5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்திருக்கிறேன் - சமூக சேவகி ஆனந்தி அம்மாள்!
சேவை செய்ய மனது வேண்டும், அதிலும் யாருமே செய்யாத ஒரு சேவையை செய்யவேண்டுமானால் அதற்கு கருணை வேண்டும். இன்றைய நவீன காலத்தில் சொந்த பெற்றோரையே உடன் வைத்துக்கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டிவிடுவதும், முதியோர் இல்லங்களில் சேர்ப்பதுமாக பிள்ளைகள் இருக்கையில், யாரென்றே தெரியாத அனாதை பிணங்களை எடுத்து அவற்றை முறைப்படி அடக்கம் செய்வதுடன், அவற்றிற்கான சடங்குகளையும் செய்து அம்மாவாக பலரின் மனங்களில் நிற்கிறார் சமூக சேவகி ஆனந்தி என்கிற ஆனந்தி அம்மாள். தனக்கு குழந்தையில்லை என்பதற்காக சொந்த குடும்பத்தாலேயே புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் பாடமாக எடுத்துக்கொண்டு, சமூகத்திற்கு எதையாவது செய்துகாட்டவேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்திருக்கும் ஆனந்தி அம்மாளுடன் சிறப்பு உரையாடல்!
அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் செயலில் ஈடுபடும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
ஒரு மனிதன் இறந்தால் அவனுடைய சரீரம் அழியுமே தவிர ஆன்மா அழிவில்லாதது. அனுபவங்களின் மூலமாகத்தான் அந்த பணியை செய்யவேண்டுமென்ற எண்ணம் எனக்கு தோன்றியது. 1998ஆம் ஆண்டு மகனால் துரத்தப்பட்ட ஒரு அம்மா திருச்சியிலிருந்து நான் வசித்த ஏரியாவான ராயபுரத்தில் ஒரு பிளாட்ஃபார்மில் இருந்தார். அவருக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்து ஒரு வாரம் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் அந்த அம்மா இறந்துவிட்டார். அவருடைய உடலை முறையாக அடக்கம் செய்ய நினைத்து அக்கம்பக்கத்தில் பணம் சேகரித்து இளைஞர்களிடம் அடக்கம் செய்யும்படி சொல்லி கொடுத்து அனுப்பினேன். அந்த வேலையை முடித்தபிறகு, ‘இன்றைக்கு நமக்கு எவ்வளவு மன நிறைவு கிடைத்தது? இதுபோல் எத்தனைபேர் இறப்பார்கள்? அந்த ஆத்மாவிற்கு எவ்வளவு மன நிம்மதி கிடைக்கும்? எனவே இந்த பணியை நாம் செய்யவேண்டு’மென நினைத்தேன். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிணங்களை எடுத்து அடக்கம் செய்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு செய்வேன் என அப்போது நினைக்கவில்லை. அனாதை பிணங்களை நாம் அப்படியே எடுத்துச்சென்று அடக்கம் செய்துவிட முடியாது. இதை கேஸ் 174 என்று சொல்வார்கள். இறந்து கிடக்கும் நபர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? என்று எதுவுமே தெரியாது. ரோட்டில் கிடப்பதை பார்த்ததும் எடுத்துக்கொண்டுபோய் பிணவறையில் சுமார் 20 நாட்கள் வைத்துவிடுவோம். அதன்பிறகும் யாரும் வரவில்லை என்றால், அதை ஐபிசி 174-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, போஸ்ட்மார்டம் செய்து முறையாக அடக்கம் செய்வோம். இறந்தவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று தெரியாது என்பதால் மூன்று மதங்களின்படியும் பிரார்த்தித்து, ‘நீ என்ன ஜாதி, மதம் என்று எனக்கு தெரியாது. நான் 3 மதங்களின்படியும் பிரார்த்தித்திருக்கிறேன். நீ என்ன மதமோ அதை எடுத்துக்கொள் என்று சொல்லி ஒரு பிடி மண்ணும், யாருமே அனாதை இல்லை, நீ இறந்தாலும் உன் குடும்பத்துடன் இருந்து உன் வம்சாவழிகளை வாழ வை என்று சொல்லி இரண்டாம்பிடி மண்ணும், நல்ல மனிதர்களை எனக்கு கொடு, என் சேவையை மேன்மைப்படுத்து என்று சொல்லி மூன்றாவது பிடி மண்ணும்’ போட்டு உடன்பால் ஊற்றி அடக்கம் செய்துவிட்டு வருவேன்.
