
இந்தியாவில் அதிகரிக்கும் "தூக்க விவாகரத்து" - அதிர்ச்சியூட்டும் தகவல்!
விவாகரத்து தெரியும். அது என்ன "தூக்க விவாகரத்து"? என்று பலரும் நினைப்போம். ஆனால் இந்தியாவில் இந்த தூக்க விவாகரத்து என்பது அதிரடியாய் அதிகரித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. தூக்கம் குறித்தும் தூக்க விவாகரத்து குறித்தும் விரிவாக காணலாம்...
தூக்கம் என்பது வரம்!
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு என்பது அவசியம். அந்த ஓய்வினை தூக்கம் மூலமாக நாம் உடலுக்கு அளிக்கிறோம். நிம்மதியான தூக்கம்... இதற்காக ஏங்குபவர்கள் பலர். தூக்கம் என்பது ஒரு மனிதனின் ஆற்றலை மட்டுமல்ல, மன ஆரோக்கியம், வேலை செய்யும் திறன் என அவர்களது ஒட்டுமொத்த நல்வாழ்வையும் நிர்ணயிக்கிறது. பணம் படைத்தவனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான், உலகில் மன நிம்மதியுடன் வாழ்கிறவர்கள் என்கிறது பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று. தூக்கத்தை விட சந்தோஷம் தரும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது என உலகின் பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர்.
இரவில் நன்கு தூங்கி எழுபவர்கள்தான் மன நிம்மதியுடன் வாழ்கிறார்கள் - பிரிட்டன் ஆராய்ச்சி
ஏனென்றால் ஒரு நாளில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும், அன்று இரவு நன்றாகத் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழும்போது புத்துணர்ச்சி கிடைக்கிறது. பழைய பிரச்சினைகளை மறந்து, புதிய உற்சாகத்துடன் நாளை தொடங்க தூக்கம் உதவுகிறது. மன ஆரோக்கியம் மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாய் இருக்கிறது தூக்கம். உடலில் இழந்த செல்களை புதுப்பிக்கவும், மூளையின் செயல்பாட்டினை அதிகரிக்கவும், நினைவாற்றலுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும், ஹார்மோன் சமநிலைக்கும் நல்ல தூக்கம் தேவைப்படுகிறது.
தூக்கமின்மையால் வரும் பிரச்சினைகள்
உடலுக்கு உடற்பயிற்சி எந்தளவு அவசியமோ, தூக்கமும் அதே அளவு அவசியம். உடல் அசதி, மன உளைச்சல், இரத்த அழுத்தம் , இதய நோய், சர்க்கரை நோய், கண் பார்வை குறைபாடு, கவனக்குறைவு, ஞாபக மறதி, கல்லீரல் மற்றும் குடல் சார்ந்த நோய்கள் போன்றவை தூக்க குறைபாடு அல்லது தூக்கமின்மையால் ஏற்படுகின்றன. மெட்டபாலிஸம், அதாவது வளர்சிதை மாற்ற பணிகளில் ஒன்றுதான் தூக்கம். வளர்சிதை மாற்றத்தில் 2 வகைகள் உள்ளன. ஒன்று அனபாலிசம், இன்னொன்று கெடபாலிசம். இவற்றை சமன்படுத்தும் பணிகள் தூக்கத்தின் போதுதான் நிகழ்கின்றது. எனவேதான் தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, பல்வேறு நோய்கள் நம்மை தாக்குகின்றன.
ஆழ்ந்த தொடர் தூக்கம் அவசியம்
தூக்கம் என்பது இயற்கையாகவே நமக்கு கிடைத்துள்ள வரம். ஒரு மனிதனுக்கு நாள்தோறும் 6 முதல் 7 மணி நேர தூக்கம் அவசியம். அதற்குக் குறைவாகத் தூங்கினாலும் சரி, அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்கினாலும் சரி உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமாம். சரியான அளவில் தூக்கம் இல்லையென்றால், அது நம்மை 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதுமை அடைய வைத்துவிடுமாம். மேலும் ஆண்களை விட பெண்கள் தினமும் அரை மணி நேரம் கூடுதலாக தூங்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வித்தியாசப்படுவதே இதற்கு காரணம்.
