இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மூன்றாம் பாலினத்தவர் என்று சொல்லப்படக்கூடிய திருநங்கைகள் இந்த சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் தடைகளை உடைத்து இன்று பல்வேறு தளங்களிலும் தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். அந்த வகையில், பல்வேறு தடைகளையும், இன்னல்களையும் உடைத்தெறிந்து இன்று திருநங்கைகள் சமுதாயத்தில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து தமிழக அரசின் கலைமாமணி விருதினை பெரும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் திருநங்கை சுதா. சிறுவயதில் இருந்தே குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு தனியார் அமைப்புகளுடன் இணைந்து திருநங்கைகள் அமைப்பிற்காக சமூக பணியாற்றி இன்று உயர்ந்த இடத்திற்கு சென்றிருக்கும் சுதா, ராணி நேயர்களுக்காக அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அதுபற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

உங்களை எல்லோரும் கலைமாமணி சுதா என்றுதான் அழைக்கின்றனர்? கலைமாமணி பட்டம் எதற்காக உங்களுக்கு வழங்கப்பட்டது என்பது பற்றி சொல்ல முடியுமா?

1991-ஆம் ஆண்டு முதல் ‘சகோதரன்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வாயிலாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் மிக முக்கியமான ஒன்று ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி வாயிலாக நன்கு பாடக்கூடியவர்கள், அழகுக் கலையில் சிறந்து விளங்க கூடியவர்கள் என பல்வேறு துறைகளில் உள்ள திறமையாளர்களை கண்டறிந்து சிறு சிறு நிகழ்ச்சிகளாக நடத்தினோம். ஒரு சிறிய அறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நாளடைவில் பெரிய மண்டபம், மாவட்டம், நகரம் என விரிவடைந்தது. மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எனது தோழி ஜெயா என்பவருடன் இணைந்து ஏற்பாடு செய்வது மட்டுமல்லாது தொகுத்தும் வழங்கினேன். இதனை தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பணியாற்றினேன். என் தொகுப்பாளர் திறமையை கண்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அரசு அதிகாரிகள், விருதுக்கு விண்ணப்பிக்க சொல்லி அறிவுறுத்தினார்கள். அதன்படி நானும் அதற்கான படிவத்தினை பெற்று விண்ணப்பித்தேன். பிறகு 2015-ஆம் ஆண்டு சிறந்த தொகுப்பாளினி என்ற அடிப்படையில் எனக்கு கலைமாமணி விருதை வழங்கினார்கள். இப்படித்தான் எனக்கு கலைமாமணி பட்டம் கிடைத்தது.


திருநங்கை சுதா - கலைமாமணி விருது பெற்ற தருணம்

அழுகை, சிரிப்பு, சோகம் இந்த மாதிரியான உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், ஒரு திருநங்கையாக அதை நீங்கள் எப்படி கடந்து போகிறீர்கள்? எப்படி பார்க்கிறீர்கள்?

உணர்வுகள், உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இருப்பதை விட ஒருபடி மேலேதான் மாற்றுப்பாலினத்தவரான திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இருக்கும். அதை கடந்து செல்வது என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்துதான் இருக்கிறது. எப்போதும் என்னை தனிமைப்படுத்திக்கொள்ள மாட்டேன். மகிழ்ச்சியோ, சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் உடனே மற்றவர்களுடன் அதனை பகிர்ந்துகொள்வேன். அப்போது நமது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். மனதும் லேசாகும். இதுதவிர எப்போதும் ஏதாவது ஒரு வேலையை கையில் வைத்துக் கொண்டு எனது முழு கவனத்தையும் அதில் செலுத்துவேன். இதை தாண்டி சில பத்திரிகைகளில் திருநங்கைகளும், திருநம்பிகளும் என்ற தலைப்பில் தொடர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இப்படி எப்போதும் நம்மை பரபரப்பாக வைத்துக் கொள்ளும்போது வேறு சிந்தனைகளுக்கு இடம் இருக்காது. அதனால் வருத்தம் என்பது என்னிடத்தில் எப்போதுமே வராது.

