்பதை காட்டுகிறார். அதை பார்த்து வணங்கிவிட்டு செல்லுமாறு கூறுகிறார். அவர் அதிகாரியிடம் சென்றபோது வியக்கத்தக்க வகையில், அந்த ஆங்கில அதிகாரி உன்மீது தவறு இல்லை, என்னை மன்னித்துவிடு என்கிறார். அதுபோல் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வழக்கு நடந்துகொண்டிருந்தால் தினமும் பதினெட்டாம்படி கருப்பின் நிகழ்ச்சியை 48 நாட்கள் பார்த்தால் அது தீரும். தன்னிடம் வருவோரிடம் மானூர் சுவாமிகள் அவரவர் மொழியிலேயே பேசிவிடுவார். சமீப காலத்தில் ஜப்பானிய குடும்பம் ஒன்றின் கனவில் தோன்றி, தனது ஜீவசமாதி இருக்கக்கூடிய சேந்தமங்கலம் என்ற பகுதியில் வன்னி மரத்தின்கீழ் விநாயகரை ஸ்தாபனம் செய்யுங்கள் என்று அவர்களுடைய மொழியிலேயே சொல்கிறார். இந்த கனவானது அந்த குடும்பத்தில் அனைவருக்கும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க, அந்த குடும்பம் இந்தியாவிற்கு வந்து கனவில் வந்த நபரை தேடியபோது அது மானூர் சுவாமிகள் என்று தெரியவந்திருக்கிறது. அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியும் ஏற்பட உடனே அந்த இடத்திற்குச் சென்று விநாயகரை ஸ்தாபனம் செய்கின்றனர். இப்போதும் அங்கு அவர்களுடைய பெயர் பொறித்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்றம், மாற்றம், முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதேபோல் மற்றொரு குடும்பம் வருகிறது. அவர்களிடம் இங்கு பேசிக்கொண்டிருக்கும்போதே, கராச்சியில் உள்ள அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் பேசுகிறார். இதுகுறித்து அந்த குடும்பத்தினர் பேசிக்கொள்ளும்போது விஷயம் தெரியவர, கராச்சியிலும் பக்தர்கள் உருவாகினர். இவருக்கு ஜாதி, சமய வேறுபாடுகள் கிடையாது. அதேபோல், முருகன் பெயரை சொல்லி இவர் இட்ட திருநீற்றினால் பலருக்கு வியாதிகள், வினைகள் தீர்ந்திருக்கிறது.

ஆங்கிலேயே அதிகாரி ஒருமுறை ஐரோப்பிய நாட்டவர் ஒருவரை மானூர் சுவாமிகளிடம் கூட்டிவர, இருவரிடமும் அவரவர் மொழியில் பேசியுள்ளார். இதனால் வெள்ளைக்கார அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடுகிறான். அவரை அடைத்ததும், வீட்டிலிருந்த தனது குழந்தை தன்னைத்தானே அறைக்குள் வைத்து அடைத்துக்கொள்கிறது. அப்போது அவன் வெளியே வந்து பார்க்கிறான். அங்கும் சுவாமிகள் சுற்றிக்கொண்டிருக்கிறார். உடனே தன்னை மன்னித்துவிடுமாறு கேட்டு காலில் விழுந்ததுடன், அவருடைய அடியாராகவே மாறிவிடுகிறான். இப்படி சுவாமிக்கு ஐரோப்பா உட்பட வெளிநாடுகளிலும் பக்தர்கள் பெருக துவங்கிவிடுகிறார்கள். அதனால் ஆங்காங்கே அவர் தோன்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வியாதிகள், வினைகள் தீர வழிவகை செய்துள்ளார்.


சித்துகள் செய்வதில் வல்லவரான தங்கவேல் சுவாமிகள்

இதுவரை நடந்தவற்றை சொல்கிறீர்கள். ஆனால் இப்போதுள்ள மக்கள் தங்களுக்கு நடந்தால் மட்டுமே நம்பலாம் என்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

மானூர் சுவாமிகளுடைய மாணவர் ஒருவரின் பெயர் தங்கவேல் சுவாமிகள். அவருக்கு தன்னுடைய ஆற்றலை இவர் சொல்லித்தந்தார். தங்கவேல் சுவாமிகளின் மாணவர் என்னுடைய குரு. கணக்கன்பட்டி சித்தர், மூட்டை சுவாமிகள் போன்றோருக்கு தங்கவேல் சுவாமிகள் நண்பரும்கூட. சித்தயோகி சிவபிரபாக சுவாமிகளின் மறுவடிவமாகவும், பாம்பாட்டி சித்தரின் அம்சமாகவும் இவர் விளங்கினார். இவர் ஒரே சமயத்தில் பல இடங்களில் காட்சியளிக்கக்கூடிய சித்து விளையாட்டுகளை விளையாடக்கூடியவர். இதை கேட்போருக்கு வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ, பாலமுருகனை கற்பனை செய்துகொண்டு, இஞ்சியை துண்டாக்கி, அதில் சிறிது தேனை கலந்துவைத்தோ அல்லது சிறிது இஞ்சி டீயை வைத்தோ முருகன் மந்திரத்தை திங்கள் அல்லது வியாழக்கிழமை தொடங்கவேண்டும். முருகனுக்கோ அல்லது வேலுக்கோ பச்சை நிற பட்டுத்துணியை கட்டியோ அல்லது மடித்து முன்பாக வைத்தோ தங்களால் இயன்ற சிறு இனிப்பையோ திராட்சையையோ வைத்துக்கொண்டு கிளிகள் சூழ்ந்துள்ள வனத்தில் இருக்கக்கூடிய முருகனே என்ற அர்த்தம்கொண்ட மந்திரத்தை சொல்லவேண்டும். பெரிய பொருள் லாபம் வேண்டுமென நினைப்பவர்களும் சுகவனம் என்ற வார்த்தைகொண்ட இதே மந்திரத்தை சொல்லலாம். ஒருநாளைக்கு 27 முறை என்ற கணக்கில் 48 நாட்கள் சொல்லிவர வாழ்க்கையில் மாற்றம், முன்னேற்றம் ஏற்படும். குறிப்பாக, பொருளாதாரத்தில் மிகவும் சரிந்தவர்கள் இதை சொல்ல வாழ்க்கையில் ஏற்றம் காணலாம்.

Updated On 22 April 2025 12:02 AM IST
ராணி

ராணி

Next Story