அனாதை பிணங்களை அடக்கம் செய்யும் பணியை செய்யும் ஆனந்தி அம்மாள்
அதன்பிறகும் இறந்தவரின் 16வது நாளை கணக்கு செய்து ஏதேனும் ஒரு மருத்துவமனைக்குச் சென்று என்னால் இயன்ற பழங்கள் அல்லது பிஸ்கட்டை வாங்கிச்சென்று நோயாளிகளுக்கு கொடுத்துவிட்டு வருவேன். அதோடும் நின்றுவிடாமல் ஒரு வருடத்தில் எத்தனை பிணங்களை அடக்கம் செய்திருக்கிறேன் என்பதை கணக்கெடுத்துக்கொண்டு அந்த எண்ணிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பள்ளிக்குச் சென்று, மாணவர்கள் மத்தியில் பாத பூஜை செய்து அவர்களிடம் புத்தாடைகளை கொடுப்பேன். இதை மாணவர்கள் முன்பு செய்தால் தன்னுடைய பாட்டி, தாத்தாவை அவர்கள் பார்த்துக்கொள்ள வழிவகை செய்தது போன்று இருக்கும். நான் அடக்கம் செய்த பிணங்கள் யாரும் வானத்திலிருந்து விழுந்தவர்கள் அல்ல; உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இப்படி ஒவ்வொரு உடலையும் அடக்கம் செய்ததற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன.
ஆனந்தி எப்போது ஆனந்தி அம்மாவாக மாறினீர்கள்? உங்களை பற்றி சொல்லுங்கள்!
என்னுடைய சொந்த ஊர் உசிலம்பட்டி. என் பெற்றோருக்கு 9 பெண் குழந்தைகள் 3 ஆண் குழந்தைகள். நான் எட்டாவது பெண். கள்ளிப்பாலுக்கு இரையாகாமல் என் அம்மா விட்டுவைத்ததால் என்னால் இப்போது இத்தகைய அற்புதமான பணிகளை செய்யமுடிகிறது. எனக்கு என் அம்மா ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தார். ஆனால் எனக்கு குழந்தையில்லை. எனவே மலடி என்று சொல்லி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டு வெளியே வந்தேன். 1991இல் என்னுடைய மன நிறைவுக்காக இந்த சேவையை தொடங்கினேன். அப்போது என்னுடைய ஹேண்டு பேக்கில் பேண் சீப்பு, நகவெட்டி, கத்தரிக்கோல், ஷேவிங் செட், ஷாம்பு போன்றவற்றை வைத்துக்கொண்டு, முதியோர் இல்லங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் ஹோம்கள் போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள முதியோர்களுக்கு ஷேவிங் செய்வது, முடி வெட்டுவது, குளிக்க வைப்பது போன்ற நிறைய பணிகளை செய்வேன். தங்களை அவர்கள் இளமையாக உணரும்போது அவர்களுடைய மனது சந்தோஷப்படும். அந்த மகிழ்ச்சியானது எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காது. இப்படி 10 ஆண்டுகள் சேவையில் ஈடுபட்டு வந்தாலும் 2001க்கு பிறகுதான் என்னை முழுமையாக சேவைக்கு அர்ப்பணித்து செய்துகொண்டிருக்கிறேன்.