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய தருணம் எப்படி இருந்தது? வீட்டில் இருந்தவர்கள் எப்படி அதனை எடுத்துக் கொண்டார்கள்?

திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நான் என்னுடைய 7-வது வயதில் பெண்ணாக மாறுவதை உணர்ந்தேன். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும் சரி, உறவுக்காரர்களும் சரி என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை. என்னுடன் பிறந்தவர்களை மட்டுமே எனது குடும்பத்தினர் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். நான் எதற்கும் லாயக்கு இல்லாதவன், இவன் ஒரு கண்டமான பீஸ் என்று கேவலப்படுத்துவார்கள். குடும்பத்தில் ஏதாவது ஒரு முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது கூட என்னை மட்டும் தனிமைப்படுத்தி ஒதுக்கி வைத்து விடுவார்கள். இப்படியான சூழலில் என் குடும்பத்தில் எனக்கு இருந்த ஆதரவு அம்மாவும், அக்காவும்தான். அவர்கள் என்னை புரிந்துகொண்டதாலேயே அவர்களின் உதவியுடன் வீட்டை விட்டு என்னுடைய 17-வது வயதில் வெளியில் வந்தேன். இதற்கு பிறகு நிறைய சிரமங்களை சந்தித்திருந்தாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு இருந்ததால் அதன் வாயிலாக சுனில் மேனன் என்பவரை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவரை சந்தித்து அவர் இயக்கி வரும் ‘சகோதரன்’ அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். இந்த அமைப்பின் வாயிலாகத்தான் நான் பிரபலமாக ஆரம்பித்தேன். இதற்கு பிறகு தமிழகம் முழுவதும் அறியப்பட்ட நான் பில்கேட்ஸ் அவர்களுடைய தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் வி.எச்.எஸ் நிறுவனத்துடனும் இணைந்து 10 ஆண்டுகாலம் திருநங்கைகளின் வளர்ச்சிக்காக சமூக பணியாற்றினேன். இப்போது இந்திய அளவில் அறியப்படும் திருநங்கையாக இருப்பதால், என் வீட்டில் உள்ளவர்களும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். பெருமையாகவும் நினைக்கிறார்கள்.


காவல்துறை சார்பில் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தருணம்

தன்பாலின ஈர்ப்பு உணர்ச்சியாளர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு உங்களது சகோதரன் அமைப்பின் மூலம் என்ன மாதிரியான வழிகாட்டுதல்கள் வழங்குகிறீர்கள்?

தன்பாலின ஈர்ப்பை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று இனம் சார்ந்தது, மற்றொன்று பாலுணர்வு சார்ந்தது. இனம் சார்ந்தவர்கள் என்று சொல்லும் பொழுது அதில் திருநங்கைகளும், திருநம்பிகளும், இடைபாலினத்தவர்கள் என்று சொல்லக்கூடிய இன்டெர் செக்ஸ் நபர்களும் வருவார்கள். அதேபோன்று Lesbian, Gay, Bisexual என்று சொல்லக்கூடியவர்கள் ஒருபுறம் இருப்பார்கள். இவர்களுக்கு பாலுணர்வு சார்பான பிரச்சினைகள் மட்டும்தான். ஆனால், திருநங்கைகளும், திருநம்பிகளும் தோற்றத்திலேயே மாறிவிடுவதால் சகோதரன் அமைப்பில் இவர்களுக்கான முக்கியத்துவம்தான் அதிகமாக இருக்கும். எங்களுடைய எல்லா தேவைகளுக்கும் இங்கு இடமுண்டு. எங்களுக்கு கவுன்சிலிங் வழங்குவது தொடங்கி, குடும்பத்தில் பேசி புரிய வைப்பது, வேலை வாங்கி கொடுப்பது, எங்களுடைய உடல் சார்ந்த பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதுவரை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வார்கள். இதுதவிர தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்று சொல்லக்கூடிய Lesbian, Gay, Bisexual பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்த அமைப்பு வழிகாட்டுகிறது. மேலும் அவர்கள் தொடர்பான புரிதலுக்கு, எல்லா தளங்களிலும் வழிவகை ஏற்படுத்தித்தரப்படுகிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்களை சமூக சீர்கேடு, கலாச்சார சீரழிவு என்றெல்லாம் ஒருசாரார் சொல்கிறார்கள். இதுபற்றி ஒரு திருநங்கையாக உங்கள் கருத்து என்ன?

