
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் புராண நதிகள் என்று சொல்லப்படுகிற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் ஒன்றுகூடுகின்ற திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தங்களுடைய பாவங்ளை போக்கி தூய்மையடையவும், ஆன்மீக ஞானம் பெறவும் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் அங்கு வந்து புனித நதிகளில் நீராடுகின்றனர். உலகின் மிகப்பெரிய கலாச்சாரமிக்க ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்படுகிற இந்த கும்பமேளாவில் ஒவ்வொருமுறையும் கோடிக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இங்கு நீராடியுள்ளனர். குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உட்பட உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பலரும் வந்து நீராடியுள்ளனர். இந்த விழா முடிவதற்குள் சுமார் 55 கோடி பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மகா கும்பமேளாவிற்காக 7500 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் அங்கு போக்குவரத்து தட்டுப்பாடுகள், கூட்டநெரிசல் மற்றும் அதனால் உயிரிழப்புகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மாநில அரசின் கவனக்குறைவே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் தெளிவான அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. உலகம் முழுவதும் பேசப்படுகிற மகா கும்பமேளா என்றால் என்ன? பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் இதுவரை நடந்தது என்னென்ன? என்பது குறித்து ஓர் பார்வை!
2025 மகா கும்பமேளா - இவ்வளவு சிறப்பு ஏன்?
மகா கும்பமேளா பிரயாக்ராஜில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் மகா கும்பமேளா எங்கிருந்து வந்தது? அதிலும், பிரயாக்ராஜ் கும்பமேளாவுக்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்று தெரியுமா? இந்து புராணங்களுடன் தொடர்புடைய கும்பமேளா நிகழ்வானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே அமிர்தத்துக்காக சண்டை வந்தபோது மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் இருக்கும் கும்பத்தை எடுத்துச் சென்றதாகவும், அப்போது அமிர்தத்தின் சில துளிகள் சிந்தியதாக நம்பப்படுகிற பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய பகுதிகளில் கும்பமேளா நடத்தப்பட்டாலும் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று பெரிய நதிகளும் சங்கமிக்கிற காரணத்தாலேயே பிரயாக்ராஜ் கும்பமேளா மிகவும் பிரசித்திபெற்றதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிற மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீரில் நீராடினால் பாவங்கள் முற்றிலும் கழுவப்படும் என்பது ஆன்மிக பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கை. அதிலும் கோள்கள் மற்றும் கிரகங்களின் தனித்துவமான அமைப்புடன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகா கும்பமேளாவிற்கென்று தனி சிறப்பு உள்ளது. இது அடுத்து 22ஆம் நூற்றாண்டில் வரும் என்று சொல்லப்படுகிறது. 2025ஆம் ஆண்டு கும்பமேளா வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இங்கு ஆன்மிக சுத்திகரிப்பு, சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகள் போன்றவை வெகு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக, நாக சாதுக்கள் மற்றும் துறவிகள், ஷாகி ஸ்னான் என்று சொல்லப்படுகிற முதல் சடங்கு குளியலை ஏறெடுத்து முடித்தபிறகு மற்ற சடங்குகள் தொடங்கப்படும். இங்கு ஆர்த் கும்பமேளா 6 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மகா கும்பமேளா என்று சொல்லப்படுகிற பூர்ண கும்பமேளாவானது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்படும்.