தூக்கம் குறையும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்கள் தாக்கும் - ஆராய்ச்சியாளர்கள்
அத்துடன் அனைவருக்குமே, தூக்கத்தின் மொத்த நேரத்தை விட ஆழ்ந்த தொடர் தூக்கம்தான் மிகவும் அவசியம். படுத்தவுடன் 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்கி விடுவதும், இரவில் இடையில் ஒரே ஒருமுறை மட்டும் எழுந்து, மீண்டும் 20 நிமிடங்களுக்குள் ஆழ்ந்து தூங்கிவிடுவதுமே ஆரோக்கியமான தூக்கமாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் அதிகபட்சம் 60 நிமிடங்களுக்குள் தூங்கிவிட வேண்டும். மேலும் அவர்கள் இரவில் இரண்டு முறை எழலாம். அந்த இரு முறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூக்கத்திற்கு சென்றுவிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக இரவு படுக்கையில் இருக்கும் நேரத்தில், 85% நேரம் நன்றாக தூங்கியாக வேண்டும். அதற்கு மாறாக, புரண்டு புரண்டு படுத்து 40% நேரமே தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
தூக்க விவாகரத்து என்றால் என்ன?
திருமணமான தம்பதிகள் தற்போது தனித்தனி படுக்கைகளில் தனித்தனியாக தூங்குவது அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தம்பதிகள், தங்கள் தூக்க நேரத்தை மேம்படுத்த, நிம்மதியாக தூங்க தனித்தனியாக தூங்குவதற்கு ஸ்லீப் டிவோர்ஸ், அதாவது தூக்க விவாகரத்து என பெயரிடப்பட்டுள்ளது.
தூக்க விவாகரத்தின் நன்மைகள்!
தம்பதிகள் இடையேயான மாறுபட்ட தூக்க நேரம், குறட்டை போன்றவை, உடன் தூங்குபவர்களின் தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மன உளைச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு, தம்பதிகளில் ஒருவர் பாதிக்கப்படுகிறார். எனவே, இருவரும் வெவ்வேறு இடங்களில் படுத்து உறங்குவது தூக்கத்தை மேம்படுத்தி உடல்நல பிரச்சினைகளை குறைப்பதாக சொல்லப்படுகிறது.
தூக்கத்தில் ஆரம்பிக்கும் பிரச்சினையே விவாகரத்துவரை சென்றுவிடலாம் - ஆய்வாளர்கள்
இந்தியாவில்தான் தூக்க விவாகரத்து அதிகம்!
2024-ம் ஆண்டு உலகளாவிய தூக்க கணக்கெடுப்பின்படி, தூக்க விவாகரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது, 78% தம்பதிகள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். இந்தியாவைத் தொடர்ந்து 67 சதவீதத்துடன் சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. 65 சதவீதத்துடன் தென் கொரியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தம்பதிகள் சமமாக, அதவாது 50% ஒன்றாகவும் பிரிந்தும் தூங்குகிறார்கள்.
தூக்க விவாகரத்தின் தீமைகள்!
தூக்க விவாகரத்தில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். தனித்தனியாக உறங்குவதால் கணவன் மனைவிக்கு இடையிலான காதல், நெருக்கம், அன்பு, புரிதல் உள்ளிட்டவை குறைந்துவிடும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே எந்தெந்த காரணங்கள், கணவன்- மனைவி இடையே தூக்கத்தை கெடுக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எப்போதுமே தனித்தனியாக உறங்குவது முழுமையான தீர்வாக அமையாது என்றும், பின்னாளில் அதுவே உடலில் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் தூக்க விவாகரத்தே பின்னாளில் திருமண விவாகரத்தாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவும், அது வாழ்நாளின் ஒட்டுமொத்த தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
