இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒவ்வொரு கடவுளுக்கு ஒவ்வொரு நாட்கள் சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்க் கடவுளாகிய முருகனுக்கு சிறப்பு விரதம் இருக்கக்கூடிய நாளாக பார்க்கப்படுகிறது பங்குனி உத்திரம். ஆண்டுதோறும் தமிழ் நாள்காட்டியில் வரக்கூடிய 12வது மாதமான பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தின் நாள் இது. பங்குனி உத்திரத்தன்று சிறப்பு விரதம் ஏற்று திருமணம், காதல் மற்றும் செல்வம் வேண்டி பிரார்த்தித்தால் கட்டாயம் நடக்கும் என்பது காலங்காலமாக நம்பப்படுகிறது. குறிப்பாக தெய்வங்களின் திருமணங்கள் இந்த நாளில்தான் நடந்ததாக சொல்லப்படுவதால் திருமணத்திற்கு வேண்டுவோருக்கான சிறப்பு நாளாக இந்நாள் பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் வந்தாலும் 2025ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏன் சிறப்பு? இந்த நாளில் எப்படி வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்றம் மற்றும் முன்னேற்றங்களை அடையலாம் என வழிகாட்டுகிறார் ஆன்மிக ஜோதிடர் பவானி ஆனந்த்.

பங்குனி உத்திரத்தின் சிறப்புகள்

பங்குனி உத்திரம் என்று சொன்னாலே ஆண்டுதோறும் மிகவும் சிறப்புதான். இந்த ஆண்டு அதிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முருகனை செவ்வாய் கிரகத்துடன் இணைத்து சொல்வார்கள். எனவேதான் அங்காரகன், பௌமன், குஜன் போன்ற பெயர்கள் செவ்வாய் கிரகத்துக்கு உண்டு. செவ்வாய் கிரகம் தற்போது சுஷுப்தி என்ற நிலையிலே இருப்பதாக ஜோதிடத்தில் சொல்கிறார்கள். செவ்வாய் நீண்ட நாட்கள் மிதுனத்திலும் கடகத்திலும் இருந்து சற்று அங்கு வக்கிர நிவர்த்தி அடைகிற காலகட்டங்களில் அதை சுஷுப்தி அவ்ஸ்தா என்று சொல்வதாக பராசுரர் சொல்லியிருக்கிறார். அதாவது தூக்கநிலை என்ற ஒன்று இருக்கிறது. தியானம் செய்வதே தூக்கநிலைதான். அந்த நிலையில் உங்களுக்கு நீங்களே ஏதேனும் நல்லதை சொல்லிவிட்டால் போதும். நிகோலஸ் டெஸ்லா குறித்து படித்திருக்கிறோம். இவர் 100 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். இன்று நாம் எதையெல்லாம் விஞ்ஞான முன்னேற்றம் என்று கருதுகிறோமோ அத்தனைக்கும் ஆதாரமாக அடிப்படையாக இருந்தது இவருடைய கண்டுபிடிப்புகள்தான். அவர் தனது கண்டுபிடிப்புகளுக்கான ரகசியத்தை பகிரும்போது, தினமும் தூங்கச்செல்வதற்கு முன்பு தனக்குத்தானே சிலவற்றை சொல்லிக்கொள்வாராம். அவர் சொல்பவை 3, 6, 9. இதில் சிவபெருமானுக்கு 3 கண்கள், முருகனுக்கு 6 முகங்கள். அதேபோல் 9 என்பது செவ்வாயை குறிக்கும். நாம் உலகை காண்கிற 360 டிகிரியை வகுத்தாலும் இந்த 3 எண்களுக்குள்தான் வரும். இந்த சக்திவாய்ந்த எண்கள் பிரபஞ்சத்தில் ஒரு பொருளை துவக்கநிலைக்கு கொண்டுவருவதுடன் தொடர்புடையது. போகர் என்று சொல்லக்கூடிய போயாங் என்பவர் சீனாவிலிருந்து வந்து பழனியப்பர் மலையிலிருந்த அகத்தியரிடம் என்றும் இளமையாக இருக்கவேண்டுமென்ற தனது ஆசையை வெளிப்படுத்துகிறார். அதற்கு அகத்தியர் பங்குனி உத்திர நன்னாளில் தனது ஆசையை தொடங்குமாறு கூறுகிறார்.