தன்பாலின ஈர்ப்பு, திருநங்கை, திருநம்பி, ஆண், பெண் இவை அனைத்துமே அவரவர் தனிப்பட்ட விஷயம். இதில் எதையுமே நாம் சமூக சீர்கேடு என்று சொல்ல முடியாது. இந்த சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுவது ஒரு ஆண்தான். ஆனால், அவர்கள் சமூக சீர்கேடு செய்யாமலா இருக்கிறார்கள். குழந்தை, மனநலம் சரியில்லாத பெண், உடன் பிறந்த சகோதரி என யாராக இருந்தாலும் அவர்கள் சீரழிக்கிறார்கள். இத்தனை சம்பவங்கள் அவர்களால் நடந்தேறும்பொழுது சமூக சீர்கேடு என்று எதனை சொல்லுகிறீர்கள். என்னை பொறுத்தவரை ஒருவர் மற்றவரை துன்புறுத்துவதுதான் சமூக சீர்கேடு. ஆனால், அதே எங்களை போன்றவர்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. ஒரு Gay இன்னொரு Gay-வைத்தான் விரும்புகிறார். ஒரு Bisexual நபர் இன்னொரு Bisexual நபரைத்தான் விரும்புகிறார். இவர்கள் யாரும் எந்த ஒரு குடும்பத்திலும் உள்ள பெண்ணையும் சீரழிக்கவில்லை. அவர்கள் சார்ந்தவர்களை விரும்புகிறார்கள் என்றால், அதை நாம் அப்படியே விட்டுவிட வேண்டியதுதான். இதனை சமூக சீர்கேடு என்று சொல்வது தவறு.


திருநங்கை சுதா பெற்ற கலைமாமணி விருது

திருநங்கை என்றாலே அவர்களை பாலியல் பொம்மைகளாகத்தான் பார்க்கிறார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள். அந்த மாதிரியான நிகழ்வுகளை நீங்கள் எப்படி கடந்து வந்தீர்கள்?

எங்களைப் போன்றவர்களை பாலியல் பொம்மைகளாக பார்ப்பது உண்மைதான். ஒருவேளை ஒரு ஆணுக்கான வலிமையோடு நாங்கள் இருந்திருந்தால் எங்களை மதித்திருப்பார்கள். ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆல்டர்னேட்டிவ்வாக எங்களை பார்ப்பதால் இப்படியான ஒரு மனநிலை ஆண் சமூகத்தில் இருக்கிறது. மனைவியை தவிர, எந்தவொரு சாதாரண பெண்ணையும் பாலியலுக்கு அழைக்க முடியாது. அதுவே திருநங்கைகளை ஒரு மோகப்பொருளாக எண்ணியே இப்படியான துன்புறுத்தல் நிகழ்வுகளை எளிதாக செய்துவிடுகிறார்கள். அதற்கு காரணம் நாங்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள். எங்களுக்காக யார் வந்து பேசப்போகிறார்கள்? என்கிற எண்ணம் தலை தூக்கி நிற்பதால்தான். மேலும் இந்த சமுதாயத்தில் உள்ளவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்காமல், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் என்று அலட்சியப்படுத்துவதால் எங்களை மோகப்பொருளாக பலரும் பார்க்கும் சூழ்நிலை உருவாகிறது.

திருநங்கைகள் நல வாரியத்தின் மூலமாக என்னென்ன மாதிரியான நலத்திட்ட உதவிகள் உங்களுக்கு கிடைக்கிறது?