ஆனந்தி எப்போது ஆனந்தி அம்மாவானார்கள் என்று கேட்டீர்கள். எல்லாரையும் நான் என்னுடைய பிள்ளைகளாகவே நினைக்கிறேன். எல்லாரும் என்னை அம்மா என்று கூப்பிடுவதால் கெசட்டிலேயும்கூட ஆனந்தி அம்மாள் என்று பெயரையே மாற்றி வைத்துக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் விழுந்த பல அடிகளையும் தாண்டிதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். ஒரு பணிக்கு முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும்போது வெற்றி கிடைக்கும் என்பதற்கு நான் ஒரு உதாரணமாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உறவுகளை பிரிந்து வாழ்வதால், ‘மனித நேயம் குறித்து பேசுகிறீர்களே, உறவுகளை மன்னித்து திரும்ப ஏற்றுக்கொள்ளலாமே’ என்று கேட்பார்கள். புறக்கணித்து வெளியே வந்து சாதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது ஒரு பக்கம் என்றால், சேவைக்காக என்னிடம் கொடுக்கும் பொருட்களை குடும்பத்துடன் பங்குபோடக்கூடாது என்பது மறுபக்கம்.
அரசு விதிமுறைகளின்படி போலீசாரின் முன்னிலையில் அனாதை பிணங்கள் அடக்கம்
நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் இப்படி வெளியே வந்திருப்பேன் என்று யோசிக்கும்போது என்னை நிறையபேர் அம்மா என்று அழைப்பதை நினைத்து மகிழ்ச்சிகொள்கிறேன். ஆனால் உறவுகளுக்கு நான் நன்றி சொல்வேன். ஏனென்றால் அவர்கள் எனக்கு கொடுத்த புறக்கணிப்புகள்தான் எனக்கு இந்த முயற்சியையும் தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு முன் வாழ்ந்துகாட்டவேண்டுமென்ற வைராக்கியத்தையும் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். கருவை கொடுக்க மறந்த இறைவன் கருணையையும் கொடுத்திருக்கிறான். என்னிடம் 1000 பார்வையற்றவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தொழு நோயாளிகள் போன்றோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 48 பார்வையற்றவர்களை எம்.ஏ, பிஎட் படிக்க வைத்திருக்கிறேன். அதனால் எல்லாரையும் என்னுடைய பிள்ளைகளாக நினைத்து என்னால் முடிந்த வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன். இந்த சேவைக்கு அரசாங்கத்தின் உதவியோ, வெளிநாட்டு பணங்களோ எனக்கு கிடைப்பதில்லை. சேவைக்கான தேவை எப்படியோ சந்திக்கப்படுகிறது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டுமென்பதுதான் என்னுடைய நோக்கம். என்னுடைய பேரில் பேங்க் அக்கவுண்ட் கூட கிடையாது. ஒரு பிணத்தை எடுக்கவேண்டுமென்றால் யாருக்காவது போன் போட்டு உதவி கேட்டால் போதும். உடனடியாக வந்து செய்துவிடுவார்கள். பணத்தின்மீது பற்று வைக்காமல் இருக்க இதுவும் ஒரு காரணம்.
அனாதை பிணங்களை அடக்கம் செய்யும்போது திருப்தி கிடைப்பதாக சொன்னீர்கள். என்றாவது பிணத்தை பார்த்து கவலைப்பட்டதுண்டா?
கவலைப்பட்டேன் என்பது ஒருபுறமிருந்தாலும் நான் எவ்வளவு புனிதமான செயலை செய்கிறேன் என்று உணர்ந்தது மற்றொருபுறம் இருக்கிறது. ஒரு பெண் தனது கணவரை காணோம் என்று 6 மாதம் தேடிக்கொண்டிருந்தார். அவர் கொறுக்குப்பேட்டை ரயில்வே போலீசிடம் சென்று கேட்டபோது, அவர்கள் இறந்தவர்களின் ஆல்பத்தை காட்டி, இதில் உன் கணவர் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டனர். அதில் தனது கணவரின் போட்டோவை பார்த்து அழுத அப்பெண், எந்த சுடுகாட்டில் வைத்திருக்கிறீர்கள் என்றாவது சொல்லுங்கள் என்று கதற, ஒரு போலீஸ் கூட்டி வந்தார். அவர் அங்கு வந்தபோது நான் வேறு ஒரு பிணத்தை அடக்கம் செய்துகொண்டிருந்தேன். அப்போது போலீஸ் அந்த பெண்ணிடம், உங்கள் கணவரின் உடலைக்கூட இந்த அம்மாதான் அடக்கம் செய்தார் என்று கூற, அந்த பெண் ஓடிவந்து என் காலில் விழுந்தார். அவரை தூக்க, என் கையை பிடித்துக்கொண்டு, ‘என் கணவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டதும், ஒரு இறந்த நாயைப் போன்றுதானே என் கணவரையும் கொண்டுசென்றிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் என் கணவர் நல்லவர். புண்ணியவதி கையால் எல்லாம் பண்ணியிருக்கிறீர்கள். கொஞ்சநேரம் உங்கள் கையை தாங்களேன்’ என்று பிடித்துக்கொண்டு அரை மணிநேரம் என் கையை விடவே இல்லை. இந்த நிகழ்வு என் வாழ்க்கையில் என்றுமே மறக்கமுடியாது.
