
"குட்டி காஷ்மீர்" - ஆந்திராவில் இப்படி ஒரு இடமா?
ஆந்திரப் பிரதேசம் என்றாலே நினைவுக்கு வருவது, திருப்பதி கோயிலின் தெய்வீக அழகு, அமராவதியின் பண்டைய பாரம்பரியம், விஜயவாடாவின் வணிக மையங்கள், விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாம்ராஜ்ஜியம் போன்றவைகள்தான். ஆனால், இவற்றைத் தாண்டி தென்னிந்தியாவின் ‘குட்டி காஷ்மீர்’ என அழைக்கப்படும், ஊட்டிக்கு நிகரான மலைச்சூழலும், பசுமையால் கவரும் ஒரு நிஜ அழகு பெற்ற பகுதியும் அங்கு உள்ளது. அதுதான் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம். இம்மாவட்டம் இயற்கையின் மடியில் ஒளிந்திருக்கும் சில அபூர்வமான இடங்களில் சொக்க வைக்கும் பகுதி என்றே சொல்லாம். அப்படிப்பட்ட இப்பகுதியின் அழகு, வரலாறு மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து விரிவாக இங்கே காணலாம்.
வீரத்தின் அடையாளம்
விடுதலை போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜு சிலை
இந்திய விடுதலை போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜுவை இருளைக் கிழித்தெறிந்த ஒளியின் உருவம் என்று சொல்லலாம். 1922 முதல் 1924 வரை ரம்பா காடுகளில், பழங்குடியினரை வெள்ளையர்கள் வன்கொடுமை செய்ததாக வரலாறு உண்டு. அப்போது அவர்களை காப்பதற்காக எழுந்தவர்தான் இந்த அல்லூரி சீதாராம ராஜு. வீரமும், தியாகமும் கலந்த அவரது போராட்டம், மண்ணில் நம்பிக்கையின் விதையாக முளைத்தது. அதன் அடையாளமாகவே அவரது பெயரையே மையமாக கொண்டு ஆந்திராவில் இந்த மாவட்டம் உருவானது. இந்த நிலத்தின் இதயமாக பாரணிகேனிபேட்டை விளங்க, சலூர், மகாதேவபட்டணம், கௌரிபாட போன்ற முக்கியமான நகரங்கள் மற்றும் இயற்கையின் கருணையால் வளமுற்ற கிராமங்கள் இங்கு சூழ்ந்துள்ளன. இது தவிர பனிமூட்டம் சூழ்ந்த லம்பசிங்கி, பாறைகள் பேசும் போரா குகைகள், பசுமை மழை படரும் அரக்கு மலைவெளி, நீரின் நெஞ்சழுகும் சலூர் தேக்கம் போன்றவை எல்லாம் இந்த மண்ணில் அமைந்திருக்கும் இயற்கையின் அற்புதங்கள் எனலாம்.
தென்னிந்தியாவின் காஷ்மீர்
தென்னிந்தியாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் லம்பசிங்கி
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள சிந்தப்பள்ளி மண்டலத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம்தான் ‘லம்பசிங்கி’. இது “தென்னிந்தியாவின் காஷ்மீர்” என்று அழைக்கப்படும் அளவுக்கு வியப்பூட்டும் இயற்கை அழகையும், சில்லெனும் பனிக்காற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தென்னிந்தியாவில் பனி பொழியும் ஒரே இடம் என்ற பெருமை இந்த கிராமத்திற்கு உண்டு. சொல்லப்போனால் சில காலங்களில் இங்கு வெண்மையான பனித்துளிகள் தரையில் பரவிச் செருகும் அதிசயமும் நிகழும். இதுதவிர பெருக்கெடுக்கும் நீர்வீழ்ச்சிகள், பளபளக்கும் ஆறுகள், பசுமையான காடுகள் மற்றும் மயக்கும் மலைத் தோட்டங்கள் என இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இப்பகுதி காண்பவரை கவர்ந்திழுக்கும் அற்புதம் என்றே சொல்லலாம். மேலும் இங்கு பராமரிக்கப்படும் காப்பி, மிளகு மற்றும் ஸ்ட்ராபெரி தோட்டங்கள் இயற்கையுடன் இணைந்திருக்கும் விவசாயத்தின் ஒரு வண்ணமயமான பிரதிபலிப்பாக உள்ளன.