திருநங்கைகள் நல வாரியம் 2008-ல் இருந்தே செயல்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில்தான் இந்த வாரியம் அமைக்கப்பட்டது. பின்னர்தான் மற்ற மாநிலங்களிலும் இந்த வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், திருநங்கைகளுக்கு வாரியம் மட்டுமே போதாது. மாற்றுத்திறனாளிகளுக்கு இருப்பது போன்று மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்று ஆணையமும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அதன் வாயிலாக இன்னும் வன்முறைகள் அதிகரிக்காமல் தடுக்கவும் முடியும்.

இன்னும் யாசகம் கேட்கும் திருநங்கைகளுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாத காலங்களில் எங்களைப் போன்றவர்கள் யாசகம் கேட்கும் பழக்கம் அதிகமாவே இருந்தது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. திருநங்கைகள் நிறையவே முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் திருநங்கைகள் நாம் இப்படியே இருந்துவிடுவோமோ என்று என்ன வேண்டாம். திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் கொடுக்க, அவர்கள் வாழ்வை முன்னேற்ற தற்போது நிறைய பேர் முன்வந்திருக்கிறார்கள். முன்னேறி வந்துவிடுவோம் என்ற தன்னம்பிக்கையோடு இருங்கள். எங்களை போன்ற அமைப்புகளும் உதவ தயாராக இருக்கிறோம்.


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தபோது

திருநங்கைகள் ஆசிர்வதிப்பது நல்லது என்று பலரும் சொல்கிறார்களே அது எப்படி?

மாதவிடாயை சந்திக்கும் பெண்களையும், திருமண உறவில் ஐக்கியமான பெண்களையும் தெய்வத்திற்கு சமமாக சொல்ல மாட்டார்கள். எல்லாவற்றையும் துறந்து கன்னி கழியாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாமல், மாதவிடாய் போன்ற எந்த விஷயங்களும் இல்லாமல் வாழ்ந்து வருபவர்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று வட மாநிலங்களில் சொல்லுவார்கள். அப்படியானவர்கள் யார் என்றால் திருநங்கைகள்தான். எனவே, குடும்ப வாழ்க்கையை துறந்து செல்லும் துறவிகளை பார்த்து மக்கள் எப்படி ஆசீர்வாதம் பெறுகிறார்களோ, அப்படித்தான் திருநங்கைகளும். அதனால்தான் திருநங்கைகள் ஆசிர்வதித்தால் நல்லது என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது.

திருநங்கைகள் என்றாலே ஆபத்தானவர்கள் என்ற ஒரு பேச்சு இருக்கிறதே இதை எப்படி பார்க்கிறீர்கள்?

அனைத்து சமுதாயத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நான் திருநங்கை என்பதால் எங்கள் சமூகத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்கள், வள்ளலார் போன்றவர்கள் என்றும் சொல்லவில்லை. இங்கும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்களது சமூகத்தில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்காக பரிந்து பேசி எங்கள் அமைப்பில் இருந்து செல்ல மாட்டோம். அது தவறுதான் என்பதை நாங்களே ஒத்துக்கொள்வோம்.

சகோதரன் அமைப்பின் மூலமாக எத்தனை திருநங்கைகளுக்கு பயிற்சி அளித்துள்ளீர்கள்?

எங்களது சகோதரன் அமைப்பு சி.ஜி.ஐ என்ற கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து 320 திருநங்கைகளுக்கு இரண்டு வகையான பயிற்சிகளை அளித்துள்ளது. ஒன்று லாங் டைம் தொழில்களாக பார்க்கப்படக்கூடிய தையல், அழகு கலை, கம்ப்யூட்டர் போன்றவை தொடர்பாகவும், மற்றொன்று ஷார்ட் டைம் என்று சொல்லக்கூடிய எம்பிராய்டரி, சோப்பு, பினாயில் தயாரிப்பது போன்றவை தொடர்பாகவும் மூன்று மாத காலம் பயிற்சி வழங்கியுள்ளோம். இதுதவிர 60 நபர்களுக்கு ஓட்டுநர் பயிற்சியும் வழங்கியிருக்கிறோம்.

Updated On 22 April 2024 11:46 PM IST
ராணி

ராணி

Next Story