இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

சிவபெருமானை வழிபடக்கூடிய அற்புதமான விரத நாட்களில் முக்கியமான ஒன்று பெளர்ணமி. பெளர்ணமி என்பது மிகவும் சக்திவாய்ந்த நாள். அதிலும் ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமியில் சிவபெருமானுக்கு செய்யும் அன்னாபிஷேகம் மிக மிக சிறப்பானது. ஐப்பசி பெளர்ணமியில்தான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றினார். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் காட்சியளிப்பார். எனவே திங்கள்(நிலா) முடிசூடிய சிவபெருமானுக்கு, மதி(நிலா) முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது மிக மிக சிறப்பு!


ஐப்பசி பௌர்ணமியன்று சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் காட்சியளிப்பார்

அனைத்து உயிருக்கும் படியளக்கும் ஈசன்

கல்லினுள் வாழும் தேரை முதல் கருப்பையில் வளரும் உயிர்வரை அனைத்துக்கும் உணவளித்து படியளப்பவர் ஈசன். உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றுக்கான உணவையும் படைத்த ஈசனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பெளர்ணமியில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஏன் அன்னாபிஷேகம்?

'அன்னம் பரபிரம்மம்' என்பது ஆன்றோர் வாக்கு. இதன் பொருள் 'சோறே தெய்வம்'. சோற்றை தெய்வம் போல கருதவேண்டும் என்பதற்காகவே உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத பெளர்ணமி தினத்தில் எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

நெல் அரிசியாகும், அரிசி சோறாகும், சோறுக்குப் பிறகு எதுவும் இல்லை. நாம் உட்கொள்ளும் சோறு நம் தேகத்தில் சக்தியாகி விடும். அதைப்போலவே, ஆன்மா பிறப்பெடுக்கும், பல ஜீவன்களாக உலவும். மீண்டும் இறைவனோடு கலந்துவிடும். இந்த தத்துவத்தை விளக்கவே ஐப்பசி அன்னாபிஷேகம் ஒரு விழாவாக கொண்டாடப்படுகிறது.

நாம் எத்தகைய உணவை உட்கொள்கிறோமோ அதைப் பொறுத்தே நமது மனம் இருக்கும் என்கின்றன உபநிடதங்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை சிறிதும் வீணாக்கக் கூடாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.


முழுவதும் அன்னம் பூசப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ள சிவலிங்கம்

சோறு கண்ட இடமே சொர்க்கம்!

"சோறு கண்ட இடமே சொர்க்கம்" என்பதற்கு பொருள், சாப்பாடுதான் சொர்க்கம் என்பது அல்ல. இந்த உலகையே காக்கும் ஈசனுக்கு, ஐப்பசி பெளர்ணமியன்று சோற்றால் நடைபெறும் அன்னாபிஷேகத்தை காண்பதுவே சொர்க்கம் என்பதுதான் உண்மையான பொருள். சோறால் முழுவதும் மூடியுள்ள எம்பெருமானை கண்டவர் வாழ்வில் இன்பமும் நிம்மதியும் உண்டாகும். அன்னாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும். அதனால்தான் "சோறு கண்ட இடமே சொர்க்கம்" எனக் கூறப்படுகிறது.

2024 ஐப்பசி அன்னாபிஷேகம் எப்போது?

இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15-ம் தேதி (ஐப்பசி 29-ம் தேதி வெள்ளிக்கிழமை) வருகிறது. பொளர்ணமி திதி, வெள்ளிக்கிழமை காலை 6.19 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை காலை 2.58 மணி வரை உள்ளது. இந்த பெளர்ணமி திதி இருக்கும் நேரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யலாம்.

தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் உள்ளிட்டவற்றில் உள்ள சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்ய நூற்றுக்கணக்கான மூட்டை அரிசிகள் கொண்டு அன்னம் தயாரிக்கப்படுகிறது. எனவே முடிந்தால், சிவாலயங்களுக்கு அரிசி வாங்கி கொடுக்கலாம். பெரிய கோவில்களுக்குதான் என்பது கிடையாது, நம் வீடுகளுக்கு அருகில் உள்ள சிறிய சிவன் ஆலயங்களுக்கும் அன்னாபிஷேகம் செய்ய அரிசி வாங்கி கொடுத்து வழிபடலாம். ஏழை மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானமும் செய்யலாம்.


தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு நூற்றுக்கணக்கான மூட்டை அரிசிகள் கொண்டு அன்னம் தயாரிக்கப்படும்

வீட்டிலேயே அன்னாபிஷேகம் செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள சிவலிங்கத்தை நன்கு கழுவி மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்ய வேண்டும். அம்பிகைபாகனான சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் உள்ளிட்டவற்றில் வீட்டில் எது உள்ளதோ, அவற்றை கொண்டு அபிஷேகம் செய்துவிட்டு பின்னர் அன்னத்தால் அபிஷேகம் செய்யலாம். அன்னாபிஷேக வழிபாட்டிற்கு பச்சரிசி சாதத்தையே பயன்படுத்த வேண்டும். சாதம் வடித்து அதனை ஆரவைத்து, சிவலிங்கத்தை முழுமையாக மூடும்படி அதன் மீது சாற்ற வேண்டும். பின்னர், வீட்டில் உள்ள காய் கறிகளை கொண்டு அலங்காரம் செய்து எம்பெருமானுக்கு தீபாராதனை காட்டி வழிபடலாம். காலையில் இந்த அன்னாபிஷேகத்தை செய்து, பிற்பகலோ அல்லது மாலைவரையோ அதனை அப்படியே வைத்திருக்கலாம். மாலையில் சிவலிங்கத்தின் கீழ் பகுதியில் உள்ள சாதத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக வீட்டில் உள்ளவர்கள் உட்கொள்ளலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் உள்ள சாதம் பிற ஜீவ ராசிகளுக்கு உரியது. எனவே அந்த சாதத்தை எடுத்து காக்கை போன்ற உயிரினங்களுக்கு போடுவதுடன், ஏதாவது நீர் நிலைகளில் மீதி சாதத்தை கரைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவளிக்கலாம்.


அன்னாபிஷேகத்தன்று சுவாமிக்கு வீட்டில் படையலிட்டும் வழிபடலாம்

வீட்டில் சிவலிங்கம் இல்லாதவர்கள்?

வீட்டில் அன்னாபிஷேகம் செய்ய சிவலிங்கம் இல்லாதவர்கள், சிவன் படம் இருந்தால், அதில் அன்னத்தை பூசி அபிஷேகம் செய்யலாம். சிவன் படமும் வீட்டில் இல்லாதவர்கள், வாழை இலை போட்டு, அதில் வெள்ளை சாதத்தை வைத்து, அதனையே லிங்கமாக நினைத்து வழிபடலாம். முடிந்தவர்கள், சாம்பார், பொரியல், வடை, பாயாசம் உள்ளிட்டவற்றை செய்துவைத்து இறைவனுக்கு படையலும் இடலாம்.

அன்னாபிஷேக வழிபாட்டின் பலன்கள்

தனது சாபம் தீர்த்த நாள் ஐப்பசி பௌர்ணமி என்பதால், சந்திரனே தனது விருப்ப தானியமான அரிசி கொண்டு ஈசனுக்கு அன்னாபிஷேகத்தை முதன்முதலாக நடத்தினார். ஐப்பசி மாத முழு நிலவு நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து தனது பூரண கதிர்களை வீசுகிறார். இந்த நாளில் பக்தர்கள் ஈசனைப் வழிபட்டால் பூரண சந்திர கலையை பெற்று மனம் தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், அன்னத்தால் முழுமையாக மூடப்பட்ட சிவலிங்கத்தை தரிசிப்பவர்களின் பல ஜென்ம பாவங்கள் நீங்குமாம். சிவலிங்கம் மீது அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. எனவே அன்னாபிஷேகத்தை தரிசிப்பதுடன், அதற்கு அரிசி வாங்கி கொடுப்பதும் புண்ணியமாம். அவ்வாறு செய்பவர்களின் ஏழேழு தலைமுறையும் பசியின்றி வாழுமாம்.


சிவலிங்கத்தின் மேல் பகுதியில் உள்ள சாதத்தை பிற ஜீவ ராசிகளுக்கு அளித்துவிட வேண்டும்

எல்லாம்வல்ல சிவத்தை வழிபடுவோம்!

சோறாகப் பொங்கி வருவதும் சிவம்; அதனை உண்பதும் சிவம்; அதனை வயிற்றில் அக்னியாக ஏற்றுக்கொண்டு, திவ்ய சக்தியாக உடல் எங்கும் விநியோகிப்பதும் சிவம். ஒவ்வொரு பருக்கையும் லிங்க வடிவம். வயிற்றில் தோன்றும் ஜடராக்னியும் சிவவடிவம். சிவத்தை சிவத்தைக் கொண்டே ஆற்றுவதுதான் அன்னதானம். அது ஐப்பசி பெளர்ணமி நாளில் ஈசனுக்குப் படையலாக சமர்ப்பிக்கப்பட்டு, மனிதர்களுக்கும் நீர் வாழ் உயிரினங்களுக்கும் வழங்கப்படுவது சிறப்பானது. அப்படிப்பட்ட ஐப்பசி பெளர்ணமியன்று ஈசனை மனதார வழிபட்டு நம் ஜென்ம வினைகளில் இருந்து விடுபடுவோம்.

Updated On 18 Nov 2024 6:38 PM GMT
ராணி

ராணி

Next Story