மகா கும்பமேளாவில் நடைபெற்ற முதல் சடங்கான ஷாகி ஸ்னான்
மகா கும்பமேளாவின் முக்கிய நாட்களும் அரசின் ஏற்பாடுகளும்
குறிப்பிட்ட கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருகிற நாட்களில் கும்பமேளா நடைபெறும் நிலையில், அதிலும் சிறப்பாக, ஜனவரி 13ஆம் தேதி பௌஷ் பூர்ணிமா என்று சொல்லப்படுகிற பௌர்ணமி ஸ்நானம், ஜனவரி 15ஆம் தேதி மகா சங்கராந்தி, ஜனவரி 29ஆம் தேதி மவுனி அமாவாசை, பிப்ரவரி 3ஆம் தேதி வசந்த பஞ்சமி, பிப்ரவரி 12ஆம் தேதி மாகி பௌர்ணமி மற்றும் பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி ஆகியவை முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன. இந்த நாட்களில் மூன்று நதிகள் சங்கமிக்கிற திரிவேணி சங்கமத்தில் நீராடுவது சிறப்பு பெறுகிறது. இங்கு பக்தர்கள் வந்து நீராடிச் செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகள், உணவு வசதிகள், தங்குவதற்கான டென்ட்கள் போன்றவற்றை அமைக்க கோடிகளில் செலவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரயாக்ராஜ், ஹரித்வார், உஜ்ஜைன், நாசிக் ஆகிய 4 முக்கிய நகரங்களில் ஆற்றங்கரைகளில் 8 நிரந்தர படித்துறைகள் உட்பட 41 படித்துறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கும்பமேளாவிற்காக மத்திய அரசு சார்பில் ரூ.2.1 கோடி நிதியுதவியும், மாநில அரசு சார்பில் ரூ.5,400 கோடி நிதியுதவியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோக ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் வந்துபோகத்தக்கதாக சிறப்பு பாதைகளும், குறிப்பாக ஆற்றின்மீது 30 மிதக்கும் பாலங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் இடங்களில் உள்கட்டமைப்புகள் சீரமைப்பின்கீழ் 67 ஆயிரம் தெரு விளக்குகளும், 1.5 லட்சம் கழிப்பறைகளும், 25 ஆயிரம் கழிவுத் தொட்டிகளும், சிறப்பு தண்ணீர்க்குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக 549 திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதன்மூலம் சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் பக்தர்கள் தங்குவதற்கும், உடை மாற்றி ஓய்வெடுப்பதற்கும் வசதியாக ஆற்றங்கரைகளில் 2200 சொகுசு டென்ட்கள் உட்பட 1.6 லட்சம் டென்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் சொகுசு கூடாரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம்வரைகூட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுபோக, கும்பமேளா நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தற்காலிக கடைகள் வைக்க தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டிருக்கிறது.
மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து டிஜிபி வைபவ் கிருஷ்ணா விளக்கம்
மவுனி அமாவாசையன்று எழுந்த மரண ஓலம்!
வெகு சிறப்பாக தொடங்கிய கும்பமேளாவில் ஜனவரி 29ஆம் தேதி அதிகாலையிலேயே மிகப்பெரிய கலவரமும் அழுகையும் கூக்குரலும் ஏற்பட்டது. கும்பமேளாவை பொருத்தவரை காலை மற்றும் மாலை இருவேளையும் சூரியன் 30 டிகிரிக்கு மேல் வருவதற்கு முன்னும், மறையும்போது 30 டிகிரிக்கு கீழ் சாயும்போதும் 21 நிமிடங்களுக்குள் நீராடவேண்டும். குறிப்பாக, மவுனி அமாவாசையன்று நீராடுவது அதிலும் சிறப்பு என்பதால் 10 கோடி பேர் அந்த நாளில் நீராட வருவார்கள் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் அதிகாலைமுதலே கோடிக்கணக்கில் பக்தர்கள் கூடியதுடன், ஆர்வமிகுதியால் போலீசாரால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளின்மீது மக்கள் ஏறியதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு, ஒருவர்மீது ஒருவர் பாய்ந்ததுடன், மைதானத்தில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள்மீதும் ஏறிச்சென்றனர். கீழே சிக்கியவர்கள் மிதிபட்டத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பலியானதாக சொல்லப்பட்டது. ஆனால் சரியாக எத்தனைபேர் உயிரிழந்தனர் என்பது குறித்த விரிவான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கும்பமேளா சிறப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஜிபி வைபவ் கிருஷ்ணா இச்சம்பவம் குறித்து கூறுகையில், திரிவேணி சங்கமம் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை பக்தர்கள் உடைத்துவிட்டதாகவும், பிரம்ம முகூர்த்தத்துக்குள் நீராடவேண்டுமென எதிர்பார்த்திருந்தவர்கள், உறங்கிக்கொண்டிருந்தவர்கள்மீது ஏறிச்சென்றதாகவும் கூறினார். மேலும் இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி 30 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால் இங்குவரும் விஐபிக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பொதுமக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று பலதரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புனிதநீரில் நீராடி துறவறம் ஏற்றுக்கொண்ட பெண்கள்
