இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மேட்ரிமோனியலில் ஆரம்பித்த பழக்கம் திருமண பந்தத்தை மீறிய கள்ளக்காதலாக மாறிய விவகாரத்தில், காதலியை கொன்று பிணத்தை சூட்கேஸில் அடைத்து ஏற்காடு மலையிலிருந்து உருட்டிவிட்டுச் சென்ற காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சூட்கேஸில் இருந்த பெண்ணின் உடலை அடையாளம் கண்டு, கொலையின் பின்னணியையும் கண்டுபிடித்து, 4 நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து சேலம் போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். திடுக்கிடவைக்கும் இந்த கொலை சம்பவம் குறித்து விரிவாக விவரிக்கின்றது கீழ் வரும் பதிவு.

ஏற்காட்டில் வீசிய துர்நாற்றம்

சேலம் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஏற்காடு மலைப்பாதை சரிவு ஒன்றில் கடந்த 20ம் தேதி சூட்கேஸில் அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. சூட்கேஸ் இருந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், சுமார் 40 அடி மலைப்பாதை சரிவு பள்ளத்தில் இருந்த அந்த சூட்கேஸை மீட்டு திறந்து பார்த்தனர். அதில் அரை நிர்வாண கோலத்தில் முகம் முழுவதும் அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் காட்டுத்தீயாய் பரவியது.


ஏற்காட்டில் சுபலட்சுமியின் உடல் சூட்கேஸில் கிடந்த இடம்

யார் அந்த இளம் பெண்? என்ன நேர்ந்தது அந்த பெண்ணுக்கு? அவளை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட வேண்டும்? என்னவாக இருக்கும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. அனைத்து கேள்விகளுக்கும் கிடைத்த ஓரே ஒரு துப்பு "இளம்பெண் கொலை செய்யப்பட்டு அடைக்கப்பட்டுக்கிடந்த அந்த சூட்கேஸ் மட்டுமே ".

கொலையாளியை காட்டிக்கொடுத்த சூட்கேஸ்

சம்பவ இடத்துக்கு விரைந்த கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை சேகரித்தார்கள். சூட்கேஸுடன் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க மூன்று சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகளை போலீசார் தேடிவந்த நிலையில், பெண்ணின் உடல் அடைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டது விசாரணையில் உறுதியானது. அந்த சூட்கேஸை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


சூட்கேஸில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சுபலட்சுமியின் உடல்

காவல்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

யார் இந்த நட்ராஜ் ? அந்த இளம் பெண்ணை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைக்க என்ன காரணம்? நட்ராஜுக்கும், கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் என்ன உறவு? என்ன நேர்ந்தது அந்த இளம் பெண்ணிற்கு? என்று சேலம் காவல்துறை கிடுக்கிப் பிடி விசாரணை மேற்கொண்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த நட்ராஜ் திருமணமானவர். மனைவி மற்றும் 2 பிள்ளைகளுக்கு தந்தை. இவர் வேலை செய்வதற்காக கத்தார் நாட்டிற்குச் சென்றுள்ளார். நட்ராஜின் பணியிடப் பகுதியிலேயே தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமி என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. சுபலட்சுமிக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சுபலட்சுமி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக கூறப்படுகின்றது. நட்ராஜுக்கும், சுபலட்சுமிக்கும் இடையே தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு, நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் கத்தாரில் காதலர்கள் போல ஒன்றாக சுற்றி திரிந்ததுடன், கணவன் மனைவி போல உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர். அப்போது திருமணம் செய்துகொள்வதாக சுபலட்சுமிக்கு நட்ராஜ் வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.


சுபலட்சுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட மருத்துவமனை

கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். பின்னர் இருவரும் கத்தாருக்கு மீண்டும் செல்வதாக குடும்பத்தினரிடம் பொய் சொல்லிவிட்டு, கோவைக்கு வந்து பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துள்ளனர்.

தகராறு எப்படி?

கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. எதற்காக என்றால், நட்ராஜ் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி பெயரை நெஞ்சில் டாட் டூவாக வரைந்து வைத்திருக்கிறார். இதனால் தன்னுடைய பெயரையும் உடலில் டாட் டூவாக வரையும்படி நட்ராஜிடம் சுபலட்சுமி கூறியிருக்கிறார். வேறு வழியின்றி நட்ராஜும் சுபலட்சுமி பெயரை கையில் டாட் டூவாக வரைந்திருக்கிறார். இந்தநிலையில்தான் மனைவி, குழந்தைகளை பார்க்க சொந்த ஊருக்கு சென்ற நட்ராஜ், டாட் டூவாக கையில் இருந்த சுபலட்சுமி பெயரை அழித்திருக்கிறார். மீண்டும் கோவைக்கு நட்ராஜ் திரும்பியபோது, கையில் வரைந்திருந்த தனது பெயர் டாட்டூவை ஏன் அழித்தீர்கள்? என்று கேட்டு சுபலட்சுமி தகராறில் ஈடுபட்டுள்ளார். பிப்ரவரி 27ம் தேதி நடந்த இந்த தகராறின் போது, மழுப்பலான பதிலை நட்ராஜ் கூறி இருக்கிறார். இதனால் தகராறு முற்றியதில், அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை நட்ராஜ், மண்டை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த நட்ராஜ், தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து விவரங்களை கூறியிருக்கிறார். அவர் உதவியுடன் கோவையில் உள்ள ஒரு கடையில் பெரிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி உள்ளார். அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.


திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த சுபலட்சுமி - நட்ராஜ்

சூட்கேஸை வீசி எறிய ஏன் ஏற்காட்டை தேர்வு செய்தனர்?

வாடகை கார் ஒன்றை எடுத்துக்கொண்டு டிரைவர் வேண்டாம் என்று கூறிவிட்டு நட்ராஜும், கனிவளவனும், சுபலட்சுமியின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் தீவிரமாக யோசித்துள்ளனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் அவர்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்னர். அப்போதுதான் நட்ராஜுக்கு அந்த யோசனை வந்துள்ளது. ஏற்காடு மலைப்பகுதிக்கு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சுற்றுலா வந்து சென்றது நினைவுக்கு வரவே. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்து கடந்த 1-ம் தேதி ஏற்காட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அன்று இரவு, 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். எங்கே தன்னை காவல்துறையினர் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த நட்ராஜ், ஒரு வாரம் தனது சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்துவிட்டு, பின்னர் கோவையில் சுபலட்சுமியுடன் தங்கியிருந்த வாடகை வீட்டுக்கு வந்து, வேலைக்கும் சென்றுவந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உடனே காவல்துறையினர் நட்ராஜ் மற்றும் அவருடைய நண்பர் கனிவளவனை கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட நட்ராஜ் மற்றும் கனிவளவன்

யார் இந்த சுபலட்சுமி? எப்படி நட்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது?

காவல்துறை விசாரணையின்போது சுபலட்சுமியை தனக்கு திருமணத்திற்கு முன்பே நன்கு தெரியும் என்றும், திருமணத்திற்கு மேட்ரிமோனியலில் பெண் தேடியபோது பழக்கம் ஏற்பட்டதாகவும் நட்ராஜ் தெரிவித்துள்ளார். இருவரும் தனித்தனியே திருமணம் செய்துகொண்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற இடத்தில் மீண்டும் சந்தித்து தொடர்ந்து பழகி வந்ததாகவும் கூறியுள்ளார்.

திருமணம் ஆகியிருந்தாலும், எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு மனிதர்கள் சஞ்சலப்படுவது இயல்புதான் என்றாலும், அது எல்லை தாண்டுவதற்குள் சுதாரித்துக்கொண்டால் இதுபோன்ற குற்றங்களை தடுக்கலாம் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.

Updated On 8 April 2024 11:49 PM IST
ராணி

ராணி

Next Story