பழனியில் முருகனை சிறப்பித்த போயாங் என்ற போகர் சித்தர்

பழனியை முருகனுக்கான இடமாக மாற்ற போகர் செய்யத்தொடங்கியது பங்குனி உத்திரத்தில்தான். அதேபோல் அங்கு தண்டாயுதபாணியை வைத்ததும் அதே பங்குனி உத்திரத்தில்தான். எனவே உங்களுக்கு ஒரு செல்வம் வேண்டுமானால் அந்த தொகையை மூன்றால் வகுத்தால் வரும்படி கற்பனை செய்துகொள்ள வேண்டும். உலகம் முழுவதுவே ஒரு ஆற்றலால் இயங்கக்கூடியது. அந்த ஆற்றல் சிவசக்தி. அதனால்தான் பங்குனி உத்திரத்தில் சிவசக்தி திருமணம் நடந்தது. உதாரணத்திற்கு, வேகமாக தண்ணீர் கொட்டும் பகுதிக்கு கீழ் மின்சாரம் உற்பத்தியாகிறது. மின்சாரம் என்பது சிவசக்தி. அது 11ஆல் வகுக்கப்படுகிறது. சிவனுக்கு 11 வகையான ருத்ரர்கள் இருக்கின்றனர். அவர்களை ஏகாதச ருத்ரர்கள் என்று அழைக்கின்றனர். மின்சாரம் தரும் ஆற்றலை செம்புக்கம்பியால் எடுத்துவருகிறார்கள். செம்பு என்பதை முருகனுக்கு இணையாக சொல்கின்றனர். ‘முருகா’ என்ற சொல்லை (நியூமராலஜி) எண்ணில் வகுத்தாலும் 3, 6, 9 என்றே வரும். இந்த ஆற்றலின் அதிர்வை போகர் பங்குனி உத்திரத்தில் கண்டுபிடித்தார். பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு என்ன சிறப்பு என்று பார்த்தோமானால் சிம்மம், கன்னி ராசிகளில் மட்டுமல்லாமல் சூரியனின் வீட்டில் இருக்கக்கூடிய சூரியனுடைய நட்சத்திரமும் அதுதான். வீட்டில் எட்டிப்பார்க்கக்கூடிய உயரத்தில் உத்திரம் இருக்கும். அதுபோல வாழ்க்கையில் எட்டிப்பார்க்கக்கூடிய உயரத்தை அடைந்தபிறகு, அதைவிட அடுத்த உயரத்தை அடைகிறோம். உத்திர நட்சத்திரத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. கட்டிலின் பின்கால் மற்றும் முன்காலையும் உத்திரம் என்பர். வீட்டில் இருக்கும் கட்டில்தான் சுக்கிரனின் தன்மை. நாம் நிம்மதியாக படுத்து தூங்கவேண்டிய கட்டிலுக்கு அடியில் பலர் புத்தகங்களை வைத்திருப்பார்கள், கட்டிலை கலைத்துப்போட்டிருப்பார்கள். கட்டிலை தூய்மையாக வைத்திருந்தாலே பல்வேறு தோஷங்கள் அகலும். கட்டில் சுத்தமாக இல்லாவிட்டால் மிகப்பெரிய வாஸ்து தோஷம் வரும்.


வீட்டிலிருக்கும் கட்டிலை தூய்மையாக வைக்காவிட்டால் வாஸ்து தோஷம் வரும்

மீன ராசியில் சூரியன் இருக்கும்போது விஷ்ணு ஆதித்யன் என்று அழைக்கின்றனர். மக்களுக்கு அடுத்தவரை காப்பாற்றக்கூடிய ஆற்றலை இவர் தருவார். பங்குனி உத்திரம் என்பது முருகன் வரும்போது அவருடைய தந்தை தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அப்போது மன்மதன் என்று சொல்லக்கூடிய காமதேவன் அம்பை எய்துவிடுகிறார். உடனே சிவபெருமான் சுட்டெரிக்கிறார். சுட்டெரித்ததும் உலகமே தடைபட்டுவிடுமே என்று தாரகாசூரனிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிறார்கள். அப்போது முக்கண்ணிலிருந்து பால முருகன் தோன்றி, சண்முகா நதியிலே தவழ்ந்து வருகிறான். எப்போதும் இறைவனைப்பற்றி நினைக்கும்போது பூமாலைகள் போடுவது மட்டுமல்லாமல் பாமாலைகளும் பாடவேண்டும். சிறப்புவாய்ந்த முருகனின் நிறமான சிவப்பை உள்வாங்கிகொண்டு, பங்குனி உத்திரத்திற்கு உகந்த பழங்களை வைக்கவேண்டும். முருக பெருமான் வரும்போது மலையாக மாறிவிடுகிறான் அசுரன். முருகனின் படைத்தளபதிகளான வீரபாகுவும், வீரகேசரியும் செல்கிறார்கள். தாரகாசுரன் அவர்களுடன் போரிடுகிறான். ஏமாற்ற நினைத்து எலியாக மாறிவிடுகிறான். அங்குவந்த முருகன் தனது வேலை அங்கு எறிகிறான். உடனே மலை பொடிப்பொடியாக சிதறிவிடுகிறது. அன்றுதான் சிவனுக்கும் சக்திக்கும் திருமணம் நடந்தது. அதேபோல் பெருமாளுக்கும் மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அதுபோல நமது வாழ்க்கையிலும் ஏதேனும் ஒரு பிரச்சினை உள்ளே சென்று அமர்ந்துகொண்டு நமக்கு துன்பம், தொல்லை தர காத்துக்கொண்டிருக்கிறது. அப்போது முருகன் வாழ்க்கைக்குள் வந்தால் துன்பம் நீங்கிவிடும்.