இயற்கையின் அற்புத ஓவியம்
விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்குக்கு செல்லும் மலை ரயில்
அரக்கு பள்ளத்தாக்கு, ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இயற்கை அழகுடன் கூடிய ஒரு சிறந்த ஹில் ஸ்டேஷன் ஆகும். இது அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள், நீளமான நீர்வீழ்ச்சிகள் மற்றும் கொஞ்சி ஓடும் நதிகள் இந்த பகுதியில் இயற்கையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக அரக்கு ரயில்வே பாதை என்பது இப்பகுதியின் தனிச்சிறப்பாகும். விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு வரை செல்லும் இந்த மலை ரயிலில் பயணம் செய்வது, இயற்கையின் நெடுந்தூர ஓவியத்தில் கடந்து செல்லும் ஒரு அனுபவமாக அமையும். 58 சுரங்கப்பாதைகளும் 84 பாலங்களும் கொண்ட இந்த பாதை, புகழ்பெற்ற இந்திய ரயில்வே பெருமைகளில் ஒன்றாகும். மேலும், அரக்குவின் மற்றொரு சிறப்பு தேயிலைத் தோட்டங்கள், காபி பயிரிடப்பட்ட காடுகள், மலைச்சரிவுகளில் நடமாடும் மயில்கள் போன்றவைகள்தான். அதிலும், இங்கு பயிரிடப்படும் அரக்கு காபி உலகளவில் புகழ்பெற்றது. இங்குள்ள ஆற்காடு கூட்டுறவுச் சங்கம் தயாரிக்கும் "அரக்கு ஆர்கானிக் காபி", பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இயற்கையின் இரகசிய அரங்கம்
30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கூறப்படும் போரா பாறை குகைகள்
அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் அரக்கு பள்ளத்தாக்கு அருகே இயற்கையின் நெஞ்சிலே ஒளிந்திருக்கிறது போரா குகைகள். இவை சுமார் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான, ஆழமான சரிவுகளில் அமைந்துள்ள மிகப் பழமையான பாறை குகைகள் ஆகும். இக்குகைகள் சுண்ணாம்பு கற்களால் ஆனவை. நீர்த் துளிகள் கற்களைத் துளைத்தே உருவான இந்த குகையில் விதவிதமான வடிவங்களை நம்மால் காண முடியும். அந்த வடிவங்கள் சில யானை, பாம்பு, பிள்ளையார், சிவன், பார்வதி போன்ற தெய்வங்களை பிரதிபலிக்கின்றன. இங்கு ஒரு இயற்கையான சிவலிங்கமும் காணப்படுகிறது. இதனால், மக்கள் இவ்விடத்துக்கு ஒரு புனிதத் தலமாகவே வந்து வழிபடுகின்றனர். குறிப்பாக மகாசிவராத்திரி போன்ற நாட்களில் பெரும் மக்கள் திரளாக வந்து வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர். இக்குகையின் ஆழம் சுமார் எண்பது மீட்டர் ஆகும். இதுவே ஆந்திரப் பிரதேசத்தில் காணப்படும் மிகவும் ஆழமான குகை என்றும் சொல்லப்படுகின்றது.
அழகிய நீர்ப்படுகையாக சாலூர் நீர்வீழ்ச்சி
இது தவிர, அமைதியாக விரிந்திருக்கும் ஒரு அழகிய நீர்ப்படுகையாக “சாலூர் நீர்த்தேக்கம்”, ஐந்து தாமரைகளின் மகிமையை பிரதிபலிக்கும் ஆன்மிகத் தலமான “பஞ்சபத்மி கோயில்”, வெள்ளம்போல் சுழலும் சத்தத்துடன் கண்களை கவரும் இயற்கை அழகை கொண்ட “ரம்பா அருவி”, பசுமை மலைகளால் சூழப்பட்டு இயற்கையின் மடியில் மனதுக்கு ஓய்வூட்டும் “ஆனந்தகிரி” போன்ற இடங்கள், இந்த மாவட்டத்தை இயற்கை வளங்களால் ஒளிரச் செய்கின்றன. மேலும் இங்கு வாழும் பழங்குடியின மக்களின் கலாசாரம், ஆடல், பாடல் மற்றும் கைவினைப் பொருட்களும் சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. உணவை பொறுத்தவரை இங்கு பயிர்கள், தேங்காய், மிளகாய் மற்றும் மணமிக்க சிறிய உணவுப் பொருட்கள் முக்கிய பங்காற்றுகின்றன. குறிப்பாக, ஆந்திர மாநிலத்தின் கார சுவைக்கு ஏற்ப, இடியாப்பம், கோதுமை புட்டு மற்றும் மீன் குழம்பு போன்றவை இங்கு பிரபலமான உணவுகளாக உள்ளன. அக்டோபர் முதல் பிப்ரவரி மாதங்கள்வரை இங்கு பார்வையிட ஏற்ற சிறந்த காலமாக கருதப்படும் நிலையில், வரலாறும் இயற்கையும் ஒன்றாக கலந்துள்ள இந்த அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்துக்கு ஒரு முறையாவது நேரில் சென்று பாருங்கள். ஏனெனில் அங்குள்ள பனிமூட்டமும், மலைகளும், பசுமை சூழ்ந்த காடுகளும், ரகசியங்களைத் தாங்கியுள்ள குகைகளும் உங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறும்!
லம்பசிங்கி - கூகுள் வரைபடம்