நாக சாதுக்களின் ஆசி மற்றும் பெண்களின் துறவறம்
கும்பமேளா என்றதுமே அதிகம் பேசப்படும் மற்றொரு விஷயமென்றால் அது நாக சாதுக்கள் பற்றித்தான். பொதுவாக இமயமலை குகைகளில் வாழும் சைவ முனிவர்களான நாக சாதுக்கள் மகா கும்பமேளா போன்ற முக்கிய நிகழ்வுகளின்போதுதான் பொதுவெளியில் காட்சியளிக்கிறார்கள். மண்டை ஓடுகளுடன் கூடிய திரிசூலங்களை கையில் ஏந்திசெல்லும் இவர்கள், உடல் முழுக்க அடர்த்தியான சாம்பலை பூசிக்கொண்டு நிர்வாணமாக காட்சியளிப்பதுடன், அங்கு வந்துசெல்லும் பக்தர்களுக்கு ஆசியும் வழங்குகின்றனர். இதுபோன்ற சாதுக்களுக்கு மத்தியில், புனித நீராடி பாவம் போக்கியதாக நினைக்கும் பல ஆன்மிக பக்தர்களும் இல்லறம் மறந்து துறவறம் பூண்டுவருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இங்கு சென்றிருக்கும் பல பெண்கள் துறவறம் ஏற்று, திரிவேணி சங்கமத்தில் நீராடி, சன்னியாசம் அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. சுமார் 7000 பெண்கள் இப்படி துறவறம் பூண்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானோர் உயர்கல்வி பயின்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படி பல பெண்கள் சன்னியாசம் ஏற்றுவரும் நிலையில், பிழைப்புக்காக கும்பமேளாவில் ஊசி, பாசிமாலை விற்கவந்த மோனலிசா போன்ஸ்லே என்ற 16 வயது பெண், சமுக ஊடகங்களில் வைரலான நிலையில், அவருக்கு பாலிவுட்டில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
திரிவேணி சங்கமத்தில் நீராடிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு
புனித நீராடிய பிரபலங்கள்
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் கும்பமேளாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போன்ற அரசியல் தலைவர்களும், பிரபல ஆன்மிக தலைவரான ஜக்கி வாசுதேவ், நடிகை ஹேம மாலினி, இந்தி நடிகர் மிலிந்த் சோமன் மற்றும் அவரது மனைவி அங்கிதா கோன்வர், அனுபம் கேர், மம்தா குல்கர்னி, பாடகர் சங்கர் மகாதேவன், விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால், தொழிலதிபர் அம்பானியின் குடும்பம், கௌதம் அதானி, சுதா மூர்த்தி, மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரென் போவல் போன்றோரும் புனித நீராடினர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த தனுஷ் பட நடிகை சம்யுக்தா மற்றும் கஸ்தூரி ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். இங்குசெல்லும் விஐபிக்களுக்கென்று மேம்பட்ட வசதிகளும், கூட்டநெரிசலை தவிர்ப்பதற்கான வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு முறை விஐபிக்கள் வரும்போதும் அவர்களுக்கென்று குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்னும் அடிப்படையில் விஐபிக்களுக்கு இதுபோன்று சிறப்பு சலுகைகள் வழங்குவது ஆன்மிகத்திற்கு முரணானது என்பது போன்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மகா கும்பமேளா என்பது ஒரு ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்பட்டாலும் அரசியல்வாதிகளை பொருத்தவரை இது ஒரு அரசியல் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியங்கா காந்தி புனித நீராடியதைப் போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், பலரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை டேக் செய்து, உங்கள் கட்சியின் தூண்கள்கூட உங்களுடைய பேச்சை கேட்கவில்லை என்று விமர்சித்தனர். இந்நிலையில் அது 2025ஆம் ஆண்டு எடுத்த புகைப்படமே அல்ல என்றும், 2021ஆம் ஆண்டு எடுத்தது என்றும் அவர் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