பங்குனி உத்திரத்தில் அதிகம் சொல்லவேண்டிய மந்திரமான ‘ஓம் சரவண பவாய நம’

பங்குனி உத்திரத்தை தேவர்களுடைய திருமண நாள் என்று சொல்கிறார்கள். எனவே திருமணத்திற்கு காத்திருக்கிறவர்கள் அந்த நாளில் வேண்டிக்கொள்ளலாமா?

சித்தர்கள் கையாண்ட ரகசியமுறையை பங்குனி உத்திரத்தன்று செய்யவேண்டும். இந்த ஆண்டு மீனத்தில் பல்வேறு கிரகங்களும் சேர்க்கையில் இருக்கின்றன. சுக்கிரன் மீனத்தில் உச்சத்தில் இருக்கிறது. அங்கு சூரியன் வரக்கூடிய நாளைத்தான் பங்குனி உத்திரம் என்கிறோம். அதாவது சந்திரன், உத்திர நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய சூரியனது நட்சத்திரத்தில் சூரியனுடைய வீட்டில் இருக்கும். சூரியனோ மீனத்தில் இருக்கும். இதைத்தான் பங்குனி உத்திரம் என்கின்றனர். சூரியன் மிகவும் வலிமையுடன் இருக்கும் நாள் இது என்பதால் என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். கிரகங்களில் சூரியன் சிவத்தை குறிப்பவர். இந்த வருடம் 6 கிரகங்கள் மீனத்தில் சேர்ந்திருப்பதால் ஆறுமுகனை வழிபடவேண்டும். அதுவும் செவ்வாய் சுஷுப்தி அவஸ்தாவில் இருக்கும்போது என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று பராசுரர் சொல்லியுள்ளார். எனவே பங்குனி உத்திரத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சிவப்பு நிற பேனாவை வாங்கி வைத்துகொள்ள வேண்டும். ஒரு சிறிய நோட்புக்கை வாங்கி அதில் குறைந்தது 36 முதல் 90 பக்கங்களுக்கு உங்களுடைய கோரிக்கைகளை எழுதவேண்டும். அதை பங்குனி உத்திரத்தன்று தொடங்கவேண்டும். ஒரு நாளைக்கு 3, 6, 9 பக்கங்கள் என மூன்றால் வகுக்கும்படியான எண்ணிக்கையில் எழுதவேண்டும். எழுத தொடங்கும் முன்பு மேலே சிவப்பு பேனாவால் பிள்ளையார் சுழி போட்டு அறுகோண சக்கரத்தை வரையவேண்டும். இந்த காலகட்டத்தில் காலை எழுந்து குளித்துவிட்டு, திருமண கோரிக்கையோ, பணக்கோரிக்கையோ வைத்து எழுதவேண்டும். ஆனால் அந்த தொகை மூன்றால் வகுக்கும்படியாக இருக்கவேண்டும். இதில் ஏதேனும் ஒரு கோரிக்கையை மட்டுமே பாசிட்டிவாக எழுதவேண்டும். இதை காலையில் 3 முறை, மதியம் 6 முறை, இரவு 9 முறை எழுதவேண்டும். ஒவ்வொரு நாளும் நேரம் மாறினால் பரவாயில்லை. இடையே ஓரிரு நாட்கள் தவறிவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தது 36 நாட்கள் இதை தொடரவேண்டும். எழுதி முடித்தபிறகு ஏதேனும் ஒரு நீர்நிலையிலோ அல்லது கால்படாத இடத்திலோ அந்த நோட்டு புத்தகத்தை மிதக்க விட்டுவிடலாம். இதுபோன்ற வெளிப்பாட்டை, காட்சிப்படுத்தலை செய்யத் துவங்கினால் அவை நடக்கும். பழனியிலே போகர் இதுபோன்று 369 நாட்கள் எழுதியிருக்கிறார். ‘ஓம் சரவண பவாய நம’ என்ற மந்திரத்தை பங்குனி உத்திரத்திலிருந்து சொல்ல தொடங்கவேண்டும். இதுதான் பிரபஞ்சத்தை திறப்பதற்கான சாவி. இதை 9, 36 என மூன்றால் வகுக்கக்கூடிய எண்ணிக்கையில் சொல்லலாம். வாழ்க்கையில் பெரிய மாற்றம், முன்னேற்றம் வரும். தனது கோரிக்கையை எழுத தெரியாதவர்கள் சிவப்பு நிற பேனாவால் மந்திரத்தை மட்டும் எழுதினால் போதும். வாழ்க்கையில் பெரிய பிரம்மாண்டத்தை அடையலாம்.

Updated On 14 April 2025
ராணி

ராணி

Next Story