மும்மதங்களின் முறைப்படி நடத்தப்படும் அடக்க வழிபாடுகள்
இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?
பெண்கள் எல்லா துறைகளிலுமே இருப்பது பெருமைக்குரிய விஷயம்தான் என்றாலும், கையிலிருக்கும் செல்போனால் வீணாய் போகிறார்கள். அதை நல்லதுக்கு பயன்படுத்த வேண்டும். இன்றைக்கு உள்ள பெண்கள் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு தவறான துணையை தேர்ந்தெடுக்கக்கூடாது. யாரையும் தங்களைத் தொட அனுமதிக்கக்கூடாது. அந்த காதல் நிலைக்காது. மனதை தொடும் காதல்தான் நிலைக்கும். காதல் புனிதமானதுதான், ஆனால் இன்றைக்கு உள்ள காதல் புனிதமானது அல்ல. எனவே நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். பெண்களால் முடியாதது எதுவும் இல்லை. 1910லேயே பெண்ணுக்கும் ஆணுக்கு சரியான சம்பளம் வேண்டுமென்று உருவாக்கப்பட்டது தானே மகளிர் தினம். எத்தனை போராட்டங்களை நடத்தி, எத்தனை விஷயங்களில் வெற்றிபெற்று, 1975இல் ஐ.நா சபைக்கு கொண்டுவந்து உலக மகளிர் தினமாக நாம் கொண்டாடுகிறோம் என்றால் பெண்களால் முடியாதது என்று எதுவும் இல்லை.
அதேபோல் ஆண்களைவிட பெண்களுக்கு சக்தி அதிகம், அதைவிட அவர்களுடைய சொல் வலிமையானது. ஒரு அம்மாவுடைய 18 வயது மகனை காணோமென்று தேடிக்கொண்டிருந்தார். ரயில்வே போலீசிடம் சென்று கேட்டபோது 3 மாதத்திற்குள் இறந்தவர்களின் ஆல்பத்தை எடுத்து காட்டுகிறார்கள். அதில் அந்த பையன் போட்டோ இருக்கிறது. மகனின் உடலை எங்கு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு அடக்கம் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனே எங்கு அடக்கம் செய்தீர்கள்? என்று கேட்க, போலீஸ் ஒருவர் கூட்டிவருகிறார். மகனை அடக்கம் செய்த இடத்தில் அழுது புலம்பிக்கொண்டிருந்த அந்த பெண்ணிடம், அந்த அம்மாதான் அடக்கம் செய்தார்கள் என்று என்னை காட்டினார் அந்த போலீஸ். நான் வேறு பிணத்தை அடக்கம் செய்துவிட்டு வந்தபோது, ‘நீ அனாதை பிணமாகத்தான் போவாய், என்று திட்டிகொண்டே இருப்பேன். அதேபோல் ஆகிவிட்டதே’ என்று சொல்லி அழுதார். அந்த பெண்ணின் சொல் எவ்வளவு வலிமையானது. எனவே தவறிப்போய்க்கூட ஒரு தாய் குழந்தைகளை எதுவும் சொல்லக்கூடாது.
